தேசிய மக்கள் சக்தி தமிழருக்கு சமஸ்டியைத் தர மறுக்கின்றார்கள், அதைப் பேச மறுக்கின்றார்கள் .. என்று கூறி முன்வைக்கும் தமிழினவாத அரசியல் எத்தகையது?. இவர்கள் கோரும் சமஸ்டி அதிகாரம் யாருக்கெதிரானது? யாருக்கு ஆதரவானது? இதன் அதிகாரம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
75 வருட சமஸ்டிக்காரர்களின் வரலாறு, இதற்கு மிகத் தெளிவாக பதிலளிக்கின்றது. கடந்த இந்த வரலாறு கற்பனையல்ல.
1.சமஸ்டிக் கோசத்தை முன்வைத்த தமிழரசுக்கட்சி, என்றைக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையை முன்வைத்ததில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட தமிழனை ஒடுக்கும் தமிழனின் அதிகாரத்தையே கோரியது, கோரி வருகின்றது.
தமிழரசுக் கட்சியின் வரலாற்றில், என்றைக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகள் பொதுவிடங்களைப் பயன்படுத்தும் சுதந்திரத்தைக் கோரியதில்லை. 1965 இல் சமஸ்டிக்காரருக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டத்தின் போதே, பொது இடங்களைப் பயன்படுத்தும் உரிமைகளை ஒடுக்கப்பட்ட சாதிகள் பெற்றனர். இது வரலாறு.
சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்கும் உரிமையை, இவர்கள் முன்வைக்கவில்லை. சமஸ்டிக்காரர்கள் தங்கள் வெள்ளாளிய பாடசாலைகளை அனைவருக்கும் திறக்குமாறு கோரியதுமில்லை, போராடியதுமில்லை. 1960 களில் யாழ்ப்பாணத்து வெள்ளாளியப் பாடசாலைகளை அரசு தேசியமயமாக்கியதன் பின்பு தொடரச்;சியாகச் சமஸ்டிக்காரருக்கு எதிரான தொடர் போராட்டங்களின் மூலமே, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள், தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்க முடிந்தது.
இன்னும் பல இருந்த போதும், சமஸ்டிக்காரர்களைப் புரிந்துகொள்ள இந்த உண்மைகள் போதுமானது.