Language Selection

புதிய கலாச்சாரம் 2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“ஹிந்து சிக்ஸ் பிஃப்டி, தினமணி தினமலர் ஃபோர் பிஃப்டி, தினத்தந்தி த்ரீ ஃபிப்டி, விகடன், குமுதம், இந்தியாடுடே ஃபைவ் ருபீஸ்..” கடகடவென அதிகாரமாக குரல் வந்து விழ, நான் பழைய பேப்பர் வியாபாரியா?இல்லை அவர் வியாபாரியா என ஒருகணம் நிலைகுலைந்து போனார் பழைய பேப்பர் வியாபாரி.

“சார்!சார்! கொஞ்சம் நிறுத்து சார். விட்டா எங்கூட வியாபாரத்துக்கே வந்துருவ போல இருக்கு, அவ்ளோளாம் வராது சார்! எனக்குக் கிடைக்கறதே கிலோவுக்கு ஐம்பது பைசாவோ, ஒரு ரூவாயோதான்.. நீ இப்படி ரேட்டுப் போட்டா நான் பழைய பேப்பர் வியாபாரத்தையும் வுட்டுட்டு இனிமே எங்க போறதுன்னு தெரியல..”

“ஏம்ப்பா நான் என்ன தப்பாவா சொல்லிட்டேன். விவரந் தெரியாதவங்ககிட்ட நீ எப்படி வேணாலும் வியாபாரம் பண்ணிக்கோ… வீட்ல கம்ப்யூட்டர் இண்டர்நெட்டுனு வெச்சுகிட்டு நான் இது கூட தெரியாமலா இருப்பேன்.. நெட்ல பாத்தா இன்னைய ரேட்டு கரெக்டா வருது.. நான் ஒண்ணும் உன் கண்ணக் கட்டி ஏமாத்துல.. வேண்ணா பாக்குறியா.. ”

“காயலாங்கடைய பாக்கவே நேரம் பத்துல.. இதுல கம்ப்யூட்டர பாக்கணுமா.. நீ வேற சார்.. அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி லோல்படுறேன்.. வண்ணாரபேட்ட வந்து பாரு சார்.. குடோன்ல இந்தக் கம்ப்யூட்டரையெல்லாம் குடலை உருவிப் போட்டா எடைக்குக் கூட தேறல.. என்னா கம்ப்யூட்டரோ! கம்பியூட்டர விடு சார், என் வயித்தப் பாரு.. காலைலேர்ந்து வெறும் டீயிலயே மூணு சக்கர வண்டிய மிதிச்சுக்கிட்டு,மூணு நாலு மெத்தைல ஏறி பழைய பேப்பர வாரியாந்து வலி நோவுது சார். ஏமாத்திப் பொழைக்கணும்னா எனக்கு ஏன் சார் இவ்ளோ பாடு..”

“நோ..நோ.. இந்த ஆர்க்யூமெண்டே வேணாம். நாட்ல யார்தான் கஷ்டப்படல.. நான் கூடத்தான் காலைல எழுந்து சாப்பிட்டனோ, சாப்பிடலயோ டயத்துக்கு ஆபிசு ஓட வேண்டியிருக்கு.. நீ த்ரீ வீலர்னா நான் டூ வீலர்.. எல்லாருக்கும் கஷ்டந்தான்.. அதுக்காக ஒரு நியாயம் வேண்டாமா.. கட்டுப்படியானா எடு! ஒத்து வரலயா விடு.. டோண்ட் வொர்ரி!”

“இப்படிப் பேசினா எப்புடி சார்! மூணாவது மெத்தைல இருந்து வேற இவ்வளவையும் தூக்கியாந்தாச்சு, கம்ப்யூட்டர்ல அவன் ஆயிரம் போடுவான்.. காயிலாங் கடக்காரன் ஒத்துக்கணும்ல…”

“சரிசார், வேற என்ன பண்றது, நேரு சீரா போட்டுக்கலாம்.”

“என்ன நேரு சீரோ! நம்ம நாட்லயே இது ஒரு பெரிய ப்ராப்ளம்… தொழிலே இல்லேங்கறது, கொடுத்தா ஏட்டிக்குப் போட்டி பேசுவீங்க.. உன்ன சொல்லி குத்தமில்ல… ஸ்டேட் கவர்மெண்ட்டே சரியில்ல… சரி காலைல காட்டியும் வம்பு வேணாம்.. நீ மொதல்ல எடயப் போடு…”

“உங்கிட்ட நூறு ரூபா பேப்பர போடுறதுக்குல்ல நான் பத்து ரூபாய்க்கு பால் குடிக்கணும் போல இருக்கு.. ஓகே.. போடு..போடு..”

“என்னா சார்! பழைய பேப்பர்காரன்கிட்ட போயி இவ்ளோ வலி படுற, வீடு வந்து வாங்கிட்டுப் போறனே சார்… அம்பது பைசா, ஒரு ரூபா விட்டுக்கொடு சார்..”

“பாத்தியா, பேச ஆரம்பிச்சுட்ட, பேசாம எடயப் போடு! பழைய பேப்பர்னா சும்மாவா? ஐ நோ எவரிதிங்… பழைய அட்டப்பெட்டிய வெச்சுதான் அம்பானியே பணக்காரணானான் தெரியுமா? ஏதோ ஹிண்டு பேப்பர படிச்சிட்டு சும்மா வீட்ல கெடக்குற ஜடம்னு என்ன நெனச்சியா? ஐ எம் ஏ ப்ராஞ்ச் மேனேஜர் ஆஃப் சிட்டியூனியன் பேங்க்… எபவ் டொண்ட்டி ஃபைவ் இயர்ஸ் சர்வீஸ்!”

“சரளமாக கல் வந்து விழுவது போல ஆங்கிலத்தில் வார்த்தைகள் வந்து விழ.. பழைய பேப்பர் வியாபாரிக்கு எடை குழறியது… இரு சார்.. ஒரு கிலோ கல்ல எடுத்துட்டு வந்துர்றேன்,” என்று வண்டியை நோக்கி நகர்ந்தார்..

“இவனுகள சாதாரணமா நெனக்காதீங்க, இந்தத் தராசு, கல்லு எல்லாமே ஃப்ராடு.. கிலோ கணக்குல நம்மகிட்ட அடிச்சுட்டுப் போயிடுவான்! நம்ம அபார்ட்மெண்ட்டு மாதிரி எத்தன பேரு? எத்தன கிலோ அடிப்பாங்க, கணக்குப் போட்டு பாருங்க.. சும்மா நடிப்பாங்க சார்… இங்க சம்பாரிச்சு ஊர்ல போயி வட்டிக்கு விடுவான், வீடு கட்டுவான். ஒண்ணு தெரியுமா, அவன் லைஃப்ப என்ஜாய் பண்ற மாதிரி நாம கூட பண்ண முடியாது… இந்த காச வாங்கி நாம ஒண்ணும் பேங்க்ல போடப் போறது கெடயாது.. சனங்கள ஏமாத்த முடியாதுன்னு அவன் தெரிஞ்சுக்குனும் பாருங்க.. அதுக்குத்தான் கொஞ்சம் ஸ்டிரிக்டா இருக்கறது…” பக்கத்து வீட்டுக்காரரிடம் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்..

“தோ சார்!…” பேப்பர், பத்திரிகையை வகைப்படுத்தி நிறுத்துப் போட்ட வியாபாரி, “குறிச்சுக்க சார்.. இங்கிலீசு ஆறு கிலோ, தமிழ் மூணு கிலோ, புத்தகம் நாலு கிலோ” என்று லாவகமாக மனதுக்குள்ளேயே கூட்டிக் கொண்டு எதிரில் நிற்பவரை கண்களால் எடை போட்டுக் கொண்டே சாக்குப் பைக்குள் பேப்பரை அசக்கி அசக்கி திணித்தார். கூடவே கின்லே காலி பாட்டிலை நசுக்கி உள்ளே திணித்தார்.

“என்னப்பா நீ பாட்டுக்கும் எடை போடாமயே நசுக்கிப் போடுற.. அதயும் நிறு” என்றார் பேங்க்காரர் படபடப்பாக…

“சார் அதுக்கல்லாம் எட கெடயாது சார்… மொத்தமா ஒரு ரூபா போட்டுக்க.”

“என்னப்பா, பத்து பாட்டில் போட்டுருக்கேன். ஒரு ரூபாங்கற..”

“நீ அம்பது போட்டாலும் அது தலையெழுத்து அவ்ளோதான் சார்.. காயலாங்கடைல வந்து பாரு.. உன் கம்பியூட்டரு மண்ட ஓடுக்கே அங்க மதிப்பு கெடயாது.. சும்மா ஒடச்சுதான் போடுவோம்.”

“ஏமாந்தவனா இருந்தா இன்னும் நீ அள்ளி விடுவ.. உங்கிட்ட போட்டது மொதல்ல என் தப்பு, சரி.. சரி.. பணத்தக் குடு…”

“உன்ன ஏமாத்தி நா என்ன அம்பானியா ஆகப்போறேன். ஏன் சார் நீ வேற.. பேசக்கூடாதுன்னு வேற சொல்ற.. இந்தா சார் உன் பணம் அறுபத்தேழு..”

“பாத்தியா திரும்பவும் வேலயக் காட்டுறியே, எவ்ளோ கணக்கு சரியா சொல்லு…”

“என்னா சார், உன் கண்ணயா மறைச்சுட்டேன். அறுபத்தேழு ரூபா எழுபத்தஞ்சு காசு வந்துச்சு.. சில்லறை இல்லையேன்னு நோட்டா குடுத்தேன்.. இந்தா ஒரு ரூபாயா வெச்சுக்கோ…”

“என்னமோ, நீ எனக்கு பிச்ச போடற மாதிரி சொல்ற.. நாலு தெரு அலையாம உனக்கு லம்ப்பா இங்க கெடைக்குது.. இதுல நீ சலிச்சுக்குற, இதையே கார்ல போறப்ப மவுண்ட்ரோட்ல மொத்த வியாவாரிகிட்ட போட்டேன்னு வெச்சுக்க, எனக்கு நூறு ரூவா கெடச்சிருக்கும். சரி.. சரி.. உங்கிட்ட பேசப் பேச பிரச்சனைதான், ஒரு எழுபது ரூபாயா எடு… வேஸ்ட் ஆஃப் மை டைம்.. வேஸ்ட் ஆஃப் மை எனர்ஜி, ஒண்ணு தெரிஞ்சுக்க.. என்னிக்கும் நேர்மையா வாழப் பழகு… லைஃப் கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கும்… தொழில சுத்தமா செய்யி… செய்யும் தொழிலே தெய்வமுன்னு சும்மாவா சொன்னான்..” பேசிக் கொண்டே போக பழைய பேப்பர்காரர் சடாரென எழுபது ரூவாயாக கணக்குத் தீர்த்தார்.

வேண்டாத சுமையாக சாக்குப் பையை சுமந்தவர் முணகிக் கொண்டார், “என் பைலேர்ந்து ஒரு மூணு ரூவாய புடுங்கறதுக்கு தத்துவம் வேற! அடச்சே..” ஒரு கணம் துருபிடித்த இரும்பை உதறிப் பார்ப்பது போல மௌனமாக இமைகளை உதறி பேங்க்காரரை உற்று நோக்கியவாறு நகர்ந்தார்.

“என்ன அப்படிப் பாக்கறீங்க, காசு பெருசில்ல சார்.. நம்மள ஒண்ணுந் தெரியாத முட்டாள்னு நெனக்கிறாம் பாருங்க, அதான் நானும் விடல…” ஹி..ஹி..ஹி. பக்கத்து வீட்டுக்காரரிடம் தனது சாமர்த்தியத்தைப் பகிர்ந்து கொண்டு டக் டக் கென்று மாடியேறினார் பேங்க்காரர்…

________________________________________________________________________

- சுடர்விழி, புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

___________________________________________

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது