Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அக்னி நட்சத்திரம் முன்னேழு பின்னேழு முடிந்து ஒரு ஏழுநாள் ஆனபின்னாலும் வெயிலின் உக்கிரம் தீயாய் உடம்பில் விழுந்து எரிந்தது. அறுபதைத் தாண்டிய வயதாகிப் போன பங்கஜத்தம்மாளுக்கு ஈழை நோய் கண்டிருந்தது. முந்திச் சேலையால் தலையை முக்காடிட்டு கூன் விழுந்த உடம்பைத் தாங்கிப் பிடிக்கிற மாதிரி கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அடியை எண்ணி எண்ணி வைத்து நடந்தாள். போய்ச் சேர வேண்டுமே என்ற அந்த நடைதான் அவளுக்கு விரசல்.

நெஞ்செலும்புகளின் இடையில் தோல்படிந்து எண்ணி விடும்படியாக அவை வெளித்தெரிந்தன. இடுப்பில் இருந்த கைகளை இறக்கி இரண்டு தொடைகளிலும் ஊன்றி கரைப்பாதையில் ஏறி பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

தூரத்தில் வந்து கொண்டிருந்த வயித்துப் பிள்ளைச் சூலி முனிச்சிக்கு ரொம்பவும் முடியவில்லை. வாயிலிருந்து நாக்கு லேசாக வெளித்தள்ள கிந்தி கிந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். வெயிலும் தூரமும் வயிறு பருமனும் அவளைக் கிறங்கடித்து விட்டது. முழு ஊனமான எலும்புத்தாக்கம் மட்டுமே உள்ள சிறிய இடது காலை ஊன்றும்போது இடப்பக்கமாய் ஒரு முழத்திற்கு அவள் உருவம் கீழே சாயும். நேர்த்தியான வலது காலை ஊன்றும்போது நேராய் நிமிர்ந்து மேல்நோக்கி எகிறிய உருவம் அடுத்த வினாடி தொபுக்கென்று கீழே விழப்போவது போல இடதுகாலை ஊன்றுவாள்.

அவளின் கர்ப்ப வயிறு அவளையெங்கே பின்னோக்கிக் கவிழ்த்து விடுமோ என்பது மாதிரி இட வலப்புறமாய் ஆடிக் கொண்டேயிருந்தது.

ஆத்தா எதிர்பார்த்து கரையின்மேலே வெயிலில் நிற்பதைப் பார்த்த முனிச்சி கொஞ்சம் வேகமாய் நடப்பதைப் போல உணர்ந்த கொண்டாளே தவிர நடை விரைவு கொள்ளவில்லை. கரையின் மேட்டில் ஏற சிரமப்பட்ட முனிச்சி, தடாலென கைகளை தரையில் ஊன்றி ஒரு பிராணியைப் போல ஊர்ந்து மேல் நோக்கிப் போனாள். அப்போது அவளின் சூம்பிய இடதுகால் சேலைக்குள் தறிக்கால்களைப் போல தனியாக அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்தது. ஒருகால் பலத்தில் மேலே தாவித் தாவி வந்த முனிச்சியை பங்கஜத்தம்மா மெல்ல நடந்து வந்து தூக்கிவிட குனிந்தாள்.

அவள் கைகளைத் தட்டி மறுத்து தானாக ஊன்றி எழுந்தாள். ""நீங் முங்ஙாடி போ... நாங் நடங்ந்து பிங்ஙாடியே வந்திருவேங்'' ஆத்தாளுக்கு மூக்கின் வழியே அவள் எப்போதும் பேசும் பாசையில் தைரியம் சொன்னாள். நாக்குதான் பேசியதானாலும் ஒலி மூக்கின் வழியேதான் வந்தது. புறா முட்டை மாதிரியான அவள் கண்கள் பங்கஜத்தம்மாவிடம் பேசிய போது எங்கோ வானத்தைப் பார்த்தபடி இருந்தது. பிடறி வரை படிந்திருந்த தலை முடி வேர்வையில் நசநசத்தது. ""பேச்சு அரைகுறைதான். காலு ஒண்ணு ஊனந்தான். புண்ணியவாட்டி பதினஞ்சு வருசமா என்னை பெத்த தாய் மாதிரி வச்சுப் பாக்காளே! உலகத்துலே நானும் பாக்கேன் பெத்து வளத்தது கூட தாய் தகப்பனை கடைசி காலத்துல பாக்கிறதில்லை. எங்கிருந்தோ வந்தா எங்காலம் சென்றிருச்சி. இவளை நான் கண்டெடுக்கலையோ நான் நாறித்தான் செத்திருப்பேன்''

பங்கஜத்தம்மாவின் மனசு நினைத்ததை கண்ணீர் வெளிக் கொணர்ந்தது. சாயங்காலம் ஆறுமணிவரையிலும் தீப்பெட்டி ஆபீசில் கிடந்து லோல்பட்டு விட்டு ஊருக்கு மேற்கே ஆற்றின் வடகரையில் ஒதுக்குப்புறமாயுள்ள மண்டகப்படி கட்டிடத்துக்கு வருவாள் முனிச்சி. ஒரு காலத்தில் சாஸ்திரிகள் நிறைந்த அக்ரஹாரமாக இருந்த இடம் அது. கிழக்கேயுள்ள சாத்தூர் நகரத்திலிருந்து சாத்தூரப்பன் என்ற திருவேங்கடேசப் பெருமாள் அக்ரஹார வாசிகளுக்காக இந்தக் கட்டிடத்திற்கு ஆற்றின் வழியாகப் பல்லக்கில் வந்து இந்த மண்டகப்படியில் எழுந்தருளி மறுநாள் யானை வாகனத்தில் திரும்பி வழியில் மற்ற ஜாதிக்காரர்களுக்கும் அருள் பாலித்துச் செல்லும் இரண்டு நாள் ஆனித்திருவிழா நடக்கும் என்று சொல்கிறார்கள்.

சாஸ்திரிய குடும்பங்கள் பல வருசங்களுக்கு முன்னமே அரசாங்க வேலை சம்பந்தமாய் ஒன்றன்பின் ஒன்றாய்க் குடிபெயர்ந்த பின்னால் இந்தக் கட்டிடம் மட்டும் எஞ்சி கல் பெயர்ந்து பாசி பிடித்துக் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அங்குதான் பங்கஜத்தம்மாவின் சட்டடியான படுக்கை.

குடத்தை எடுத்துக் கொண்டு காலடி மறையுற நேரத்தில் தெற்கே ஆற்றிற்கு வந்த காலையும் வராத காலையும் இழுத்துக் கொண்டு ஊற்றில் தண்ணீர் மொண்டு வந்து அரக்கப் பரக்க சமையல் செய்து கட்டிலில் படுத்திருக்கும் பங்கஜத்தம்மாவிற்கு வெந்நீர் வைத்துக் குளிப்பாட்டி சாப்பிட வைத்து நாலைந்து வருடமாய் முடியாமல் கிடந்தவளை இப்பொ கொஞ்சம் தெம்பாக நடக்க வைத்திருக்கிறாள்.

ஒத்தக்காலில்லாத அந்த சின்னஞ்சிறிசு மூணு ஆள் வேலையைச் செய்கிறாள். இந்தப்பாடுகளில் தனக்கிருக்கும் ஊனமே அவளுக்குத் தெரியவில்லை. அது அவளுக்கு ஒரு குறையாகப் படவில்லை. அது பற்றி யாராவது பேசினாலும் அவள் மூக்கின் வழியே கோபித்துச் சிணுங்குவாள்.

அப்படித்தன் குறைபற்றிய பிரக்ஞையேயில்லாத முனிச்சியின் மேலே தெரிந்தே ஒரு சுமையை ஏற்றி வைத்து விட்டாள் பங்கஜத்தம்மா.

""நான் தப்பு செய்திட்டனா? என்னை காலம்போனகாலத்துல உசிருல தூக்கிச் சுமந்தவளுக்கு வஞ்சனை பண்ணிட்டனா? அவளுக்கு நல்லது செய்ற மாதிரி அந்தப் பச்சை மண்ணை உயிரோட இம்சுபட வச்சிட்டனா? ஏ! பெருமாளே! வெங்கடேசா! விவரம்தெரியாத குழந்தை உயிரோட தபதாயப்படுறது சகிக்கலையே. இந்த வாயில்லா சீவனை என் சின்னப்புத்திக்கி தக்க பலி கொடுத்திட்டனா? ஒம்புள்ளையா இருந்தா இப்படிச் செய்வியான்னு நெத்தியிலெ ஒன் நாமந்தரிச்ச ஒரு பெரிய மனுசி நித்தமும் கனவுல வந்து சினந்து சினந்து பேசி காறித் துப்புறாளே பெருமாளப்பா!''


***


இந்த ஊருக்கு அவள் சிறுமியாய் வந்தபொழுது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். யானை கட்டிச் சாவடிக்குப் பக்கத்தில் சிறுவர்களெல்லாம் கூடி அந்தச் சிறுமியைச் சுற்றி நின்று எகடாசி பேசி கோட்டா செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பங்கஜம் அந்தப் பக்கமாய் வந்தாள். பிள்ளைகளை விலக்கி எட்டிப் பார்த்தாள். அந்தப் பெண் பிள்ளையின் தோற்றத்திலேயே இவளுக்கு இரக்கம் வந்து முகம் வாடிப் போனாள்.

""ஏ சின்னப் பைய புள்ளைகளா போங்க அந்தப் பக்கம். பாவம் யாரு பெத்த பிள்ளையோ, எங்ஙன தப்ப விட்டுட்டாகளோ!''

பக்கமாய்ப் போய் சிறுமியின் முகநாடியைப் பிடித்து தூக்கி ""ஒம்பேரென்னம்மா'' என்றாள்.

""முனிச்சி!''

""ச்சொ... ச்சொ...'' என்ற பங்கஜம் ""சாப்பிட்டயா'' என்றாள்.

சாப்பிட்டேனென்றோ, சாப்பிடவில்லையென்றோ அர்த்தமாகாத ""ஙங்காயா சாப்கிட்டே'' என்று ஙொண ஙொணத்த பேச்சைப் பேசிக் கொண்டே அந்தச் சிறுமி எழுந்து நடக்க முயன்றாள். கிழிந்த பாவாடையினுள்ளே அவளின் ஒரு கால் தன் கை முழ அளவிற்குச் சூம்பிக் கிடந்தது.

பங்கஜத்திற்கு கண்களில் நீர் ததும்பி நின்றது. ""அடப்பாவமே அப்படிச் சொல்லு பிள்ளையை சுமைன்னுதான் விட்டுட்டுப் போயிட்டாக. இந்தா பாரு பாப்பா உங்க அம்மா எங்கே? அம்மா பேரென்ன சொல்லு.''

அந்த சிறுமியின் முகம் அடுத்த விநாடி பிரகாசமாய் சந்தோஷித்தது. அவள் பிரியத்துக்குரிய அந்த முகம் தோன்றித் தோன்றி மறைகிறது. அவளை மறக்கவோ சொல்லவோ முடியவில்லை. திட்டுத் திட்டாய் மேகங்கள் சூரியனைக் கடந்து செல்லும்போது அலை அலையாய்ப் பூமியில் புரளும் நிழல்கள் வருடிக் கொண்டு செல்கிற மாதிரியான நினைவு. துளசி வாசனையுடன் வழுக்கைத் தலையில் சிவந்த ஒற்றைச் சிவப்பு நாமம் தரித்த அந்த சிவந்த கிழட்டு மனிதர் வந்துவிட்டால் அம்மா இவளை எங்காவது ஒளித்து வைப்பாள். வாய் பேச முடியாதவளாயிருந்தாலும் எப்பவாவது அப்பா என்று அழைத்து விடுவாளோ என்ற பயம் அவளுக்கு. "அங்மா' என்றாலே ஓடிவந்து வாய் பொத்தினாள். சில நேரம் அந்த நாமதாரிக் கிழவரை எதிர்பாராமல் பார்வையில் படநேர்ந்தால் ""எங்காவது கொண்டு ஒழின்னு சொன்னேன்ல சின்னச்சாதிப்பய மகளே.''

சுற்றி நின்றவர்களைப் பார்த்தும் பங்கஜத்தைப் பார்த்தும் உதட்டைப் பிதுக்கி "ஙே' என்று விக்கிவிக்கிக் கண்களைக் கசக்கிக் கொண்டு அழுதாள்.

பங்கஜம் முந்தானையில் மூக்கையும் கண்ணையும் தொடைத்தவாறு இரண்டு கைகளையும் அவளை நோக்கி நீட்டி ""வா'' என்று தலையை ஆட்டிச் சிரித்தவாறு கூப்பிட்டாள். அனாதையாய்த் தான்படும் பாடுகள் மனதுக்குள் இருளாய்ச் சுற்றி எழும்பி அந்தச் சிறுமியின் மேல் இரக்கமாய்க் கவிந்தது.

மெல்ல மெல்லக் கால்களைச் சாய்த்து ஊன்றி எழுந்து ஒரு சிறு அலையைப் போல பங்கஜத்தோடு வந்து சேர்ந்து கொண்டாள்.

முனிச்சி பங்கஜத்தின் பின்னாடியே திரிவாள். ரெண்டு பேரையும் ஊருக்குள் தனித்தனியே பார்ப்பது அரிது. "ஏ முனிச்சி இதாபாரு இது எங்க பங்கஜத்தம்மா என்று யாராவது மேலே கை வைத்து விட்டால் ஙா என்று எழுந்து நொண்டி நொண்டி நாக்கைத் துருத்திக் கொண்டு தெருவில் கிடக்கும் கற்களை எடுத்து வீசுவாள்.

பங்கஜத்தம்மா முதலாளி வீடுகளில் வீட்டு வேலைகளைச் செய்ததுபோக வயசுப் பெண்களின் மாதாந்திர துணிமணிகளை ஆற்றில் போய் அலசி வருவாள். பழையதும் சில நேரம் பலகாரங்களும் கிடைக்கும். பழைய துணிமணிகளையும்கேட்டு வாங்கி வந்து முனிச்சிக்குப் போட்டு அழகு பார்ப்பாள். கடந்து போகும் நாட்கள் இருவரின் வடிவங்களையும் காலத்தின் போக்குக்கும் மூப்புக்கும் தகுந்த மாதிரி மாற்றிக் கொண்டேயிருந்தது.

தெற்றிய பற்களும் மேல்நோக்கிப் பார்த்த உருண்டைக் கண்களும் கீழிறங்கி மேலெழும்பி சாய்ந்து சாய்ந்து நடக்கும் அகோச்சர வடிவமாயிருந்தாலும் உடல் வாளிப்பும் பருவமும் முனிச்சியை இளந்தாரிகளிடமிருந்து அவளால் காப்பாற்ற முடியவில்லை.

தினசரியும் வந்து உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பாள். எவ்வளவு ரோசம் அவளுக்கு.

***


பங்கஜத்தம்மாளுக்கும் அழுகை வந்தது. நலிந்து போன நெஞ்சு தாங்க மாட்டாமல் கனத்தது. கவலையுடன் முனிச்சியைத் திரும்பிப் பார்த்து மீண்டும் ஒருச் சாய்ந்து கொண்டாள். தான் அனாதையாய் அலைகிறபோது இப்படியான பயம் இல்லாமல் அநேக ஆம்பளைகளுடனான சிநேகிதம் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் திரிந்தாள். ஊர்க்காரர்கள் தன்னை "தர்மக் கப்பல்' என்று ஏளனம் செய்தது இப்போது முனிச்சியின் ரோசத்தைப் பார்த்தும் உடம்பு இற்றுப் போனதை எண்ணியும் நினைத்து அசிங்கப்படுகிறாள். அந்தச் சண்டாளன் மட்டும் அந்த ருசிப்பைக் காட்டாமலிருந்தால்... இன்னொரு பசியைக் கிளப்பாமலிருந்திருந்தால்...

அன்றைக்குப் பாவாடை தாவணி போட்டு தங்கப் பதுமை மாதிரி இருந்த நேரம். முதலியாரம்மா வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்த்து கவலையற்று வயிறு கழுவிக் கொண்டிருந்த காலத்தில் அந்த மனிதர் வந்தார். அசதியில் தூங்கிக் கொண்டிருந்தவளை முதலியாரம்மா வந்து எழுப்பினாள்.

""ஏ கழுதே எந்திரி யாரு வந்திருக்கா பாரு. தூங்கு மூஞ்சிக் கழுதை! ஒஞ் சொந்தக்காரர் வந்திருக்காரு போய்ப் பாரு''

சொந்தமா? அவளுக்கு எல்லாமே முதலியார் வீடுதான். தனக்கென்று யாருமேயில்லை என்று விபரந்தெரிய எல்லோரும் சொல்லிச் சொல்லி தான் "அநாதி' என்று தெளிவடைந்திருந்தாள். இப்போ சொந்தக்காரர் யாரு? கண்களைக் கசக்கிக் கொண்டு வந்தாள்.

முதலியாரய்யாவின் நாற்காலிக்கு எதிரில் நாற்காலிபோட்டுச் செக்கச் செவேலென்று நிறத்தில் லேசான முன் வழுக்கையில் சிவப்பு ஒற்றை நாமம். பட்டு வேட்டியும் பைஜாமாவுமாக சிரிக்கச்  சிரிக்கப் பேசினார்.

""இந்தாடி குழந்தே! இந்தப் புடவையைக் கட்டிக்கோ. அந்த அட்டைப் பெட்டியிலே ஸ்வீட் இருக்கு'' என்று கொடுத்தார். ""இந்தாப்பா' என்று மண்டகப்படியின் சாவியை முதலியார் ஞாபகமாய்க் கொடுத்தார். அதை வாங்கி "இந்தா மண்டகப்படி பக்கம் போயிருக்கியோ' என்றார் வந்தவர். இல்லையென்று தலையை ஆட்டினாள். "இடமாவது தெரியுமோ' என்றார். தெரியும் என்று தலையை ஆட்டினாள். "திறந்து இடத்தை நல்லா சுத்தம் பண்ணி வை வர்றேன்'

அன்றிலிருந்துதான் அவள் அசிங்கத்தைச் சுமந்தாள். ஆள் நடமாட்டமே வெகு நாட்களாய்க் கண்டிராத மண்டகப்படிக்கு அன்று ஒற்றைத் தடம் விழுந்தது. கொஞ்ச நாட்களில் அந்தத் தடம் மறைந்து மீண்டும் அங்கு புல் முளைத்தது. பலநாள் பாதையை வெறித்து வெறித்துப் பார்த்த பங்கஜம் ஏமாந்து போனாள். மண்டபப்படியே அவளுக்குக் கதியானது. அவளின் வயதும் வாலிபமும் வனப்பும் கூடக் கூட ஏக்கமும் தேவையும் கட்டாயமாகியது. மண்டபப்படியைச் சுற்றிப் பல பாதைகள் முளைத்தன.

அந்த மறக்க முடியாத சில இரவுகளை விதவிதமான பல இரவுகளால் மறக்க முயன்றாள். அதுவே வாழ்க்கையாகவும் ஆகிப்போனது.

முளைச்சு மூணு இலை விடாத பயல்களும் வயசுப் பையன்களும் முனிச்சி வேலைக்குப் போன நேரத்துல வந்து ""ஏ கிழவி முனிச்சியைக் கொஞ்சம் ஏற்பாடு பண்ணு. இந்தா இந்த ரூபாயைப் பிடி. ரொம்பவும் கிராக்கி பண்ணாதே'' என்று தினசரி நச்சரிப்புகள். அதட்டல்கள்.

வெளியே அழுது கொண்டு உட்கார்ந்திருந்த முனிச்சியை "ஏட்டி' என்று கூப்பிட்டாள்.

கண்ணைக் கசக்கிக் கொண்டு லப்பியபடியே உள்ளே வந்து பக்கமாய் உட்கார்ந்தவளை ஆதரவாய்த் தடவிச் சொன்னாள்.

""இருந்தாலும்டி இந்தா பாரு. என்னமோ என் தாய் தகப்பன் செய்த புண்ணியம். எனக்கு நீ கடைசி காலத்துல வந்து உதவணும்னு அந்த பகவான் உன்னை அனுப்பிச்சிருக்காரு. சரி என் காலம் எப்படியோ செல்லுபடியாயிருச்சி. நீ இந்த ஒச்சக் காலு உடம்பை வச்சிக்கிட்டு ஒம் உசிரை இவ்ளநா காப்பாத்திட்டே. இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கந்தக மருந்துல கிடந்து மாரடிப்பே. நாளைக்கு என் கண்ணுக்கப் பிறகு உன் வயசு போன காலத்துல என்ன மாதிரி ஒரு சீக்கு நொடின்னு படுத்துக்கிட்டா உனக்குன்னு யாரிருக்கா?''

""ஒரு ஆதரவு உண்டுமா. ஒரு வெந்நி தண்ணி வெக்கெ முடியுமா? கேப்பாரில்லாம கிடக்க வேண்டியதுதான். ஆத்தா ஒன் நல்லதுக்கு சொல்றேன். தனக்குன்னு இருந்தாதான் அவக்குன்னு உதவும். ஒன்னும் தப்பில்லை... ஒரு பிள்ளையைப் பெத்துக்கோ. துட்டுக்குத் துட்டும் ஆச்சி. பார்த்தையில்லே யாரையாவது கேட்க முடியுதா... இந்த ஊர்ல யாரும் கேட்டுக் கொடுப்பாகளா நமக்கு?''

வெயிலான வெயிலின் சூட்டையும் தாண்டி கார், பஸ் இரு சக்கர வாகனங்கள் நெரிசலான பஜாரில் மனிதர்களுக்குள் போய்க் கொண்டிருந்த பங்கஜத்தம்மாளுக்கு நினைவுகள் வெயில் அலைகளோடு அலைகளாய்க் கரைந்து கொண்டிருக்க பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

பேர்ப் பாதி ரோட்டை மறித்து மறித்து விலகுகிற மாதிரி முனிச்சி பாவமாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

""ஐயோ பாவம்... ஆம்பளைகள்னா முகஞ்சுளிச்சவளை லொங்குனவளை தூர விலகி ஓடினவளை அச்சுறுத்தி நயந்து பேசி ஒத்துக் கொள்ளச் செய்துட்டமே. அது நெசம்மாவே அவளோட பிற்காலத்துக்கான ஏற்பாடா, இல்லை காசுக்காக அப்பொ நானா ஏற்படுத்திக்கிட்ட சமாதானமா? எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு இந்தப் பாவம் தொலையுமா?'' கண் கலங்கியது. முடியவில்லை. தாங்க மடியவில்லை. யம்மா. சாலையின் இடது பக்கம் உயர்ந்திருந்த சர்ச் கேட்டருகேயிருந்த வேப்ப மரத்து நிழலில் ஒதுங்கி உட்கார்ந்தாள்.

""இப்படிவாம்மா முனிச்சி...'' இரைப்பு அதிகமாய் இருந்தது.

""என்னாலே இனிமே ஒரு எட்டு எடுத்து வெக்க முடியாது. அந்தா அந்தப் பக்கம்... நாலு கடை தள்ளி பெரிய மஞ்சக்கட்டடம் இருக்கு பாரு. அதான் தர்மாஸ்பத்திரி. போ, இந்த மாதிரி இதான் மாசம், இடுப்பு நின்னு நின்னு வலிக்குன்னு சொல்லு... என்னால துப்புரவா நடக்க முடியல... போ...''
··
""இந்தா இடுப்பு வலிக்குல்லே... வலிதாங்க மாட்டாம கண்ணீர் விடுறயில்லே.. இப்பக் கூட புருசம் பேரு சொல்ல மாட்டேன்னா அப்படியென்ன திமிரு'' என்றாள் நர்ஸ்.

முனிச்சியின் உருண்டைக் கண்கள் நாலாபுறமும் சுழன்றன. "அங்மா' "பங்ஹஙம்' என்ற இரண்டு பெயர்கள் தவிர உலகத்தில் அவளுக்கு வேறு பெயர்கள் கிடையாது. வலியில் ங்ஙோ... ங்ஙோ... என்று வாய் திறந்து மூக்கின் வழியே தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தாள்.

""இந்தா அடுத்தாளுக்கு வழிவிட்டு விலகி நில்லும்மா பிடிவாதம் பண்ணிக்கிட்டு'' நர்சின் அதட்டலில் கிந்தி கிந்திப் போய் அருகிலிருந்த ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டாள் முனிச்சி. ரொம்ப நேரம் ஊமையாய் அழுதாள்.

வந்திருந்த பெரும்பாலான கிராமத்து ஜனங்கள் ""ஐயோ பாவமே அது உசிருக்கு எப்படி வருதோ'' என்று சூழ்ந்து நின்றது.

இரண்டு நர்சுகள் டூட்டிக்கு மாறினார்கள். "என்ன வெளியே கூட்டம்' என்று கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

""டெலிவரி கேஸ். பேருகேட்டா முனிச்சின்னா. புருசம்பேரு கேட்டா வாயைத் திறக்க அடம் பிடிக்கிறா?'' புதிய நர்சுகள் அவளிடம் வந்தார்கள்.

""இந்தா துணைக்கு யாரும் இருக்காங்களா. இல்லேன்னா வெளியே கொண்டு போய் விடு. இந்த மாதிரி ஹாண்டிகேப் டெலிவரியெல்லாம் கண்டிப்பா பிரச்சினையாத்தான் இருக்கும்.

ஏதாவதுன்னா யார் பதில் சொல்றது? ரெண்டு பேரா பிடிச்சு வெளியே கொண்டு போய் விடுங்கம்மா.''

ரெண்டு பேர் என்ன செய்வதென்று பாவமே என நினைத்து இருபுறமும் தாங்கினார்கள். முனிச்சியின் வாயிலும் மூக்கிலும் இளங்கன்றின் மூக்கிலிருந்து வருகிற மாதிரி விளக்கெண்ணெய் மாதிரி வெள்ளை திரவம் சுரந்து கொண்டேயிருக்க ங்கே... ங்கே... ங்கே என்று திகராயப்பட்டு அடிகளை எடுத்து வைத்தாள்.

நர்சுகளின் அடுத்த வேலைகள் துவங்கின.


***


ரெண்டு பெண்கள் அழுத மாதிரியான முகத்தை வைத்துக் கொண்டு ""தாயி தாயி அந்தக் காலு ஒச்சமான பொண்ணு நடக்கமாட்டாம கிறங்கிருச்சி. கன்னிக் குடம் உடைஞ்சி போச்சும்மா. நீங்கதான் அதக்காப்பாத்தணும். வயித்துலயிருக்கிற உசிரு அக்கியை குடிச்சிருச்சினா ரெண்டு உசிருக்கும் ஆபத்துதாயி. நீங்கதா கொஞ்சம் தயவு பண்ணனும்.''

""பாத்தீங்கள்ல நாங்க எத்தென கேசுக்கு பதில் சொல்லணும். இப்படி இடத்துல வந்து புருசன் பேரைச் சொல்லாம பிடிசாதனை பண்ணுனா என்ன அர்த்தம்? டாக்டரம்மா வேற இன்னைக்கி மூடு சரியில்லாம இருக்காங்க.''

""என்னமோ தாயி நாங்களும் சத்தம் போட்டு வைது கேட்டுப் பார்த்தோம். ஒரு வடிய்யா முழிக்கா. இடுப்பு வலியில புத்தி மிரண்டு போச்சோ என்னம்மோ. நீங்கதான் அந்த விவரங் கெட்டதைக் காப்பாத்தணும் நாங்க துணைக்கு நிக்கிறோம்மா.''

""சரி சரி கூட்டிட்டு வாங்க.''

அந்த ரெண்டு பெண்களும் முனிச்சி சாய்ந்து கிடந்த ஜன்னல் அருகே ஓடினார்கள். அவள் அங்கே இல்லை.

...........


நெரிசலான மெயின் ரோட்டில் போக்குவரத்துக்கு நடுவிலே கொஞ்ச நேரம் நடக்கிறதும் பிறகு உட்கார்ந்து தவழ்றதுமாய் முனிச்சி உச்சி வெயிலில் நகர்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருந்தாள். எதிர்ப்படுகிற ஆளுகளை உச்சியில் அண்ணாந்து பார்த்து "எங் புருசங் பேரு எஞ்ன' "எங் புருசங் பேரு எஞ்ன' என்று கேட்டுக் கொண்டே வெயில் தரையில் ஊர்ந்தாள்.

""அடியேய்... அடியேய்... ஏ முனிச்சி ஆத்தா இங்கெ இருக்கன்டி. ஏ... முனிச்சி அட பாதகத்தி'' — சர்ச்சின் முன்னால் வேப்பமரத்தடியில் சாய்ந்து கிடந்த பங்கஜத்தம்மா சத்தமிட்டு சத்தமிட்டு அடக்க முடியாத இருமலில் இரண்டு கைகளையும் நீட்டி அழைத்தாள். எழுந்திருக்க முயன்றாள். முடியவில்லை. ஆத்தாளை ஒரு மூன்றாம் மனுஷியைப் பார்க்கிறமாதிரி பார்த்துவிட்டுத் திரும்பவும் ஊர்ந்து எதிர்ப்படுகிறவர்களிடம் "எங் புருசன் பேரு எஞ்ன' என்று தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டே நெடூக நிற்காமல் நடந்து கொண்டேயிருந்தாள் முனிச்சி.

மீசை முளைக்காத வயசுப் பையன்கள். அரும்பு மீசை வைத்த அப்பச்சிமார்கள். வெள்ளை வேட்டி நேரியல் துண்டணிந்த முதலாளிமார்கள். கோட்டு சூட்டு அணிந்த துரைமார்கள் ஆகிய புருசர்கள் அவள் எதிரில் வந்து பின்னால் மறைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஏற்ற வித்தியாசமான மனிதர்கள் பிடித்த சவப்பாடை சாய்ந்தபடியும் ஆடியபடியும் மயானத்தை நோக்கி விரைவதைப்போல முனிச்சி போய்க் கொண்டிருந்தாள்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது