Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

puja_apri_07.jpg

உழைக்கும் மக்களின் கட்சி என்று புளுகிக் கொண்டு மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி. அது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; பாசிஸ்ட் கட்சி. கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று மே.வங்கத்தின் நந்திகிராமத்தில் போலீசும்சி.பி.எம்.மும் இணைந்து நடத்திய பாசிசக் கொலைவெறியாட்டம் இந்த உண்மைகளை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.

 

நந்திகிராமத்தில் நடந்தது என்ன?

 

மே.வங்கத்தில் ஹால்டியா வட்டாரத்தில் 14,500 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவப் போவதாக "இடதுசாரி' அரசு அறிவித்துள்ளது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களை இழக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம். விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக நக்சல்பாரி புரட்சியாளர்கள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, விவசாயிகளை அணிதிரட்டி வந்தார்கள்.

 

இதைக் கண்டு ஆத்திரமடைந்த சி.பி.எம். குண்டர்கள், ஜனவரி 6ஆம் நாளன்று அதிகாலையில் 250 பேருக்கும் மேலாகத் திரண்டு வந்து நந்திகிராமம், சோனாசுரா கிராம மக்கள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, நாட்டுத் துப்பாக்கியால் கண்டபடி சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 விவசாயிகள் கோரமாகக் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நந்திகிராம வட்டார விவசாயிகள், கொலைகார சி.பி.எம். கட்சிக் கிளை அலுவலகங்களைத் தீயிட்டுக் கொளுத்தி, சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த துரோகிகளையும், ஆள்காட்டிகளையும் கிராமத்தைவிட்டே வெளியேற்றினர். அதன்பிறகு, விவசாயிகளின் ஒப்புதலோடு மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மே.வங்க முதல்வர் அறிவித்தார்.

 

விவசாயிகளின் ஒப்புதலோடு நிலம் கையகப்படுத்தப்படுமா, ஒப்புதல் இல்லாமல் பறிமுதல் செய்யப்படுமா என்பதல்ல பிரச்சினை. நந்திகி ராம வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் திட்டம் கைவிடப்படுமா, இல்லையா என்பதுதான் விவசாயிகளின் கேள்வி. இதற்கு எந்த விளக்கமும் தராமல், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் வெறியோடு சி.பி.எம். ஆட்சியாளர்கள் முனைப்பாகச் செயல்பட்டதால், விவசாயிகள் நந்திகிராமத்துக்கு வரும் சாலைகள் பாலங்களைத் துண்டித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்பகுதியில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து முடமாகிப் போனது.

 

சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் சேவை செய்ய முடியாமல் நந்திகிராம மக்கள் தடையாக நிற்பதைக் கண்டு ஆத்திரமடைந்த முதல்வர் புத்ததேவ், ""நந்திகிராமத்தில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டது'' என்று புலம்பி, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். மே.வங்க அரசும் மாவட்ட நிர்வாகமும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை வைத்து நந்திகிராமத்தில் சிவில் நிர்வாகம் மீட்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. ""நந்திகிராம அராஜகத்தை இனிமேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது; அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம்'' என்று மார்ச் 11ஆம் நாளன்று சி.பி.எம். கட்சி ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள் பேரணியில் புத்ததேவ் கொக்கரித்தார்.

 

பாசிச முதல்வர் புத்ததேவின் கொலைவெறி பிடித்த இந்த வார்த்தைகள், மார்ச் 14ஆம் நாளன்று போலீசு மற்றும் சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டமாக மாறியது. 5000க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கிகள் வெடிகுண்டுகளுடன் 2000 பேர் கொண்ட நந்திகிராம வட்டாரத்தைச் சுற்றி வளைத்து எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நிராயுதபாணியான விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக 67 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசு சீருடை அணிந்து கொண்டு, அவர்களோடு சேர்ந்து வந்த 250க்கும் மேற்பட்ட சி.பி.எம். குண்டர்கள் நாட்டுத் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கோடாரியோடு நந்திகிராம மக்கள் மீது கொலைவெறியாட்டம் போட்டனர். போலீசார் பூட்ஸ் அணிந்திருக்க, சி.பி.எம். குண்டர்கள் சாதாரண செருப்புடன், சீருடையில் அரசு இலச்சிணை இன்றி தாக்குதல் நடத்தியதை நந்திகிராம மக்கள் அனைத்துப் பத்திரிகைகள்தொலைகாட்சி நிறுவனங்களிடம் சாட்சியமளித்துள்ளனர். நந்திகிராம மக்களைக் கொன்றொழிக்கும் வெறியோடு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முதுகு, வயிறு, நெஞ்சு, தலைப்பகுதியில் குண்டடிப்பட்டு மாண்டு போயுள்ளார்களே தவிர, முழங்காலுக்குக் கீழாகக் குண்டுக் காயம்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.

 

நந்திகிராமத்துக்குச் சென்று கொலைவெறியாட்டம் போட்ட போலீசிடம் .303, .672 ரக குண்டுகளே துப்பாக்கியுடன் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் மாண்டுபோன விவசாயிகளின் பிரேதப் பரிசோதனையில், பலரது உடலில் .315, .38 ரக குண்டுகள் பாய்ந்துள்ளதைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். சி.பி.எம். குண்டர்கள் கள்ளத் துப்பாக்கியால் நந்திகிராம மக்களைச் சுட்டுக் கொன்று வெறியாட்டம் போட்டுள்ளதற்கு இதுவொன்றே இரத்த சாட்சியாக உள்ளது.

 

சி.பி.எம். குண்டர்கள் நந்திகிராமம் அருகேயுள்ள தெஹாலி கிராம பாலத்தை ஒட்டியுள்ள ஜனனி செங்கற்சூளையில் ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்துக் கொண்டு அங்கிருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக கொல்லப்பட்டவர்களை சாக்குத் துணியில் போட்டுத் தரதரவெனப் பிணங்களை அவசரமாக இழுத்துச் சென்று செங்கற்சூளையில் போட்டு சி.பி.எம். குண்டர்கள் எரித்துள்ளனர். கொலைவெறியாட்டம் நடந்த களத்திலிருந்து செங்கற்சூளைவரை தரையெங்கும் தெறித்துக் கிடந்த இரத்தக் கறைகளே இக்கொடூரத்தை நிரூபித்துக் காட்டுகின்றன.

 

மையப் புலனாய்வுத் துறையின் (இஆஐ) ஆரம்ப விசாரணையிலேயே இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, அச்செங்கற் சூளையிலிருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், போலீசு சீருடை, இரும்புத் தொப்பி, சி.பி.எம். கட்சிக் கொடிகள், சி.பி.எம். கட்சியின் இளைஞர் அமைப்பான டைஃபி (ஈஙுஊஐ) யின் பிரசுரங்கள் கொடிகள், நந்திகிராம வீடுகள் தெருக்களின் வரைபடம் முதலானவையும் மையப் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர, மரங்களிலும், புதர்களிலும் சி.பி.எம். குண்டர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளும், இரத்தக்கறை படிந்த சாக்குத் துணிகளும் கைப்பற்றப்பட்டு, 10 சி.பி.எம். குண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நந்திகிராமத்தில் நடந்த போலீசு சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்தில் மாண்டு போனவர்களின் எண்ணிக்கை 14 தான் என்கிறது அரசு. ஆனால் நந்திகிராம வட்டாரத்தில் பலர் "காணாமல்' போயுள்ளனர். இதுதவிர, சி.பி.எம். குண்டர்கள் செங்கற்சூளையில் எரித்துக் கொன்றவர்களின் எண்ணிக்கை இன்னமும் வெளியே வரவில்லை.


இந்தப் பயங்கரவாத வெறியாட்டங்களையெல்லாம் விஞ்சும் வகையில் சி.பி.எம். குண்டர்கள் நந்திகிராமப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவியுள்ளதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. நந்திகிராம கொலைவெறியாட்டத்தின் போது சாதாரண செருப்பு அணிந்து போலீசு சீருடையில் வந்த சி.பி.எம் குண்டர்கள், பல பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிப் பாலியல் வன்முறையை ஏவியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரு பெண்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து நாடெங்கும் நாறுகிறது. இதுதவிர, பாலியல் வன்முறையை ஏவிய ஒருவனை நந்திகிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் அடையாளம் காட்ட, அவனைப் பிடித்து மக்கள் விசாரித்த போது, அவன், தான் சி.பி.எம். ஆதரவாளன் என்றும் சி.பி.எம். தலைவர்கள் சொன்னதாலேயே இப்படிச் செய்ததாகவும் பி.டி.ஐ. செய்தியாளர் முன்னிலையிலேயே வாக்குமூலம் அளித்துள்ளான்.

 

இத்தனை பயங்கரவாத வெறியாட்டங்களும் அடுத்தடுத்து அம்பலமாகியுள்ள போதிலும், மே.வங்க பாசிச முதல்வரான புத்ததேவ் இக்கொலை வெறியாட்டங்களுக்குக் கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக்க மாட்டோம் என்று அக்கொலைகார முதல்வரைப் பாதுகாக்கிறார், சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரான கரத். ஆனால், மே.வங்கத்தின் பல்வேறு மனித உரிமை ஜனநாயக உரிமை அமைப்புகளும், தொழிற்சங்க விவசாயிகள் சங்கத்தினரும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் சி.பி.எம். கட்சி மீது காறி உமிழ்ந்துள்ளனர். மே.வங்க அரசின் கலாச்சார நிறுவமான பஸ்சிம்பங்கா பங்களா அகாடமியின் துணைத்தலைவரும் பிரபல கவிஞருமான சங்கா கோஷ் ""நந்திகிராமத்தில் நடந்திருப்பது சி.பி.எம். கட்சி மற்றும் அரசின் பயங்கர வெறியாட்டம்; இதற்கு மேலும் நாங்கள் அரசாங்கப் பதவியில் நீடிப்பது அவமானம்'' என்று அறிவித்து இந்த அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களோடு பதவி விலகியுள்ளார். உழைக்கும் மக்களிடமும் அறிவுத்துறையினரிடமும் முற்றாக அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போயுள்ள சி.பி.எம்.இன் கொலைகார ஆட்சியை "துக்ளக்' சோ போன்ற பாசிஸ்டுகள் மட்டுமே ஆதரிக்கின்றனர்.

 

இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு கோயபல்சு வழியில் அண்டப்புளுகை அவிழ்த்து விட்டு, நியாயவாதங்களை அடுக்கித் தமது பாசிச கொலைவெறியாட்டங்களை மூடிமறைக்கக் கிளம்பியுள்ளது சி.பி.எம். கட்சி.

 

""கடந்த இரண்டரை மாதங்களாக நந்திகிராமத்தில் அரசு எந்திரமே செயல்பட முடியவில்லை. அது வன்முறையாளர்கள் தீவிரவாதிகளின் "சுதந்திர' ராஜ்ஜியமாகவே இருந்தது. இடதுசாரி அரசாங்கம் மட்டுமல்ல; வேறெந்த அரசாங்கமும் இத்தகைய நிலைமையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், வன்முறைச் சக்திகளால் நாசமாக்கப்பட்டுள்ள சாலைகள் பாலங்களைச் சீரமைக்கவும் அங்கு போலீசு அனுப்பப்பட்டது'' என்று நியாயவாதம் பேசுகிறார் மே.வங்க பாசிச முதல்வர்.

 

எல்லா ஆட்சியாளர்களையும் போலவே, போராட்டம் என்றாலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒப்பாரி வைக்கிறார் புத்ததேவ். யாருக்கான சட்டம் ஒழுங்கு என்பதுதான் கேள்வி. இந்தச் சட்டம் ஒழுங்கு உழைக்கும் மக்களுக்கானதா? அல்லது இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய பாசிச சுகர்தோவின் கூட்டாளியான சலீம் குழுமம், நந்திகிராம விளைநிலங்களைக் கைப்பற்றி சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெயரில் பகற்கொள்ளை அடிப்பதற்கா? இது ஒருபுறமிருக்கட்டும்.

 

நந்திகிராம மக்கள் கடந்த இரண்டரை மாதங்களாக சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் நிலையில், அங்கு சாலைகள் பாலங்களைச் சீரமைக்க பொதுப்பணித்துறை ஊழியர்களை அனுப்பாமல் 5000க்கும் மேற்பட்ட போலீசாரை அனுப்பியது ஏன்? அவர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டார்களா? அல்லது துப்பாக்கிகளையும் குண்டுகளையும் வைத்து சாலைபோடச் சென்றார்களா?

 

""நந்திகிராமத்தினுள் போலீசு நுழைய முற்பட்டதும் வன்முறையாளர்கள் கற்களை வீசி போலீசு மீது தாக்குதல் நடத்தினர்; மரங்களின் மீதேறிக் கொண்டு நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர்; நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்'' என்று குற்றம் சாட்டுகிறது, சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில வார ஏடான ""பீப்பிள்ஸ் டெமாக்கிரசி''. இது உண்மையென்றால், காயம்பட்ட ஒரு போலீசுக்காரனைக் கூட அக்கட்சியினரோ, "இடதுசாரி' அரசாங்கமோ இதுவரை காட்ட முடியவில்லையே, அது ஏன்? போலியாக மாவுகட்டு போட்டுக் கொண்டு போட்டோவுக்கு ""போஸ்'' கொடுக்கும் போலீசுக்காரனைக் கூட இதுவரை காட்டவில்லையே! அப்புறம் எந்த போலீசுக்காரர்கள் காயமடைந்தார்கள்?

 

நந்திகிராம மக்களை சமூக விரோதிகள், வன்முறையாளர் என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறது சி.பி.எம் கட்சி. நந்திகிராமத்தில் போலீசு கொலைவெறியாட்டம் போட்டு, பின்னர் அங்கு முகாம் அமைத்துள்ள போதிலும் இதுவரை நந்திகிராமத்தில் ஒரு வன்முறையாளர் கூட கைது செய்யப்படவில்லையே, அது ஏன்? அந்த வன்முறையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குண்டடிப்பட்ட உழைக்கும் மக்கள் வன்முறையாளர்களா?

 

""நந்திகிராமத்தில் போலீசு நுழைந்ததும் அக்கிராம மக்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர்புகை வீசியும், ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டும் அக்கூட்டத்தைக் கலைத்தனர். மக்கள் கூட்டம் நாற்புறமும் சிதறி ஓடியது; அதன்பிறகு வன்முறையாளர்கள் திரண்டு வந்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இத்தாக்குதலுக்குப் பின்னரே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்'' என்று நந்திகிராமத்தில் நடந்த சம்பவங்களை அங்குலம் அங்குலமாக விவரித்து, ""தவிர்க்கவியலாத நிலையிலேயே போலீசு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று'' என்று நியாயவாதம் பேசுகிறது பாசிச சி.பி.எம். கட்சி.

 

கண்ணீர் புகை குண்டுக்கும் ரப்பர் தோட்டாக்களுக்குமே மக்கள் நாற்புறமும் சிதறி ஓடிவிட்டார்கள் என்றால், 5000க்கும் மேற்பட்ட போலீசார் அதிநவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் நந்திகிராமத்துக்குச் சென்றது ஏன்? வன்முறையாளர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர் என்பது உண்மையானால், அதிரடியாகத் தாக்குதல் நடத்திய போலீசு, இதுவரை ஒரு நாட்டுத் துப்பாக்கியைக் கூட கைப்பற்றவில்லையே, அது ஏன்? வீடுவீடாகச் சோதனை நடத்தியும் கூட, அந்த நாட்டுத் துப்பாக்கிகளும் நாட்டு வெடிகுண்டுகளும் மறைந்து போனதன் மர்மம் என்ன?

 

எல்லாவற்றுக்கும் மேலாக, நந்திகிராமத்தைச் சாராத வெளியிலிருந்து வந்த அன்னிய சக்திகள் நந்திகிராம மக்களிடம் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டுகிறார் சி.பி.எம்.மின் பாசிசத் தளபதியான எச்சூரி. நந்திகிராமம் அமைதியாக இருந்ததாம்! வெளியிலிருந்து வந்த அன்னிய சக்திகளான மாவோயிஸ்டுகள்தான் பொய்ப் பிரச்சாரம் செய்து வன்முறையைத் தூண்டிவிட்டார்களாம் இப்படி கதை எழுதுகிறது சி.பி.எம். கட்சியின் வார ஏடான பீப்பிள்ஸ் டெமாக்கரசி.

 

மறுகாலனியத் தாக்குதலின் ஒரு அங்கமான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடும் மாவோயிஸ்டுகள் அன்னிய சக்திகள், வன்முறையாளர்கள் என்கிறது பாசிச சி.பி.எம். கட்சி. அதாவது, வெளியூரைச் சேர்ந்தவர்கள் அரசியல் பிரச்சாரம் செய்யக்கூடாது; அவர்கள் அன்னிய சக்திகள் என்கிறது சி.பி.எம். கட்சி. அப்படியானால், தென்னகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதற்காக, காலனிய ஆட்சிக்காலத்தில் கட்சியால் பணிக்கப்பட்டு சென்னையில் பணியாற்றிய வடநாட்டைச் சேர்ந்த தோழர் அமீதுஹைதர்கான், கம்யூனிஸ்ட் கட்சித் தோழரா அல்லது அன்னிய சக்தியா? கீழத்தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட கூலிஏழை விவசாயிகளைச் சவுக்கடியும் சாணிப்பாலும் கொடுத்து வதைத்த நிலப்பிரபுக்களின் கொட்டத்தை ஒடுக்கி, வர்க்கப் போராட்டத் தீயை மூட்டிய தோழர் சீனிவாசராவ், கம்யூனிஸ்ட் கட்சித் தோழரா, அல்லது அன்று நிலப்பிரபுக்கள் சித்தரித்ததைப் போல வெளியூரைச் சேர்ந்த வன்முறையாளரா? அவ்வளவு ஏன்? தமிழகத்தில் கட்சி மற்றும் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட வி.பி.சிந்தன், பி.ஆர். பரமேஸ்வரன், ரமணி, அரிபட் முதலானோர் சி.பி.எம். கட்சித் தோழர்களா? அல்லது அன்னிய சக்திகளா?

 

சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக விவசாயிகளை அணிதிரட்டிப் போராடி வரும் நக்சல்பாரி புரட்சியாளர்களை அன்னிய சக்திகள் என்று சாடும் சி.பி.எம். கட்சி, இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்காக 14,500 ஏக்கர் விளைநிலங்களைப் பறித்து தாரை வார்க்கக் கிளம்பியுள்ளதே, அந்த சலீம் குழுமம் அன்னிய பெருமுதலாளித்துவ சக்தியா, அல்லது சி.பி.எம். கட்சியின் தோழரா? அந்த அன்னிய சக்தியின் இலாபவெறிக்காக, அதுவும் இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய பாசிச சுகார்தோ கும்பலின் கூட்டாளி நிறுவனமான சலீம் குழுமத்துக்காக விவசாயிகளையும் விளைநிலங்களையும் பலியிடும் சி.பி.எம். கட்சி இடதுசாரி கட்சியா? அல்லது ஏகபோக முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் பாசிசக் கட்சியா?

 

சி.பி.எம். கட்சியானது, கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தால், ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போல இத்தகைய அபத்தவாதங்களை அடுக்காது. ஆனால் சி.பி.எம். கட்சியானது, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி. அது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; பாசிஸ்ட் கட்சி. எனவேதான் ஆளும் வர்க்கக் கட்சிகளை விஞ்சும் வண்ணம் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் விசுவாச அடியாளாக வேலை செய்து கொண்டு, பாசிச கோயபல்சையே விஞ்சும் வண்ணம் பொய்களையே நியாயவாதங்களாக அடுக்குகிறது.

 

இன்று நந்திகிராமத்தில் கொலைவெறியாட்டம் போட்ட இதே சி.பி.எம். கட்சியினர்தான், நாற்பதாண்டுகளுக்கு முன்பு இதே மே.வங்கத்தில் கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி பேரெழுச்சியையும் மிருகத்தனமாக ஒடுக்கி கொலைவெறியாட்டம் போட்டதோடு, நக்சல்பாரி கிராம விவசாயிகளையும் புரட்சியாளர்களையும் தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தி அவதூறு செய்தனர். 1967இல் நக்சல்பாரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், ""ஜோத்திதார்கள்'' எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி, குத்தகை விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டியதோடு, நிலப்பிரபுக்களிடம் இருந்த விவசாயிகளின் கடன்பத்திரங்களைத் தீயிட்டுக் கொளுத்தி, தமது சொந்த அதிகாரத்தை நிறுவினர். வில்லும், அம்பும், கோடாரியும், துப்பாக்கியும் ஏந்திய விவசாயிகள், கிராம நிர்வாகத்தை இயக்குவதைக் கண்டஞ்சி நிலப்பிரபுக்களும் கைக்கூலிகளும் நகரங்களுக்குத் தப்பியோடினர். இவ்வட்டாரமெங்கும் அரசு நிர்வாகமும் போலீசு நிர்வாகமும் செயலிழந்து, விவசாயிகளின் புரட்சிகர அதிகாரத்தை விண்ணில் பட்டொளி வீசிப் பறந்த செங்கொடிகள் பறைசாற்றின.

 

அன்று மே.வங்கத்தில் அஜாய்முகர்ஜி தலைமையிலான கூட்டணி ஆட்சி நீடித்தது. அதில் ஜோதிபாசு போலீசு அமைச்சராகவும், அரிகிருஷ்ணகோனார் வருவாய்துறை அமைச்சராகவும் இருந்தனர். நக்சல்பாரி பேரெழுச்சியை கண்ட அரிகிருஷ்ணகோனார், ""ஐயோ, நிலைமை கட்டுமீறிப் போய்விட்டது'' என்று அலறினார். ""சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது'' என்று எகிறிக் குதித்தார் ஜோதிபாசு. ""ஐயோ! வன்முறை, தீவிரவாதம்'' என்று கூப்பாடு போட்டது சி.பி.எம். கட்சி. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் போலீசை ஏவி கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டார் ஜோதிபாசு. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்டு 9 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர்; விவசாயிகள் இயக்க முன்னணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். நக்சல்பாரி வட்டாரமெங்கும் போலீசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு, விவசாயிகளின் பேரெழுச்சி கொடூரமாக ஒடுக்கப்பட்டது.

 

அன்று நக்சல்பாரி; இன்று நந்திகிராமம். போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு கொலைவெறியாட்டம். ""ஐயோ! பயங்கரவாதம், தீவிரவாதம்'' என்ற அதே கூப்பாடு. ""சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது'' என்ற அதே ஒப்பாரி. ""வன்முறையாளர்கள் தீவிரவாதிகள்'' என்ற அதே கோயபல்சு புளுகு. ஒரேயொரு வேறுபாடு அன்று சி.பி.எம். கட்சியிடம் பாசிச குண்டர்படை இல்லை; இன்று சி.பி.எம். கட்சி ஒரு வலுவான குண்டர் படையைக் கட்டியமைத்துள்ளது. போராடும் மக்கள் மட்டுமல்ல; நந்திகிராமத்தில் உண்மையைக் கண்டறிய முற்பட்ட பத்திரிகையாளர்களும் சி.பி.எம் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்தி சேகரிக்கும் உரிமையைக் கூட மறுத்து, சாலை மறியல் போராட்டம் நடத்தி பத்திரிகையாளர்களை விரட்டியடித்துள்ளது, சி.பி.எம். குண்டர்படை.

 

நந்திகிராமத்தில் பாசிச கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, போராடும் விவசாயிகளை ஒடுக்கியபோதிலும், அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவும் முயற்சியில் சி.பி.எம். பாசிச ஆட்சி தோற்றுப் போயுள்ளது. கொலைவெறியாட்டம் நாடெங்கும் அம்பலப்பட்டுப் போயுள்ளதால், நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளார் மே.வங்க கொலைகார முதல்வர். அதேசமயம், ஏகாதிபத்தியங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் விசுவாசமாகத் தொண்டூழியம் செய்துவரும் சி.பி.எம். ஆட்சியாளர்கள், மே.வங்கத்தின் வேறு பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப் போவதாக அறிவித்துள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி மாநிலத்தை தொழில்மயமாக்கும் கொள்கையில் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று இதர ஓட்டுக் கட்சிகள் அனைத்தையும் விஞ்சும் வண்ணம் சூளுரைக்கிறார், கரத்.

 

நந்திகிராமத்தில் நடந்த பாசிச கொலைவெறியாட்டங்களை மூடிமறைத்து, போராடும் மக்களையும் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் குற்றம் சாட்டி சி.பி.எம். கட்சியினர் எதிர்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்நிலையில், உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் அடியாட்களாகவும், உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் சீரழிந்துவிட்ட பாசிச சி.பி.எம். கட்சியை புரட்சிகர ஜனநாயக சக்திகள் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். இக்கட்சியிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகள் உடனடியாகக் கலகத்தில் இறங்கி, பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட துரோகத் தலைமையைத் தூக்கியெறிந்து விட்டு, உண்மையான கம்யூனிஸ்டுகளாகிய நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டும். அதன் மூலம் மார்க்சிய லெனினியத்தைப் பற்றிப் பாதுகாத்து, மறுகாலனியாக்கத்தை வீழ்த்தும் மகத்தான புரட்சிக்குத் தோள்கொடுக்க வேண்டும்.
· இரணியன்

 

நந்திகிராமப் படுகொலை:
கொலைகார புத்ததேவின் கொடும்பாவி எரிப்பு!

டாடா மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் இலாப வேட்டைக்காக சொந்த மக்களையே கொன்று குவிக்கும் சிவப்புக் காட்டேரிகளான சி.பி.எம். கட்சியை எதிர்த்தும், அது மார்க்சிஸ்டு கட்சி அல்ல; பாசிஸ்டு கட்சிதான் என்பதை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தியும் நந்திகிராமத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட மறுநாளிலேயே தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் விரிவாகச் சுவரொட்டிகள் தட்டிகள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன. தஞ்சையில், ம.க.இ.க., பு.மா.இ.மு. அமைப்புகள் இணைந்து மே.வங்க பாசிச முதல்வரான கொலைகார புத்ததேவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை மார்ச் 17ஆம் நாளன்று நடத்தின. தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரே, தோழர் அருள் தலைமையில் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் வந்த தோழர்கள், போலீசு தடைகளையும் மீறி கொலைகார புத்ததேவின் கொடும்பாவியைத் தீயிட்டுக் கொளுத்தினர். பரபரப்பான காலை நேரத்தில் போலி கம்யூனிசக் கொலைகாரர்களை எதிர்த்து, திரளான உழைக்கும் மக்கள் முன்னிலையில் நடந்த இக்கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நகரெங்கும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியாளர்கள் 8 பேரை போலீசு கைது செய்துள்ளது.

 

பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட கொலைகார சி.பி.எம். கட்சியை அம்பலப்படுத்தியும், மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளில் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராட அறைகூவியும் இவ்வமைப்புகள் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.


பு.ஜ. செய்தியாளர்கள்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது