Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

sep_2007.jpg

இந்தியா அமெரிக்கா இடையே, அணுசக்தி கூட்டுறவு மற்றும் வர்த்தகம் தொடர்பாக கையெழுத்தாகியுள்ள ""123 ஒப்பந்தம்'', காங்கிரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை; அந்த ""அடியாருக்கு அடியாராக''ப் போலி கம்யூனிஸ்டுகள் செயல்படுவதையும் நாறடித்து விட்டது.

அமெரிக்காவும், இந்தியாவும் இந்த அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை இறுதியாக்குவதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரகசிய பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தன. இப்பேச்சுவார்த்தைகளின் பொழுது, அமெரிக்கா இந்தியா மீது பல கடுமையான நிபந்தனைகள் விதித்து வருவது அம்பலமானபொழுது, பிரதமர் மன்மோகன்சிங், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சில வாக்குறுதிகளை அளித்தார். மறுசுழற்சி செய்யும் உரிமை, அணுகுண்டு சோதனை நடத்தும் உரிமை போன்ற உரிமைகளை இந்தியாவிற்கு அளித்தால்தான், ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவோம் எனக் கூறி, எதிர்ப்புகளைச் சமாளித்தார், பிரதமர்.

 

தற்பொழுது கையெழுத்தாகியுள்ள 123 ஒப்பந்தமோ, மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதிகளுள் ஒன்றிரண்டை ஏற்பதாக வார்த்தை ஜாலம் காட்டிவிட்டு, இந்திய அணுசக்தித் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் திணித்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தைப் படித்தால் அப்பாவி போல நடமாடும் பிரதமர் மன்மோகன் சிங் கோயபல்சையும் விஞ்சும் புளுகன் என்பது தெரியவரும்.

 

மறுசுழற்சி உரிமை என்ற மாயை

 

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வந்தபொழுது, இந்தியாவின் சிவில் பயன்பாட்டுக்கான அணு உலைகளை, சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர மன்மோகன் சிங் ஒத்துக் கொண்ட இரகசியம் அம்பலமானது. ""இந்தியா தங்குதடையின்றி யுரேனியம் இறக்குமதி செய்து கொள்ளவும்; அதனை மறு சுழற்சி செய்யவும் உரிமை கிடைப்பதால், இந்தக் கண்காணிப்புக்கு ஒத்துக் கொண்டதாக'' மன்மோகன் சிங் நியாயப்படுத்தினார்.

 

123 ஒப்பந்தமோ, இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தை மறுசுழற்சி செய்யும் உரிமையை இந்தியாவிற்கு வழங்கவில்லை. மாறாக, ""மறு சுழற்சி செய்யத் தன்னை அனுமதிக்கும் விண்ணப்பதை, அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பிக்கும் உரிமையை '' மட்டும்தான் இந்தியாவிற்கு வழங்கியிருக்கிறது. இந்தியாவின் இந்த விண்ணப்பதை உடனடியாக அனுமதிக்கும் கட்டாயம் கூட அமெரிக்காவுக்குக் கிடையாது.

 

மாறாக, இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி, அதில் மறுசுழற்சியை அணுமதிப்பதற்கான ""ஏற்பாடுகள்செயல்முறைகளை'' முடிவு செய்து, அவை அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான், மறுசுழற்சி உரிமை இந்தியாவிற்கு வழங்கப்படும் என 123 ஒப்பந்தம் கூறுகிறது. அதாவது, மறுசுழற்சி உரிமையை நேரடியாக மறுக்காமல், தலையை சுற்றி மூக்கைத் தொடுவதன் மூலம் மறுக்கிறது, அமெரிக்கா.

 

அமெரிக்கா பெரிய மனது பண்ணி, இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தை மறுசுழற்சி செய்து கொள்ளும் உரிமையை இந்தியாவிற்கு வழங்கினாலும், தற்போதுள்ள அணு உலைகளில் இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தை மறுசுழற்சி செய்ய முடியாது. ""மறுசுழற்சிக் கென்றே அர்ப்பணிக்கப்பட்ட, உயர் தொழில்நுட்பம் கொண்ட புதிய அணு உலைகளை இதற்காக அமைக்க வேண்டும்'' என இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ""உயர் தொழில்நுட்பம் கொண்ட புதிய அணு உலை என்பதன் பின்னே, மறுசுழற்சி வழங்கும் உரிமையைக் காலம் கடத்தும் அமெரிக்காவின் நரித்தனம் மறைந்திருப்பதாக'' அணு விஞ்ஞானிகள் அம்பலப்படுத்துகின்றனர்.

 

தொழில்நுட்ப இறக்குமதியா? ஆதிக்கப் பொறியா?

 

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், யுரேனியத்தை மறுசுழற்சி செய்ய, அதனைச் செறிவூட்ட, கனநீர் தயாரிக்கப் பயன்படும் தொழில் நுட்பங்களை இந்தியா தங்கு தடையின்றி இறக்குமதி செய்து கொள்ள முடியும் என மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்திருந்தார். 123 ஒப்பந்தமோ அப்படிப்பட்ட எந்த வாக்குறுதியினையும் இந்தியாவிற்கு வழங்கவில்லை. இந்த ஒப்பந்தத்தைப் பேசி முடித்துவிட்டு வந்திருக்கும் அணுசக்தி கமிசனின் தலைவர் அனில் ககோட்கர். ""இந்தத் தொழில் நுட்பங்களை இந்தியாவிற்குத் தரக்கூடாது என்று இருந்த நிலைக்குப் பதிலாக, அதைப் பெறுவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் உருவாக்கியிருக்கிறது'' என்கிறார்.

 

இந்த ""வாய்ப்பை'' இந்தியா பெற வேண்டும் என்றால், ""இந்தியா மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்பவே இந்தத் தொழில் நுட்ப பரிமாற்றம் நடக்கும்'' என்கிறது, 123 ஒப்பந்தம். இந்த விதி, இந்தியாவையும், அமெரிக்காவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது போலத் தோன்றினாலும், உண்மையோ வேறு மாதிரியானது.

 

இந்தியாவிடம் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக பிரதமரின் வெற்று வாக்குறுதியைத் தவிர, வேறெந்த விதியும் கிடையாது. ஆனால், அமெரிக்காவிடமோ, இந்தியாவின் மீது தனது மேலாதிக்கத்தைத் திணிக்கும் ""ஹைட்'' சட்டம் இருக்கிறது.

 

""சர்வதேச நாடுகளின் கண்காணிப்புக்கு உட்படாத இந்தியாவின் அணு உலைகளுக்கு, அணுசக்தி தொழில் நுட்பங்களை ஏற்றுமதி செய்வதைத்'' தடை செய்கிறது ஹைட் சட்டம். அணு சக்தி தொழில் நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெற வேண்டும் என்றால், சர்வதேச நாடுகள் என்ற போர்வையில் அமெரிக்காவின் கண்காணிப்புக்கு இந்தியாவின் அணு உலைகளைத் திறந்து விட வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

 

அமெரிக்காவின் கண்காணிப்புக்கு இந்திய உட்பட வேண்டும் என்பது 123 ஒப்பந்த விதி எண் 10.4லும் குறிப்பிடப்பட்டுள்ளது. ""சர்வதேச அணுசக்தி கமிசன், இந்திய அணு உலைகளைத் தனது பாதுகாப்பு விதிகளுக்கு உட்படுத்த முடியாது என முடிவு செய்தால், வழங்குபவரும், பெறுபவரும் கலந்து ஆலோசித்து, "சரிபார்க்கும்' நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும்'' என்கிறது, இந்த விதி. ஆனால், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, அமெரிக்காவின் ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்றும்; "பாதுகாப்பு நடவடிக்கைகள்' என்பது வேறு; சரிபார்க்கும் நடவடிக்கைகள் என்பது வேறு என்றும் மன்மோகன்சிங் கும்பல் பூசி மெழுகிவருகிறது.

 

ஊசிப்பட்டாசு கூட வெடிக்க முடியாது!

 

இந்த ஒப்பந்தம் ரத்தானால் கூட, இந்தியாவின் அணு உலைகளுக்கு, அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் தேவைப்படும் யுரேனியத்தை வழங்கும் உத்தரவாதத்தை அமெரிக்கா தந்திருப்பதாக இந்தியா கூறி வருகிறது. ஆனால், 123 ஒப்பந்தம் கையெழுத்தான மறு நிமிடமே, ""மகனே உன் சமர்த்து'' எனக் கூறி, கையைக் கழுவி விட்டது, அமெரிக்கா. (ஆதாரம்: தி ஹிந்து, 12.08.07, பக்:10)

 

இந்தியாவைக் குறிவைத்து அமெரிக்கா போட்டுள்ள ஹைட் சட்டம்,""அமெரிக்கா இந்தியாவுடனான 123 ஒப்பந்தத்தை ரத்து செய்தால், அணுவிசை மூலப்பொருள் விற்கும் குழுமத்தைச் சேர்ந்த நாடுகளையும், இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யவிடாமல் தடுக்க செய்ய வேண்டும்'' எனக் குறிப்பிடுகிறது.. எனவே, ""அமெரிக்கா கைவிட்டால் கூட, அணு விசை மூலப் பொருள் விற்கும் குழுமத்தைச் சேர்ந்த நாடுகளில் இருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து விட முடியும்'' என்ற இந்தியாவின் நம்பிக்கை நிறைவேறுவது எளிமையானதல்ல.

 

இந்த ஒப்பந்தத்திற்கும், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்கிறார், மன்மோகன் சிங். ஆனால், ஒப்பந்தம் குறித்து இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த அமெரிக்காவின் அரசுச் செயலரும், 123 ஒப்பந்தத்தின் சூத்திரதாரியுமான நிக்கோலஸ் பர்ன்ஸ், ""இந்தியா, ஈரானுடனான தனது பொருளாதார உறவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; உலகம் மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள இத்தருணத்தில், சர்வதேச சமூகத்தோடு இணைந்து இந்தியா செயல்பட வேண்டும்'' என அறிவுரை வழங்கியிருக்கிறார். (தி ஹிந்து, 7.08.07, பக்:10).

 

ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படையணியில் சேர்ந்து விடுங்கள் என்ற நெருக்குதலைத் தவிர, இந்த அறிவரைக்கு வேறு பொருள் கிடையாது; இந்தியாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து போடப்பட்டுள்ள ஹைட் சட்டமோ, ""இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு இசைவாக இருக்க வேண்டும்'' என நிபந்தனை விதிக்கிறது.

 

""இந்தியா அணுகுண்டு சோதனையை மேற்கொண்டால், ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வோம்'', என அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அறிவித்து விட்டது; ""எதிர்காலத்தில் அணுகுண்டு வெடிக்கும் தேவை இந்தியாவிற்கு ஏற்படாது'' எனக் கூறி, அடிமைக்கு அணுகுண்டு தேவையில்லை என்பதை அமெரிக்க அரசுச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ் சூசகமாக விளக்கிவிட்டார். இதன்பிறகும், ""இந்தியா அணுகுண்டு சோதனை நடத்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை'' என மழைக்காலத் தவளையைப் போல மன்மோகன் சிங் கத்திக் கொண்டிருப்பதை அர்த்தமுள்ளதாக எடுத்துக் கொள்ள முடியுமா?

 

இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கு அணுகுண்டு சோதனை போன்ற உலகையே அதிர வைக்கும் செயலில் கூட இந்தியா ஈடுபட வேண்டியதில்லை. ""ஈரான் பிரச்சினையில் அமெரிக்காவின் மனம் நோகும்படி இந்தியா நடந்து கொண்டாலோ; அணு ஆற்றல் பெறாத நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான மூலக் கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்காக அமெரிக்கக் கொண்டுவரத் துடிக்கும் சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதில், அமெரிக்கா எதிர்பார்த்தபடி இந்தியா நடக்கவில்லை என்றாலோ; அணுஆயுதப் பரவலைத் தடுப்பது தொடர்பாக அமெரிக்காவின் கங்காணியாகச் செயல்பட இந்தியா தயங்கினாலோ, இந்தியாவுடனான 123 ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்து விடலாம்'' என ஹைட் சட்டம் கூறுகிறது.

 

இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவது இருக்கட்டும். இந்தியாவின் அரைகுறை இறையாண்மையைக் கூடக் காவு கேட்கும் இந்த ஹைட் சட்டத்திற்கு எதிராக ஊசிப் பட்டாசைக் கொளுத்திப் போடும் ""நெஞ்சுரம்'' இந்திய அரசிற்கு உண்டா?

 

யாருக்கு இலாபம்?

 

இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் ஈரான் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே இயற்கை எரிவாயு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவிருந்த நிலையில்தான், இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை மன்மோகன் சிங் மூலம் இந்தியா மீது திணித்தது, அமெரிக்கா. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2020க்குள் 20,000 மெகா வாட் திறனுள்ள அணு மின்சாரத்தைத் தயாரிக்க மூன்று இலட்சம் கோடி ரூபாய் முதலீடு இந்தியாவிற்குக் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள்.

 

இந்தப் புள்ளிவிவரம் உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும்; அதனால், மக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்து விடுமா? 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சாரம் உற்பத்தி செய்து கொடுக்கப் போவதாக வந்த அமெரிக்காவின் என்ரான், மகாராஷ்டிர மாநில அரசின் மின்சார வாரியத்தையே போண்டியாக்கியது. இந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு பார்த்தால், அணுசக்தி ஒப்பந்தம் மூலம் ""கிடைக்கும்'' அமெரிக்க மூலதனம், நாட்டின் மின்சாரத் துறையையே திவாலாக்கி விடும். இப்படி நாட்டு மக்களுக்கும் பயன்படாத, நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் வேட்டு வைக்கிற இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தியே தீரவேண்டும் என மன்மோகன் சிங் ஒற்றைக் காலில் நிற்பதன் பின்னேயுள்ள மர்மம் என்ன?

 

பொருளாதார சுயசார்பு, அரசியல் இறையாண்மையோடு நமது நாடு இருப்பதைவிட, தெற்காசியாவில் அமெரிக்காவின் பேட்டை ரவுடி என்ற தகுதியைப் பெறுவதுதான் இந்திய ஆளும் கும்பலின் நீண்ட நாள் இலட்சியக் கனவு. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் போலீசுக்காரனாக, கங்காணியாக இந்தியா அங்கீகரிக்கப்படுவதற்கு வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளது.

 

மேலும், இந்த ஒப்பந்தத்தையடுத்து அணுசக்தித் துறையிலும் தனியார்மயத்தைக் கொண்டுவர அரசு தயாராகி வருவதால், டாடாவும், அம்பானியும் அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கி விட்டார்கள். ஏறத்தாழ 15 இலட்சம் கோடி ரூபாய் வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனம் பாயும் என்பதால், இந்தியத் தரகு முதலாளிகள் கூட்டம் நாக்கில் எச்சில் வழிய இந்த ஒப்பந்தத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது.

 

அமெரிக்கா, இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு வழிகளில் இலாபம் அடையத் துடிக்கிறது. ஒன்று, வர்த்தகம் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் அமெரிக்காவின் அணுசக்தி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சந்தை திறந்து விடப்பட்டுள்ளது. இந்தியாவின் அணு உலைகளுக்குத் தேவைப்படும் யுரேனியத்தையும், தொழில்நுட்பங்களையும் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதன் மூலம், தோரியம் மூலம் அணு மின்சாரம் தயாரிக்க முயலும் இந்தியாவின் சுயசார்புத் தன்மையை முடக்கிப் போட்டு விடவும் திட்டம் போடுகிறது.

 

இதுவொருபுறமிருக்க, மேற்கு ஆசியாவில் இராக்கிற்கு அடுத்து இரானில் தலையிடுவது; கிழக்காசியாவில் வடகொரியாவைப் பணிய வைப்பது; ரசியாவை முந்திக் கொண்டு, மத்திய ஆசியாவின் எண்ணெய் வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது; அனைத்துக்கும் மேலாக சீனாவை மிரட்டி அடிபணிய வைப்பது ஆகிய தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு இந்தியாவைப் போலீசுக்காரனாகப் பயன்படுத்தவே, அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் பொருளாதார நோக்கங்களுக்கு அப்பால், இந்த ஒப்பந்தத்தில் எந்த வெங்காயமும் கிடையாது.

 

மன்மோகனைக் காக்கும்"மார்க்சிஸ்டு'கள்

 

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஜூலை 2005இல் கையெழுத்தான இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம்தான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் ""தாய்''. இராக்குக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் ""நிமிட்ஸ்'' என்ற அணு ஆயுதக் கப்பலை சென்னை துறைமுகத்துக்கு வரவழைத்து, எரிபொருள் நிரப்பி அனுப்பியது; ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் இராணுவத்துக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா தயாராக இருப்பது; சீனாவை மிரட்டும் விதத்தில் அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா நாடுகள் நடத்தும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளில் இந்தியாவும் இணைக்கப்பட்டிருப்பது என இந்தத் தாய் ஒப்பந்தம் குட்டிகளைப் போட்டுக் கொண்டே போகிறது.

 

இதுவொருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இரானுக்கு எதிராக இந்தியா இரண்டுமுறை வாக்களித்தது; இரானுடனான எரிவாயு வர்த்தக ஒப்பந்தத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருப்பது; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட வெனிசுலாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா பேரம் நடத்தியது இவை யாவும் தற்காலிகமாக நடந்துவிட்ட ""பிழைகள்'' அல்ல. உலகின் ஒரே வல்லரசு அமெரிக்காதான். இந்த உண்மைக்கு ஏற்ப, நாங்கள் பதவியேற்றவுடனேயே இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை ""தைரி யமாக மாற்றிக் கொண்டு விட்டோம்'' என இந்த அடிமைத்தனத்துக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங்.

 

மன்மோகன் சிங் கும்பலைப் பொறுத்தவரை நாட்டின் இறையாண்மை என்பது, வழக்கொழிந்து போன அரசியல் கொள்கை. அதனால்தான், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த ஒப்பந்தங்களைப் போட்டு, நாட்டின் மீது திணிக்கிறார். நாடாளுமன்றம் என்பது இந்த மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தை சிறிய சலசலப்போடு அங்கீகரிக்கும் ரப்பர் ஸ்டாம்ப் என்பது அம்பலமாகி விட்டது.

 

இந்த நாடாளுமன்ற அமைப்பு முறையைக் கவிழ்க்காமல் இந்த அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ, மன்மோகன் சிங் அரசைக் கவிழ்ப்பதற்குக் கூடத் தயாராக இல்லை. அணுசக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று பா.ஜ.க. ""உதார்'' விடுவதைக் கூட, போலி கம்யூனிஸ்டுகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.""இந்த அரசுக்கு ஆபத்து இல்லை'' என "மார்க்சிஸ்கள்' வெளிப்படையாக அறிவித்ததன் மூலம், "இடது'சாரிக் கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராகக் கூடிகூடிப் பேசியதும், தினந்தோறும் அறிக்கைகள் விட்டதும், விளம்பரம் தேடிக் கொள்ளும் நாடகம் என்பது அம்பலமாகிவிட்டது.

 

மன்மோகன் சிங் அரசு கவிழ்ந்து விட்டால், இடைத் தேர்தலைச் சந்திக்க நேரிடும் என்பதைவிட, அமெரிக்காவின், டாடாஅம்பானியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பயம்தான் பா.ஜ.க.வை மட்டுமல்ல, போலி கம்யூனிஸ்டுகளையும் பிடித்தாட்டுகிறது. "மார்க்சிஸ்டு' கட்சிக்குள்ளே, புத்ததேவை மன்மோகனின் தூதராகப் பயன்படுத்தலாம் என காங்கிரசு திட்டம் போட்டு விருந்து கொடுக்கும் அளவிற்கு, சி.பி.எம். கட்சியின் தலைமை சீரழிந்து கிடக்கிறது.

 

என்ரான் என்ற அமெரிக்க கம்பெனியைக் கூட எதிர்த்து நிற்க மறுத்த பா.ஜ.க. கும்பல், இந்த அணுஆயுத ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப் போவதில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் அமெரிக்கா நடத்திய விமானப் போர் பயிற்சிகளை வேடிக்கை பார்த்த போலி கம்யூனிஸ்டுகள், இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தை விமர்சிப்பதோடு ஒடுங்கி விடுவார்கள். அணுசக்தி ஒப்பந்தத்தை ஒரு எழுத்து கூட மாறாமல் அப்படியே நடைமுறைப்படுத்துவதா? அல்லது, சில சலுகைகளைப் பெற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதா? — என்பதுதான் மன்மோகன் சிங்குக்கும், மார்க்சிஸ்டுகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு.

 

அதனால்தான், நாடாளுமன்ற குழு என்ற ஊறுகாய் பானைக்குள் இந்த ஒப்பந்தத்தைப் போட்டு அமுக்கிவிடத் துடிக்கிறது, பா.ஜ.க. போலி கம்யூனிஸ்டுகளோ, இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்கவேண்டும்; ஹைட் சட்டத்தின் பாரதூரமான விளைவுகளை ஆராய, காங்கிரசு தன் விருப்பப்படி ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார்கள்.

 

தனியார்மயம்தாராளமயத்தை மனித முகத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோருவதைப் போல, இந்த ஒப்பந்தமும் ""கொஞ்சம் சுய மரியாதையுடன்'' அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் "மார்க்சிஸ்டு'களின் கோரிக்கை. இந்தப் பித்தலாட்ட எதிர்ப்பின் மூலம், மறுகாலனியாதிக்க எதிர்ப்பில் தாங்கள் அம்மணமாகி நிற்பதை மூடி மறைத்துக்கொள்ள முயலுகிறார்கள்.

 

மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தின் கோரமான உச்சகட்டம்தான் இந்த அணுசக்தி ஒப்பந்தமும், இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும். நமது விளைநிலங்களை, சிறுதொழில்களை, பொதுத்துறை நிறுவனங்களைக் காவு வாங்கிய மறுகாலனியாதிக்கம், அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் மானத்தையும் பெயரளவு இறையாண்மையையும் கூடக் காவு கேட்கிறது. இந்த அடிமைத்தனம் ""வளர்ச்சி'' என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுவதும், அதை உழைக்கும் மக்கள் மௌனமாக சகித்துக் கொண்டிருப்பதும் மிகப் பெரும் அவமானம் மட்டுமல்ல; அபாயமும் கூட!


· செல்வம்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது