Language Selection

பி.இரயாகரன் -2013

பொருத்தமான மிகச் சரியான தீர்ப்பு. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட நீதியை பறைசாற்றிய நீதிமன்றங்களின் போலித்தனத்தை துகிலுரிந்து, இறுதியில் அதைத் தூக்கில் ஏற்றி இருக்கின்றனர். இனி நாங்கள் மட்டும் தான், இடையில் நீதிமன்றம் போன்ற இடைத் தரகுக்கு இடமில்லை என்று பாசிட்டுகள் எந்தப் பாசங்குமின்றி சொந்தப் பிரகடனத்தை பாராளுமன்றம் மூலம் செய்து இருக்கின்றனர். யாராவது இதை எதிர்த்து மக்களை அணிதிரட்டினால் போட்டுத்தள்ளுவோம், எங்களோடு இருப்பவர்கள் இதை எதிர்த்தால் தலை உருளும். இது தான் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டமும், தீர்ப்பும். நீதிமன்றங்கள் இதற்கு கொள்கை விளக்கம் வழங்குவதைத் தவிர, இதை மீறி விளக்கம் கொடுக்கக் கூடாது.

ரிசானாவை ஷரியா சட்டம் மூலம் கொன்றதால் அதைப் போற்றும் மதக் காட்டுமிராண்டிகள். சட்டம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று கூறி, கொன்றதை நியாயப்படுத்தும் அரச பயங்கரவாத பாசிட்டுகள். ரிசானா கொல்லப்பட மத அடிப்படை வாதமும், அரச பாசிசமும் ஒன்றுக்கு ஒன்று துணையாக தூணாக இருந்தது. ஒரு ஏழை, ஒரு தொழிலாளி, ஒரு அபலைப் பெண், ஒரு குழந்தை, அன்னிய நாட்டு கூலி உழைப்பாளி … என்று சமூகத்தில் அடிநிலையில் எந்த சமூக ஆதாரமுமற்றவர்களைக் குற்றவாளியாக்கி கொன்றிருக்கின்றது ஷரியா சட்டமும், அரச பாசிசமும்

இது சொந்த இன ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்கும் இனவாதமாகும். இப்படி தன்னை மூடிமறைத்த சுயநிர்ணயம், நேரடியான இனவாதத்தை விட ஆபத்தானதும், அபாயாகரமானதுமாகும். தனக்கான நேரம் வரும் வரை அது தன்னை வெளிப்படுத்துவதில்லை. தன்னை ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டு, அதிகம் நாசம் செய்கின்ற இனவாதமாகும். இதை அரசியல்ரீதியாக, கோட்பாட்டுரீதியாக இனம் கண்டு கொள்வது இன்று அவசியமாகின்றது. சுயநிர்ணயத்தின் பின் ஒளித்துப் பிடித்து விளையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது.

இராணுவத்துக்குத் தாம் இணைக்கப்படுகின்றோம் என்று தெரியாது எப்படி அந்தப் பெண்கள் இணைக்கப்பட்டனரோ, அதேபோல் தமிழினவாதிகள் பாலியல்ரீதியாக அந்தப் பெண்களுக்கு தெரியாமலே அவர்களை ஊடகம் மூலம் வன்புணர்ந்துவிட்டனர். இந்தப் பெண்கள் அவர்களுக்கு தெரியாமலே இராணுவத்தில் இணைக்கப்பட்டனர் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இராணுவம் எப்படித் தயாரில்லையோ, அப்படி தமிழினவாதிகளும் தாங்கள் இந்தப் பெண்களை பாலியல்ரீதியாக ஊடகம் மூலம் வன்முறைக்கு உள்ளாக்கியதை ஒத்துக்கொள்ளத் தயாரில்லை. இந்த உண்மையை மூடிமறைக்க மனநல மருத்துவரைப் பற்றிய விவகாரமாக, அவரின் நடத்தை பற்றிய ஒன்றாக இதை மாற்றிவிட முனைகின்றனர். இந்தப் பெண்கள் "பாலியல் வன்முறைக்கு" உள்ளானதாக கூறி முன்னெடுத்த இனவாத அவதூறுப் பிரச்சாரத்தை, மனநல மருத்துவருக்கு முன்னமே முதலில் நாம் அம்பலப்படுத்தினோம். நாம் இதை முதலில் அம்பலப்படுத்திய பின்னர் தான், மனநல மருத்துவரின் இதை ஒத்த கருத்துகள் வெளியாகியது.

இலங்கை முழு மக்களையும் அடக்கியாள, அரசு தொடர்ந்தும் இனவாதத்தையே முன்தள்ளுகின்றது. சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதன் மூலம், பெரும்பான்மை மக்களை தங்களுடன் இணைந்து இனவாதியாக இருக்குமாறு கோருகின்றது. இலங்கை மக்களை அடக்கியாள, அரசு கையாளும் இனவாதக் கொள்கை இதுதான்.

மக்களுக்காக வேறு எந்த தேசிய சமூக பொருளாதாரக் கொள்கையும் அரசிடம் கிடையாது. இன்று இலங்கையில் அபிவிருத்தி என்ற பெயரில் நடந்தேறுவது, இலங்கையில் தங்கள் மூலதனத்தை பெருக்க வரும் வெளிநாட்டு மூலதனம் தான். அது உற்பத்தி மூலதனமாக, தரகுவர்த்தகமாக, கடன் சார்ந்த நிதிமூலதனமாக வருவதும், அது தன்னை பெருக்கிக் கொள்ள முனைவதைக் காட்டி, அதையே தான் நாட்டின் அபிவிருத்தி என்கின்றது அரசு. இதுவே அரசின் கொள்கையாகிவிட்டது. இதற்கு வெளியில் வேறு கொள்கை எதுவும் அரசுக்குக் கிடையாது. நாட்டையும், நாட்டு மக்களின் உழைப்பையும் அன்னிய மூலதனம் திருடிச் செல்வது தான் அபிவிருத்தி என்று அரசு காட்டுகின்றது. இதை மூடிமறைத்துப் பாதுகாக்க, இனவாதத்தை தூண்டிவிடுவதை அரசு தன் கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்றது.