Language Selection

சமர் - 2 - 1991

இதழ் ஒன்றில் தூண்டிலின் 3வது நிலை பற்றி நாம்… என் பகுதியில் 3வது நிலைக்கான கோரிக்கைகள் சிலவற்றை முன் வைத்திருந்தோம். அத்துடன் இம்மூன்றாவது நிலையானது எமது மண்ணில் உருவாக முடியாதென்பதால் வெளிநாடுகளில் உள்ள நாம் இம் மூன்றாவது நிலையினை உருவாக்குவதற்கு ஒன்றிணைவது பற்றிக் கேட்டிருந்தோம்.

சமர் இதழ் ஒன்றிற்கும் இதழ் இரண்டிற்குமிடையே நீண்ட இடைவெளி. இடையே கொக்கட்டிச்சோலையில் குருதிவெள்ளம் நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொடுத்தபோது இதயம் இரும்பால் அறையப்படடது. ரஞ்சன் விஜேரத்தினா இறந்துபோனான். “நேர்மையான அரசியல்வாதி”, “ஜனநாயகத்தின் பாதுகாவலன்” என்று வாழ்த்துப் பாடிய கொழும்பு தமிழ் துரோகக் கும்பல்கள் ஒவ்வொரு தமிழனையும் வெட்கித் தலைகுனிய வைத்தன. ராஜீவ்காந்தி கொலை! இதே புகழுரைகள். ஈழம் மறுபடியும் சிரித்துக்கொண்டே அழுதது. தென்னிந்தியாவில் நிறையத் தமிழர்களைக் காணவில்லை. தேடப்பட்டார்கள்! சாகவில்லை@ கொல்லப்பட்டார்கள்! கொழும்பில் குண்டு வெடித்தது இதே நிலை! ஆனையிறவில் ஆயிரக்கணக்கில் பிணக்குவியல்கள் ஒருகாலத்தில் உப்பு விளைந்த நிலம் இன்றைக்கு பிணங்களை விளைவித்துக் கொண்டது. நல்ல இயற்கை உரம் இனிமேல் புற்களும் விளையும்! எமது தாய்நிலம் சுடுகாடு. எமது கலாச்சாரம் கொலைக்கலாச்சாரம், எமது தேசிய தொழில் கடத்தல் மிரட்டல், கொலை, கொள்ளை!