Language Selection

சிறுவர் பாடல்கள்

பூனைக்குட்டி


மியாவ் மியாவ் பூனைக்குட்டி

மீசை வச்ச பூனைக்குட்டி

பையப் பையப் பதுங்கி வந்து
பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி

பளபளக்கும் பளிங்குக் குண்டு
பளிச் சென்று முகத்தில் இரண்டு
வெளிச்சம் போடும் விழி கண்டு
விரைந்தோடும் எலியும் மிரண்டு

விரித்த பூவைக் கவிழ்த்ததுபோல
விளங்கும் பூனைக் காலடிகள்
இருந்து தவ்வ ஏற்றபடி
இயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள்

அழகு வண்ணக் கம்பளி யால்
ஆடை உடுத்தி வந்தது போல்
வளர்ந்து முடியும் பலநிறத்தில்
வந்து தாவும் பூனைக்குட்டி

விரட்டி விலங்கினைக் காட்டிலே
வீரங் காட்டும் புலியினமே
துரத்தி எலியை வீட்டினிலே
தொல்லை தீர்க்கும் பூனை தினமே

-கொல்லங்குடி உடையப்பன்

http://siruvarpaadal.blogspot.com/2006/02/6.html

கொட்டுது பார் மழை!
கொண்டு வா ஒரு குடை!

வெட்டுது பார் மின்னல்!
பார்க்காதே அது இன்னல்!

முழங்குது பார் இடி!
வெளியே போவது எப்படி?

பொழியுது பார் முகில்!
விளைந்திடும் பார் வயல்!

கூவுது பார் குயில்!
ஆடுது பார் மயில்!

மழை பெய்தாலே மகிழ்வுதான்!
மறைந்திடும் நம் வறட்சிதான்!

நன்றி - குறும்பலாப்பேரி பாண்டியன் - தினத்தந்தி

http://siruvarpaadal.blogspot.com/2006/03/7.html

அம்மா இங்கே வா! வா!

ஆசை முத்தம் தா! தா!

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போன்ற நல்லார்

ஊரில் யாரும் இல்லார்

என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இங்கே இல்லை

ஐயம் இன்றி சொல்வேன்

ஒற்றுமை என்றும் பலமாம்

ஓதும் செயலே நலமாம்

ஒளவை சொன்ன மொழியாம்

அஃதே நமக்கு வழியாம்.

http://siruvarpaadal.blogspot.com/2006/04/8.html

ஆல மரமாம் ஆலமரம்
அருமையான ஆலமரம்
காலம் காலமாய் நிழல்தந்து
காத்து வந்திடும் ஆலமரம்!

கூடு கட்ட பறவைகள்
கூடி அங்கே சென்றிடுமாம்
நாடி நாமும் செல்லலாம்
நல்ல காற்று பெற்றிடலாம்!

சிறிய விதையிலிருந்து
சிறப்பாய் பெரிதாய் வளர்ந்துமே
பெரிய படையும் தங்கிட
படர்ந்த நிழலைத் தந்திடுமே!

தளர்ச்சி மரத்தில் தோன்றினால்
தாமாய் விழுதுகள் இறங்கியே
வளர்ச்சி காக்கும் ஆலமரம்
வீழ்ச்சி காணா ஆலமரம்!

ஆல விழுதைப் போலவே
அன்னை தந்தை தளர்ச்சி கண்டு
நாளும் நாமும் காத்திடுவோம்
நல்ல பாடம் கற்றிடுவோம்!

நன்றி - புலவர்,ப.தேவகுரு தேவதானப்பட்டி

http://siruvarpaadal.blogspot.com/2006/04/9.html

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்

பையப் பைய ஊதவே
பந்து போல ஆனது
பந்து போல ஆனதும்
பலமாய் நானும் ஊதினேன்

பலமாய் நானும் ஊதவே
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்

விரைவில் வந்தால் பார்க்கலாம்
அல்லது வெடிக்கும் சத்தம் கேட்கலாம்


ஹையா !!! எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ !

ஹெக்கே பெக்கெ ஹெக்கே பெக்கெ ஹா ஹா ஹா :)

 

http://siruvarpaadal.blogspot.com/2006/04/10.html

அம்மா என்று சொல்
ஆளுமை வளர்
இலக்கை உயர்த்து
ஈன்றவள் மனம் குளிர்
உலகினை நேசி
ஊர் நலம் பேண்
எளிமை பயில்
ஏளனம் அகல்
ஐம்புலன் கல்
ஒற்றுமை பழகு
ஓங்கிய எண்ணம் கொள்
ஓளவை சொல் கேள்
அஃதே வாழ்க்கை..

- விபாகை

 

http://siruvarpaadal.blogspot.com/2006/04/11.html

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்
தங்க நிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்.

 

அழ.வள்ளியப்பா.

-- விழியன்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/04/12.html

 

 

சைந்தா டம்மா அசைந்தாடு
சைக் கிளியே அசைந்தாடு
சையோ டொன்றாய் அசைந்தாடு
ரக் குலையே அசைந்தாடு

தய நிலாவே அசைந்தாடு
தும் குழலே அசைந்தாடு
ழிலாய் வந்து அசைந்தாடு
ற்றத் தேடு அசைந்தாடு

யம் விட்டு அசைந்தாடு
ழுக்கம் பேணி அசைந்தாடு
விய நூலே அசைந்தாடு
விய மின்றி அசைந்தாடு

-சாரணா கையூம்

சாஞ்சாடம்மா சாஞ்சாடு
தங்கக் குடமே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு
காவேரித் தாயே சாஞ்சாடு

- பாஸிடிவ் ராமா

http://siruvarpaadal.blogspot.com/2006/04/13.html

பாட்டி வீட்டு பழம்பானை
அந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டை வழியாய் சுண்டெலியும்
உள்ளே புகுந்து கொண்டதடா

உள்ளே புகுந்த சுண்டெலியும்
நெல் ஊதி புடைத்து உண்டதடா
நெல் உண்டு கொழுத்ததனால்
உடல் ஊதி பெருகி விட்டதடா

ஊதி பெருத்த உடலாலே
ஓட்டை வழியாய் வெளியே வரமுடியவில்லை.
காற்று எதுவும் இல்லாமல்
எலியும் உள்ளே இறந்ததடா


இந்த பாடல் திருடி தின்பதும் உழைக்காமல் தின்பதுவும் தவறு என்று சொல்ல வந்தது.

-- தேன் துளி

http://siruvarpaadal.blogspot.com/2006/04/14.html

ஆல மரத்து ஊஞ்சலாம்
அமர்ந்து ஆடிப் பாடலாம்
காலை உயர நீட்டியே
கீழும் மேலும் ஆடலாம்.

விண்ணை நோக்கிப் போகலாம்
வடக்குத் தெற்குப் பார்க்கலாம்
பண் இசைத்துப் பாடலாம்
பகல் முழுதும் ஆடலாம்.

பழக்க மில்லாப் பிள்ளைகள்
பையப் பைய ஆடலாம்
பழக்கமான போதிலே,
பறந்து விண்ணில் ஆடலாம்.

-சாரணா கையூம்

http://siruvarpaadal.blogspot.com/2006/04/15.html

துண்டுத் தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன்!

துண்டுத் துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய்ப் பொம்மை செய்தனள்!

வண்ணத் தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர்!
சின்னப் பையன் கண்டனன்
சேர்த்துப் பூக்கள் செய்தனன்!

சிறிய துரும்பும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே!
சின்னஞ் சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே!

(எழுதிய கவிஞருக்கும் அதை எனக்கு அனுப்பி வைத்தவருக்கும் நன்றி)

-- பாஸிடிவ் ராமா

 

http://siruvarpaadal.blogspot.com/2006/04/16.html

வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்

எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே

தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே

அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை

நன்றி - சுகா (http://sukas.blogspot.com/2006/04/blog-post_02.html)

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/17.html

அ, ஆ சொல்லலாம்
அரிசி பொறி திங்கலாம்

இ, ஈ சொல்லலாம்
இடியாப்பம் திங்கலாம்

உ, ஊ சொல்லலாம்
உளுந்து வடை திங்கலாம்

எ, ஏ சொல்லலாம்
எள்ளுருண்டை திங்கலாம்

ஐ எழுத்து சொல்லலாம்
ஐங் கரனை வணங்கலாம்

ஒ, ஓ சொல்லலாம்
ஓமப் பொடி திங்கலாம்

ஔ எழுத்து சொல்லலாம்
ஔவையாரை வணங்கலாம்.

அக் என்று சொல்லலாம்.
அக்தோட முடிக்கலாம்

- பாசிட்டிவ்ராமா

http://siruvarpaadal.blogspot.com/2006/05/18.html

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது

பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறது

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போலப் பழம்தருது

அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக்கிறது

சின்னஞ் சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே

-- பாசிட்டிவ்ராமா

(நன்றி : இதை அனுப்பிய என் அன்பு நண்பருக்கு)

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/19.html

சிட்டே சிட்டே பறந்து வா
சிறகைச் சிறகை அடித்து வா

கொட்டிக் கிடக்கும் மணிகளைக்
கொத்திக் கொத்தித் தின்னவா

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய்

சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய்

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயரச் செல்லணும்

என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு

-- பாசிட்டிவ்ராமா

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/20.html

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

மணியை ஆட்டி வருகுது
வழியை விட்டு நில்லுங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

ஆடி ஆடி வருகுது
அந்தப் பக்கம் செல்லுங்கள்

ஊரைச் சுற்றி வருகுது
ஓரமாக நில்லுங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்

குழந்தைகளே பாருங்கள்
குதித்து ஓடி வாருங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/21.html

பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?

கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?

பஞ்சுக்கால்களாலே நீர்
பையப் பையச் சென்றுமே

என்ன செய்யப்போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?

அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங்கரையை நோக்கியா?

சட்டிப் பாலைக் குடிக்கவா
சாது போலச் செல்கிறீர்?

சட்டிப் பாலும் ஐயையோ
ஜாஸ்தியாகக் கொதிக்குதே!

தொட்டால் நாக்கைச் சுட்டிடும்
தூர ஓடிப் போய்விடும்!


எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/22.html

சின்ன சின்ன பொம்மையிது
சீருடைய பொம்மை
இது சீருடைய பொம்மை
என்தனது தாயாரு
எனக்கு தந்த பொம்மை
இது எனக்கு தந்த பொம்மை

சட்டையிட்டு, தொப்பியிட்டு
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை
பொட்டும் வச்சி, பூவும் வச்சி
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை

சாவிகொடுத்தா சிரிக்குமது
மணியடிச்சா தூங்கும்
இது மணியடிச்சா தூங்கும்
நல்ல நல்ல நாட்டியங்கள்
செய்யும் இந்த பொம்மை
இது செய்யும் இந்த பொம்மை

அம்மாதந்த பொம்மையிது
சும்மா தருவேனோ
நான் சும்மா தருவேனோ
சுற்றி சுற்றி வந்தாலுமே சும்மாக்கிடைக்காது
இது சும்மாக்கிடைக்காது

நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/23.html

கத்திரிக்கா நல்ல கத்திரிக்கா
காம்பு நீண்ட கத்திரிக்கா
புத்தம் புது கத்திரிக்கா
புதுச்சேரி கத்திரிக்கா
நாராயணன் தோட்டத்துல
நட்டுவச்ச கத்திரிக்கா
பறிச்சு நீயும் கொண்டு வா
கூட்டு பண்ணி தின்னலாம்


நன்றி: சகோதரி தேன் துளி

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/24.html

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு.

எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.

மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.

கிட்டு நான்கு லட்டு,
பட்டு நான்கு லட்டு,
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு


எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர்கள்: சகோதரி தேன் துளி, அக்கா துளசி கோபால்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/25.html