Language Selection

பி.இரயாகரன் -2020

கொரோனா நோய் தொற்று (08.04.2020) உறுதி செய்யப்பட்ட, ஒரு மாதம் கடந்துவிட்டது. உடலின் ஏற்பட்ட வலிகள் படிப்படியாக குறைந்து, நோயிலிருந்து மீண்டு தேறியிருக்கின்றேன். இது மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதல்ல, எனது உடல் மற்றும் மனவுணர்வு சார்ந்தது.

இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் ஐந்தில் ஒருவர் இறக்கின்றனர். இது தான் அதிகாரபூர்வமான தரவு. உடல் மற்றும் மருத்துவ உதவி சார்ந்து நிகழ்கின்றது. நான் தேறிய போதும் அன்றாடம் ஆயிரக்கணக்கான மரணங்கள் தொடர்ந்து நிகழ்கின்றது. இன்று உழைப்பு முடக்கப்பட்ட போது, புதிதாக நோய்த்தொற்று பத்தாயிரக்கணக்கில் (சில நாட்கள் இலட்சம் வரை) நிகழ்கின்றது. அதேநேரம் இதற்கான மருத்துவரீதியான தீர்வுகள் - அணுகுமுறைகள் ஒன்றுபட்டனவல்ல, அவையும் தொடர்ந்து வேறுபடுகின்றன. இதுதான் எதார்த்தம்.

எனக்கு மனவுறுதியைத் தந்தது நான் போராடிய வாழ்க்கையும், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மனவுறுதியும் தான். எனக்கு ஏற்பட்ட கொரோனாவுக்கு மருத்துவரீதியாக காய்ச்சல் - உடல் வலியைப் போக்க டொலிப்பிரான் தரப்பட்டது. வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கினை நிறுத்த மருந்தும், சளியை வெளியேற்ற வழமையாக பாவிக்கும் சிராப்பு மருந்தும் மருத்துவரால் தரப்பட்டது. இதைத் தவிர வேறு எதையும் பாவிக்கவில்லை. நோய் எதிர்ப்பு சத்தியை பலப்படுத்த தோடம்பழச்சாறு (விற்றமின் சி) குடித்தேன். மற்றும்படி வழமையான உணவு தான். இதுதான் கொரோனாவுக்கு எதிரான எனது மருத்துவம் மற்றும் உணவாக நான் கையாண்டது. இது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவும் முடியாது.

உண்மையில் இயற்கை ஆற்றலே, நோயில் இருந்து என்னை மீள வைத்தது. தனிப்பட்ட ரீதியில், நான் இந்தப் பூமிக்கு ஒரு விருந்தினர் - அவ்வளவுதான். அப்படிப்பட்டதே இயற்கையின் விதி. இந்த இயற்கையின் ஆற்றலே, மீண்டும் எனக்கு உயிர் வாழ்க்கையைத் தந்தது.

நோய்த்தொற்று (08.04.2020) உறுதி செய்யப்பட்ட போது, 10 நாள் உயிர் வாழ்வதா அல்லது இன்னும் 10 வருடம் உயிர் வாழ்வதா என்பதையே, என் பகுத்தறிவு கேள்விக்குள்ளாக்கியது. அதேநேரம் அறிவு மரணத்துக்கு என்னை தயார் செய்தது. மரணம் குறித்த பொதுவான உளவியல் அச்சம் - என்னை அதிரவைக்கவில்லை, மரணம் என்பது, என்னுடைய 40 வருட பொது வாழ்வு சார்ந்து - எப்போதும் தரிசித்து வந்த ஒன்று தான். என் கண் முன் பலதரம் நிழலாடிய மரணம் - எனக்குப் புதிதல்ல. மரணத்தின் விளிம்பில் இருந்து, பலதரம் தப்பியும் இருக்கின்றேன். எனக்கு ஏற்கனவே பொது வாழ்வு சார்ந்து கல்வெட்டுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றது.