Language Selection

பி.இரயாகரன் -2011

சிங்களமயமாக்கல் பேரினவாதம் மட்டும் செய்வதல்ல, அதற்கு எதிரான தவறான குறுகிய அரசியலும் கூட அதனைச் செய்கின்றது. இதுபோல் கடந்தகாலத்தில் புலிகளை அரசு அழிக்கவில்லை, புலிகளின் அரசியல்தான் புலியை அழித்தது. இந்த உண்மைதான், வரலாற்றுக்கு பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்;. யார் இதை கற்றுகொள்ளவில்லையோ, அவர்கள் மறுபடியும் முள்ளிவாய்க்கால்களில் அதை சந்திப்பார்கள். இது தவிர்க்க முடியாதது.

ஆம் இதுவும் "இன்னொரு" புனைவு என்கின்றனர் மே 18 காரர். அனைவராலும் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கைப் பாட்டாளி வர்க்கம், அரசியல் ரீதியாக எதிர்கொள்கின்ற தொடர் அவலம் இது. இடதுசாரி வேசம் போட்டு, பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தையே குழிபறிக்க முனையும் சந்தர்ப்பவாதிகள் துணையுடன் அனைத்தும் இன்று அரங்கேறுகின்றது.

தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது புனைவு என்கின்றது "மே 18" வியூகம் இதழ். இதையே முன்பு இவர்கள் முன்வைத்தனர். இடதுசாரியத்தை புலிக்கு கூட்டிக் கொடுத்த தீப்பொறியும் அதன் ஒரு நீட்சியான தமிழீழக்கட்சியும், அது சார்ந்த வெளியீடுகளும் இதையே அன்று சொல்லித்தான் அனைத்தையும் அரங்கேற்றினர். இன்று அதன் நீட்சியாக வந்தவர்கள் தான் தாங்கள் என்று கூறிக்கொள்ளும் மே18, இன்று மீளவும் அதை முன்தள்ளுகின்றது. இதுபோல் அதில் இருந்து வந்த "புதிய திசை"களும், "தேசியம் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று எம்முடனான உத்தியோகபூர்வமான உரையாடல் ஒன்றில் முன்வைத்தனர்.

நாங்கள் எமக்குள்ளான சாதியை ஒழிக்க நாம் போராடவில்லை என்ற உண்மை போல்தான், சிங்கள மக்கள் இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடவில்லை என்ற உண்மையும் கூட. தமிழன் பெயரால் உயர் சாதியம் எப்படி தாழ்ந்த சாதிய சமூக அமைப்பை தக்கவைத்து ஒடுக்கி வாழ்கின்றதோ, அப்படித்தான் இனவொடுக்குமுறையும் கூட.

அரசியல் நிகழ்தகவுகளில் உள்ள உண்மைகள் இவை. இப்படி பல உண்மைகளை மறுப்பது தான், எமது பொய்மையான எமது கருத்தாகவும், உணர்வாகவும் உள்ளது. ஒற்றை உண்மைகளை மட்டும் காட்டி கோருவதன் மூலம், வெளிப்படுவது கபடம் நிறைந்த பொய்மைகளும் புரட்டுகளும் தான்.

எதிரி "அரச இயந்திரமே அன்றி அரசாங்கமல்ல" என்று கூறுவது, எதிர்மறையான இரண்டு திரிபை அடிப்படையாக கொண்டது. இதில் ஒன்றை மறுத்து அல்லது ஒன்றை மிகை அழுத்தம் கொடுப்பதன் மூலம் தான் இந்த திரிபு வெளிப்படுகின்றது.

1. அரசை மட்டும் தூக்கி எறியக் கோருவது. இதன் மூலம் அரச இயந்திரத்தை பாதுகாத்தல் அல்லது அதை மென்மையான உறுப்பாகக் காட்டுதல்

2. அரச இயந்திரத்தை மட்டும் தூக்கி எறியக் கூறுவது. அரசை பாதுகாத்தல் அல்லது அதை மென்மையான உறுப்பாக காட்டுதல்

பிள்ளையான், சித்தார்த்தன், கருணா, டக்கிளஸ் முதல் அரசு வரை, ஒரே குரலில் குற்றவாளிகள் எங்களோடு இருக்கவில்லை என்கின்றனர். அவர்களின் அடையாளத்துடன் குற்றவாளிகளாக குற்றவாளிகள் பிடிபட்டவுடன், அவர்கள் தங்களுடன் இருக்கவில்லை என்கின்றனர். இந்த குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பிரபாகரன் சரணடைந்த பின் முல்லைத்தீவில் வைத்து சிறப்பாக குறிப்பாக வதைத்த போது, அவர்கள் அரசுடன் தான் இருந்தனர். இப்படி பல சந்தர்ப்பத்தில் அரசுடன் சேர்ந்து, இவர்கள் செய்யாத குற்றங்களே கிடையாது. மனிதர்களைக் கடத்தி, அதை தொழிலாக செய்தவர்கள் முதல் பெண்ணை கடத்தில் பாலியல் வல்லுறவு செய்து நுகர்வது வரை, இதுவே புலியொழிப்பின் ஒரு அங்கமாகக் கூட மாறியிருந்தது.

 

பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவதாக கூறிய சர்ந்தர்ப்பவாதம், ஒடுக்கப்பட்ட நாடுகளின் சுதந்திரம் பற்றிய ஒரு புரட்டைப் புகுத்த முனைந்ததைப் பார்த்தோம். முந்தைய மற்றும் பிந்தையதுக்குமான வரலாற்று ஒப்பீட்டைக் கொண்டு, நிலவும் சமூக அமைப்பின் "பொதுப்புத்தி" மூலம் இதனைத் திணிக்கின்றனர். இப்படி ஒடுக்கப்பட்ட நாடுகளின் சுதந்திரத்தை பற்றிய பொது மாயையை "பொதுப்புத்தி" சார்ந்து உருவாக்க முனைகின்றனர். வெள்ளை ஆட்சியாளர்கள் (அன்னியர்), கறுப்பு ஆட்சியாளர்கள் (சுதேசிகள்) என்ற வேறுபட்ட அடையாளம் சார்ந்த "பொதுப்புத்தி" சார்ந்த அடிப்படை வேறுபாட்டைக் காட்டித்தான், சுதந்திரத்தை பற்றிய புரட்டை அரங்கேற்றுகின்றனர். உண்மையில் அன்று இந்த உள்ளடக்கத்தில் தான் காலனித்துவவாதிகள் ஆட்சியைக் கொடுக்க, காலனித்துவ எடுபிடிகள் ஆட்சியைப் பெற்றுக் கொண்டனர். இதைத்தான் சுதந்திரம் என்றனர். இப்படி நம்பும் சமூக கண்ணோட்டம் கொண்ட அமைப்புதான், இன்றைய ஆட்சியமைப்பு. இதுபோல் தான் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் திணிக்க பாராளுமன்ற வடிவம் சார்ந்த ஒத்த தன்மையைக்காட்டி நிற்கின்றனர். இப்படி இந்தச் சமூக அமைப்புக்கே உரிய அதன் பொதுப்புத்தியில்தான் 'மே18' தனது அரசியல் புரட்டை அரசியலாக்க முனைகின்றது. இது போல்தான் "மே18" என்ற பெயரும் கூட. பொதுப்புத்தி சார்ந்த அறியாமையை வைத்து, மோசடி அரசியல் செய்வதாகும்.

 

"ஆதரவு" அறிக்கையின் அரசியல் சாரம், புலியெதிர்ப்புத்தான். இதற்கு வேறு அர்த்தம் கிடையாது. இது வேறு ஒரு மக்கள் அரசியலை முன்வைத்துப் பேசவில்லை. இதன் எதிர்மறையான அரசியல் உள்ளடக்கம், அரசு சார்புதான். மாநாட்டுகாரர்கள் இதில் இருந்தும் கூட, விலகி நிற்கின்றனர். மாநாட்டுகாரர்கள் "எதிர்ப்பு ஆதரவு" உள்ளடக்கத்துக்கு வெளியில், கலைகலைக்காக என நிற்கின்றனர். இப்படி மொத்தத்தில் இதற்கு வெளியில் தான் மக்களின் நலன்கள் உள்ளது.

வடக்கில் நடப்பது அநேகமாக அரசியல் கொலைகள். இதற்குள் கடந்தகாலத்தில் இதைச் செய்தே, ருசி கண்ட கூட்டம் தன் பங்குக்கு மேலும் இதைச் செய்கின்றது. இதன் மீதான சட்ட நீதி விசாரணைகள் முதல் தண்டனைகள் எதுவும் கிடையாது. இன்று யாழ் அரச அதிபரின் தலைமையில் நடப்பது இராணுவத்துடன் கூடிய ஆட்சி. இரண்டும் கூட்டாக இயங்குகின்றது. இன்று இராணுவமற்ற சிவில் சமூகமல்ல வடக்கு கிழக்கு. கடந்தகாலத்தில் இரகசியமாக இயங்கிய கொலைகார கும்பல்கள் (போர்க் குற்றங்களைச் செய்த கூட்டம்) சுதந்திரமாக இயங்குகின்றது. இதுதான் இந்த சமூகத்தைக் கண்காணிக்கின்றது, தொடர்ந்தும் கொல்லுகின்றது.