Language Selection

சிறுவர் பாடல்கள்

கல்வி என்பது
கண்களைத் திறப்பது!

கல்லாதிருப்பது
கண்களைத் துறப்பது!

செல்வம் அனைத்திலும்
சிறப்பிடம் வகிப்பது!

இல்லார்க் கெடுத்ததை
இறைப்பினும் மிகுப்பது!

எல்லா இடத்திலும்
ஏற்றம் அளிப்பது!

பொல்லா மடமையைப்
பூண்டோ டொழிப்பது!

அல்லும் பகலும்
அணையா விளக்கது!

கல்லில் பதியும்
கலையா எழுத்தது!

சொல்லில் கனிவு
சுவையைக் குழைப்பது!

வெல்லும் துணிவு
விவேகம் விளைப்பது!
-

தளவை: இளங்குமரன் செங்கற்பட்டு.

http://siruvarpaadal.blogspot.com/2006/01/2.html

இளங்குயிலே! இளங்குயிலே!
இளம்காலை வாராயோ!-

உன்இன்பமணிக் குரலெடுத்து
ஏழிசையைப் பாடாயோ!

கவிக்குயிலே! கவிக்குயிலே!
கவிச்சோலை வாராயோ!-
உன்கனி அமுதக் குரலெடுத்து
காதலினைப் பாடாயோ!

கருங்குயிலே! கருங்குயிலே!
கருக்கலிலே வாராயோ!-
என்காதினிலே தேன்பாய்ச்ச
காவியங்கள் பாடாயோ!

மாங்குயிலே! மாங்குயிலே!
மாலையிலே வாராயோ!-
உன்மகரயாழ்க் குரலெடுத்து
மனம்குளிரப் பாடாயோ!

பூங்குயிலே! பூங்குயிலே!
பூஞ்சோலை வாராயோ!-
உன்பொங்குமெழில் குரலெடுத்துப்
பூபாளம் பாடாயோ!

தேன்குயிலே! தேன்குயிலே!
தேரேறி வாராயோ!-
உன்தித்திக்கும் குரலெடுத்து
தெம்மாங்குப் பாடாயோ!

-தெ.சாந்தகுமார்.

http://siruvarpaadal.blogspot.com/2006/01/3.html

உப்போ உப்பு தங்கச்சி
ஒசத்தி உப்பு தங்கச்சி
பொட்டு கூடையை கொண்டாயேன்
போணி பண்ணிட்டு நான் போறேன்
எட்டு தெரு சுத்தனும்
ஏழு மூட்டை விக்கனும்
செல்லா காசு தங்கச்சி
சீசீ தப்பு தங்கச்சி

 

பத்மா அர்விந்த்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/02/blog-post.html

மனதில்...
காற்றாய்,

நீயும்-
கலந்திட வேண்டும்!
நாற்றாய்,
நீயும்-
நின்றிட வேண்டும்!
மலராய்,
நீயும்-
மணம் வீசிட வேண்டும்!
தேனாய்,
நீயும்-
இனித்திட வேண்டும்
தென்றலாய்,
நீயும்-
இருந்திட வேண்டும்
மலராய்,
நீயும்-
பூத்திட வேண்டும்
மணமாய்,
நீயும்-
பரவிட வேண்டும்
மனிதனாக,
நீயும்-
உயர்ந்திட வேண்டும்!
மண்னெங்கும்
உன் பெருமையே
பேசப்பட வேண்டும்!
மனதில் கொள் தம்பி!

-இரா.நவமணி

http://siruvarpaadal.blogspot.com/2006/01/4.html

உணவில் உப்பு இருந்தால் தான்
உண்ண முடியும் நம்மாலே!

கணமும் உப்பு இல்லாமல்
காலம் தள்ள முடியாதே!

உப்பின் தந்தை கடலாகும்
உப்பளம் உப்பின் இடமாகும்!
உப்பில் அயோடின் இருந்தால் தான்
உடலும் நலமாய் இருந்திடுமே!

உப்பை அதிகம் சேர்த்தாலே
உயரும் ரத்த அழுத்தமே!
எப்பவும் அளவாய் இருந்தாலே
என்றும் நலமாய் வாழ்ந்திடலாம்!

உப்பு யாத்திரை குஜராத்தில்
உத்தமர் காந்தி தலைமையிலே!
உப்புக் காகப் போராட்டம்
உலகை உலுக்கி எடுத்ததுவே!

உப்பே உணவுக்குச் சுவையாகும்
உப்பின்றேல் அது குப்பையாகும்!
உப்பும் உணவும் போலவே நாம்
உலகில் ஒன்றாய் வாழ்வோமே!

பி. வி.கிரி

http://siruvarpaadal.blogspot.com/2006/02/blog-post.html

பூனைக்குட்டி


மியாவ் மியாவ் பூனைக்குட்டி

மீசை வச்ச பூனைக்குட்டி

பையப் பையப் பதுங்கி வந்து
பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி

பளபளக்கும் பளிங்குக் குண்டு
பளிச் சென்று முகத்தில் இரண்டு
வெளிச்சம் போடும் விழி கண்டு
விரைந்தோடும் எலியும் மிரண்டு

விரித்த பூவைக் கவிழ்த்ததுபோல
விளங்கும் பூனைக் காலடிகள்
இருந்து தவ்வ ஏற்றபடி
இயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள்

அழகு வண்ணக் கம்பளி யால்
ஆடை உடுத்தி வந்தது போல்
வளர்ந்து முடியும் பலநிறத்தில்
வந்து தாவும் பூனைக்குட்டி

விரட்டி விலங்கினைக் காட்டிலே
வீரங் காட்டும் புலியினமே
துரத்தி எலியை வீட்டினிலே
தொல்லை தீர்க்கும் பூனை தினமே

-கொல்லங்குடி உடையப்பன்

http://siruvarpaadal.blogspot.com/2006/02/6.html

கொட்டுது பார் மழை!
கொண்டு வா ஒரு குடை!

வெட்டுது பார் மின்னல்!
பார்க்காதே அது இன்னல்!

முழங்குது பார் இடி!
வெளியே போவது எப்படி?

பொழியுது பார் முகில்!
விளைந்திடும் பார் வயல்!

கூவுது பார் குயில்!
ஆடுது பார் மயில்!

மழை பெய்தாலே மகிழ்வுதான்!
மறைந்திடும் நம் வறட்சிதான்!

நன்றி - குறும்பலாப்பேரி பாண்டியன் - தினத்தந்தி

http://siruvarpaadal.blogspot.com/2006/03/7.html

அம்மா இங்கே வா! வா!

ஆசை முத்தம் தா! தா!

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போன்ற நல்லார்

ஊரில் யாரும் இல்லார்

என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இங்கே இல்லை

ஐயம் இன்றி சொல்வேன்

ஒற்றுமை என்றும் பலமாம்

ஓதும் செயலே நலமாம்

ஒளவை சொன்ன மொழியாம்

அஃதே நமக்கு வழியாம்.

http://siruvarpaadal.blogspot.com/2006/04/8.html

ஆல மரமாம் ஆலமரம்
அருமையான ஆலமரம்
காலம் காலமாய் நிழல்தந்து
காத்து வந்திடும் ஆலமரம்!

கூடு கட்ட பறவைகள்
கூடி அங்கே சென்றிடுமாம்
நாடி நாமும் செல்லலாம்
நல்ல காற்று பெற்றிடலாம்!

சிறிய விதையிலிருந்து
சிறப்பாய் பெரிதாய் வளர்ந்துமே
பெரிய படையும் தங்கிட
படர்ந்த நிழலைத் தந்திடுமே!

தளர்ச்சி மரத்தில் தோன்றினால்
தாமாய் விழுதுகள் இறங்கியே
வளர்ச்சி காக்கும் ஆலமரம்
வீழ்ச்சி காணா ஆலமரம்!

ஆல விழுதைப் போலவே
அன்னை தந்தை தளர்ச்சி கண்டு
நாளும் நாமும் காத்திடுவோம்
நல்ல பாடம் கற்றிடுவோம்!

நன்றி - புலவர்,ப.தேவகுரு தேவதானப்பட்டி

http://siruvarpaadal.blogspot.com/2006/04/9.html

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்

பையப் பைய ஊதவே
பந்து போல ஆனது
பந்து போல ஆனதும்
பலமாய் நானும் ஊதினேன்

பலமாய் நானும் ஊதவே
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்

விரைவில் வந்தால் பார்க்கலாம்
அல்லது வெடிக்கும் சத்தம் கேட்கலாம்


ஹையா !!! எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ !

ஹெக்கே பெக்கெ ஹெக்கே பெக்கெ ஹா ஹா ஹா :)

 

http://siruvarpaadal.blogspot.com/2006/04/10.html