திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யப் போதுமான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்கள் அம்மாவட்டங்களில் திறக்கப்படுவதில்லை. இதனால், அம்மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகத்தான் நெல்லை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல்லுக்குஅரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை கிடைக்காது. வியாபாரிகள் கூட்டணி கட்டிக் கொண்டு தீர்மானித்துச் சொல்லும் விலையில்தான் நெல் மூட்டைகளை விற்க முடியும். சட்டபூர்வமாக நடந்துவரும் இந்தக் கொள்ளையை விவசாயிகள் தட்டிக் கேட்க முயன்றால், போலீசின் குண்டாந்தடியும் பொய் வழக்கும்தான் அவர்கள் மீது பாயும். இந்த அநியாயம்தான் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விழுப்புரத்திலும் நடந்தது.