Language Selection

பி.இரயாகரன் -2011

இலங்கையில் நடக்கும் ஓவ்வொரு நிகழ்வையும் தங்கள் சொந்த இனவாதம் ஊடாக அணுகுவது தான் அறிவாகி, அது பரப்புரையாகின்றது. இப்படி கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றவர்களின் அறியாமையும், மடமையும், எம் இனத்தையே குட்டிச் சுவராக்குகின்றது. அண்மையில் அமைச்சரின் காலில் விழ மறுத்த சிறுவனின் செயலை தமிழன் வீரச் செயலாகவும், ஜே.வி.பி இற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு தமிழனின் தலைமையில் என்று கூறின தமிழினவாத ஊடகங்கள். இப்படி தமிழ் மக்களுக்கு பட்டை நாமம் போட்டபடி, அவர்களை மொட்டை அடித்தனர். குறுகிய குருட்டுப் பார்வை கொண்ட தங்கள் ஊடகவியல் வக்கிரங்களை, தமிழ் என்ற அடையாளத்தை முன்னிறுத்திய இனவாதம் ஊடாகவே உலகை காட்டி நஞ்சை ஊட்டுகின்றன.

 

பிரிந்து போவதற்காக போராடுவது பிற்போக்கானதல்ல என்ற பூர்சுவா வர்க்கத்தின் கோசத்தை, மார்க்சியத்தின் பெயரில் முற்போக்குக் கோசமாக காட்டி முன்வைக்கின்றனர். இங்கு "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"வது தான் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை என்று கூறுகின்ற மிக நுட்பமான அரசியல் புரட்டு முன்வைக்கப்படுகின்றது. அதாவது "ஒரு தேசிய இனம் பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும் பிற்போக்கானது என்ற வாதம் வெவ்வேறு நோக்குநிலைகளிலிருந்து முன்வைக்கப்படுகின்றது. ஒரு புறத்தில் உழைக்கும் மக்களைக் கூறுபோடுகின்ற பிற்போக்கு முழக்கமாகவும் மறுபுறத்தில் இனவாதக் குரலாகவும் புனையப்படுகின்றது" என்று கூறி, "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"வது முற்போக்கானது, அது உழைக்கும் மக்களை கூறு போடாது என்று மார்க்சியத்தின் பெயரில் கூற முற்படுகின்றனர்.

 

மார்க்சியத்தின் பெயரில் முன்வைக்கப்படும் பிரிவினை, பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை செயல்பூர்வமற்ற ஒன்றாகக் காட்டுவதன் மூலம், பிரிவினையை செயல்பூர்வமான ஒன்றாகக் காட்ட முனைகின்றது. சாராம்சத்தில் சுயநிர்ணயத்திற்கு பதில் பிரிவினையை இது முன்வைக்கின்றது. இரண்டும் ஒன்றுதான் என்கின்றது. மறுதளத்தில் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் தர்க்கம், இதை செயல்பூர்வமற்றதாகக் காட்டி, பாட்டாளிவர்க்க ஆட்சி அதிகாரத்தின் கீழ் தான் இது தீர்க்கப்படும் என்கின்றது. இப்படி பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை "செயல்பூர்வமற்ற" ஒன்றாக காட்டி அதை மறுக்கின்ற பிரிவினைவாதமும், பிரிவினை மறுப்புவாதமும் மார்க்சியத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது.

 

ஆக இது தமிழ் மக்களுக்கானதல்ல. ஆனால் தமிழ் மக்களின் பெயரில் நடக்கின்றது. தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுகின்ற அரசியல். இதை பேரினவாதம் மட்டும் செய்யவில்லை, தமிழ் குறுந்தேசிய அரசியலும் கூட இதைத்தான் செய்கின்றது. இதை விட்டால் தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்ற அரசியல் சூழலை உருவாக்கி வைத்துக்கொண்டு தான், தமிழ்மக்களை மேய்கின்றனர். இந்த பின்னணியில் இதைவிட்டால் வேறு தீர்வை தமிழ்மக்கள் பெற முடியாது என்று கூறி, தமிழ்மக்களை மொட்டை அடிக்கும் அரசியல் தீர்வையும் நாளை திணிப்பார்கள். தமிழ் - சிங்கள மக்கள் தாம் விரும்பிய ஒரு தீர்வைக் காணப்போவது கிடையாது. இதற்குரிய அரசியல் சூழலை உருவாக்காமல் வைத்திருப்பதுதான், தமிழ் - சிங்கள் அரசியல்வாதிகளின் தொடர் அரசியலாகும்.

 

இன யுத்தத்தை நடத்திய அதே இராணுவக் கட்டமைப்பு மூலம், கொழும்பு வாழ் மக்களிடமிருந்து நிலத்தை அரசு அபகரிக்கும் திட்டம் தயாராகின்றது. இதை மகிந்தாவின் தம்பி கோத்தபாய முன்னின்று வழி நடத்துகின்றார். கொழும்பு வாழ் மக்களிடம் இருந்து நிலத்தை ஆக்கிரமிக்கும் இன்னுமொரு யுத்தம், மிகவிரைவில் இலங்கையில் தொடங்க இருக்கின்றது. இந்த நில ஆக்கிரமிப்பை மூடிமறைக்க, நவீன வீடுகள் மூலம் அந்த மக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கோத்தபாயவின் அறிவிப்பு வேறு வெளிவந்திருக்கின்றது. இதன் பின்னணியைப் புரிந்துகொள்ள, இனவழிப்பு யுத்தத்தின் பின்னான சூழலை புரிந்து கொள்வது அவசியம்.

 

ஏதோ இவர்கள் எல்லாம் தமிழ் மக்கள் நலன் சார்ந்து தான், தாங்கள் தங்கள் நிலையைத் தெரிவிப்பதாக கூறிக் கொண்டு தமிழ் மக்கள் பிரச்சனையை கையில் எடுக்கின்றனர். பாவம் தமிழ்மக்கள். அன்று புலிகளின் அடாவடித்தனத்துக்கு முன்னால் அடங்கி ஒடுங்கி வாய் பொத்தி வாழ்ந்த மக்கள், இன்று ஈ.பி.டி.பி என்ற அரச எடுபிடி கும்பலின் ஒடுக்குமுறைக்குள் வாழ்கின்றனர். கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையானின் கண்காணிப்பின் கீழ் தான், மக்கள் வாழ்கின்றனர். அக்கம் பக்கம் பார்க்காமல், மக்கள் சுதந்திர மூச்சை விடுவது கிடையாது. புலிக்கு முன், புலிக்கு பின் என, இதுதான் மக்களின் வாழ்நிலை. இந்த நிலையில் ஈ.பி.டி.பி கூறுவது போல் அது ஒரு அரசியல் கட்சியல்ல. அரசுக்காக வாலாட்டி குலைக்கின்ற, கடிக்கின்ற எடுபிடி லும்பன்கள்.

 

ஒடுக்கப்பபட்ட தேசிய இனப் பாட்டாளிவர்க்கம் தன் வர்க்க அரசியல் கடமையை மறுப்பதன் மூலம், பிரிவினைவாதமே தான் பிரிந்து செல்லும் சுயநிர்ணயம் என்ற திரிக்கின்றது. இந்த நிலையில் லெனின் ஒடுக்கப்பபட்ட தேசிய இனப் பாட்டாளிவர்க்கம் தொடர்பாக என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். "ஒடுக்கும் தேசிய இனங்களின் சமூக-ஜனநாயகவாதிகளின் ஸ்தூலமான கடமைகளையும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சமூக-ஜனநாயகவாதிகளின் ஸ்தூலமான கடமைகளையும் வெவ்வேறானவை என்று வேறுபடுத்தி அறிய வேண்டியதன் அவசியத்தை" லெனின் இங்கு மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றார். ஆனால் இதை மறுத்தும், திரித்தும், "ஸ்தூலமான கடமைகளை" எதிர்நிலையில் முன்னிறுத்தியும் தான், மார்க்சியத்தின் பெயரில் பிரிவினைவாதம் முன்வைக்கப்படுகின்றது. இந்தவகையில் தான் மார்க்சியத்தின் பெயரிலான பிரிவினைவாத மறுப்பும் கூட முன்வைக்கப்படுகின்றது. இங்கு மார்க்சியவாதிகளின் வேறுபட்ட ஸ்தூலமான கடமைகள் மிகத்தெளிவானது.

 

2001 இல் அமெரிக்கக் கோபுரங்கள் மேலான தாக்குதல் பயங்கரவாதம் என்றால், அதற்கு முன்பின் அமெரிக்கா உலகெங்கும் நடத்தியது எல்லாம் என்ன? செப் 11க்கு முன்பின் ஈராக்கில் 15 இலட்சம் பேரை அமெரிக்கா கொன்றுள்ளது. இது பயங்கரவாதமில்லையா!? இது போன்ற பயங்கரவாதத்தின் எதிர்வினைதான், அமெரிக்கக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதமாக மாறியது.

 

கொண்டாட்டங்கள் காட்சிக்காக கொண்டாடப்படுகின்றது. இந்தக் காட்சிக்காக நடிப்பதை மகிழ்ச்சி என்கின்றனர். தாம் நடித்ததை மீளப் பார்ப்பது தமக்கு மகிழ்ச்சி என்கின்றனர். ஆக போலியான ஒரு நாள் வாழ்க்கை, வாழ்நாள் மகிழ்ச்சியாக்கப்படுகின்றது. இப்படி தங்களை அறியாமல் மற்றைய நாட்கள், மகிழ்ச்சியற்ற நாட்களாக்கப்படுகின்றது. இப்படி இதற்கு வெளியில் மகிழ்ச்சியை காணமுடியாத பகட்டுத்தனத்தில் தான், சம்பிரதாயங்களும் சடங்குகளும் விபச்சாரம் செய்யப்படுகின்றது.

 

இலங்கை மார்க்சியவாதிகள் நீண்டகாலமாக, சுயநிர்ணயத்தை மறுத்ததும், பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மறுத்ததும், தொடரும் இன அவலத்துக்கு அடிப்படைக் காரணமாகும். பாட்டாளி வர்க்கத்தின் கொள்கைரீதியான இந்த முடிவு, அரசியல் ரீதியாக இனமுரண்பாட்டில் இருந்தும் தன்னை ஓதுக்கிக் கொண்டது. இதனால் பிரிவினை வாதமும், பிரிவினை மறுப்புவாதமும் கொண்ட அரசியல், இனப்பிளவுகளையும், இன அவலங்களையும் உருவாக்கியது.

 

பிரிந்து செல்லும் உரிமையை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயம், பிரிவினைக்கும், பிரிவினைவாத மறுப்புக்கும் எதிரானது. இங்கு பிரிந்து செல்லும் உரிமையில்லாத சுயநிர்ணயம் என்பது, சுயநிர்ணயமேயல்ல. இங்கு பூர்சுவா வர்க்கம் முன்வைக்கும் பிரிவினையை, பிரிந்து செல்லும் உரிமையாக சுயநிர்ணயம் விளக்கவில்லை. அதேபோல் பிரிவினையை மறுக்கும் பூர்சுவா வர்க்கத்திற்கு எதிராக, பிரிந்து செல்லும் உரிமையை முன்வைக்கின்றது. இதைத் தாண்டி சுயநிர்ணயத்துக்கு வேறு அரசியல் விளக்கம் கொடுக்க முடியாது. சுயநிர்ணயம் பிரிவினையுமல்ல, பிரிவினையை மறுக்கும் கோட்பாடுமல்ல. இலங்கைமார்க்சியவாதிகளோ இதைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்து தவறிழைத்து வருகின்றனர். இதுதான் எம்மைச் சுற்றிய அவலங்களுக்கு காரணம்.