01272021பு
Last updateதி, 25 ஜன 2021 1pm

பிழைப்புவாதமும் - திரிபுகளும்

எமது தேசத்தின் இரத்த ஆற்றிலிருந்து மறுபடி பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு என்ற குரல்கள் ஒலிக்கின்றன. இரத்தமும் சதையும், எலும்பும் விளைவாக்கி விட்ட, ஆயுதக் கலாச்சாரமே தேசியமாகி விட்ட ஒரு தேசத்தில் இன்னுமொரு நாடகம் ஒத்திகை பார்க்கப் படுகின்றது. மக்களுடைய கைகளில் எதுவும் இல்லை. நிராயுதபாணிகளாக, துப்பாக்கிக்குழலுக்கு முன்னால் பட்டினியோடு கிடக்கும் எமது தேசத்து மக்கள் த.ஈ.வி.பு. என்ற பாசிசக்கும்பலாலும், ஸ்ரீலங்கா இனவெறியர்களாலும் பந்தாடப்படுகிறார்கள்! சீரழிந்து சிதைந்து போன எமது தேசவிடுதலைப் போராட்டம் த.ஈ.வி.பு என்ற தனிநபர் ஆயுதகும்பலிடமிருந்து பறிக்கப்பட்டு மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும். எமது சூழலுக்கு ஏற்ற சரியான தத்துவமொன்று, எமது சமூகத்தின் மீது செயல்படுத்த வேண்டும். ஒரு கட்சி அல்லது அரசு என்பவை மக்களின் கண்காணிப்பிலிருந்து அந்நியப்படும் பொழுது அது அதுவாக இருக்க முடியாது. மக்களின் கைகளிலிருந்து கட்சி அதிகாரத்தை பறித்துக்கொண்ட போது சோவியத் சிதறிப்போய் விட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதற்காக ஓரு திட்டம் தேவை!

 

கடந்த காலம் முழுமையுமே ஆழமாக அலசி ஆராயப்பட வேண்டும். சரணடைவுகளுக்கும், விட்டுக்கொடுப்புகளுக்கும் அப்பால், பிழைப்புவாத அரசியலின் திரிபுகளுக்கு எதிரான போராட்டம் இன்றுவொரு தவிர்க்கமுடியாத முன்தேவையாக உள்ளது. இந்தத் தேவையை முன்னிறுத்தி வலியுறுத்துகின்றபொழுது அது பிழைப்புவாதிகளுக்கு எரிச்சலூட்டுவதாகவும், ஆத்திரமூட்டுவதாகவும் இருக்கிறது. எமது போராட்டம் தொடங்கிய இடத்திலிருந்தே, மீண்டும் தொடங்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கியமான சூழ்நிலையில், எமக்கு முன்னுள்ள சமூகக் கடமை என்னவென்பதை ஒவ்வொரு தேசப்பற்றுள்ள சமூகவுணர்வுள்ள சக்திகளும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

 

தென்னாசியாவின் கொல்லைப்புறத்தில், சாவினுள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் அழுகுரல்களும், அவலங்களும் இன்று தேசத்தின் எல்லையையும் கடந்து விட்டன. மனிதத்தை நேசிக்கின்ற, உணர்வுள்ள எந்த மனிதனும், இது குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது. இந்த வகையிலேயே, இந்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக கலைவடிவங்களை நாம் காணமுடிகின்றது. ஜரோப்பாவில் வெளிவருகின்ற பொதுவான எல்லா தமிழ் சஞ்சிகைகளிலுமே, இதன் பிரதிபலிப்புக்களை உணர முடிகின்றது. இது தேவையானதே! இன்னுமிருக்கின்ற இந்த கலை, கலாச்சார வடிவங்களை, ஒரு ஆரோக்கியமான நிலைக்கு வளர்த்தெடுப்பதும், அதன் பரப்பை விரிவாக்குதலும் தேவையானதே! ஆனால் இது மட்டுமல்ல எமது பிரச்சனை! இதற்கு அப்பாலும் எமக்கு இருக்கின்ற அவசியங்கள் உணரப்பட்ட வேண்டும். ஒரு புரட்சிக்கான தத்துவமின்றி புரட்சிக்கட்சி இல்லை. ஒரு புரட்சிக்கட்சி இன்று இரண்டாம் பட்சமாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது! எமது தேசவிடுதலைப்போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒரு தத்துவார்த்த வழிமுறை இருந்திருக்கவில்லை. எமது போராட்டத்தின் தோல்விக்கான காரணமிதுவென உணரப்பட்ட பிறகும் இன்று, மறுபடியும் மறுபடியும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும், உள்ளக் குமுறல்களையும் கொட்டித்தீர்த்துக் கொண்டிருப்பது மட்டும் தான் போராட்டமல்ல என்பதே எமது நிலை.

 


வாசகர்களும் நாங்களும்

இன்றுள்ள நிலையில் புலிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து வெறுமனே அம்பலப்படுத்தல்களை மட்டும் செய்தால் போதாது, புலியினை போராட்டக்களத்தில் இருந்து அகற்றி புதிய தலைமையை மக்கள் முன் கொண்டுவர வேண்டுமாயின், முதலில் உலகம் பூராகவும் பரவிக்கிடக்கின்ற தேசபக்த சக்திகளிடையே சரியான விவாதங்களிற்கு ஊடாக பொது அரசியல் வழியொன்று கண்டுபிடிக்கப்படல் வேண்டும். இது பிரதானமானது. நான் இன்று பல போக்குகளை காண்கிறேன்.

(1) வெறுமனே புலி எதிர்ப்பு

(2) பிழையான படுபிற்போக்கான அரசியல் கருத்துக்கள்

(3) சரியானதை தேடிக்கொண்டு இருப்பவர்கள் (இவர்களிடமும் பல தவறான கருத்துக்களும் மாறுபட்ட பார்வைகளும்)

நான் நினைக்கிறேன், புலிகளை அம்பலப்படுத்தல் மட்டும் எமது தேச விடுதலையை பெற்றுத்தராது. ஏனென்றால் ஸ்ரீலங்கா இனவாத அரசின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஆயுத ரீதியில் புலிகள் மட்டுமே முகம் கொடுப்பதால், இந்த அம்பலப்படுத்தப்படும் உண்மைகள் மக்களிற்கு புரிந்தாலும் புலிகளின் போராட்டத்தலைமையை மக்கள் நிராகரிக்க முடியாத நிலையின்று நாட்டில்.

 

எனவே எம்முன்னுள்ள உடனடிப்பணி ஒருவர் கருத்துக்கு, மற்றவர்கள் மதிப்பளித்து ஊன்றிக்கவனித்து பலத்த விவாதங்கள் ஊடாக முதலில் சரியான அரசியல் மார்க்கம் கண்டுபிடிக்கப்படல் வேண்டும். அதற்கு முதலில் தோழர்களே மற்றவர்களின் கருத்துகளுக்கு உதாசீனம் செய்யாது, சொற்பதங்களை கேலியாக குறிப்பிடாமலும், அவை பற்றிய விவாதங்களை தேச விடுதலைப் போராட்டத்தில் உண்மையான விசுவாசம் இருந்தால் நடத்துவது இன்று அவசியமானது.

 

அதன் பின் பொதுவான உடன்பாடு உடையவர்கள் தத்தமது அரசியல் கருத்துக்களின் கீழ் அமைப்பாக திரண்டு எதிர்காலத்தில் உண்மையான மக்கள் விடுதலை இயக்கம் ஒன்றிற்காக தொடர்ந்தும் விவாதிப்பதுடன், தனித்தனியாக, நட்புரீதியாக ஆயுதமேந்தி புலி ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக போராடலாம்.

 

இன்றைய போராட்டத்தில் (தமிழீழ தேசிய விடுதலைப் போரில்) நீங்களும், நானும் விரும்பியோ விரும்பாமலோ புலி தான் தமிழ் மக்களின் தேசிய இனவடிப்படையை கட்டிக் காக்கும் போரில் ஈடுபட்டுள்ளது. புலி இன்னமும் அரசுடன் சமரசத்துக்கு போகலாம் என்ற நிலையுள்ள போதும் இல்லை என்றுமில்லை. தமிழ் பிரதேசம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை இன்னமும் கைவிடக்கூடிய நிலையில் இருப்பதாகவில்லை. புலிகள் மக்களில் தங்கியில்லாமல், துப்பாக்கியிலும் புதிய புதிய ஆயுதங்களின் வருகையிலும் பழிக்குப்பழி, சிங்களப் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு, சில தலைவர்களை கொன்றால் பிரச்சனையை வெல்ல முடியும் என்ற பிற்போக்கு அரசியலை கொண்டுள்ளவரை, தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு தலைமை தாங்கும் திராணியில்லை. ஆனால் தமிழ் மக்களின் தேசியத்தன்மை, (1) பாரம்பரிய பிரதேசம் பறிப்பதற்கு எதிராகவும் (2) தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு பதில் பம்மாத்து மாகாணசபைக்கு எதிராகவும் இப்படிப்பல, குறிப்பாக தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு எதிராகவும் ஒரு தற்காப்பு யுத்தத்தை மட்டும் பலமாக இன்று நடத்தி கொண்டிருக்க முடியும்.

 

மேலும் நீங்கள் இதழில் எழுதியது, சி.ஐ.ஏ புலிகளிற்கு உதவுகின்றது. புலிகள் அமெரிக்காவின் (சி.ஐ.ஏ) யின் கைக்கூலி.

 

தமிழீழப்போராட்டத்தில் தோன்றிய அனைத்து இயக்கங்களுமே குட்டி பூர்ஷ்வா இயக்கங்கள் தான் என்பது எமது கருத்து. அதில் சில இயக்கங்கள் பாட்டாளி மக்களின் விடுதலை தான் உண்மையான விடுதலையை முழுமக்களுக்கும் பெற்றுத்தரும் என்றுணர்ந்து பாட்டாளி வர்க்கக் கட்சியான கம்யுனிஸ்ட் கட்சியை கட்டும் நோக்கில் வேலை செய்தாலும், அவற்றிடையே சரியான தத்துவார்த்த அறிவின்மை, வேலைமுறை இன்மை காரணமாக அவையும் குட்டிபூர்ஷ்வா இயக்கத்திற்கு மேல் வளர்ந்து பாட்டாளி வர்க்க கட்சியாக முடியாமல் சிதைந்து போயின. சில இந்தியக் கைக்கூலியாயின. புலி முதலில் குட்டி பூர்ஷ்வா இயக்கமாகத் தோன்றினாலும் பின் அது பூர்ஷ்வா இயக்கமாக வளர்ந்து வந்தது. (தேசிய முதலாளியா, தமிழ் தரகு முதலாளியா என்பது விவாதத்துக்குரியது. அது தமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் தன் தலைமையை வலிந்து ஆயுதத்தால் திணித்துக்கொண்டது. பூர்ஷ்வா இயக்கம் மக்கள் அரசியல் மயப்படுவதை என்றுமே அங்கீகரித்ததில்லை. புலியும் அதற்கு விதிவிலக்கில்லை. எனவே அது தமிழ் தேசிய எழுச்சியடைந்த இளைஞர்களைக் கொண்டு ஒரு இராணுவத்தை கட்டிக் கொண்டு தமிழீழத்தின் ஆட்சியதிகாரத்தை தன் கையில் எடுப்பதற்காக போராடிக்கொண்டு வருகிறது. இன்று நடக்கின்ற பிரதான தமிழீழம் என்கின்ற போரில் புலிகள் (பூர்ஷ்வா) தமிழ் மக்கள் சார்பில் போராடுகின்ற ஒரு அமைப்பு என்பதனை யாரும் நிராகரிக்க முடியாது.

 

அப்படி நிராகரிப்பின், தமிழ் மக்கள் மத்தியில் பல வர்க்கங்கள் உண்டு என்பதனை நிராகரிப்பதாகவே அமையும். எனவே இன்று நடக்கும் இந்த விடுதலை யுத்தத்தில் புலிகள் போராட்டத்தில் ஒரு நேச அணி. ஆனால் இந்தப் புலிகள் ஆட்சியதிகாரத்திற்கு வர எந்தப் பிற்போக்கு கும்பலிடமும் உதவி பெறுவார்கள். இது அவர்களின் குணாம்சம்.

 

மேலும் தமது அரசியலில் குழம்பிக்கொண்டு இருப்பார்கள். எதனையும் தெளிவாக முன் வைக்கமாட்டார்கள். இன்று மூன்றாம் உலக நாடுகள் பூராவும் மக்கள் விடுதலை யுத்தங்கள் ஏகாதிபத்திய கூலி அரசுகளிற்கு ஏதிராக நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலகில் ஒரு கம்யூனிச நாடும் இன்று இல்லாமையால், சரியான திசைவழி இன்றியும், கம்யூனிசம் பற்றிய தெளிவின்மையாலும் இப்போராட்டங்கள் திசை இலக்கு இன்றி போய் கொண்டுள்ளன. இது ஏகாதிபத்தியத்திற்கு நல்ல வாய்ப்பாக உள்ளது. அது இரு வழிகளை கைக்கொள்கிறது.

(1)அரசிற்கு சகல உதவிகளையும் செய்து போராட்டத்தை நசுக்க முயல்கிறது.

 

(2)போராடும் சக்தியில், மக்களை தங்கியிராத சக்திகளை பல வழியிலும் வளர்த்தெடுத்து, புரட்சிகர அமைப்புக்களை அழித்தொழிப்பது சில சமயம் போராட்டம் வெல்லப்படுமானால் ஆட்சியதிகாரத்திற்கு வருபவர்களாக இவர்களை வளர்ப்பது. உதாரணம் எரித்திரியா.

 

எமது தேசத்தில் நானும் நீங்களும் விரும்புகின்ற கம்யூனிச அமைப்பு தோன்றுவதற்கு, தமிழ் ஈழம் முன் நிபந்தனையாக உள்ளது. அதன் பின் ஜனநாயக அரசு ஒன்று ஆட்சிக்கு வந்து, அது பரந்துபட்ட மக்களின் ஜனநாயக உரிமைக்காக போராட்டம் நடத்த வேண்டும் (இது தான் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்று கருதுகிறேன்.) அதன் பின் சோசலிசப் போராட்டம், இப்படியே தொடர்ந்து கம்யூனிசப் போராட்டம் வரை செல்லுமென்பது என் கருதுகோள்.

 

முன்னிபந்தனையான தமிழீழம் என்பதில் பல வர்க்க அமைப்பும் போராடுவது தவிர்க்க இயலாதது. இதில் ஏகாதிபத்தியம் தன் சார்பு நிலை எடுக்கக்கூடிய அமைப்பை பலம் பொருந்தியதாக வளர்த்து விடுவது தவிர்க்க முடியாதது.

 

எனவே நாம் வெறுமனே கூச்சலிட்டுப் பயன் இல்லை. மாறாக உலகப் புரட்சிகர அமைப்புக்களுடன் நட்புறவுகளைப் பேணி ஆழமான விவாதங்களை படிப்புக்களை நட்புச்சக்தி, போர் வழி, மார்க்கம் என்பவற்றை முன்வைத்து பல மடங்கு கஸ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும். எனவே முதலில் பிரதான பணியாக:

 

(1)  போராட்டம் பிரதானமாக என்ன முரண்பாட்டைக்கொண்டுள்ளது.

 

(2)  யார்(எந்தவர்க்கம்) எதிரிகள் ? யார் நண்பர்கள்?

 

(3)  ஆயுதப் போராட்டமா? இல்லையா?

 

(4)  எமது அரசியல் கோட்பாடு, முழக்கம், வேலைமுறைகள் என்ன!

 

என்பது பற்றிய விடைகளைக் காண அனைத்து சஞ்சிகைகளும், தமது முழுவேலையாக கருதி செயற்பட வேண்டும். அதனை விட்டு நான்கு சிறு கதைகள், இரு கவிதைகள், ஒரு மொழிபெயர்ப்பு கதை எழுதி வெளியிடுவதால், எமது போராட்டம் முன்நோக்கி செல்ல மாட்டாது.

 

மேலுள்ளவை பிழை என்று கூறவில்லை. சரியான அரசியல் மார்க்கமின்றி, இந்த கலை, கலாச்சாரம், இலக்கியம் வளரமாட்டாது. அவை வாசிக்க நல்லவையாகவே இருக்கும். மக்களிற்கு பயன்படமாட்டாது.

 

இந்த நோக்கம் உடைக்கப்பட்டால், அடுத்து நாம் பரந்துபட்ட மக்களின் தலைமையை போராட்டத்தில் நிறுவ, புலிகளை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கலாம். அதனை அங்கீகரிக்காத பட்சத்தில் அவர்கள் மீது ஆயுத யுத்தம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.

 

இன்றுள்ள நிலையில் பிரதான பணியான, சரியான அரசியல் வழி, வேலைமுறையின்றி எவர் வேலை செய்ய முற்பட்டாலும் ரமணியின் பரிதாபகரமான முடிவை நாட வேண்டியிருக்கும்.

 

எனவே உங்கள் சமர் புலிகளை அம்பலப்படுத்துவதையே பிரதானமாக கொண்டிராமல் எமது தேசத்தின் விடுதலை யுத்தத்தில், பரந்துபட்ட மக்களின் நலன்களை கட்டிக்காக்கக் கூடிய பாட்டாளிவர்க்க அரசியல் மார்க்கத்தை கண்டு பிடிக்கும் பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

 

குகன்--லண்டன்

 

இன்று ஈழவிடுதலைப் போராட்டத்தின் திசை வழியைத் தீர்மானிப்பதில், புலிகளை பற்றியொரு பார்வை தவிர்க்க முடியாததாகிறது. இது ஒரு முன்நிபந்தனையாக இல்லையெனினும் இவ்விடயத்திற்கு ஒரு தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் உண்டு.

 

சமர் 2. 1. தூண்டில் ஆகியவற்றில் வெளிவந்த விவாதங்களை வாசித்திருப்பீர்கள் என நம்புகின்றோம். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த உலக ஒருங்கமைவும், 2ம் உலக யுத்தத்தின் சற்றுப் பின்னர் இருந்த ஒழுங்கமைவும் இப்போதில்லை. நாளாந்தம் உலகமக்களை ஒடுக்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்தியங்களும் புதிய புதிய வழி முறைகளைக் கையாளுகின்றன. வறிய நாடுகளில் எழுகின்ற தேசவிடுதலை யுத்தங்களை அடக்குவதிலும், தமது சந்தைகளை தொடர்ந்து பேணுவதிலும், ஏகாதிபத்தியங்களின் பழைய வழிமுறைகள் சாத்தியமற்றவையாகிவிட்டன. இப்போது முற்றிலும் புதிய வழிமுறைகள் கையாளப்படுகின்றன. இந்த நிலையில் 50ஆண்டுகளுக்கு முன்னைய நிலையைப் போல நாம் சிந்திக்க முடியாது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாகவே, உங்கள் கடிதத்திலும் முரண்பட்ட கருத்துக்களை காணக்கூடியதாக இருக்கிறது.

 

(1) புலி ஒரு தேசிய விடுதலை இயக்கம், ஆனால் தரகு முதாலாளித்துவ சக்தியா என்பது விவாதத்திற்குரியது என்ற கருத்து.

 

(2) புலி எந்த சக்தியிடமும் உதவி பெறுமென்பதும், அரசுடன் சமரசத்திற்கு போகலாமென்பதும்.

 

முதலில் ஒரு ஏகாதிபத்தியம் புலிகளுக்கு உதவி செய்யவும், புலி உதவி பெறவும் முடியுமானால், ஒன்றில் ஏகாதிபத்தியவாதிகள் முட்டாள்களாகவோ அல்லது புலிகள் தரகு முதலாளித்துவ சக்தியாகவோ தான் இருக்கமுடியும்.

 

தவிர, தரகு முதலாளித்துவமென்பது, அதிகாரத்திலுள்ள ஒரு வர்க்கம். இது போராடுகின்ற சக்தியல்ல ஏகாதிபத்தியங்களின் சார்பில் நின்று மக்களை அடக்குகின்ற சக்தி, இந்த வர்க்கத்திற்கென்று எந்தப் புரட்சிகரமான பாத்திரமுமில்லை. ரஷ்யாவின் நிலப்பிரபுத்துவ ஜார் அரசினைப் போலும், சீனாவின் அரைநிலப்பிரபுத்துவ அரசைப்போலவுமாகும். இதுவே போராட்டத்தில் முதல் எதிரியான வர்க்கம். இதற்கென்று ஒரு தேசியவாதம் கிடையாது. இந்த அடிப்படையிலேயே இந்திய இராணுவத்துடன் (மாகாணசபை அதிகாரம் கேட்டு) புலிகள் நடத்திய பேரமும், சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை சில அற்ப சலுகைக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தமையும் பார்க்கலாம். இது தொடர்பாக இரண்டாவது இதழில் குறிப்பிட்டிருந்தோம்.

 

தவிர நீங்கள் குறிப்பிடுவது போன்று மாகாணசபைக்கு எதிராக புலிகள் தன் நலனிலிருந்தே போராட முற்படுகிறது. சொந்த நலனென்பது, எந்த வர்க்கத்தின் பக்கத்திலானது? இது தொடர்பாக இன்னொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம். ஆனால் இருக்கின்ற போராட்டச் சூழலில், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வர்க்கங்கள் வெற்றி பெறாமலிருப்பதற்காக, ஏகாதிபத்தியங்களினாலேயே போராட்ட அமைப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போன்று குட்டிமுதலாளித்துவ அமைப்புக்கள் இலகுவில் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டது போலவே போராடும் சக்தியில் மக்களை சார்ந்திராத சக்திகளை பல வழியிலும் வளர்த்தெடுத்து புரட்சிகர அமைப்புக்களை அழித்தொழிப்பது. சில சமயம் போராட்டம் வெல்லப்படுமானால் ஆட்சியதிகாரத்திற்க்கு வருபவர்களாக இவர்களை வளர்ப்பது.

 

புலிகள் ஆட்சியதிகாரத்திற்க்கு வர எந்த பிற்போக்கு கும்பலிடமும் உதவி பெறுவார்கள். இது அவர்களின் வர்க்க குணாம்சம். மேலும் தமது அரசியலில். குழம்பிக் கொண்டு இருப்பார்கள். எதனையும் தெளிவாக வைக்க மாட்டார்கள் என்ற கருத்தே புலிகள் தொடபான எமது கருத்தும். இது தொடர்பாக விரிவாக பிறிதொரு கட்டுரையில் விவாதிப்போம். இது தவிர ஏனைய விடயங்கள் தொடர்பாக எமக்கிடையே ஒத்த கருத்துக்களே உள்ளன.

ஆசிரியர் குழு-

 

தேசிய இனப்பிரச்சனையும் முஸ்லிம் மக்களும்

ஸ்ரீலங்காவின் தமிழ்பேசும் மக்கள் தொகையில் 28 சதவீதத்திற்கும் சற்று அதிகமான தமிழ்பேசும் முஸ்லிம்கள் இன்று ஸ்ரீலங்கா பேரினவாத பாசிச அரசாலும் புலிகள் என்ற சமூகவிரோத பாசிசகும்பலாலும், தமது பாரம்பரிய(பரம்பரை) பிரதேசங்சங்ளை விட்டு துரத்தப்பட்டுள்ளனர். புலிகள், ஜிகாத் இராணுவமென்றும் அனைத்து மேலாதிக்க கும்பல்களும், முஸ்லிம் தேசிய இனத்துக்கெதிரான காடைத்தனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒரு சர்வதேசிய கலாச்சார இணைப்பைக் கொண்டுள்ள, இந்த முஸ்லிம் தேசிய இனத்தின் பிரச்சனை தொடர்பாக சமூக உணர்வுள்ள தேசப்பற்றுள்ள, அனைத்து சக்திகளும் அக்கறை கொள்ள வேண்டிய தேவை இன்று எம் முன்னுள்ளது. இந்த அடிப்படையிலேயே புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் எதிரான முஸ்லிம் மக்களின் தேசவிடுதலைப்போராட்டமானது கட்டியெழுப்பப்பட முடியும்.

 

தமிழ்பேசும் மக்களின் ஒரு பகுதியினரான இந்த முஸ்லிம் தமிழர்களது வரலாற்றின் இன்றைய கட்டத்திற்குரிய நிலை தான் என்ன? முஸ்லிம் மக்கள் தனியான ஒரு தேசிய இனமா? இல்லையா? இக் கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். இந்த அடிப்படையிலேயே மொத்த ஸ்ரீலங்காவினதும், ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களது விடுதலை என்பது சாத்தியமாக்கப்பட முடியும்.

 

இங்கே இனம் (RACE) என்பது மக்கள் கூட்டங்களை உருவ அமைப்பினூடாக வேறுபடுத்துகின்ற முறையாகும். மூன்று வேறுபட்ட இனங்களை கூர்ப்புக் கோட்பாடு எங்களுக்கு காட்டுகிறது. ஆனால் உலகில் ஒரு இனத்துக்குள்ளேயே பல தேசிய இனங்கள் இருப்பதை, தேசிய இனக் கோட்பாடு விளக்குகிறது.

 

தேசிய இனம் என்பது ஒரு வரலாற்று வகைப்பட்ட மக்கள் கூட்டமாகும். அதுவும் வரலாற்றின் குறித்த கால கட்டத்துக்குரிய ஒரு மக்கள் கூட்டமாகும். முதலாளித்துவத்திற்கு முன்னைய காலகட்டங்களில் தேசிய இனம் இருந்ததில்லை. இந்தத் தேசிய இனம் என்பது அடிப்படையில் தன்னை மற்றைய தேசிய இனத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்க்குரிய குறியீடாகவே கருதப்படுகிறது. குறித்த விதிகளின் அடிப்படையில் மக்களைக் கூட்டங்களாக இணைக்கும் ஒரு அமைப்பே இது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இவ்வாறு மக்களை கூட்டங்களாக இணைக்கும் அமைப்பாக மன்னனும், பேரரசுக்களுமே இருந்தன. இந்தக் கூட்டத்தின் அமைப்பு விரிந்து சுருங்கக் கூடியதாக இருந்தது. மன்னன் யுத்தங்களின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில். தனது எல்லையை மாற்றிக்கொண்ட போது மக்களும் அதற்கு ஒத்திசைவாக மாறிக் கொண்டனர். மக்களுடைய ஆதரவுடன் கூடவே ஒருநாட்டு மன்னன் இன்னோரு நாட்டை ஆண்டிருக்கிறான். ஆனால் தேசிய இனம் என்ற தேசிய உணர்வின் அடிப்படையில் மக்களை இணைக்கும் இந்த அமைப்பானது ஒரு குறித்த எல்லைக்குட்பட்டது. இதுவே தேசிய இனத்திற்குரிய பிரதேசம் எனப்படுகிறது.

 

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தனியே மொழி அடிப்படையில் அரசுகள் மக்களை இணைத்திருக்கவில்லை. ஆனால் தேசிய இனம் மொழியின் அடிப்படையில் மக்களை இணைக்கின்றது.

 

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில், குறித்த அரசுகளை அல்லது இராச்சியங்களை நோக்கிய மக்களுடைய பொருளாதார வாழ்வு பிணைக்கப்பட்டிருந்தது. அரசுகள் மாற்றமடையும் போது, அந்தப் பொருளாதார வாழ்வும் மாற்றமடைந்தது. இதனால் ஒரு பொதுவான பொருளாதாரத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் முதலாளித்துவம் உருவான பொழுது, இது குறித்த சந்தையை நோக்கியும், அதனைக் கட்டுப்படுத்தும் அரசை நோக்கியும் பொருளாதார வாழ்வு மையப்படுத்தப்பட்டது. எனவே பொதுவான பொருளாதார வாழ்வு ஒன்று மக்களிடையே உருவானது.

 

இதனடிப்படையில் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடு சேர்ந்தே உருவான தேசிய இனம் என்ற மக்களை இணைக்கும் அமைப்பு உருவானது. மேற்குறித்த அடிப்படையில் தேசிய இனம் பின்வரும் விதிகளுக்கு உட்பட்டதாக அமையும் என ஸ்டாலினால் விஞ்ஞான பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய இனம் என்பது பொதுவான மொழி, பிரதேசம் (ஆட்சிப்பகுதி) பொதுவான பொருளாதார வாழ்வு, ஒரு கலாச்சாரத்தை தரக்கூடிய மன இயல்பு, ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வரலாற்று ரீதியாக உருவான மக்கள் சமூகமாகும்.

 

இவ்வகையில் குறித்த மக்கள் கூட்டத்தைக் கொண்ட சமுதாயங்கள் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடு உருவாகின. இந்த சமுதாய பகுதியையே தேசம் என்கிறோம். இந்த தேசம் என்பது, இன, நிற, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. பிரஞ்சு தேசம் காவியர்கள் ரோமானியர்கள், பிரிட்டானியர்கள், டியூட்டோனியர்கள் போன்றவர்களிடமிருந்து உருவானது. ஒரு நூறாண்டுக்கு முன்னர் கூட பிரான்சில் பிரஞ்சு மொழி மட்டும் பேசப்படவில்லை பல மொழிகள் பேசப்பட்டன. முதலாளித்துவத்தின் வளர்ச்சியென்பது பல்வேறு தேசிய இனங்களை ஒன்றோடு ஒன்று இறுக்கப் பிணைத்தது. மக்கள் தொகை, உற்பத்திச் சாதனங்கள், சொத்து இவற்றின் சிதறுண்ட நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் முடிவு கட்டியது. மக்களைத் திரட்சி பெறச் செய்தது. கிராமத்தவர்களை நகரங்களை நோக்கி துரத்தியது. இதனால் தேசிய இனங்கள் படிப்படியாக அழிந்து போயின.

 

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடானது ஒரே தேசிய இனமாய் உருவெடுத்தது. இன்று பிரஞ்சுதேசம் முழுவதுமே பிரஞ்சு மொழி மட்டுமே பேசப்படுகிறது. முற்றாக வளர்ச்சியடையாத இலங்கை போன்ற நாடுகளில், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளாக உருவெடுத்தன. முதலில் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து வளர்ந்து வந்த காலத்தில், மக்கள் தேசங்களாக இணைந்து அமையப் பெற்றார்கள். இந்தக் காலகட்டத்தில் ஒரு நாட்டினுள் பல தேசங்கள் உருவாகின. இந்த வளர்ச்சி முற்றாக நிலப்பிரபுத்துவத்தை வெற்றி கொண்ட போது, பல தேசங்களை கொண்ட ஒரு நாடே ஒரு தேசமாக உருவெடுத்தது. இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், முற்றாக முதலாளித்துவம் வளர்ச்சியடையாத குறித்த நிகழ்சிப்போக்கானது, ஒரு குறித்த எல்லைக்கு மேலாக மக்களை திரளச் செய்யவில்லை. இந்த எல்லையென்பது தான் வேறு வேறு தேசிய இனங்களை உருவாக்கியது.

 

ஒவ்வொரு சமுதாய அமைப்பும் மக்களிடையே சமூகப்பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகும் போது, புதிய சமுக அமைப்பை உருவாக்க மக்களைத் தூண்டுகின்றன. இவ்வாறே முதலாளித்துவ சமூக அமைப்பானது நிலப்பிரபுத்துவத்தை உடைத்தெறிந்து உருவானது. இந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஒரு குறித்த கட்டத்தின் ஒரு தனிவகையான சமூதாயமே தேசிய இனங்களாகும்.

 

பிரான்ஸ் தனியான தேசமாக அமையப் பெற்ற பின்பு இப்போது பிரஞ்சு மொழி என்பதே தேசிய மொழி. மக்களிடையே அன்றாடத் தொடர்பு மொழியும் அதுவே. ஆனால் இலங்கையும், இந்தியாவும் அப்படியானவையல்ல. தமிழ் தேசிய இனம், தமிழ் மொழியைப் பொதுமொழியாக கொண்டுள்ளது. சிங்கள தேசிய இனம் சிங்கள மொழியைப் பொது மொழியாகக் கொண்டுள்ளது. எனவே தேசிய இனம் என்பது ஒரே மொழியைப் பேசும் மக்களிடையே காணப்படுவதாகும். வேறு வேறு மொழியை பேசுகின்ற மக்கள் கூட்டங்கள் ஒரே தேசிய இனமாக இருக்கமுடியாது. எனவே ஒரு நிலையான பொதுமொழி என்பது பிரதான அம்சமாகிறது.

 

ஆனால் ஒரு மக்கள் கூட்டம் தேசிய இனம் என்றவொரு குறித்த காலத்துக்குரிய நிலையான சமுதாயமாக அமைவதற்கு, மொழி என்பது மட்டும் போதுமான அம்சமல்ல. ஒரே மொழியை பேசுகின்ற வேறு வேறு தேசிய இனங்களையும், தேசங்களையும் நாம் பார்க்கலாம். அமெரிக்காவும். இங்கிலாந்தும் ஒருவகை. முஸ்லிம் தேசிய இனமும். மலையக தேசிய இனமும். பூர்வீகத்தமிழ் தேசிய இனமும் தமிழை பொது மொழியாக கொண்ட வேறுவேறு தேசிய இனங்களாகும். அயர்லாந்தும், இங்கிலாந்தும் என்று பல உதாரணங்களை காணலாம்.

 

தேசம் என்பது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில், மன்னனுக்குக் கீழ் இராச்சியங்களாக பிணைக்கப்பட்டிருந்த மக்கள் அதனை உடைத்துக்கொண்டு முதலாளித்துவத்தின் மூலதனச் சங்கிலியால் பிணைக்கப்பட்டபோது தேசிய இனம் என்ற புதிய தொடர்பு முறை உருவானது. இத்தொடர்பு முறைக்கு மொழியென்பது அவசியமானது. ஆனால் இது மட்டும் போதுமானதல்ல! அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் எடுத்துகொண்டால், இது வேறு வேறு அரசின் எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களாகும். எனவே வேறு வேறு அரசின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், வேறு வேறு தேசிய இனங்களாகவே அமையும். பிரஞ்சு மொழியிருந்து முற்றிலும் வேறுபட்ட பல மொழிகளைப் பேசுகின்ற சுவிஸ், ஜேர்மன், எல்லைகளில் வாழ்ந்த மக்களும் பிரஞ்சு தேசமாக உருவெடுத்தபோது பிரான்சுடன் இணைந்து கொண்டு பிரஞ்சு மொழியை பேசுகிறார்கள். எனவே தேசம் எனப்படும் போது, முதலாளித்துவத்திற்கு பிறகு குறித்த அரசின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசமாக இருப்பது என்பது அவசியமானது. மேலும் இந்த பிரதேசம், மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து அதன் மூலம் ஏற்படும் நீண்ட நெடிய முறையான கலப்பின் மூலம் தேசிய இனங்கள் உருவாகுவதற்கு அவசியமானதாகும். அமெரிக்காவும், இங்கிலாந்தும் வேறு வேறு தேசங்கள். ஆனால் அமெரிக்கர்கள் முன்னர் இங்கிலாந்துக்காரர்களே. (இது பின்னர் அயர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மன், இத்தாலி, ஒல்லாந்து, பிரான்சு, ஸ்பானிஸ் போன்ற நாடுகளிலிருந்து சென்ற பெரும் தொகையானோரின் கலப்பிற்குட்பட்டது).ஆனால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஒரே தேசமல்ல என்பதற்கு வேறுபட்ட அரசுகள் காரணமாகின்றன. தென்னிந்தியரும், இலங்கையின் பூர்வீகத் தமிழ்மக்களும் தமிழ் பேசும் மக்களே. ஆனால் அவர்கள் வேறு வேறு தேசிய இனங்களே. இவர்களை இணைக்க பொதுவான பகுதியிருந்தும், தென்னிந்தியாவுக்கும், இலங்கைத் தமிழருக்கும் காலனியாதிக்கத்துக்கு முந்திய காலத்தில் பலமான தொடர்புகளிருந்தும், இவ்விரு இனங்களும் வேறு வேறு தேசிய இனங்களாக இனம் காட்டின. எனவே பிரதேசம் எனப்படும் பொழுது

 

(1) முதலாளித்துவ காலகட்டத்திற்கு பிறகு ஒரே அரசின் எல்லைக்குட்பட்ட பிரதேசமாக இருத்தல் வேண்டும்.

 

(2)  மக்கள் செறிவாக அடர்ந்து வாழுகின்ற பிரதேசங்களாக இருத்தல் வேண்டும்.

 

(தொடரும்)

 

 

 

ராஜீவ் கொலை தொடர்பாக

ராஜீவ் கொல்லப்பட்டது வெறும் பழிவாங்கல் நடவடிக்கையல்ல, அதே நேரம் அந்தக் கொலையை செய்தது புலிகள் தான் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள் எனப் புரியவில்லை? என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இக் கொலை தொடர்பாக இந்திய ஆளும்வர்க்கத்தின் முதலாளித்துவ தொடர்பு சாதனங்களினூடாகவே பொதுவான தகவல்கள் வெளிவந்த போதிலும். விடுதலைப் புலிகள் தான் இக் கொலையைச் செய்திருக்கின்றனர் என்பதிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல தற்போது இந்தியாவில் வெளியாகியிருக்கின்றன. இங்கு கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியும், கொலையாளியும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்தும், அவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் உள்ள மக்களை மரணத்திற்கு தள்ளி தாம் ஏகபோகத்தை அனுபவித்தார்கள். ராஜீவைக் கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்பதை பிரபாகரன் உரிமை கோரினால் தான் ஏற்றுக்கொள்ளலாம் என்பதில்லை. ராஜீவ் காந்தியை கொலை செய்ய வி-பி-சிங்கின் தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே சிவராசன் ஒத்திகை பார்த்ததையும் ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில், பிரச்சார மேடையருகில் விடுதலைப்புலிகளின் சிவராசனும் அவனது சகாக்களும் நின்றதும், குண்டுவெடித்ததும், இந்திய புலனாய்வுத் துறையால் வெளியிடப்பட்ட தகவல்களும், இறுதியாக கொலையாளிகளின் மறைவிடம் பெங்களுரில் முற்றுகைக்கு உள்ளான போது அவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் உண்மை. ஏன் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள் இல்லை என்று அறிவித்ததும் உண்மைதான். ஆனால் கொலையை செய்து முடித்த சிவராசன், சுபா போன்றோர் தமது அமைப்பு இல்லை என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலசிங்கமோ-பிரபாகரனோ குறிப்பிடவில்லை.

 

ராஜீவ் கொலைக்கு அரசியல் காரணம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளீர்கள். விடுதலைப்புலிகள் என்ற தரகுமுதலாளித்துவ பாசிசக்கும்பலுக்கும் ராஜீவ்காந்திக்கும் இடையிலான முரண்பாடு என்பது பல்வேறு அரசியல், பூகோள, இராணுவ நலன்களுக்கு உட்பட்டதே! இலங்கை- இந்தியா இந்தியா-பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடைய அரசியல் அடிப்படையும் விடுதலைப்புலிகள்-இந்திய அரசு ஆகியவற்றின் நலன்களுக்கு இடையிலான அரசியல் அடிப்படையும் ஒரே பிரச்சனைத்தளத்திலிருந்தே பார்க்கப்பட முடியும். இது தவிர புலிகளின் இராணுவ நலன்களும் இதற்கு உட்பட்டதே! இந்தியாவின் பிராந்திய வல்லரசு மனேபாவம், ஏகாதிபத்தியங்களுடனான இந்தியாவிற்கு இருந்த சுயாதீனமுள்ள உறவும், இந்திய புலிகள் முரண்பாட்டுக்கு மேலும் வலுவுள்ள காரணங்களாக அமைந்திருந்தன. இது தவிர ராஜீவ் கொலையினூடாக சாதிக்கக்கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இந்திய தேசியத்தை கட்டிகாத்து வரும் நேரு பரம்பரையின் இறுதி நாயகன், தெற்காசிய தேசியத்தின் கவர்ச்சி மிகுந்த தலைவன், இவரை கொலை செய்வதன் மூலம் மேலும் இந்திய தேசியத்தையும், தெற்காசியாவில் இந்தியாவின் உறுதியான ஆதிக்கத்தையும் குலைக்க முடியும்... உங்களது இந்தக்கூற்றை சரியென்று கூறினால் துரோகத்தனம் பிழையென்று கூறினால் வரட்டுத்தனம். இந்தியாவானது, தனது தேவைக்கு அதிகமான சந்தையை கொண்டுள்ள ஒரு நாடு. இந்த ஒரு காரணம் இந்தியாவுற்கு வலுவையும், சுயாதீனத்தையும் கொடுத்துள்ளது. இந்திய தரகு முதாலாளித்துவம் ஏனைய மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தரகு முதலாளித்துவத்தை விட சற்று வித்தியாசமான இயல்புகளை, இதன் அடிப்படையிலேயே கொண்டுள்ளது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளை தனது நலன்களுக்கு சாதகமாக இந்திய தரகு முதலாளித்துவம் பாவித்துக்கொள்கிறது. எந்த ஏகாதிபத்தியம் இந்திய தரகு முதலாளித்துவத்தின் நலன்களை கட்டுப்படுத்த முயல்கிறதோ, தரகு முதலாளித்துவம் இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் குறித்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறவை வளர்த்துக் கொள்கிறது. இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஓரு சுயாதீனம் இருப்பதைப் போன்று வெளித்தோன்றல் ஒன்றை கொடுக்கின்றதே ஒழிய உண்மையில் இந்த ஆளும் வர்க்கம் இந்திய தேசியத்திற்கு எதிரானதே! இந்தியாவிற்கு இருக்கின்ற இந்த சுயாதீனத்தின் அடிப்படையில் இருந்து எழுகின்ற பிராந்திய வல்லரசு மனேபாவமும், தெற்காசியாவின் மொத்த நலனுக்கும் எதிரானது. இதுவே எமது கருத்து!

 

80 கோடி மக்களின் வாழ்வுடன் விளையாடியவர்கள் நேரு பரம்பரையினர். தமிழகத்தில் பிரிவினைவாதம் வளர காரணமாக இருந்தவர்கள். தெலுங்கானா மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கியவர்கள். காஷ்மீர் மக்களை யுத்தநிலைக்கு தள்ளியவர்கள. பஞ்சாப்பில் காங்கிரஸ் என்றாலே காறி உமிழ்கின்ற அளவுக்கு காங்கிரசின் தேசியத்தன்மை வளர்ந்து உள்ளது. அசாமில் தோன்றியுள்ள பதட்டநிலை வடகிழக்கிந்தியாவில் தோன்றியுள்ள பிரிவினைவாதப் போக்கு இவற்றை எல்லாம் நோக்கும் போது, இந்திய தேசியம் என்றால் என்னவென்று கேட்கத் தோன்றுகிறது? தென்கிழக்கு ஆசியாவில் பாக்கிஸ்தானுடன் மூன்று யுத்தத்தை நடாத்தியது. சீனாவுடன் யுத்தம் நடத்தி தோல்வியைக் கண்டது. பங்களாதேசத்தினை சூறையாடியது. ஈழமக்களை கொன்று குதறியது. பூட்டான் மீது ஏற்படுத்தும் நெருக்கடி. நேபாளத்திற்கு எதிரான பொருளாதர தடை இதையெல்லாம் நோக்கும் போது தென்கிழக்காசியாவில் இந்தியா விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட ஒரு பேட்டை ரவுடியாக பரிணமிப்பதை பார்க்கலாம்.

 

எமது கட்டுரையில் தென்கிழக்காசியா விடுதலையை நோக்கி.... என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பாக ஈழவிடுதலைப் போராட்டம் என்பது உலகப்புரட்சியின் ஒரு பகுதியே. இது உடனடித் தேவையாக தென்கிழக்காசிய விடுதலையுடன் தவிர்க்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.

 

எந்த அடிப்படையில் பிரச்சனையைத் தீர்ப்பது என்பது குறித்த உங்கள் கருத்து தொடர்பான சகல பிரச்சனைகளுமே ஆழமான கருத்து விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய உடனடிப்பிரச்சனைகளாகும்.

 

-ஆசிரியர் குழு-

 

 

சோவியத் பற்றிய சிறு குறிப்பு

யெல்சின் ஆர்ப்பாட்டமாக ஆட்சிக்கு வந்தார். மேற்கத்தைய அரசுகளும், அரைகுறை மார்க்சிய முலாம் பூசிய பிதற்றல்களும் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதாக வாய் கிழிய முழக்கமிட்டனர். யெல்சின் ஜனநாயகத்தின் காவலன் என பாராட்டுக்கள் ஒருபுறம் நடைபெற, யெல்சின் ஆட்சியில் இருக்கும் வரை சில படங்களையாவது எடுத்து விட வேண்டுமென்ற துடிப்புடன் புகைப்படப் பிடிப்பாளருக்கும் தொலைகாட்சிகளுக்கும் பல்வேறு தோற்றத்தில் தன்னை பிரபல்யப்படுத்த முயல்கிறார்.

 

சமூகத்திலிருக்கும் முரண்பாடுகளைத் தீர்ப்பேன் என வாய்ச்சவாலடித்த யெல்சின் கம்யூனிசத்தின் போலியாக இருந்த குருசோவ்---பிரஸ்நோவ்...கோர்பச்சேவ் ஆகியோரிடமிருந்து, எந்த அரசியல் மாற்றமுமின்றி ஆட்சியமைத்ததுடன் மேலும் தீவிரமாக கம்யூனிசத்தின் அடிப்படைகளை தகர்த்து முதலாளித்துவத்தை செயற்படுத்த முயன்றார்.

 

மக்கள் மீண்டும் உண்மையை உணரத் தலைப்பட்டனர். இன்று கம்யூனிசக் கட்சியின் தலைமையில் நாளாந்தம் போராட்டம் தொடர்கின்றது. மக்கள் தெளிவாகவும், விரைவாகவும் உண்மையை இனங் காணத் தொடங்கியுள்ளார்கள். லெனின், ஸ்டாலின் ஆகியோரின் படங்களை தூக்கியபடி மக்கள் வீதிக்கு வருவது மேற்கத்தைய நாடுகள் மறைக்க முயன்றும் சிலவற்றை மறைக்க முடியாமல் வெளியிட நிர்பந்திக்கபட்டுள்ளார்கள். யெல்சினை பன்றியாகச் சித்தரித்ததுடன் ஒரு மாபீயாவாகவும், விபச்சாரத்தின் தலைவனாகவும் காட்டும் பல கேலிச்சித்திரங்களுடன் தொடரும் ஊர்வலங்கள், யெல்சின் மிக விரைவில் தூக்கி எறியப்படப்போகும் நிகழ்வைக் காட்டுகிறன.

 

ஒரு குறுகிய காலத்தில் மீண்டும் போராட்டம் தொடருமளவுக்கு மக்கள் யெல்சினையும் ஸ்டாலினுக்குப் பிறகு வந்த போலிக் கம்யூனிஸ்டுகளையும் இனம் கண்டுள்ளனர். மக்களின் தெளிவான நிலையையும், சரியான ஒரு கட்சியின் தலைமையையும் இன்று சோவியத் எதிர்கொண்டுள்ளது.

 

நாளாந்தம் நடைபெறும் ஊர்வலங்கள் மேற்கத்தைய நாடுகள் வெளியிடாமல் மறைத்தபோதும், ஒரு சில போராட்டங்கள் சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மேற்கத்தைய தொலைக்காட்சிகளில் வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. அவைகளையே ஆதாரமாக வைத்து அவை நடந்த திகதிகளை உங்கள் முன்வைக்கிறோம்.

 

(1) 07-11-1991 இல் அக்டோபர் புரட்சியின் நினைவாக ஆயிரக்கணக்கானோர் யெல்சினுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தினர்.

 

(2) 22-12-1991 இல் மீண்டும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.

 

(3) 12-01-1992 இல் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.

 

(4) 09-02-1992 இல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட ஊர்வலத்துக்கெதிராக யெல்சின் ஊர்வலத்தை நடத்தினார். இரு ஊர்வலங்களும் தமது பலத்தை காட்டும் வகையில் அமைந்தது. மேற்கத்தைய புள்ளிவிபரப்படி 10 ஆயிரம் பேர் யெல்சினை ஆதரித்து ஊர்வலத்தில் பங்குகொண்டதுடன், மதசிலுவைகளும் ஜார் மன்னனின் படங்களுடன் காணப்பட்டனர். இதற்கு எதிராக நடந்த கம்யூனிச ஊர்வலத்தில் 30-ஆயிரம் பேர் பங்குகேற்றதுடன் லெனின் ஸ்டாலின் படங்களுடன் காணப்பட்டனர்.

 

(5) 23-02-1992 இல் பல்லாயிரக் கணக்கானோர்கள் கலந்து கொண்டு ஊர்வலம் நடைபெற்றது.

 

(6) 15-023-1992 இல் ஊர்வலம் நடைபெற்றதுடன் ~பிராவ்தா பத்திரிகை மீண்டும் வெளியிடப்பட்டது. (அன்று1 1-2 கோடி பத்திரிகைகள் வெளிவந்தது.

 

(7) 17-03-1992  20-03-1992  ஆகிய இரு தினங்களிலும் ஊர்வலங்கள் நடைபெற்றன.

 

இவைகள் மேற்கத்தைய தொலைகாட்சிகள் காட்டியது மட்டுமே.

 

தினம் தினம் கிராமம் கிராமமாக நடைபெறும் சம்பவங்கள் பற்றி சரியான தகவல்களை எடுக்க முடியாமையினால், அவைகளை முன்வைக்க முடியவில்லை.

 

இவ்வூர்வலங்களை விட மக்களின் அன்றாட வாழ்க்கையையொட்டி தொலைக்காட்சிகளில் வெளிவந்தவை, அவைகளிற் சில.

 

(1) ஒரு பெண் கிரம்ளனில் உள்ளவர்கள் கிரிமினல்கள் என சொன்ன பொழுது பத்திரிகையாளர்கள் யெல்சினுமா என கேட்கையில் அவர் தான் முதலாவது கிரிமினல் எனச் சொன்னார்.

 

(2) ஒரு கடையில் பொருட்களை வாங்க நின்ற கூட்டத்தில் பொருட்கள் இருந்தும் வாங்க முடியாதளவுக்கு பணமில்லையாம், தங்கள் கையிலுள்ள பணத்தை எண்ணிப்பார்க்கும் பரிதாப நிலையைப் பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு பொருட்களின் விலை 5-15 மடங்கு உயர்ந்துள்ளது. இது பணக்காரர்களுக்குரிய கடை என அங்கு நின்ற மக்கள் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்தனர்.

 

(3) ஆயிரக்கணக்கானோர் யெல்சின் ஆட்சியமைந்த பின் வீதிகளில் கொட்டும் பனிகளில் படுப்பதையும், அவர்களின் அவஸ்தைகளையும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.

 

(4) கொர்பச்சேவ் ஆட்சிகாலத்தில் சிறைக்கூடத்தில் முடமாக்கப்பட்ட ஒருவன் தன் நெஞ்சின் ஒரு பக்கத்தில் லெனின் மறுபக்கத்தில் ஸ்டாலின் படங்களை பச்சை குத்தி இருந்ததை பார்க்க முடிந்தது.

 

(5) ஒரு பத்திரிகையாளர் ஒரு குடும்பத்தை 4மணி நேரம் கடந்தகாலம், நிகழ்காலம் தொடர்பாக பேட்டியெடுத்தபோது அக் குடும்பத்தவன் கம்யூனிஸ்ட்டாக ஸ்டாலின் காலத்தில் இருந்தவர் அவர் ஸ்டாலின் காலத்தில் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருந்தவர். அவர் கைது ஸ்டாலினின் தவறுகள் பக்கத்துக்குள் அடக்கலாம். அவர் ஸ்டாலின் பற்றிக் கூறும் பொழுது அவர் சில தவறுகள் விட்டார் எனவும், ஆனால் ஸ்டாலின் சரியாக இருந்தவர் எனவும் கூறிய அவர் குருசோவ்வும் பின் வந்த அனைவரையும் நிராகரித்தார். அதன் பின் இருந்த கம்யூனிசக்கட்சியில் அவர் இருக்கவுமில்லை.

 

(6) அண்மையில் சோவியத் இராணுவத்தின் ஒரு பிரிவு லெனின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய ஒரு வைபவம் நடைபெற்றது.

 

(7) நாளாந்தம் மக்கள் முண்டியடித்தபடி ஒவ்வொரு கடைகளிலும் பொருட்கள் வாங்க கூட்டமாக கூடும் மக்கள் கடைகள் திறந்தவுடன் அங்கு எதுவுமில்லாத நிலையில் யெல்சினையும் அவர் கூட்டத்தையும் கிரிமினல்கள் என சொல்வதை தொலைக்காட்சிகளே காட்டுகின்றன.

 

இப்படி சில நிகழ்வுகளை தொலைக்காட்சிகள் காட்டியதின் அடிப்படை. இதை நாம் எழுதும் பொழுது இவைகளை விட அங்கு நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகள் வெளிவராமலும் உள்ளன. மேலும் அங்கிருந்து வரும் தகவல்கள் புரட்சியின் தவிர்க்க முடியாத நிலைமையை கோடிட்டுக் காட்டுகிறது. இனி வரும் சோவியத் புரட்சியானது முதலாளித்துவாதிகள் அரைகுறை மாக்சிஸ்டுகளின் வாய்ச்சவடால்களுக்கு மீண்டும் ஒரு பேரிடியை மிக விரைவில் கொடுக்கும்.