06202021ஞா
Last updateவெ, 18 ஜூன் 2021 3pm

தலைவிரித்தாடும் மிகப்பெரிய நிறுவனங்களின் அராஜகம்

 இப்படி உருவாகும் பன்னாட்டு தேசங்கடந்த நிறுவனங்கள் பல கோடி மக்களின் வருடாந்தர கூலிகளை மிஞ்சியதாக காணப்படுகின்றது. உதாரணமாக உலகில் மென்பொருள் உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமான  மைக்ரோசாப்ட் (Mடிஞிணூணிண்ணிஞூt) நிறுவனத்தின் மொத்தச் சொத்து 1999இல் 50,000 கோடி டாலராக இருந்தது. இது பிரேசில் நாட்டில் உள்ள மக்களனைவரும் வருடாந்தரம் உழைத்து உருவாக்கும் மொத்த தேசிய வருமானத்துக்குச் சமனாக இருந்தது.


வியாபாரச் சின்னம் உருவாக்கும் அடிமைப் பண்பாடு

 உலகமயமாதல் என்ற வர்த்தகப் பண்பாடு, பண்பாட்டு ரீதியான வியாபாரச் சின்ன ("மார்க்') அடையாளத்துடன் உலகை அடிமைப் படுத்துகின்றது. மனிதன் பொருட்களின் அடிமையாக இருந்த காலகட்டம் என்பதை கடந்து, பொருட்கள் மேல் பொறிக்கப்பட்ட வியாபாரச் சின்ன ("மார்க்') அடையாளங்கள் சார்ந்த மந்தைகளாகி விடும், புதிய சமூக அடிமைத்தனமே உலகமயமாதலின் நவீனப் பண்பாடாகி வருகின்றது. அதுவே நவீன கலையுமாகியுள்ளது. இதன் மூலம் வியாபாரச் சின்னம் ("மார்க்') சார்ந்த பன்னாட்டு, தேசங்கடந்த நிறுவனங்களை வீங்கி வெம்பவைக்கின்றன.

பணக்காரக் கும்பலின் வாழ்க்கை முறைமை சமூக விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டது.

 இப்படி உலகை ஜனநாயகத்தின் பெயரிலும், சுதந்திரத்தின் பெயரிலும் ஆளுகின்ற பலர் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் இருக்கின்றனர். இந்த ஆளும் வர்க்கமும், அதைச் சுற்றி உள்ள அதிகாரவர்க்கமும் கூட பெரும் பணக்காரக் கும்பலானதே. இந்தக் கும்பல் ஏழை மக்களின் நலனையிட்டு ஒரு நாளும் ஒரு கணமும் சிந்திக்கப் போவதில்லை. மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் எனின், தமது சொந்தச் செல்வத்தின் இழப்பை அங்கீகரிக்க வேண்டும். எந்தப் பணக்காரனாவது தனது சொந்த சொத்து இழப்பை அங்கீகரிக்க போவதில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் ஆதிக்கப் பண்பாடு

 ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள ஒருசில பன்னாட்டு நிறுவனங்கள், உலகளாவிய மூலதனங்களையும் மனித உழைப்பையும் தமதாக்கி ஒன்று குவிப்பதே உலகமயமாதலாகும். இதன் மூலம் தனிப்பட்ட சிலரின் சொத்துக்கள் வரைமுறையின்றிக் குவிகின்றது. இப்படிக் குவியும் தனிப்பட்ட நபர்களின் சொத்துக்களே, ஆடம்பரமாகி மனிதனுக்கு எதிரான வக்கிரங்களாக வக்கரிக்கின்றன. இதுவே சமூகப் பண்பாடாகி உலகமயமாகின்றது. இன்றைய சமூக அமைப்பு என்பது, தனிப்பட்ட நபர்களின் செல்வக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டது.

பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்வதால் கொழுப்பேறும் அதிகாரவர்க்கம்

 இந்த அமைப்பைப் பாதுகாக்கும் சட்டதிட்டங்களும், அதைக் கையாளும் நீதிபதிகள் கூட பெரும் பணக்காரக் கும்பலே. 1997இல் புதிதாக நியமிக்கப்பட்ட 25 நீதிபதிகளின் சராசரியான தனிநபர் சொத்து, 18 லட்சம் டாலருக்கும் அதிகமாகும். அமெரிக்காவில் உள்ள நீதிபதிகளில் 34.1 சதவீதம் பேர் 10 லட்சம் டாலருக்கும் அதிகமான சொத்துடைய பணக்காரக் கும்பலே. பொதுச் சட்ட திட்டங்கள் பணக்கார நலன்களைத் தாண்டி, எதையும் மக்களுக்காக வழங்குவதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.