11292020ஞா
Last updateசெ, 24 நவ 2020 7pm

தமிழ்

முதலில் உண்டானது தமிழ்

புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே "புதிய நாளை"
மனிதப்பைங் கூழ்மு ளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற் றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ?

இசை கூத்தின் முளை

பழந்தமிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு, வண்டு,
தழைமுங்கில் இசைத்ததைத், தாம்
தழுவியே இசைத்த தாலே
எழும்இசைத் தமிழே! இன்பம்
எய்தியே குதித்த தாலே
விழியுண்ணப் பிறந்த கூத்துத்
தமிழே! என் வியப்பின் வைப்பே!

இயற்றமிழ் எழல்

அம்மா என் றழைத்தல், காகா
எனச்சொல்லல், அஃகென் றொன்றைச்
செம்மையிற் சுட்டல் என்னும்
இயற்கையின் செறிவி னாலே
இம்மா நிலத்தை ஆண்ட
இயற்றமி ழேஎன் அன்பே!
சும்மாதான் சொன்னார் உன்னை
ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே!

தமிழர்க்குத் தமிழ் உயிர்

வளர்பிறை போல் வளர்ந்த
தமிழரில் அறிஞர் தங்கள்,
உளத்தையும், உலகில் ஆர்ந்த
வளத்தையும் எழுத்துச் சொல்லால்,
விளக்கிடும் இயல்மு திர்ந்தும்,
வீறுகொள் இசை யடைந்தும்,
அளவிலா உவகை அடற்
றமிழேநீ என்றன் ஆவி!

சாகாத்தமிழ்

படுப்பினும் பாடது, தீயர்
பன்னாரும் முன்னேற் றத்தைத்
தடுப்பினும், தமிழர் தங்கள்
தலைமுறை தலைமு றைவந்
தடுக்கின்ற தமிழே! பின்னர்
அகத்தியர் காப்பி யர்கள்
கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்
கிளைதொத்தும் கிளியே வாழி!

கலைகள் தந்த தமிழ்

இசையினைக் காணு கின்றேன்;
எண்நுட்பம் காணு கின்றேன்;
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க் கின்றேன்; ஓவியங்கள்,
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண் கின்றேன்.

முன்னூலில் அயலார் நஞ்சம்

பன்னு஡று நூற்றாண் டாகப்
பழந்தமிழ் மலையின் ஊற்றாய்
மன்னரின் காப்பி னாலே,
வழிவழி வழாது வந்த
அன்னவை காணு கின்றேன்.
ஆயினும் அவற்றைத் தந்த
முன்னூலை, அயலான, நஞ்சால்
முறித்ததும் காணு கின்றேன்!

பகைக்கஞ்சாத் தமிழ்

வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப், பின் தெற்கில் வந்தே
இடக்கினச் செயநினைத்த
எதிரியை, அந்நாள் தொட்டே
"அடக்கடா" என்று ரைத்த
அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென் றாலும்
தடந்தோளுண் டெனச் சிரித்தாய்!

வெற்றித் தமிழ்

ஆளுவோர்க் காட்பட் டேனும்,
அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர்;
தமிழேநீ நடுங்க வில்லை!
"வாளினை எடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள்" என்றாய்; காதில்
கடல்முழக் கத்தைக் கேட்பாய்!

படைத் தமிழ்

இருளினை வறுமை நோயை
இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக்குன்றை நான்
ஒருவனே மிதிப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
நான் அங்கோர் மறவன்! கன்னற்
பொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு; நானோர் தும்பி!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

பட்டணம்

எத்தனை வகைத் தெருக்கள்!
என்னென்ன வகை இல்லங்கள்!
ஒத்திடும் சுண்ண வேலை
உயர் மரவேலை செய்யும்
அத்திறம் வேறே; மற்றும்
அவரவர்க் கமைந்த தான
கைத்திறம் வேறே என்று
காட்டின கட்டிடங்கள்.

இயற்கையின் உயிர்கட் குள்ளே
மனிதன்தான் எவற்றி னுக்கும்
உயர்ச்சியும், தான் அறிந்த
உண்மையை உலகுக் காக்கும்
முயற்சியும், இடைவி டாமல்
முன்னேற்றச் செயலைச் செய்யும்
பயிற்சியும் உடையான் என்று
பட்டணம் எடுத்துக் காட்டும்.

நடுவினிற் புகையின் வண்டி
ஓடிடும் நடைப் பாதைக்குள்
இடைவிடா தோடும் 'தம்மில்
இயங்கிடும் ஊர்தி' யெல்லாம்
கடலோரம் கப்பல் வந்து
கணக்கற்ற பொருள் குவிக்கும்
படைமக்கள் சிட்டுப் போலப்
பறப்பார்கள் பயனை நாடி!

வாணிகப் பண்டக சாலை
வைத்துள்ள பொருள்கள் தாமும்,
காண் எனக் காட்டி விற்கும்
அங்காடிப் பொருள்கள் தாமும்,
வீணாளைப் பயன் படுத்தும்
வியன்காட்சிப் பொருள்கள் தாமும்,
காணுங்கால் மனிதர் பெற்ற
கலைத்திறம் காணச் செய்யும்.

உள்ளத்தை ஏட்டால் தீட்டி
உலகத்தில் புதுமை சேர்க்கும்
கொள்கைசேர் நிலைய மெல்லாம்
அறிஞரின் கூட்டம் கண்டேன்;
கொள்கைஒன் றிருக்க வேறு
கொள்கைக்கே அடிமை யாகும்
வெள்ளுடை எழுத்தா ளர்கள்
வெறுப்புறும் செயலும் கண்டேன்.

உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும்
உயர்வழக் கறிஞர் தம்மை
விண்வரை வளர்ந்த நீதி
மன்றத்தில் விளங்கக் கண்டேன்;
புண்பட்ட பெருமக் கட்குப்
பொதுநலம் தேடு கின்ற
திண்மைசேர் மன்றிற் சென்றேன்
அவரையே அங்கும் கண்டேன்.

மாலைப்போ தென்னும் அன்னை,
உழைப்பினால் மடிவார் தம்மைச்
சாலிலே சாரா யத்தால்
தாலாட்டும் கடையின் உள்ளே
காலத்தைக் களியாற் போக்கக்
கருதுவோர் இருக்கக் கண்டேன்,
மாலையில் கோழி முட்டை
மரக்கறி ஆதல் கண்டேன்.

இயற்கையின் எழிலை யெல்லாம்
சிற்று஡ரில் காண ஏலும்!
செயற்கையின் அழகை யெல்லாம்
பட்டணம் தெரியக் காட்டும்!
முயற்சியும் முழுது ழைப்பும்
சிற்று஡ரில் காணுகி ன்றேன்;
பயிற்சியும் கலையு ணர்வும்
பட்டணத் திற்பார்க் கின்றேன்!

வருநாளின் நாடு காக்க
வாழ்ந்திடும் இளைஞர் கூட்டம்,
திருநாளின் கூட்ட மாகத்
தெருஓரம் சுவடி யோடு,
பெருநாளைப் பயன்நா ளாக்கும்
பெரும்பெருங் கழகம் நோக்கி
ஒருநாளும் தவறிடாமல்
வரிசையாய் உவக்கச் செல்வார்!

கலையினில் வளர்ந்தும், நாட்டுக்
கவிதையில் ஒளிமி குந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
நீலப்பூ விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
தம்வீடு போதல் கண்டேன்
உலவிடு மடமைப் பேயின்
உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

இருள்

வாடிய உயிர்கள அணைப்பாய்

ஆடிஓ டிப்போய் இட்டும்,
அருந்துதல் அருந்தி யும், பின்
வாடியே இருக்கும் வைய
மக்களை, உயிர்க்கூட் டத்தை,
ஓடியே அணைப்பாய் உன்றன்
மணிநீலச் சிறகளாவ
மூடுவாய் இருளே, அன்பின்
முழக்கமே, உனக்கு நன்றி!

இருளின் பகலாடை இரவாடை

விண்முதல் மண் வரைக்கும்
வியக்கும்உன் மேனி தன்னைக்
கண்ணிலே காண்பேன்; நீயோ
அடிக்கடி உடையில் மாற்றம்
பண்ணுவாய் இருளே, உன்றன்
பகல்உடை தங்கச் சேலை!
வெண்பட்டில் இராச் சேலைமேல்
வேலைப்பா டென்ன சொல்வேன்!

இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு

'எங்குச் செல் கின்றாய்' என்று
பரிதியை ஒரு நாள் கேட்டேன்;
'கங்குலை ஒழிக்க' என்றான்.
கடிதுசெல் தம்பி என்றேன்.
அங்குன்னைத் தொடர்ந்தான்; நீயோ
அகல்வதாய் நினைத்தான்; என்னே!
எங்கணும் நிறைந்த நீர் நீ!
அதில், 'கதிர்', சுழல்வண் டன்றோ! நீ

நீ முத்துடை போர்த்து நின்றாய்

கள்ளரை வெளிப் படுத்தும்
இருட்பெண்ணே, கதை ஒன்றைக் கேள் ;
பிள்ளைகள் தூங்கினார்கள் ;
பெண்டாட்டி அருகில் நின்றாள் ;
உள்ளமோ எதிலும் ஒட்டா
திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ
வெள்ளைமுத் துக்கள் தைத்த
போர்வையை மேனி போர்த்தே.

கொண்டையில் நிலாக் கொண்டைப்பூ

மண்முதல் விண் வரைக்கும்
வளர்ந்தஉன் உடல் திருப்பிக்
கண்மலர் திருப்பி நின்றாய்!
பின்புறம் கரிய கூந்தற்
கொண்டையில் ஒளியைக் காட்டும்
குளிர்நிலா வயிர வில்லை
கண்டேன்; என் கலங்கும் நெஞ்சம்
மனைவியின் திருமுன் செல்லும்!

பிறப்பும் இறப்பும்

வானொடு நீபி றந்தாய்!
மறுபடி, கடலில் தோன்றும்
மீன் என உயிர் உடல்கள்
விளைந்தன! எவ்வி டத்தும்
நீநிறை வுற்றாய்! எங்கும்,
பொருளுண்டேல் நிழலுண் டன்றோ!
பானையில் இருப்பாய் ; பாலின்
அணுத்தோறும் பரந்தி ருப்பாய்!

உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்

உயர்ந்துள்ள அழகு மூக்கின்
இருபுறம் உறைவாய் ; மங்கை
கயல்விழிக் கடையில் உள்ளாய்;
காதினில் நடுப்பு றத்தும்,
அயலிலும், சூல்வாய் பெண்ணின்
முகத்தினில் அடையா ளத்தை
இயக்குவாய் இருளே, உன்சீர்,
ஓவியர் அறிந்தி ருப்பார் !

இருளே அழகின் வேர்

அடுக்கிதழ்த் தாமரைப் பூ
இதழ்தோறும் அடிப்பு றத்தில்
படுத்திருப் பாய்நீ ! பூவின்
பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும்
தப்புக்காட் டுகின்றாய் ! இன்றேல்,
தாமரை அழகு சாகும் !
அடுத்திடும் இருளே, எங்கும்,
அனைத்துள்ளும் அழகு நீயே !

அறியாமைதான் இருள்;
ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்

அறிவென்றால் ஒளியாம். ஆம்ஆம்!
அறியாமை இருளாம். ஆம்ஆம்!
அறியாமை அறிவைச் செய்யும்;
அறியாமை அறிவால் உண்டோ ?
சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்;
நள்ளிருள் ; விளக்குத் தேவை;
நிறைவேற்ற நெருப்புக் குச்சி
தேடினார் ; கிடைக்க வில்லை.

இருளின் பெருமை இயம்ப அரிது

பெட்டியில் இருப்ப தாகப்
பேசினார் ; சாவி இல்லை;
எட்டுப்பேர் இதற்குள் தேளால்
கொட்டப்பட் டுத்து டித்தார்;
"கட்டாயம் து஡ய்மை வேண்டும்"
என்னுமோர் அறிவு தன்னை
இட்டளித் திட்ட நல்ல
இருளே உன் பெருமை என்னே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

சிற்றுர்

நெடுஞ் சாலை எனை அழைத்து
நேராகச் சென்று, பின்னர்,
இடையிலோர் முடக்கைக் காட்டி
ஏகிற்று ! நானோ ஒற்றை
அடிப்பாதை கண்டேன், அங்கோர்
ஆலின்கீழ்க் காலி மேய்க்கும்
இடைப்பையன் இருந்தான்; என்னை
" எந்தஊர்" என்று கேட்டான்.

புதுச்சேரி என்று சொல்லிப்
போம்வழி கேட்஧ன், பையன்
'இதைத்தாண்டி அதோ இருக்கும்
பழஞ்சேரி இடத்தில் தள்ளி
ஒதிச் சாலையோடு சென்றே
ஓணான் பச்சேரி வாய்க்கால்
குதிச்சேறிப் போனால் ஊர்தான்
கூப்பிடு தொலைவே' என்றான்!

பனித்துளி மணிகள் காய்க்கும்
பசும்புற்கள் அடர் புலத்தில்,
தனித்தனிஅ கலா வண்ணம்
சாய்த்திட்ட பசுக்கள் எல்லாம்,
தனக்கொன்று பிறர்க்கொன் றெண்ணாத்
தன்மையால் புல்லை மேயும்!
இனித்திடப் பாடும் பையன்
தாளம்போல் இச்இச் சென்றான்.

மந்தையின் வெளி அடுத்து
வரிசையாய் இருபக் கத்தில்,
கொந்திடும் அணிலின் வால்போல்
குலைமுத்துச் சோளக் கொல்லை,
சந்திலாச் சதுரக் கள்ளி,
வேலிக்குள் தழைந்தி ருக்கும்;
வெந்தயச் செடிக ளின்மேல்
மின்னிடும் தங்கப் பூக்கள்!

முற்றிய குலைப்ப ழத்தை
முதுகினிற் சுமந்து நின்று
'வற்றிய மக்காள் வாரீர்'
என்றது வாழைத் தோட்டம்;
சிற்றோடு கையில் ஏந்தி
ஒருகாணிப் பருத்தி தேற்ற
ஒற்றைஆள் நீர்இ றைத்தான்,
உழைப்பொன்றே செல்வம் என்பான்.


குட்டையில் தவளை ஒன்று
குதித்தது, பாம்பின் வாயிற்
பட்டதால் அது விழுங்கிக்
கரையினிற் புரளப் பார்த்த
பெட்டைப் பருந்து து஡க்கிப்
பெருங்கிளை தன்னிற் குந்தச்
சிட்டுக்கள் ஆலி னின்று
திடுக்கிட்டு மேற்ப றக்கும்!

இளையவள் முதிய வள்போல்
இருந்தனள் ஒருத்தி; என்னை
வளைத்தனள், 'கோழி முட்டை
வாங்கவா வந்தீர்?' என்றாள்.
விளையாட்டாய்ச் 'சேரி முட்டை
வேகாதே!' என்றேன். கேட்டுப்
புளித்தனள்; எனினும் என்சொல்,
'பொய்' என்று மறுக்கவில்லை!

" என்றேனும் முட்டை உண்ட
துண்டோ நீ" என்று கேட்டேன்.
"ஒன்றேனும் உண்ட தில்லை;
ஒருநாளும் உண்ட தில்லை;
தின்றேனேல் புளித்த கூழில்
சேர்ந்திடும் உப்புக் கான
ஒன்றரைக் காசுக் கென்றன்
உயிர்விற்றால் ஒப்பார்" என்றாள்.

சேரிக்குப் பெரிது சிற்று஡ர்,
தென்ன மா சூழ்ந்திருக்கும்;
தேர்ஒன்று, கோயில் ஒன்று
சேர்ந்த ஒர் வீதி, ஓட்டுக்
கூரைகள், கூண்டு வண்டி
கொட்டில்சேர் வீதி ஐந்தே;
ஊர் இது; நாட்டார்க்கெல்லாம்
உயிர்தரும் உணவின் ஊற்று.

நன்செய்யைச் சுற்றும் வாய்க்கால்
நல்லாற்று நீரை வாங்கிப்
பொன்செயும் உழவு செய்வோன்,
'பொழுதெலாம் உழவு செய்தேன்
என்செய்தாய்' என்ற பாட்டை
எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி
'முன்செய்த கூழுக் கத்தான்
முடக்கத்தான் துவையல்' என்றாள்.


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

கிளி

முக்கு, கண், வால், பசுமை

இலவின்காய் போலும் செக்கச்
செவேலென இருக்கும் மூக்கும்,
இலகிடு மணல் தக்காளி
எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,
நிலைஒளி தழுவும் மாவின்
நெட்டிலை வாலும், கொண்டாய்,
பலர்புகழ் கின்ற பச்சைப்
பசுங்கிளி வாராய் ! வாராய் !

கழுத்து வரி, சொக்குப் பச்சை

நீலவான் தன்னைச் சுற்றும்,
நெடிதான வான வில்லைப்
போலநின் கழுத்தில் ஓடும்
பொன்வரி மின் விரிக்கும்!
ஆல், அல ரிக்கொ ழுந்தில்
அல்லியின் இலையில் உன்றன்
மேலுள சொக்குப் பச்சை
மேனிபோல் சிறிது மில்லை!

அழகுச் சரக்கு

கொள்ளாத பொருள்க ளோடும்,
அழகினிற் சிறிது கூட்டிக்
கொள்ளவே செயும் இயற்கை,
தான்கொண்ட கொள்கை மீறித்
தன்னரும் கை யிருப்பாம்
அழகெனும் தலைச் சரக்கைக்
கிள்ளியமைத் திட்ட கிள்ளாய்
கிட்டவா சும்மா வாநீ!

சொன்னதைச் சொல்லும்

இளித்தவா யர்கள், மற்றும்
ஏமாற்றுக் காரர் கூடி
விளைத்திடும் தொல்லை வாழ்வில்,
மேலோடு நடக்க எண்ணி
உளப்பாங்க றிந்து மக்கள்
உரைத்ததை உரைத்த வண்ணம்
கிளத்திடும் கிளியே என்சொல்
கேட்டுப்போ பறந்து வாராய் !

ஏற்றிய விளக்கு

கிளிச்செல்வ மேநீ அங்குக்
கிடந்திட்ட பச்சிலை மேல்
பளிச்சென எரியும் கோவைப்
பழத்தில்உன் முக்கை ஊன்றி
விளக்கினில் விளக்கை ஏற்றிச்
செல்லல்போல் சென்றாய் ! ஆலின்
கிளைக்கிடை இலையும், காயும்
கிடத்தல்போல் அதில் கிடந்தாய்!

நிறைந்த ஆட்சி

தென்னைதான் ஊஞ்சல் ! விண்தான்
திருவுலா வீதி ! வாரித்
தின்னத்தான் பழம், கொட் டைகள்!
திருநாடு வையம் போலும்!
புன்னைக்காய்த் தலையில் செம்மைப்
புதுமுடி புனைந்தி ருப்பாய்!
உன்னைத்தான் காணு கின்றேன்
கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்!

இருவகைப் பேச்சு

காட்டினில் திரியும் போது
கிரீச்சென்று கழறு கின்றாய்;
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணீர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!

மக்களை மகிழ்விக்கும்

கொஞ்சுவாய் அழகு தன்னைக்
கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
வஞ்சியர் தமையும், மற்ற
வறியவர் தமையும், ஒக்க
நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்
நிரப்புவாய், அவர் அளிக்கும்
நைந்தநற் பழத்தை உண்பாய்;
கூழேனும் நன்றே என்பாய்!

கிளிக்குள்ள பெருமை

உனக்கிந்த உலகில் உள்ள
பெருமையை உணர்த்து கின்றேன்;
தினைக்கொல்லைக் குறவன் உன்னைச்
சிறைகொண்டு நாட்டில் வந்து,
மனைதோறும், சென்றே உன்றன்
அழகினை எதிரில் வைப்பான்;
தனக்கான பொருளைச் செல்வர்
தமிழ்க்கீதல் போல ஈவார்!

ஓவியர்க் குதவி

பாவலர் எல்லாம் நாளும்
பணத்துக்கும், பெருமைக்கும் போய்க்
காவியம் செய்வார் நாளும்
கண் கைகள் கருத்தும் நோக!
ஓவியப் புலவ ரெல்லாம்
உநைப்போல எழுதி விட்டால்
தேவைக்குப் பணம் கிடைக்கும்
கீர்த்தியும் கிடைக்கும் நன்றே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

மற்ற கட்டுரைகள் ...