11302020தி
Last updateஞா, 29 நவ 2020 7pm

பாலியல்

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 18

"எல்லாம் இன்ப மயம்" 

 

ஆசை மனையாளைக் கைப்பிடித்து, 

அவளோடு இயல்பாய் இல்லறம் நடத்தி,

அன்பாய்ப் பிள்ளைகள் பெற்று,

அருமையாய் அதை வளர்த்து,

 

நல்லன யாவும் சொல்லிக் கொடுத்து,

அல்லனவற்றை அகற்ற புத்தி சொல்லி,

இன்பகணங்களும், துன்ப உணர்வுகளும்,

மாறி மாறி இருவரும் அனுபவித்து,

 

அன்புப் பிள்ளை அதன் வழியே வளர்வதை

அணுஅணுவாய் ரசித்து வந்து

துள்ளி வரும் போது கட்டியணைத்து,

பாதை தவறும் போது பாதுகாத்து,

 

துளித்துளியாய் வளர்ந்த பிள்ளை

களித்திருக்கும் வண்ணமாக அதற்கு

நல்லதொரு துணையினை தேடித்தந்து

இல்லறத்தில் இணைத்த பின்னர்,

 

உங்க கடமை முடிஞ்சுதுன்னு ஓயலாமா நீங்க?

இல்லை, இன்னும் ஏதாவது பாக்கி இருக்கான்னு கேக்கறது காதுல விழுது!

 

இருக்குங்க!

இன்னும் கொஞ்சம் இருக்கு!

இவ்வளவு தூரம் தம் கட்டி வந்திட்டீங்க!

இதையும் கேட்டுட்டு போங்க!

 

உங்களோட செல்லப் பிள்ளையா இது நாள் வரைக்கும் வாழ்ந்த பிள்ளை வேற!

இனிமே இருக்கப்போற, அவங்க வாழப்போற வாழ்க்கையில நிறைய வித்தியாசம் இருக்கப் போவுது.

அதை அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியது உங்க பொறுப்பு!

 

கல்யாணம்னா என்ன, இல்லறம்னா என்ன, 

பொண்டாட்டியை, புருஷனை சந்தோஷமா வெச்சுக்க என்ன செய்யணும், இதுல என்னெல்லாம் பிரச்சினை வரும், வரலாம்,

அதை எப்படி சமாளிக்கறது,

 

இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களோட முக்கிய கடமை!

 

உடலுறவுன்னா என்ன, அது என்ன மாதிரி அனுபவம் இதெல்லாம் துளிக்கூட தெரியாமக் கூட கைப்பிடிக்கிற மகனும், மகளும் இன்னும் இந்த உலகத்துல இருக்காங்க, தெரிஞ்சுக்கங்க!

 

அந்த பெற்றோருக்கு இந்த அடுத்த வரிகள்!!

 

இதுவரை தொடாத இடங்கள் தொடப்படும், புரியாத சுகங்கள் புலப்படும், என்பது இவர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டும்.

 

இது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லை.

உலகத்தின் தத்துவமே இதுதான், வம்ச வளர்ச்சிதான் ஒரு ஆணும், பெண்ணும் படைக்கப்பட்டதன் பொருள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளணும். 

 

இதெல்லாம் முடிஞ்சதும், இதை எப்படி அனுபவிச்சாங்க என்பதையும் புரிந்து கொண்டு, அதில் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதை சரி செய்யும்

வழி கூட உங்களுக்கு இன்னும் இருக்கு.

 

அவ்வளவுதாங்க!

 

இதுக்கு அப்புறம் அவங்க முதல் பதிவு படிக்கவும் சொல்லிக் கொடுத்துருங்க!

 

அவங்களும் இந்த பிரபஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கப் போறாங்க இல்லியா!

அவங்க குழந்தையும், தொடக்கத்துல இருந்தே ஒரு தெளிவோட வளர இதுவும் உதவும்.

 

அன்பு, கடமை, கட்டுப்பாடு, கண்டிப்பு, இதெல்லாம் கலந்த ஒரு உணர்வோடு,

ஒரு நண்பனாக இருந்து இவர்களை வளர்த்து ஆளாக்க உங்களை வாழ்த்துகிறேன்.

 

எல்லாம் இன்பமயமே!!

 

இதுவரை தொடர்ந்து படித்து, பின்னூட்டமிட்டு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

 

இப்பதிவை எழுத எனக்கு தூண்டுகோலாய் இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லி, இது ஒரு இனிமையான அனுபவமாக இருக்க எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்து,

 

மீண்டும் ஒரு மருத்துவத் தொடர் வழியே உங்களை மீண்டும் சந்திக்க வருவேன் எனச் சொல்லி விடை பெறுகிறேன்.

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html


"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 17"

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"

 

" நீ செஞ்ச காரியத்தோட தீவிரம் என்னான்னு தெரியுதா ஒனக்கு?

 

ஒன்வயசுல ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு இப்ப நீ வந்து நிக்கற!

 

ஒன்னோட அவசரத்துல, நாளையப்பத்தி நெனைக்காததுனால, அவளை கெர்ப்பமாக்கிட்டு, ஒனக்கென்ன போச்சுன்னு ஹாய்யா வந்துட்ட.

 

நீ செஞ்ச காரியம் எப்படிப் பட்டதுன்னு ஒரு உதாரணம் சொல்றேன் கேளு.

 

சின்ன வயசுலேந்து ஒன்னை எம்மடியில ஒக்கார வெச்சுகிட்டு ஸ்டியரிங்கைப் பிடிச்சு ஒன்னைக் காரோட்ட வெச்சேன்.

 

ஆனா, இன்னி வரைக்கும் ஒனக்கு லைஸென்ஸ் எடுக்கலை.

 

ஏன்? 

 

ஒனக்கு அதுக்கான வயசு இன்னும் வரலை.

 

ஒனக்கு கார் ஓட்டத் தெரியும்.

 

ஆனா, ஒரு ஆக்ஸிடெண்ட் ஆச்சுன்னா என்ன பண்ணணும்னு தெரியாது.

 

யாரைக் கூப்புடணும்; எங்கே கூட்டிக்கிட்டு போவணும்னு தெரியாது.

 

அது மட்டுமில்லை.

 

இதுக்கப்புறம் நீ கார் ஓட்டவே முடியாது..... இன்னும் கொஞ்ச நாளைக்கு.

 

அது மாதிரிதான் வாழ்க்கையும்!

 

வயசுக் கோளறுல, ஒரு ஆர்வத்துல நீ செஞ்சுட்டேன்னு எனக்கு புரியுது.

 

ஆனா,ஊர் ஒலகத்த்துக்கு இது புரியுமா?

 

புரியாது.

 

அந்த பொண்ணுக்கு நீ வாழ்வு கொடுக்கணும்.

 

இப்படி சொல்றதே எனக்கு அவமானமா இருக்கு.

 

ஆனா, இதுதான் இப்ப நம்ம ஒலகம்.

 

இதுக்கான முழுப் பொறுப்பும் நீதான் சொமக்கணும்.

 

அதான் முறையுங்கூட.

 

இத நீ செய்வேன்னு எதிர் பாக்கறேன்."

 

இதுதான் முறையான பிள்ளையைப் பார்த்து சொல்லக் கூடியது.

 

இந்த கார் உதாரணம் ஒரு பெண்ணுக்கும் பொருந்துவதே!

 

பெண் பறவை கர்ப்பமானால், ஆண் பறவை கூடு கட்டும்.

 

தன் துணை இறந்தால், வயிற்றில் கல் சுமந்து ஆண் பறவை கீழே விழுந்து உயிர் மாய்க்குமாம்!

 

இவற்றை விடவா கேவலமானவர்கள் நாம்!

 

பறவைகளைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்!

 

இதுவரை நாம் பார்த்தது, ஒரு மாதிரி நம் கட்டுப்பாட்டில் இருந்த நம் பிள்ளைகளைப் பற்றி!

 

இத்தோடு நம் பொறுப்பு முடிந்தததா?

 

மணமாகி, மணம் முடித்து, அவர்களை அனுப்பியபின், நமக்கு ஏதாவது பொறுப்பு உண்டா?

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

"பாலியல் கல்வி - பெற்றோருக்கு" 15

"என் வீட்டு பச்சைக்கிளி, நான் வளர்த்த அன்னக்கிளி"

 

இந்தப் பதிவிற்குப் பொருத்தமாக என்ன நிகழ்வைச் சொல்லலாம் என எண்ணியபடியே இன்றைய வெள்ளிக்கிழமைப் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 

இந்த நாட்டில் வெள்ளிக்கிழமை சினிமாப் பிரியர்களுக்குக் கொண்டாட்டமான ஒரு நாள்! 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதுப்படங்கள் வெளியாகும். 

பத்திரிக்கைகளுக்கும் இதன் விமரிசனத்தை எழுத ஒரு 4, 5, பக்கங்களுக்குத் தீனி கிடைத்துவிடும்.

 

ஆம்! இங்கு படம் வந்த அன்றே அத்தனைக்கும் விமரிசனம் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வெளியாகிவிடும். 

பார்க்க விரும்பவர்களுக்கு வசதியாக! 

அப்படி என் கண்ணில் பட்ட படக்கதைதான் இப்போது நான் சொல்லப் போவது! 

 

படத்தின் பெயர் 'ஃப்லிக்கா'.[FLICKA].

கதையின் மையக் கருத்து சுருக்கமாகச் சில வரிகளில்!

 

" கேட்[Kate] என்னும் பருவத்தால் குழப்பமடைந்த [ஹரிஹரன் சொல்லாக்கப்படி, "ஹார்மோன்களின் தாக்கத்தால் சுருதி குலைந்த ஹார்மோனியம்"!!] ஒரு பருவப்பெண், பெற்றோர்கள் சொல்படி நடப்பதா, இல்லை தன் எண்ணக்கனவுகளின் படி நடப்பதா என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறார். 

தற்செயலாக ஒரு காட்டுக் குதிரை [Wild horse] பக்கத்துக் காடுகளில் இருந்து இவருக்குக் கிடைக்கிறது.

அதை தங்களது பண்ணைக்குக்[Ranch] கொண்டு வந்து, கண்டிப்புக்குப் பெயர் போன தன் தந்தையின் எதிப்புக்கிடையே ஒரு பழகிய குதிரையாக்க[Trained horse] முடிவு செய்கிறார். 

 

தந்தையோ ஒரு ஊர் பேர் தெரியாத, ஜாதிக்குதிரையில்லாத, காட்டுக் குதிரை ஒன்று தன் கொட்டடியில் உயர் சாதிக் குதிரைகளுக்கிடையே வளர்ந்து அவற்றோடு கலந்து விடுமே என அஞ்சி, தீர்மானமாக மறுக்கிறார்!!

மேலும், காட்டுக் குதிரைகளைப் பழக்குவதும் கடினமான வேலை. 

 

இதை விட நிகழ்கால நமது நிகழ்வுகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் கொடுக்க முடியாது!

 

ஆனால் கேட்டோ,[Kate] இந்தக் குதிரையிடம் மனதைப் பறிகொடுத்து விடுகிறார்!

[கேட்ட, அடிக்கடி பார்த்த கதை மாதிரி இல்லை?] 

 

படிப்பு சரியாக வராத கேட்[Kate]டுக்கு அப்பாவிற்குப் பிறகு தானே இந்தப் பண்ணையை பராமரிக்க வேண்டும் என்ற ஆசை.

'நல்ல படிப்பு படித்துப் பெரிய ஆளாகணும், இதையெல்லாம் விட்டு' என்ற வேறு கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது அண்ணனும் இதற்கு உடன்படுகிறார்............ 

இப்படிப் போகிறது கதை. 

குடும்பத்துடன் அனைவரும் சென்று காண வேன்டிய படம் என்று விமரிசகர் சிபாரிசு செய்கிறார்.

 

இதன் மையக் கருத்துதான் நமக்கு இங்கு வேண்டியது.

 

ஏழை, பணக்காரன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர் என்று எத்தனை எத்தனை வகைகளிலோ இந்த வயதில் ஒரு ஆர்வம் இவர்களுக்குள் பிறக்கும். 

 

சிறு வயது முதலே ஒரு புரிதலுடன் வளர்க்கப் பட்ட குழந்தைகளும், பெற்றோர்களும் இதைச் சற்று இயல்பாகக் கையாளுவார்கள்.

ஒன்று,.... இது போன்ற நிகழ்வுகள் நடக்கவே வாய்ப்பில்லை; பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தால், 

அல்லது, 

அதையும் மீறி இப்படி நடந்தாலும் இது அனேகமாக ஒப்புக் கொள்ளப் பட்டுவிடும். 

அதிக பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. 

 

நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது இப்படி இல்லாத வீடுகளைப் பற்றித்தான்!

 

இது பற்றி சில தகவல்களைப் போன பதிவில் பார்த்தோம். 

 

எவ்வளவோ கட்டுப்பாடு, கோபதாபம், கண்காணிப்பு, இவையெல்லாவற்றையும் மீறி, இவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது!

 

என்ன செய்ய வேண்டும் பெற்றோர்கள்? 

 

உடனே எரிந்து விழுந்து, கோப வசபட்டு, வாக்குவாதம் முற்றிச் சண்டையில் இறங்கி, அசிங்கப்பட்டுப் போவதே வழக்கமாக நம் காண்பது.

 

அதை விடுத்து, இப்படிச் செய்ய முற்பட்டால், சில நன்மைகள் விளையலாம்.

 

" நீ இது போன்று உன் உடலை மதிக்காமல், உணர்ச்சிக்கு அடிமைப் பட்டு, இப்படி ஒரு செயலில் இறங்கியது எங்களுக்கு மிகவும் வருத்தமா இருக்கு. உன் வயதுக்கோ, அல்லது இப்போதிருக்கும் உடல் வாகுக்கோ இது சரியென்று எனக்குப் படவில்லை. 

ஆனால், முடிவெடுக்கும் உரிமை உன்னுடையது மட்டுமே. 

இதனால் விளையப் போகும் எந்த ஒரு விளைவுக்கும் நீயே பொறுப்பேத்துக்கணும் என்பதையும் மனசுல வெச்சுக்க. 

அதைத் தெளிவாத் தெரிஞ்சிகிட்டு மேற்கொண்டு நீ எந்த முடிவை வேணும்னாலும் எடு. 

18 - 19 வயசெல்லாம் இதற்கான வயசே இல்லை என்பதை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கணும் நீ. 

இதுலேர்ந்து வெளியே வர்றதுக்கு என்ன வித உதவின்னாலும் நாங்க செய்யக் காத்துகிட்டு இருக்கோம். 

 

அதையும் மீறி, நீ இதுல தொடரப் போறேன்னா, கர்ப்பத்தடை சாதனங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்க நம்ம லேடி டாக்டரைப் பாக்கறதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன். 

 

ஆனா, அப்படி ஒரு முடிவு நீ எடுக்கப் போற பட்சத்துல, இங்கே வீட்டில உனக்கு சில சலுகைகள் கடுமையாக்கப் படும், குறைக்கப்படும் அப்படீங்கறதையும் நீ புரிஞ்சுக்கணும். 

டயத்துக்கு வீட்டுக்கு வர்றது, இன்னின்னாரோடதான் பழகணும், ஆம்பளைப் பசங்க வீட்டுக்கு வரக் கூடாது, அப்படீங்கற சில விஷயங்களை நீ ஏத்துக்கணும்."

 

என்பதைத் தீர்மானமாகச் சொல்லுதல் மிகவும் முக்கியம்.

 

இதையே ஒரு சில மாற்றங்களுடன் ஒரு ஆண் பிள்ளைக்கும் சொல்லணும்.

 

நம்ம ஊருல, ஆம்பளைன்னா எது வேணும்னாலும் செய்யலாம்னு ஒரு மனப்பான்மை இருக்கு. 

அது உங்க வீட்டுல வேண்டாமே! 

பெண்ணுக்கு என்ன நீதியோ, அதையே தயங்காமல் ஒரு ஆணுக்கும் செய்ய முற்படுங்கள்.

 

இதைப் பார்த்து ஆணுக்கு உங்களிடம் ஒரு பயம் வரும்.

அவன் தங்கைகளுக்கு ஒரு மரியாதை உங்கள் மேல் பிறக்கும்.

 

முறையற்ற உடலுறவினால், பலவித நோய்களும் வர வாய்ப்பிருக்கிறது என்பதை ஒரு மருத்துவர் மூலமாக இவர்களுக்குத் தெரியப் படுத்தல் மிக அவசியம்.

ஹெர்பிஸ்,[Herpes] கொனோரியா,[gonorrhea] பால் வினை நோய்,[Venereal Disease] HIV/AIDS போன்ற நோய்களுக்கு இதுவே[Sexual intercourse] அடிப்படை நுழைவாயில் [Gateway] என்பது, ஒரு விழிப்புணர்வை இவர்களிடம் ஏற்படுத்தும்.

 

இதைச் செய்வது உங்கள் கடமையும் கூட.

 

இத்துடன், சம்பந்தப்பட்ட பையன் அல்லது பெண்ணின் வீட்டாரோடு ஒரு தகவல் தொடர்பு, நேராகவோ அல்லது மிகவும் நம்பிக்கையான ஒரு நண்பர்/உறவினர் மூலமாகவோ ஏற்படுத்தி, இரு தரப்பையும் விழிப்புடன் இருக்கச் செய்வதும் ஒரு விதத்தில் நல்லதே!

 

ஆனால், இதில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன.

 

ஏதாவது ஒரு இடம் சற்று மோசமானவர்களாகவோ, அல்லது இந்த சமாதானத் தூதுவரே நாளை வில்லனாக மாறும் அபாயமோ இருக்கிறது!

 

நிலைமைக்கு, சூழ்நிலைக்குத் தக்கவாறு அனுசரித்து நடந்து கொள்ளவும்.

எல்லா இடங்களிலும் இது சரியாக வரும் என்று சொல்லிட முடியாது.

 

மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் இது.

 

பதிவுக்குப் பதிவு சொல்லி வருவது போல, 

ஒரு நண்பனாய், 

தோழியாய், 

அக்கறை உள்ள ஆசானாய், 

அன்புள்ளம் கொண்ட தாய் - தந்தையாய் 

இருக்க வேண்டியது உங்கள் தலையாய பொறுப்பு.... நாளைய உலகில் இவர்கள் தலை நிமிர்ந்து வாழ.

 

 

சரி, உடலுறவு கர்ப்பத்தில் கொண்டு வந்து விட்டது!

 

இதை எப்படி எதிர் கொள்ளுவது ?? 

 

தீபாவளி எல்லாம் நல்லபடி முடித்து பட்டாஸெல்லாம் வெடித்துவிட்டு வாருங்கள் !

 

இந்தப் பட்டாஸை அப்புறம் கொளுத்தலாம்!

 

[அப்படியே இன்னொரு முக்கியமான விஷயம்! 

இது போல அனைவரும் மகிழ்ச்சியாகக் கூடியிருக்கும் நேரம் கூட, வாய்ப்பிருந்தால், உங்கள் வயதுக்கு வந்த பெண்ணோடு தனித்துப் பேச ஒரு சந்தர்ப்பம் உள்ள நேரம்தான்! 

முடிந்தால் கொஞ்சம் பேசிப் பாருங்களேன், ப்ளீஸ்!]

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

"பாலியல் கல்வி - பெற்றோருக்கு" -- 16

"சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு இரு சிறகு முளைத்தது !"

 

சென்ற பதிவின் இறுதியில் ஒரு கேள்வி கேட்டு முடித்திருந்தேன்!

 

உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் ஆன ஒரு இளம் பெண்ணை, உங்கள் குழந்தையை எப்படி எதிர் கொள்வது என்று.

 

இது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் குறைவே என்றாலும், விவரமறியா பெண்களிடம் இது இன்னமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

இது பற்றி, சுவாரசியமாக சொல்ல வேண்டுமென்றால், பல கதைகள் இருக்கிறது, பதிவை நிரப்ப!

 

ஆனால், இது ஒரு சங்கடமான நிகழ்வு என்பதால், கிளு, கிளு கதைகளைத் தவிர்க்க விரும்புகிறேன், ஒரு சிலர் முகம் சுளித்தாலும்!!

 

நேரடியாக இதைப் பற்றிச் சொல்லி மேலே செல்லலாம்.

 

இன்னும் ஓரிரு பதிவுகள் மட்டுமே இருக்கின்றன!

 

பெண்கள் வாலிப வயதில், திருமணத்திற்கு முன் கர்ப்பமடைய காரணங்கள் பல உண்டு.

 

இதில் பாதிக்கு மேல், பெற்றோரின் கவனமின்மையால் நிகழ்கிறது.

 

பாலியல் பற்றி ஒரு உணர்வை, விழிப்புணர்வை தம் மக்களிடம் ஏற்படுத்தாமல் போவது.

 

அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து இவர்களை வளர்த்து விடுவது.

கண்டிக்க வேன்டிய நேரத்தில் கண்டிக்காமல், சொல்ல வேண்டியவற்றைச் சொல்லாமல் மெத்தனமாய், அறியாமையாய் இருந்து விடுவது.

 

கருத்தடை சாதனங்களைப் பற்றி பேச அச்சப்பட்டு, நம்பிக்கையின்றி,... எங்கே இது மேலும் தவறுகளுக்கு வழி வகுத்து விடுமோ, என்று மறைத்து விடுவது,

குடும்ப மான அவமானங்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருப்பது,

 

தான் ஒரு தவறான முன்னுதாரணமாய் இருப்பது,

 

[வீட்டிலேயே அனைவர் எதிரிலும் குடிப்பது, ஆபாச ஜோக்குகளை விகல்பமின்றிப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறி வைப்பது, தன் வாலிப கால விளையாட்டுகளை தம்பட்டம் அடித்துக் கொள்வது, எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஒரு கணவன் மனைவி சண்டையில், ஒருவரைப் பற்றி ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் எதிரிலேயே ஏசி சண்டை போடுவது, அல்லது தாயோ , தந்தையோ, அடுத்தவரைப் பற்றி குழந்தைகளிடம் சொல்லி அங்கலாய்ப்பது என பல இதில் அடங்கும்].

 

ஏற்கெனெவே சொல்லியது போல, இவ்வயதுப் பெண்களுக்கு ஒரு அசாதாரண துணிச்சல் வருவது நிஜம்.

 

அதன் ஆட்டத்தில், சற்று எல்லை மீறப்படுவதும் நிஜம்.

 

வரம்பு மீறி அடுத்த கட்டத்தை ஆபத்தின்றி அடைய முடியுமோ என்ற அசட்டுத் துணிச்சலில், கவனமின்றி தன்னைப் பறி கொடுத்து பின் விழிப்பது,

சேராத இடந்தனிலே சேர்ந்து கெட்டுப் போவது,

பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாவது,

கருத்தடை சாதனங்களை நம்பி, ஏமாந்து போவது.

 

இவையெல்லாம் இவர்களே தேடிக் கொண்டு நம்மை சோகத்தில் ஆழ்த்துபவை.

 

இப்படி மேலே கூறிய ஏதோ ஒன்றினால் கர்ப்பம் ஆன பின்பு நாம் செய்யக் கூடியது என்ன?

 

வழக்கமாக நாம் பார்ப்பது, அடி, உதை, திட்டு, கருக்கலைப்பு, அல்லது தற்கொலை இவையே!

 

இவற்றால் என்ன பயன்?

யாருக்கு லாபம்?

நேரடியாக இதை அணுக வேண்டிய முறை என்ன?

 

இது சம்பிரதாய ரீதியிலோ, சமூக ரீதியிலோ அனைவராலும் ஒப்புக் கொள்ள முடியாத சில எண்ணங்கள்.

 

அவரவர் நிலைமைக்கேற்ப ஏற்றுக்கொள்வதோ, ஒதுக்குவதோ உங்கள் உரிமை.

 

இதற்கான வழிமுறைகள் என்னென்ன?

 

1. கருக்கலைப்பு, [abortion], பொதுவாக நிகழ்வது.

 

காதும் காதும் வைத்த மாதிரி நடத்திட முடியும் என்பதால் அதிகமாக செய்யப்படுவது இதுவே.

உடற்கூறாக ஒரு சில தகாத விளைவுகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தக் கூடும்.

ஆனால், ஒரு தேர்ந்த மருத்துவரின் கையில் இது மிக எளிமையாக, சிரமமின்றி முடியும்.

மனோ ரீதியான, தார்மீக ரீதியான காரணங்கள் இதற்குத் தடையாகப் போகும் வாய்ப்பு இருக்கிறது.

 

ஆனால் குடும்ப மானம் என்ற ஒன்றைக் காட்டியோ அல்லது இது கற்பழிப்பு என்னும் அநாகரீகமான செயலின் மூலம் விளைந்தாலோ இதைச் செய்வதில் தவறில்லை.

 

2. இரண்டாவது, குழந்தை பெற்று தாமே வளர்ப்பது.[Parenting]

 

இதற்கு மிகுந்த மனத்திடமும், நம்பிக்கையும், அன்பும் வேண்டும்.

இது நியாயமான முடிவு பெரும்பாலான நிகழ்வுகளில் என்றாலும், பெண்ணின் வயது, சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் சம்பந்தப் பட்டவரின் முழு ஒப்புதல் இதற்குத் தேவை என்பதால் அதிகமாகப் பரிசீலனைக்கு உட்படாத ஒன்றாகவே இது போய் விடுகிறது.

எந்த ஒரு நிகழ்வுக்கும் தாம் பொறுப்பேற்க நினைப்பவர் செய்ய வேண்டியது இது தான் என்பது என் கருத்து.

 

ஆனால், இதுவும் கற்பழிப்பு மூலம் நிகழ்ந்திருந்தால் அல்லது ஒரு சில நோய்கள் வர வாய்ப்பிருந்தால் கருச்சிதைவே இதை விட நல்ல வழி.

 

3. இன்னும் சில நேரங்களில், குழந்தை பெற்று அதை ஒரு காப்பகத்தில் விடுவதும் [adoption] ஒரு வழியாக இருக்கிறது.

 

இது நம்மை உளவியல் ரீதியாக சமாதானம் செய்துகொள்ளும் ஒரு நிகழ்வு.

குழந்தையையும் சாகடிக்க வில்லை!

தானும் வளர்க்கவில்லை !

இதுவும் சிறந்த வழியே.

 

இதை எல்லாம் எடுத்துச் சொல்வதில்தான் உங்கள் பங்கு வருகிறது.

 

ஏற்கெனேவே, அவமானத்தாலும், குற்ற உணர்வாலும் குன்றியிருக்கும் அந்தப் பெண்ணைத் திட்ட முற்படாமல், இதைப் பற்றி விவரமாக, தெளிவாக, நிதானமாகப் பேச வேண்டும்.

 

அவர்களுக்கு உங்கள் கண்டிப்பு இப்போது தேவையில்லை.

அதற்காக இதை அப்படியே மன்னித்து ஒதுக்கிடவும் வேண்டாம்.

 

வீட்டில் சில கடுமையான கட்டுப்பாடுகள் வந்தே ஆக வேன்டும், இவருக்கும், மற்றவர்க்கும்.

 

முறையான பாலியல் அறிவுடன், இதுவரை சொல்லியபடி, ஆரம்ப முதலே வளர்த்து வந்தால் முக்கால் வாசி பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

 

இவர்களது எதிர்காலக் கனவுகளும், திறமையும் இந்த ஒரு நிகழ்வினால் பாதிக்காத வண்ணம் செயல் படுதல் முக்கியமான ஒன்று.

 

'சொல்லுதல் யார்க்கும் எளிதாம்' என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, இங்கே நான் சொன்னது ஒரு பொதுப் படையான கருத்தே அன்றி, இப்படித்தான் என வலியுறுத்தும் ஒன்றல்ல.

 

பதிவு நீண்டு விட்டதால்,....

 

அன்புடனும், அறிவுடனும், பொறுமையாக இதை அணுகி நல்ல முடிவு எடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

அடுத்து இதே நிலையில் இருக்கும் ஆண் பிள்ளையை எதிர் கொள்வது எப்படி என்பதையும், மணமுடித்த பிள்ளைகளின் வாழ்வில் உங்கள் பங்கு என்ன என்பதையும் பார்ப்போம்.

 

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 14

"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ?"

 

"பார்த்தீங்களா அவளை? அவ வர்றதும், டக்குன்னு மாடிக்கு போறதும், மணிக்கணக்கா செல் ஃபோன்ல பேசறதும், கண்ட கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதும், .... எனக்கு ஒண்ணும் சரியாப் படலீங்க! கொஞ்சம் கண்டிச்சு வையுங்க அவளை, ஆமாம்!"

 

"ஏண்டி எங்கிட்ட வந்து இத்தெல்லாம் சொல்றே? ஒம் பொண்ணுதானே அவ? நீ பேச வேன்டியதுதானே? அவளைத் தப்பு சொல்றதே ஒனக்கு வழக்கமாப் போச்சு!"

 

"எனக்கென்ன வந்ததுன்னு இருக்க முடியாதுங்க! நீங்க செல்லம் குடுத்துதான் அவ இப்பல்லாம் என்னை மதிக்கறதே இல்லை. ஒங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க! என் புத்தியை செருப்பாலதான் அடிசுக்கணும். எப்படியோ போங்க!"

 

"சரி, இப்ப என்ன ஆச்சுன்னு இந்தக் குதி குதிக்கறே நீ? அவ வரட்டும். நான் பேசறேன்."

 

"இதோ வந்தாச்சு. ரொம்பத் திட்டாதீங்க அவளை. பக்குவமா கேளுங்க!!"

 

"சாந்தி, இங்கே வாம்மா! அப்பா ஒங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்."

 

"என்னப்பா? சொல்லுங்க. எனக்கு நாளைக்கு ஒரு பேப்பர் சப்மிட்[Paper submit] பண்ணனும். நிறைய நோட்ஸ்[notes] எடுக்கணும். சீக்கிரமா சொல்லுங்க."

 

"அது யாரு அந்த ராஜேஷ்? அவனோட அடிக்கடி சுத்தறேன்னு சொல்றாங்களே ."

 

"என்னப்பா இது? அவன் என்னோட பெஸ்டு ஃப்ரெண்டு. [Best Friend]அவந்தான் இந்த ப்ராஜெக்டுல[project] எனக்கு ஹெல்ப்[help] பண்றான். ரொம்ப நல்லவன்பா அவன். இப்படி கேக்கறீங்களே? சொல்றவன் ஆயிரம் சொல்வாம்ப்பா. நீங்க எதையும் நம்ப வேணாம். வேணும்னா அவன் செல்ஃபோன் நம்பர்[cell phone number] தரேன். நீங்களே அவன் கூட பேசுங்க.".............

 

இது போன்ற காட்சிகள் பலவித மாறுதல்களுடன் அன்றாடம் பல வீடுகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

 

சில சமயம் புரிதல், சில சமயம் வீம்பு, கோபம், தாபம், சந்தேகம், ஆத்திரம், சண்டை, எதிர்த்துப் பேசுதல், என்று மாறுபட்டு இவை நிகழலாம்.

 

ஆனால் அடிப்படைக் கருத்து ஒன்றுதான்.

 

இதுவரை நாம் பார்த்து, நம் பேசக் கேட்டு, நாம் சொல்லி வளர்ந்த பெண்ணோ, பையனோ, இப்போது நம்மிடமிருந்து விலகி, நம்மை அந்நியமாகப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை நம்மிடம் ஏற்படுத்தி, நம் வாழ்க்கையே திசை திரும்பி விட்டது போன்ற ஒரு தோற்றம், பயம் நமக்குள் நிகழ்கிறது .

 

இது எதனால்?

 

நம் பார்வை மாறியதா?

இல்லை அவர்கள் மாறி விட்டார்களா?

 

இரண்டும் இல்லை.

 

அவர்கள் வளர்ந்ததை, வளரத் தொடங்கி விட்டதை, நம்மால் ஒப்புக் கொள்ள முடிய வில்லை என்பதே நிஜம்.

 

பாலியல் ரீதியாக மட்டும் இப்போது பார்ப்போம்.

 

வெட்கம், நாணம், திமிர், சுதந்திரப் போக்கு இவையெல்லாம் ஏற்படுகின்ற இக்காலகட்டத்தில், அவர்கள் ஒரு வித துணிந்து செயல் படும்[experimentation] நிலையில் இருக்கிறார்கள்.

 

இதுவரையிலும் அப்படித்தான் இருந்தோம் என்றாலும், திடீரென ஒரு அதிகப்படியான காக்கும் உணர்வு[Protective nature] நமக்குள் வருகிறது.

 

அவர்களுடன் நேரடியாக, நேர்மையாக, அமைதியாக, அவர் உணர்வு புரிந்து நடக்க வேண்டிய இந்த முக்கியமான சமயத்தில், நாம் 

பொறுமை இழப்பதும், 

ஆத்திரப் படுவதும், 

தனித்து இயங்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதும், 

எது பேசணுமோ அதை விட்டு மற்ற விஷயங்களைப் போட்டுக் குழப்பி பிரச்சினையை மோசமாக்குவதும், 

அவர்களைச் சரியாக நடத்தாதுமான நிகழ்வுகள்தான் நாம் செய்கிறோம்.

 

உதாரணத்துக்கு இந்த உடலுறவு விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

 

நம் பெண் கெட்டுப் போய்விடக் கூடாதே, நம் பையன் தப்பா நடக்கக் கூடாதே என்னும் ஆதங்கத்தில், நாம் எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கிறோம்?

 

அவையெல்லாம் தவறு என்று சொல்ல வரவில்லை நான்.

 

உடலுறவு என்றால் என்ன, 

எப்போது அது நிகழ வேண்டும், 

பருவம் மாறி நிகழ்வதால் ஏற்படக் கூடிய மாற்று விளைவுகள் என்னென்ன, ஏன் அவசரப் படக் கூடாது, 

அது செய்யாமலேயே அன்பை வெளிக்காட்டுவது எப்படி 

என்பதை அவர்கள் உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுவது நல்லதா அல்லது வேறு யார் மூலமாவதா?

 

இது பற்றிப் பேசுவது சற்று சங்கடமான விஷ்யம்தான் என்றாலும், நீங்கள் பேசுவதுதான் நல்லது.

 

இதை நன்றாகப் புரிந்து கொண்ட வீடுகளில் பிரச்சினைகள் அதிகம் வராது.

 

ஒரு புரிதல் நிகழ வேண்டும் இருவருக்குள்ளும்.

 

"இங்க பாருப்பா, ஒருத்தரோட அன்பா இருக்கறதுல தப்பே இல்லை. 

இப்ப செய்யலைன்னா வேற எப்போ செய்ய முடியும்?

ஆனா, அந்த அன்பை வெளிக்காட்டறதுக்கு, உடலுறவுதான் வழி, அப்போதான் அடுத்தவருக்கு நம்ம மேல ஆசைன்னு தப்புக் கணக்கு போட்டுறக் கூடாது. 

இது அதுக்கான வயசு இல்லை. 

உடலுறவு மூலமா, குழந்தை பிறக்கலாம். 

இல்லை நாங்க தடுப்பு சாதனங்களை உபயோகப் படுத்திப்போம்னு சொன்னா, அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும் நீ. 

இதுதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணியாச்சுன்னா, அதை சமாளிக்க வேண்டிய வழி வசதிகள் இருக்கான்னு தீவிரமா யோசிக்கணும்.

நம்ம காலுல நிக்கக் கூடிய சக்தி நமக்கு இருக்கான்னு முதல்ல தீர்மானம் பண்னிக்கணும். 

அது எல்லாத்தையும் விட மிக முக்கியமானது, நீ ஒரு பெரிய இழப்பை இந்த சுகத்துக்காக சம்பாரிச்சுக்கறேங்கறதைப் புரிஞ்சுக்கனும். 

அன்பை வெளிக்காட்டணும்னா, 

நெருங்கிப் பேசறது, 

ரெண்டு பேரும் சேர்ந்து கை கோத்தபடி நடந்துட்டு வர்றது,

பாட்டு, டான்ஸுன்னு போறது, 

ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சுக்கறது, 

இது போல இன்னும் எத்தனையோ இருக்கு. 

இது மூலமா நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும். 

அப்புறமா, இருக்கவே இருக்கு, கல்யாணம். 

அதுக்கப்புறம் நீங்க என்ன செஞ்சாலும் யார் கேக்கப் போறாங்க? "

 

இது போல வெளிப்படையாகப் பேசினால், அடுத்த முறை அவனோ அல்லது அவளோ மீண்டும் இதற்கு [sexual intercourse] நெருக்கும் போது, தானாக உங்களிடம் ஆலோசனைக்கு வருவார்கள். 

 

இது நிகழ்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

 

அதையும் மீறி, உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார், உங்கள் மகன் அல்லது மகள் எனத் தெரிய வருகிறது.

 

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

மற்ற கட்டுரைகள் ...