PJ_11_2007.jpg

"நீதிபதிகளின் கைகளில் உள்ள ""நீதிமன்ற அவமதிப்பு'' என்ற குண்டாந்தடி, உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகளை அரசாங்கத்தாலும் கூடக் கேள்வி கேட்க முடியாத, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட, சட்டத்திற்கும் மேலான சர்வாதிகாரிகளாக மாற்றிவிட்டது. இந்த நீதித்துறை சர்வாதிகாரத்திற்கு, தில்லியில் இருந்து வெளியாகும் ""மிட் டே'' (Mid day) என்ற நாளிதழின் ஊழியர்கள் சமீபத்தில் பலியிடப்பட்டனர். தில்லி உயர்நீதி மன்றத்தால் ""மிட் டே'' தண்டிக்கப்பட்டதற்குக் காரணம், அப்பத்திரிக்கை ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி யோகேஷ் குமார் சபர்வால் (ஒய்.கே.சபர்வால்) பற்றிய சில உண்மைகளைத் துணிந்து அம்பலப்படுத்தியதுதான்.


தில்லி நகரின் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்த இலட்சக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்களை இழுத்து மூடுமாறு தில்லி மாநில அரசுக்கு கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம்தான் இத்தீர்ப்பை அளித்தது. பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தக் கடைகள், ஒரேயொரு உத்தரவினால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டு, இழுத்து மூடப்பட்டன.


சிறு வியாபாரத்தில் நுழையும் சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும்; அடுக்குமாடி வணிக வளாகங்களைக் கட்டிவரும் ரியல்எஸ்டேட் அதிபர்களுக்கும் சாதகமாக எழுதப்பட்டதுதான் இந்தத் தீர்ப்பு என்று அப்பொழுது விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனம் முற்றிலும் உண்மை என இப்பொழுது நிரூபணமாகியிருக்கிறது. குறிப்பாக உச்சநீதி மன்ற, தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒய்.கே.சபர்வால், ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தனது பிள்ளைகளின் வியாபார வளர்ச்சிக்காகவே, இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. தந்தை மகனுக்கு ஆற்றிய இந்த "உதவியை'த் தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியதற்காகவே ""மிட் டே'' பத்திரிகை, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தால் தண்டிக்கப்பட்டுள்ளது.


···


· தில்லியின் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்த சிறு வர்த்தக நிறுவனங்களை மூடுவது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தபொழுது, அவ்வழக்கைத் தானே நடத்துவதாகக் கோரிப் பெற்றார், நீதிபதி ஒய்.கே. சபர்வால். நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரணைக்காகக் கோரிப் பெறும் உரிமை உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தவிர, பிற நீதிபதிகளுக்குக் கிடையாது. எனினும், அப்பொழுது உச்சநீதி மன்ற நீதிபதியாக மட்டுமே இருந்த ஒய்.கே. சபர்வால், தனது அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டதை உச்சநீதி மன்றமும் அனுமதித்திருக்கிறது.


· ஒய்.கே. சபர்வால் அவ்வழக்கை ஏற்றுக் கொண்ட அதே தருணத்தில், அவரின் பிள்ளைகள் சேதன், நிதின் என்ற இருவரும், ""பிஸினஸ் பார்க் டவுன் பிளானர்ஸ்'' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டனர்.


· சேதனும், நிதினும் இணைந்து நடத்தி வந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் அலுவலகங்கள் நீதிபதி ஒய்.கே.சபர்வாலுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க வீட்டின் முகவரியில் இருந்தே இயங்கி வந்தன. இது, சட்டவிரோதமானது, முறைகேடானது எனத் தெரிந்திருந்தும், நீதிபதி ஒய்.கே. சபர்வால் இதனை அனுமதித்தார். அவரின் பிள்ளைகள் பிஸினஸ் பார்க் டவுன் பிளானர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகுதான், வேறு வழியின்றித் தங்கள் நிறுவனங்களின் அலுவலகங்களை வேறு முகவரிக்கு மாற்றிக் கொண்டனர்.


· தெற்கு தில்லியில் உள்ள சாகேத் பகுதியில் இயங்கிவந்த ""சட்டவிரோத'' வணிக வளாகங்களை மூடச் சொல்லி உச்சநீதி மன்றம் உத்தரவு போட்ட அதே வேளையில், ஒய்.கே. சபர்வால் பிள்ளைகளின் வியாபாரக் கூட்டாளியான ""ஹர்பவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்'' நிறுவனத்தின் அதிபர் புருஷோத்தம் பகேரியா, சாகேத்ஐ ஒட்டிய பகுதியில், ""ஸ்கொயர் 1 மால்'' என்ற பெயரில் பிரம்மாண்டமான வணிக வளாகத்தைக் கட்டப் போவதாக அறிவித்தார். நீதிபதி ஒய்.கே.சபர்வால் பங்கு பெற்ற அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், சாகேத் பகுதியில் இருந்து துரத்தப்பட்ட ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள், பகேரியாவிடம் போய் கடை ஒதுக்கித் தரும்படி கேட்கும்படியான சூழல் உருவானது.


· தில்லிக்கு அருகில் உள்ள உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா பகுதியில், ஆலைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த மனைகள், சபர்வாலின் பிள்ளைகளுக்கு சந்தை மதிப்பைவிடக் குறைவாக, அப்போதைய உ.பி. முதல்வர் முலயம்சிங் யாதவ் அரசால் விற்கப்பட்டன. இதற்குக் கைமாறாக, முலயம்சிங் யாதவின் கைத்தடி அமர்சிங்கின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த ஒய்.கே. சபர்வால், ஒட்டுக் கேட்கப்பட்ட பேச்சு விவரங்களை வெளியிடுவதற்குத் தடை விதித்தார்.


· நீதிபதி ஒய்.கே. சபர்வாலின் பிள்ளைகள், மகாராணி பாக் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை 15.46 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கினர். இவ்வளவு பெரிய தொகையை, சபர்வாலின் பிள்ளைகள் எப்படி ஈட்டினர் என்பது மர்மமாக உள்ளது.


· சேதனும் நிதினும் தாங்கள் நடத்திவரும் ""பவன் இம்பெக்ஸ்'' என்ற நிறுவனத்திற்கு, பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியிடமிருந்து 28 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இக்கடனைப் பெறுவதற்கு ஈடாகக் காட்டப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும் போலியானவை.


இவை அனைத்தும் ""மிட் டே'' நாளிதழ், நீதிபதி ஒய்.கே.சபர்வால் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள். இக்குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களையும் வீட்டுப் பத்திரம், பங்குதாரர் பற்றிய விபரங்கள், வங்கி ஆவணங்கள், வருமான வரி தாக்கீதுகள் உள்ளிட்டவை அந்நாளிதழ் வெளியிட்டுள்ளது ஓய்வு பெற்ற நீதிபதிகள், புகழ் பெற்ற வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ""நீதித்துறையின் பொறுப்புணர்வுக்கான கமிட்டி'' என்ற சமூக அமைப்பு, இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து அவற்றில் ஆதாரம் இருப்பதாக உறுதிப்படுத்தியது. நீதிபதி ஒய்.கே.சபர்வால் இக்குற்றச் சாட்டுக்களை மறுத்து, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.


குற்றவாளிக் கூண்டில் நிற்பவரோ இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி. சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் சாதாரணமானவையும் அல்ல; ஆதாரமற்றவையும் அல்ல. இப்படிப்பட்ட நிலையில், நீதியை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள நீதிமன்றங்கள், குற்றச்சாட்டுகள் பற்றி பாரபட்சமற்ற விசாரணையை நடத்த உத்தரவிட்டிருந்தால், அது நியாயமானதாக இருந்திருக்கும். அதற்கு மாறாக, தில்லி உயர்நீதி மன்றமோ, ""மிட் டே'' நாளிதழ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தது.


""மிட் டே'' நாளிதழ் இவ்வழக்கு விசாரணையின் போது, ""ஓய்வு பெற்றுவிட்ட நீதிபதிக்கு எதிராகவே குற்றம் சுமத்தியிருப்பதாகவும்; அவை அனைத்தும் உண்மையானவை'' என்றும் கூறி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றது. ஆனால், தில்லி உயர்நீதி மன்றமோ, ""என்னத்த உண்மை?'' என அதிகாரத் திமிரோடு எதிர் கேள்வி கேட்டு, அந்த உண்மைகளுக்குள் நுழைய மறுத்துவிட்டது.


""தில்லியின் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கிவந்த கடைகளை மூடுவது தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம்தான் விசாரித்தது. நீதிபதி ஒய்.கே. சபர்வால் மீது குற்றஞ்சுமத்துவது மூலம், மற்ற இரு நீதிபதிகள் மீதும் களங்கம் கற்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றம், தனது நீதிபதிகளுள் ஒருவரின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக நடந்து கொண்டிருப்பதாக மிட் டே பத்திரிக்கை சித்தரிக்கிறது'' எனத் தானே ஒரு குற்றச்சாட்டை அந்நாளிதழின் மீது சுமத்தி, அதனை உச்சநீதி மன்றத்தின் மாண்பை அவமதிப்பதாக ஊதிப் பெருக்கியது. இந்தப் புனையப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்நாளிதழின் வெளியீட்டாளர், ஆசிரியர், கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர், கேலிச் சித்திர ஓவியர் ஆகிய நால்வருக்கும் நான்கு மாத சிறை தண்டனை விதித்தது.


இயற்கை நீதிக்கும், நியாயத்திற்கும் முரணாக அளிக்கப்பட்ட இத்தீர்ப்பை எதிர்த்து, வழக்குரைஞர்களும், பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் இறங்கவே, உச்சநீதி மன்றம் கொடுக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் அடிப்படையில், தில்லி உயர்நீதி மன்றம் தண்டிக்கப்பட்ட நால்வருக்கும் பிணை வழங்கியிருக்கிறது.


உச்சநீதி மன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அதனை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால், ""மிட் டே'' வழக்கிலோ, தில்லி உயர்நீதி மன்றம் தனது அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டுள்ளது. மேலும், நீதிபதி சபர்வால் பங்கு பெற்ற அமர்வு மன்றம் அளித்த தீர்ப்பும் சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்தும்; தில்லி கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்ட தீர்ப்பைத் திரும்பப் பெற்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும்; இதற்கு மாறாக, உச்சநீதி மன்றத் தீர்ப்போ, புண்ணுக்குப் புணுகு தடவி, தன்னை நியாயவானைப் போலக் காட்டிக் கொண்டிருக்கிறது.


···


"சுதந்திர' இந்தியா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து சுவீகரித்துக் கொண்ட அடக்குமுறைச் சட்டங்களில் நீதிமன்ற அவமதிப்புச் சட்டமும் ஒன்று. ஒரு நீதிபதி ஊழல், பாலியல் பலாத்காரம் போன்ற கிரிமினல் குற்றங்களைச் செய்ததற்கான அசைக்க முடியாத ஆதாரம் இருந்தால் கூட, நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளாது; குற்றம் சுமத்தியவரைத் தண்டிக்கும் வண்ணம்தான் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.


மைய அரசு, கடந்த ஆண்டில் இந்த நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் திருத்தமொன்றைக் கொண்டு வந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வோர், நீதிபதிக்கு எதிராகத் தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்பதைத் தக்க ஆதாரங்களோடு எடுத்துக் கூறி, தண்டனையில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழியினை இத்திருத்தம் கொண்டு வந்தது. எனினும், ""மிட் டே'' நாளிதழ் வழக்கில், ""என்னத்த உண்மை!'' என்ற கேள்வியின் மூலம், அத்திருத்தத்தை மலம் துடைக்கும் காகிதமாக மாற்றி விட்டது, தில்லி உயர்நீதி மன்றம்.


மேல்முறையீட்டிற்காக உயர்நீதி மன்றத்திற்கோ, உச்சநீதி மன்றத்திற்கோ வரும் வழக்குகளில் பெரும்பாலானவை, ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மன்றங்களால்தான் விசாரிக்கப்படுகின்றன. அமர்வு மன்றங்களில் பங்கு பெறும் ஒரு நீதிபதி மீது குற்றம் சுமத்தினாலே, அது மற்ற நீதிபதிகள் மீதும் சுமத்தப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும் என்கிறது தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பு. இதன்படி பார்த்தால், எல்லா அமர்வு மன்றங்களுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக ஆக்கப்பட்டு விடுகின்றன.


""நீதிபதிகளுள் 20 சதவீதம் பேர் ஊழல் கறை படிந்தவர்கள்'' என்று முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி பரூச்சா கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, ""அமர்வு மன்றங்களில் பங்கு கொள்ளும் நீதிபதிகளில், யார் அந்த 20 சதவீதத்தைச் சேர்ந்தவர்கள்? யார் ஊழல் கறை படியாத 80 சதவீதத்தைச் சேர்ந்தவர்கள்?'' என்ற கேள்வியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.


ஜனநாயகத்தின் மற்ற தூண்கள் அதிகார வர்க்கம், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகைகள் மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என அடிக்கடி சாமியாடும் நீதிபதிகள், தங்களுக்கு இந்த அளவுகோல் பொருந்தாது என்கிறார்கள்.


""உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் மற்றவர்கள் தலையிடக் கூடாது; அதை நீதிபதிகள்தான் முடிவு செய்வார்கள்''


""உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகள் தங்களின் சொத்துக் கணக்கை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியமில்லை. உச்சநீதி மன்ற நீதிபதியிடம் காட்டினால் போதும்.''


""வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் செயல்பாடு பற்றி விமர்சிக்கக் கூடாது; நீதிபதிகள் மீது ஊழல் புகார் சொல்லக் கூடாது; இதை மீறினால், ஓராண்டு காலத்திற்குத் தொழில் செய்யத் தடை விதிப்போம்'' என்றெல்லாம் பல்வேறு ""ஃபத்வா''க்களைப் போட்டுக் கொண்டு, தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்.
தங்களது பிறப்புச் சான்றிதழில் ஃபோர்ஜரி செய்து அம்பலமான உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி ஆனந்த்; மற்றும் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சிவப்பா;


டான்சி வழக்கில் இருந்து ஜெயாவை விடுதலை செய்ததற்குப் பரிசாக சிங்கப்பூருக்கு உல்லாச சுற்றுலா சென்று வந்த நீதிபதி தங்கராசு; கர்நாடகாவில் பொதுமக்கள் முன்னாலேயே குடித்துவிட்டு, பெண்களுடன் காமக்களியாட்டம் போட்ட கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதிகள் என்.எஸ்.வீரபத்ரையா, வீ.கோபால கவுடா, சந்திரசேகரய்யா போன்ற கிரிமினல் நீதிபதிகள் கம்பி எண்ணாமல் போனதற்குக் காரணமே, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உள்ளிட்ட இந்த ஃபத்வாக்கள்தான்!


···


நீதிபதிகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், கிரிமினல் குற்றங்களைவிட அவர்கள் ""தீர்ப்புகள்'' என்ற பெயரில் பொதுமக்களின் மீது சட்டபூர்வ பாசிசத்தைத் திணிப்பதும்; பன்னாட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு ஆதரவாக நடந்து கொள்வதும்; இந்துமதவெறி மேல்சாதி வெறியைக் கக்குவதும் தான் மிகவும் அபாயகரமானதாக மாறி வருகிறது.


சிறுவணிக நிறுவனங்களை இழுத்து மூடச் சொன்ன சபர்வாலின் தீர்ப்புக்குப் பின்னே புத்திரபாசம் இருந்தது என்றால், ஊழல் கறைபடியாத மற்ற இரண்டு நீதிபதிகள், சபர்வாலின் தீர்ப்புக்கு ஒத்துப் பாடியதற்கு என்ன பாசம் காரணமாக இருந்தது?


உச்சநீதி மன்றத்தைச் சேர்ந்த அரிஜித் பயாஸத், எஸ்.ஹெச்.கபாடியா என்ற இரு நீதிபதிகள் மற்றொரு வழக்கில் இந்தப் பாசத்தைப் பச்சையாகவே உடைத்துச் சொல்லியுள்ளனர். தில்லியின் வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட பல அடுக்கு வணிக வளாகத்தை இடிக்கச் சொல்லி போடப்பட்ட வழக்கில், இந்த இரண்டு நீதிபதிகளும், ""கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்பது உண்மையானாலும், கோடிக்கணக்கான ரூபாய் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது; எனவே, கட்டிடத்தை இடித்துத் தள்ளுவதை கிளிப் பிள்ளை போலத் தீர்வாகச் சொல்ல முடியாது;''


""சிறு நிறுவனங்கள், சாதாரண தனி நபர்கள் வேண்டுமானால், உரிமம் பெறுவதற்கு சட்டத்தை மீறுவார்கள். ஆனால், வசந்த் குஞ்ச் பகுதியில் காலி மனை வாங்கியிருக்கும் நிறுவனங்களோ, பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள்; அவை, உரிமம் பெறுவதற்காகச் சட்டவிதிகளை மீறியிருப்பார்களோ, குறுக்கு வழியில் போயிருப்பார்களோ என்ற கேள்விக்கே இடமில்லை'' என ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர்.


தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தபொழுது, ""வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் இல்லை'' எனத் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்த வழக்கில், ""அவர்கள் வேலை செய்யாத நாட்களுக்கும் சம்பளம் தர வேண்டும்'' என மேல்சாதிப் பாசத்தோடு உத்தரவிட்டது.


கேரளாவின் பிளாச்சிமடா பகுதியில் இயங்கி வந்த கோக் நிறுவனம், அப்பகுதியில் நிலத்தடி நீரை எடுக்கத் தடை விதிக்கப்பட்ட பொழுது, ""கோக்கிற்குத் தடை விதிக்கப்பட்டால், மற்ற குடிமக்களுக்கும் தடை விதிக்க வேண்டியிருக்கும்'' எனத் தீர்ப்பளித்தது கேரள உயர்நீதி மன்றம்.


""ராமன் அரசியல் சாசனத்தின் அங்கம்'', ""இந்துமதம் இந்தியாவின் வாழ்க்கை முறை'' எனத் தீர்ப்பெழுதிய நீதிமன்றங்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் என்ன சம்பந்தம் இருந்துவிட முடியும்? பொது சிவில் சட்டம் தொடங்கி முசுலீம் தீவிரவாதம் வரை இவைபற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இன் கருத்து எதுவோ, அதுவே மாண்புமிகு நீதிபதிகளின் தீர்ப்பாகவும் இருக்கிறது.


ஊழலுக்குக் கூடத் தண்டிக்க முடியாத நீதிபதிகளை, இம்மக்கள் விரோதத் தீர்ப்புகளுக்காகத் தண்டித்து விடவா முடியும்? நாட்டை மறுகாலனியாக்குவதிலும், சட்டபூர்வமான பாசிசத்தை நாட்டின் மீது திணிப்பதிலும் நாடாளுமன்றமும், நீதிமன்றங்களும் ஜாடிக்கேத்த மூடியாகத்தான் செயல்படுகின்றன.


இந்திய அரசியல் சாசனத்துக்கே விரோதமான தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றி நடைமுறைப்படுத்திய பொழுது, அச்சட்டங்களைச் சட்டபூர்வமானவை என உச்சநீதி மன்றம் அங்கீகரித்தது. ""தனியார்மயம் தாராளமயம் அரசின் கொள்கை; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என நழுவிக் கொள்கிறார்கள் நீதிபதிகள். அரசியல் அரங்கில் தீர்க்கப்பட வேண்டிய ராமர் கோவில் பிரச்சினையை ஓட்டுக் கட்சிகள் நீதிமன்றத்திற்குத் தள்ளிவிட்டதை ஏற்றுக் கொண்டு, அதில் கட்டைப் பஞ்சாயத்து செய்து வருகிறது, நீதிமன்றம். இதற்கு கைமாறாகத்தான், நாடாளுமன்றம் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை ரத்து செய்ய மறுக்கிறது.


போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட குட்டி முதலாளித்துவ சக்திகள் அனைவரும் 197080 களில் உச்சநீதி மன்றம் பல முற்போக்கான தீர்ப்புகளைச் சொன்னதைப் போன்ற காலம் திரும்பி வராதா என ஏங்குகிறார்கள். நீதிபதிகளின் நியமனம், அவர்களின் நடத்தை ஆகியவற்றைக் கண்காணிக்கத் தேசிய கமிசன் ஒன்றை உருவாக்கி விட்டால், நீதிபதிகள்நீதிமன்றங்களின் மக்கள் விரோதத் தன்மை மறைந்துவிடும் என ஆருடம் சொல்கிறார்கள்.
நீதிமன்றங்கள் 1970களில் "முற்போக்கான' தீர்ப்புகளை வெளியிட்ட சமயத்தில்தான், பாசிச இந்திரா கொண்டுவந்த அவசர நிலையை அங்கீகரித்துத் தீர்ப்புச் சொன்னது உச்சநீதி மன்றம். ஆந்திராவிலும், மேற்கு வங்கத்திலும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் போலி மோதல்களிலும், போலீசு நிலையக் கொட்டடிகளிலும் கொல்லப்பட்டதை மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள் நீதிபதிகள். அந்த "முற்போக்கான' தீர்ப்புகள், மக்களின் போராட்டங்களை நிறுவனமயமாக்கும் ஆளும் வர்க்கத்தின் தந்திரம் தவிர வேறில்லை.


ஜெயாவுக்கு எதிரான டான்சி நில பேர ஊழல் வழக்கிலும்; ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்.பி.க்களுக்கு நரசிம்ம ராவ் இலஞ்சம் கொடுத்த வழக்கிலும், ஊழலுக்கும், இலஞ்சத்திற்கும் புது கொள்கை விளக்கம் கொடுத்து, அக்கிரிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியவர்கள்தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள். முதலாளித்துவ வர்க்க வெறி, மேல்சாதித் திமிர் இரண்டும் கலந்து உருவான சட்டபூர்வ ஆதிக்க சக்திகள்தான் நீதிபதிகள். இப்படிபட்டவர்களின் நடத்தையைக் கண்காணிக்க தேசிய கமிசன் அமைக்கப்படுரமானால், அக்கமிசன் நீதிபதிகளின் முன் சோளக்காட்டுப் பொம்மையாகத்தான் இருக்குமே ஒழிய, சிம்ம சொப்பனமாக இருக்காது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை மட்டுமல்ல, மக்கள் விரோத நீதிமன்றங்களையே கலைக்கக் கோரி மக்களை அணிதிரட்டுவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்!


· செல்வம்