PJ_11_2007.jpg

அடுத்து வரும் தேர்தல்களில் ""இந்துக்களின் ஆசியும் ஆதரவும் பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்'' என்று இந்துவெறி பா.ஜ.க.வுக்குப் போட்டியாக இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் விளம்பரம் செய்து ஓட்டுப் பொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொலைகார காஞ்சி மட சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்கு ""அரசு விருந்தினர்'' என்ற சிறப்புத் தகுதியளித்து கடந்த டிசம்பரில் வரவேற்று உபசரித்து, பார்ப்பன கும்பலுக்கு விசுவாசமாகச் செயல்பட்ட கேரள "மார்க்சிஸ்டு' முதல்வர் அச்சுதானந்தன், இப்போது பார்ப்பன முறைப்படி விஜயதசமி சடங்குகளைச் செய்து அசத்தியுள்ளார்.

 

நவராத்திரியும் விஜயதசமியும் பார்ப்பனர்களாலும் பார்ப்பனமயமாகிவிட்ட "மேல்' சாதியினராலும் கொண்டாடப்படும் பண்டிகை. விஜயதசமி எனும் "நல்ல' நாளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலைத் தொடங்கும் சடங்கு பார்ப்பன "மேல்' சாதியினரால் நீண்டகாலமாகப் பின்பற்றப்படுகிறது. குடும்பத்தில் மூத்தவர்கள் அல்லது ஆசிரியர்களைக் குருவாக வைத்து அவர்களது ஆசியுடன் குழந்தைக்குக் கல்வி கற்பிக்கும் சடங்கை அவர்கள் நடத்துவர்.

 

கேரள முதல்வர் "தோழர்' அச்சுதானந்தனும் தனது தனிச்செயலரின் மகளான சநிக்தாவுக்கு, விஜயதசமி நாளன்று தங்க மோதிரத்தைத் தேனில் தொட்டு, குழந்தையின் நாக்கில் ""ஹரி ஸ்ரீ கணபதியாயே நமஹ'' என எழுதி, ""குரு ஸ்தானத்தில்'' இருந்து அக்குழந்தைக்கு கல்வியைத் தொடங்கினார். பின்னர், அகன்ற தட்டில் நிரப்பப்பட்டிருந்த மஞ்சள் கலந்த அரிசியில் அக்குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்து ""ஹரி ஸ்ரீ'' என்று அட்சரம் எழுதி ""வித்யாரம்பம்'' எனும் இச்சடங்கை பார்ப்பன முறைப்படி நடத்தியுள்ளார்.

 

"மார்க்சிஸ்டு' கட்சியின் மூத்த தலைவரும் மத்திய கமிட்டி உறுப்பினருமான கேரள முதல்வர் அச்சுதானந்தனே இப்படிச் செய்யும்போது, மற்ற "மார்க்சிஸ்டு' அமைச்சர்கள் சும்மாயிருப்பார்களா? மாநில கல்வியமைச்சரும் மாநிலக் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.பேபி, இத்தகைய ""வித்யாரம்பம்'' விழாக்களில் பங்கேற்று, ""குரு ஸ்தானத்தில்'' இருந்து பல குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் சடங்கை நடத்தியுள்ளார். நிதியமைச்சரான தாமஸ்ஐசக், தனது மதச்சம்பிரதாயப்படி, குழந்தைகளின் நாக்கில் தங்கமோதிரத்தை தேனில் தொட்டு சிலுவைக் குறியை வரைந்துள்ளார். உள்ளூர் "மார்க்சிஸ்டு' பிரமுகர்களோ, தமது பங்கிற்கு கோயில்களில் இச்சடங்கை கோலாகல விழாவாக நடத்தியுள்ளனர்.

 

""நான் முதலில் பார்ப்பான்; அப்புறம் இந்து; அதன்பிறகுதான் கம்யூனிஸ்ட்'' என்று பகிரங்கமாக அறிவித்து "புரட்சி' செய்தார், மே.வங்க "மார்க்சிஸ்டு' அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி. கேரள "மார்க்சிஸ்டு'களோ பார்ப்பன சேவையில் அவரையே விஞ்சுகின்றனர். இப்படி பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு சேவை செய்வதைத்தான், மத நல்லிணக்கம் என்று இப்போலி கம்யூனிஸ்டுகள் சித்தரிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இந்துவெறி பாசிச பயங்கரவாதத்தை சி.பி.எம். கட்சி வீழ்த்திவிடும் என்று யாராவது சொன்னால், ஆர்.எஸ்.எஸ். காரன்கூட வாயால் சிரிக்க மாட்டான்.