PJ_11_2007.jpg

இந்து மதவெறி அமைப்புகள், இசுலாமியத் தீவிரவாதிகளைப் போல குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற பொதுக் கருத்து அடிப்படையிலேயே ஆதாரமற்றது.

 

1990களில் இசுலாமியத் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் பல குண்டுவெடிப்பு வழக்குகளில் அடுத்தடுத்து தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

 

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மரணதண்டனையும், மேலும் பலருக்கு ஆயுள் தண்டனை உட்பட பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.


1993 சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


1998 கோவை தொடர் குண்டுவெடிப்புகள் வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, பெரும்பாலானவர்களுக்கு மூன்று முதல் ஒன்பது ஆண்டுகள் வரை தண்டனைகள் விதிக்கப்பட் டுள்ளன. மேலும் சிலர் மீது சதி மற்றும் கொலைக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதா கக் கூறி நூறாண்டுகளுக்கும் அதிகமான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளன.


இந்த வழக்குகள் எல்லாம் அனேகமாக சிறப்பு நீதிமன்றங்களில் நடந்து வந்தன. இவ்வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவிக்கப்பட்டனர். தண்டிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனையின்றி, பலருக்கும் ""குறைந்த அளவு தண்டனைகள்தாம்'' கிடைத்திருக்கின்றன. அரசியல் செல்வாக்குள்ள மும்பை நடிகர் சஞ்சய் தத்துக்குக் கூட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


இந்தக் காரணங்களை எடுத்துக்காட்டி இந்து மதவெறிக்கு நியாயங்கற்பிப்பவர்களும், அனுதாபம் காட்டுபவர்களும், பயங்கரவாதம் உட்பட வன்முறை வழியை எதிர்க்கும் பத்தாம்பசலிகளும் ""தடா'' சிறப்பு நீதிமன்றங்களின் நீதி வழுவாமையைப் புகழ்கின்றனர்.


மேற்கண்டவைகளோடு, குண்டு வெடிப்புகளின் கோரம், அவை அப்பாவி மக்களைப் பலிகொண்டமை போன்றவைகளை முன்வைத்து பல உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன; ""தடா'' ""பொடா'' போன்ற கொடிய பாசிச பயங்கரவாதச் சட்டங்களின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றன.


ஆனால், இச்சட்டங்களின் கீழ் நடந்த கைதுகள், விசாரணைகள், தீர்ப்புகள் எல்லாவற்றிலும் இந்துத்துவ வெறியின் கறை படிந்திருப்பதைக் காண முடிகிறது. இது ஒருபுறம் இருக்க, இவை இசுலாமியச் சமுதாயம் முழுமைக்கும் கடும் எச்சரிக்கை விடுவதாகவும் உருட்டி, மிரட்டிப் பணிய வைப்பதாகவும் இருக்கின்றன.
ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாகவும், குற்றவாளிகளுக்குத் தஞ்சமளித்ததாகவும் குண்டு வெடிப்புச் சதியில் பங்கு பெற்றதாகவும் இசுலாமியக் குடும்பங்களின் அப்பாவிப் பெண்களும் கூட தண்டிக்கப்பட்டுள்ளனர். எந்த மதத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் இந்தியக் குடும்பங்களில் ஆண்களின் பல நடவடிக்கைகள் பெண்களின் சம்மதமின்றியே நடைபெற முடியும் என்ற உண்மை கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.


இந்த வழக்குகளில் மரண தண்டனை, ஆயுள் தண்டனை போன்ற அதிகபட்ச நேரடி தண்டனை பெற்றவர்களைவிட, நூற்றுக்கணக்கானவர்கள் கொடுமையான மறைமுக தண்டனைகளை அனுபவித்துள்ளனர்.


கோவை தொடர் குண்டுவெடிப்புகள் வழக்கில் சதிக் குற்றஞ்சாட்டப்பட்டவர் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் (தடை செய்யப்பட்ட இசுலாமிய சேவக் சங்கம் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக ஐ.எஸ்.எஸ். நிறுவியவர்) அப்துல் மதானி நாசர்; இவர் மீதான சதிக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டார். அதேபோல சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டுவெடிப்பு வழக்கில் சதிக் குற்றஞ்சாட்டப்பட்டவர் தமிழக அல்உம்மா அமைப்பை நிறுவிய பாஷா; இவர் மீதான சதிக்குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவிக்கப்பட்டார். 1993 ஐதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இசுலாமியர்கள் 11 பேரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர்.


மதவெறியர்களின் தாக்குதல் காரணமாகக் கால்களை இழந்த மதானிக்கு மருத்துவர் ஆலோசனைப்படியான சிகிச்சைகள் கூட மறுக்கப்பட்டன. சிறை மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று சென்னையில் மதானி சிகிச்சை பெற ஒப்புதல் அளித்ததற்காக தமிழ்நாடு போலீசுத் துறைச் செயலாளர் முனிர் கோடாவைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தது ஜெயலலிதா அரசு; மதானியை சிறையில் பார்க்க வந்த அவரது மனைவி குடும்பத்தாரை ஆபாசமாகத் திட்டினார்கள் சிறைக் காவலர்கள்; அதை எதிர்த்ததற்காக அவர்மீது பொய் வழக்கும் போடப்பட்டது.


சிறப்பு நீதிமன்றங்களாலேயே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவர்கள், அதாவது நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட மதானி, பாஷா முதலியவர்கள் ஒன்பது முதல் பதினான்காண்டுகள் வரை சிறை சித்திரவதைத் தண்டனைகள் அனுபவித்துள்ளனர். மேலும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்களிலும் பலர் அக்குற்றங்களுக்குரிய அதிகபட்சத் தண்டனைக்கும் மேலே கூடுதலாகப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனைகளை அனுபவித்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் கடும் நோய்வாய்பட்டும், வேறு சிலர் நெருங்கிய உறவினர்கள் இறப்புக்கும் பிணையில் செல்வதற்கான உரிமையும் மறுக்கப்பட்டவர்கள்.


சிறையிலடைக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இவர்கள், இழந்துவிட்ட வாழ்க்கையைத் திரும்பப் பெறவும் முடியாது; அதற்குஉரிய நட்டஈடும் கிடையாது. இசுலாமியராக இருந்து, தீவிரவாதிகள் என்று போலீசு சந்தேகப்பட்டால் போதும்; குற்றங்கள் நிரூபிக்கப்படாமலேயே (போலி மோதல் மூலம்) மரண தண்டனை உட்பட அவர்களுக்குத் தண்டனைக்காலம் தொடங்கி விடும். இதுதான் ""தடா'', ""பொடா'' இல்லாமலேயே விதிக்கப்படும் நீதிமுறை என்றாகிவிட்டது.


தீவிரவாத பயங்கரவாதச் செயல்களை முறியடிப்பது என்ற பெயரில் வரைமுறையற்ற அதிகாரத்தையும், ஆயுதங்களையும் ஏந்தியுள்ள போலீசு அதிரடிப்படையும், சிறைத்துறை அதிகாரிகளும், சிறப்பு நீதிமன்றங்களும் மேற்கொள்ளும் இத்தகைய அணுகுமுறை நாட்டின் பல பகுதிகளிலும் நடக்கும் குண்டுவெடிப்புச் சம்பவங்களை குறைத்துவிடவோ, கட்டுப்படுத்தி விடவோ இல்லை. ஆட்சியாளர்களின் "எதிர்பார்ப்பு, நம்பிக்கை, வாக்குறுதி'களுக்கு மாறாக தீவிரவாதபயங்கரவாத குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அதிக அளவில் பரவி வருகின்றன.


கடந்த மே 18ந் தேதி ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்தத் துப்பும் கிடைக்காத அதேசமயம், அடுத்த சில வாரங்களிலேயே அந்நகரின் கேளிக்கை பூங்காவான ""லும்பினி பூங்கா'' மற்றும் ""கோகுல் சாட்'' எனப்படும் உணவு விடுதியில் குண்டுகள் வெடித்து பொது மக்களில் பலபேர் கோரமான முறையில் மாண்டு போயினர்.


அடுத்து, அக்டோபர் 11ந் தேதி அன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் உண்ணா நோன்புக்குப் பிந்திய விருந்தின்போது நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு இசுலாமியர் மாண்டு போயினர்; 17 பேர் படுகாயமுற்றனர். அடுத்த சில நாட்களிலேயே அதாவது அக்டோர் 14 அன்று பஞ்சாப் மாநிலம் லுதியானா நகரில் திரைப்பட அரங்கு ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் மாண்டு போயினர், 25 பேர் படுகாயமுற்றனர்.


அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் புலன் விசாரணைகள் நடத்தப்பட்டு ஆதாரங்கள் எதுவுமே கண்டுபிடிக்கப்படாத நிலையில் போலீசும், அரசியல் தலைவர்களும் இவற்றின் பின்னணி, காரணங்கள், குற்றவாளிகள் குறித்து கருத்துக்கள் கூறத் தொடங்கி விட்டனர். எந்தவொரு குண்டு வெடிப்புச் சம்பவமானாலும் ""அது எல்லைக்கப்பால் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதிகளின் தாக்குதல்தான்'' என்று உடனடியாகவே அரசு தரப்பு கூறிவிடுகிறது.


ஏதோ புலனாய்வு சூரப்புலிகளின் கண்டுபிடிப்பு போல உடனடியாகவே ""பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்ற இராணுவ உளவுப் பிரிவு ஏவுதல் காரணமாக லஸ்கர்இதொய்பா, ஹரகத்உல்முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தான்'' என்று போலீசார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கின்றனர். இந்த முறை வங்கதேசத்தைச் சேர்ந்த ஹரகத்உல்ஜிகாத்இஇசுலாமி (ஹூஜி) என்ற புதிய இசுலாமிய தீவிரவாத அமைப்பின் செயல்கள்தாம் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று போலீசார் கூறுகின்றனர்.


நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் இசுலாமிய ஜிகாதிகள் தாம் என்று தீர்க்கமான மதச்சாயம் பூசும் பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். கும்பல், உடனடியாகவே ""பந்த்'' நடத்தி அரசியல் அறுவடை நடத்தத் தவறுவதில்லை; தொடர்ந்து மதக்கலவரங்கள் நடத்தவும் எத்தணிக்கிறது. இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அணுகு 7முறையை மறுக்காது, அனைத்து ஓட்டுக்கட்சிகளும் செய்தி ஊடகங்களும் அதையே பிரதிபலிக்கின்றன.


எல்லாக் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கும் இசுலாமியத் தீவிரவாதிகள்தான் காரணம் என்றால், சமீபத்தில் நிகழ்ந்த ஐதராபாத் மெக்கா மசூதி, மற்றும் அஜ்மீர் தர்க்கா குண்டுவெடிப்புகள் இசுலாமியர்கள்தாம் கொல்லப்படுவர் என்று தெரிந்தே அவர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டார்களா? அதேபோல மராட்டியத்தில் மசூதிகள் மற்றும் இசுலாமியர் அதிகமாகத் திரளும் இடங்களாகக் குறி வைத்து 2003இல் பல குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தனவே, ஏன்?


இந்துமதவெறிக்கு அனுசரணையாக செய்தி ஊடகங்கள் தாமாகவே விளக்கமளிக்கின்றன. அஜ்மீர் தர்கா இசுலாமியர்கள் மட்டுமல்லாது, கிறித்தவர்களும் இந்துக்களும் கூட வழிபடும் இடம். இவ்வாறான மத ஒருமைப்பாட்டை எதிர்த்தும், சாதாரண இசுலாமியர்களையும் மிரட்டித் தம்பக்கம் இழுக்கவும் வேண்டி இசுலாமிய ஜிகாதிகள் (மதப் போராளிகள்) தங்கள் வழிபாட்டுத் தலங்கள் மீதே பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவதாக செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.


போலீசும், உளவுத்துறையும் ஐதராபாத் குண்டு வெடிப்புகளுக்கு ஆழமான கண்டுபிடிப்பு செய்ததைப் போல புளுகுகின்றன. ""1947 இந்தியாபாகிஸ்தான் பிரிவினையின்போது ஐதராபாத் சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைப்பது என்பது நிறைவேற்றப்படாமல் போய் விட்டது; அதை நிறைவேற்றுவதுதான் தமது குறிக்கோள் என்று இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் அறிவித்திருக்கின்றன, இந்த நேக்கத்தோடுதான் ஐதராபாத் குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன'' என்று உளவுத்துறை நம்புகிறது. குண்டுவெடிப்புகள் மூலம் இந்த நோக்கத்தை எப்படி நிறைவேற்ற முடியும் என்பது உளவுத்துறை போன்ற அதிபுத்திசாலிகளுக்குத்தான் தெரியும்!


ஆக.25 ஐதராபாத் குண்டுவெடிப்பு நடந்த அடுத்த நாளே, அதற்கு வங்கதேச இசுலாமியப் பயங்கரவாதிகள்தாம் காரணமென்றும், வேலூரில் படிக்கும் கல்லூரி மாணவியைப் பிடித்துவிட்டதாகவும், அவரது சகோதரனையும் காதலனையும் தேடுவதாகவும் வதந்தி பரப்பியது போலீசு. பிறகு போலீசே அதை மறுத்து, தகுந்த கடவுச்சீட்டு ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்கவில்லை என்றுதான் அம்மாணவி மீது வழக்குப் போடப்பட்டது என்றது. ஆனால், தொடர்ந்து செய்தி ஊடகங்களில் பழைய வதந்திகள் உலவின.


அதேசமயம், 20 இசுலாமிய இளைஞர்களை ஐதராபாத் போலீசு பிடித்துக் கொண்டு போய், தமது இரகசிய முகாம்களில் வைத்து பல நாட்கள் சித்திரவதை செய்து வருகிறது என்று ஆந்திராவின் சிறுபான்மையினர் ஆணையமும் மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டுகின்றன. ""இப்படிச் செய்வது வழக்கமானதுதான்; விசாரணைக்காக சிலரை அழைத்துச் செல்வதும், வழக்குமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தாமல் சில நாட்கள் வைப்பதும், விசாரணை முடிந்தபின் ஆதாரங்கள் கிடைக்காமல் போனால் விடுவிப்பதும் நடக்கத்தான் செய்யும்'' என்கிறது உளவுத்துறை.


ஆக.25 குண்டுவெடிப்புக்குப் பிறகு, அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக நிரூபிக்க முடியாமல் போனதால் பொதுவில் ""அரசுக்கும் தேசத்துக்கும் எதிராக போர் தொடுத்ததாக'' 18 இசுலாமிய இளைஞர்கள் மீது ஐதராபாத் போலீசு வழக்குப் போட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக குஜராத்தில் 2002 கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு இசுலாமியர் மீது நடத்தப்பட்ட கொலை வெறியாட்டம் பற்றிய குறுந்தகடுகளை அவர்கள் வைத்திருந்ததாக போலீசு கூறுகிறது.


இப்படித்தான் 1993 ஐதராபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு 11 இசுலாமிய இளைஞர்கள் மீது சதிகொலை வழக்கு போடப்பட்டது. 14 ஆண்டுகள் சிறை சித்திரவதைக்குப் பிறகு அவர்கள் எல்லாம் நிரபராதிகள் என்று ""தடா'' நீதிமன்றம் விடுதலை செய்தது.


இசுலாமியர்கள் அனைவரையும் அந்நியர்கள் என்று முத்திரை குத்தி நாட்டை விட்டு வெளியேற்றவும் துடிக்கிறது இந்து மதவெறிக் கும்பல்; இசுலாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று சந்தேகித்து முத்திரை குத்திப் பழிவாங்குகிறது, போலீசு அதிரடிப்படை. ""சமீபத்திய மூன்று குண்டுவெடிப்புகளிலும் மாண்டு போனவர்களில் பெரும்பாலானவர்கள் முசுலீம்கள்தாம். போலீசின் துப்பாக்கிச் சூட்டிலும் காயமுற்றவர்களிலும் பெரும்பான்மையினர் முசுலீம்கள்தாம். சந்தேகப்பட்டு போலீசால் இழுத்துச் செல்லப்பட்ட அனைவரும் முசுலீம்கள்தாம். குண்டுவெடிப்புகளில் இந்து மத அடிப்படைவாதிகள் ஒருவரும் பங்கு பெற்றிருக்க முடியாது என்று போலீசு தானாகவே எண்ணிக் கொள்கிறது. எனக்கு ஆச்சரியமாயிருப்பது என்னவென்றால், வேறு எந்தக் கோணத்தையும், வேறு எந்த சாத்தியப்பாட்டையும் குறித்து பார்க்கக் கூட போலீசு மறுப்பதுதான்'' என்கிறார், ஐதராபாத் எம்.பி.ஓவைசி.


உண்மைதான். குண்டுவெடிப்புச் சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் இசுலாமியப் பயங்கரவாதிகள்தாம் காரணமாயிருப்பார்கள்; என்று நம்பிவிட முடியுமா? இந்துமத பயங்கரவாதிகளும் உள்ளனர்; அவர்களும் குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்று எண்ணுவதே இல்லை; போலீசு மட்டுமல்ல; மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் ""இந்துக்களே'' நம்ப மறுக்கிறார்கள்; சிவசேனா, பஜ்ரங் தள், விசுவ இந்துப் பரிசத் போன்ற இந்து தீவிரவாத அமைப்பினர்கூட வெளிப்படையான கும்பல் வன்முறையில்தான் ஈடுபடுவார்கள், இசுலாமிய தீவிரவாதிகளைப் போன்று சதி செய்து, இரகசிய குண்டு வைப்பு மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள்.


ஆனால், உண்மை வேறுவிதமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 6 அன்று மராட்டிய மாநிலம் நாண்டட் நகரில், ஓய்வு பெற்ற நீர்ப்பாசனத்துறைப் பொறியாளர் ஒருவரின் வீட்டில் அதிகாலை பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது; மூன்று பேர் அதே இடத்தில் மாண்டு போனார்கள், மூன்றுபேர் படுகாயமுற்றுக் கிடந்தார்கள்; ஒருவர் சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விட்டார்.


காயமுற்றவர்களிடம் போலீசு நடத்திய விசாரணையின்போது, மராட்டியப் புத்தாண்டு, விஜயதசமி, விநாயக சதுர்த்தி, ராமநவமி ஆகிய பண்டிகைகளில் வெடிப்பதற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளால் வெடிவிபத்து நடந்துவிட்டதாகக் கூறினர். விபத்து நடந்த அடுத்த நாளே ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளின் உள்ளூர் தலைவர்கள் காயமுற்றவர்களை மருத்துவமனைக்குப் போய் ""ஆறுதல்'' கூறியிருக்கிறார்கள். இச்சம்பவத்தில் இந்து அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசு காயமுற்றுத் தப்பியோடிய நான்காவது நபரைப் பிடித்து விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டு விட்டது.


நடந்தது, பட்டாசு மூட்டைகளால் வெடித்த விபத்து அல்ல. மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் நகரின் மசூதி ஒன்றில் குண்டு வைத்து பயங்கரவாதச் செயல் புரியவும், தொழுகைக்கு வரும் இசுலாமியர்களைக் கொல்லவும் சதி செய்து வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட தவறால் நடந்த குண்டு வெடிப்பு சதிகாரர்களிலேயே மூவரைப் பலி வாங்கி விட்டது; படுகாயமுற்ற நால்வரைப் போலீசில் சிக்க வைத்து விட்டது.


ஆனால், உண்மை அறிந்திருந்த உள்ளூர் போலீசு, பட்டாசு விபத்துதான் என்று பூசி மெழுகி மூடி மறைக்க முயன்றது. உள்ளூர் முசுலீம் அமைப்பின் பிரமுகர்கள் கிரிமினல் மனுப் போட்டு வழக்குத் தொடுத்தபிறகு, இவ்வழக்கு பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படையால் விசாரிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு ""அப்ரூவர்கள்'' ஆனபிறகு மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.


இசுலாமிய மக்களைக் குறிவைத்து மசூதிதர்கா மற்றும் இசுலாமியர்கள் அதிகம் புழங்கும் கடைத் தெருக்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திப் படுகொலைகள் செய்வதற்கென்றே ஒரு பயங்கரவாத வலைப் பின்னலை ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் மற்றும் விசுவ இந்து பரிசத் ஆகிய இந்துமதவெறி கும்பல் திட்டமிட்டு உருவாக்கி யிருப்பது அம்பலமானது. அதற்காக, நாட்டின் பல இடங்களிலும் வெடிகுண்டுகள் தயாரிப்பு, மற்றும் பயிற்சிகளும் எடுத்து வருகின்றனர். பிடிப்பட்ட நாண்டட் நகர பயங்கரவாதக் குழு மட்டும், மத்திய மராட்டியத்தில் 20032006 ஆண்டுகளில் குறைந்தது நான்கு குண்டுவெடிப்புகளை நடத்தியிருக்கிறது.


தொடரும்