09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஆலை மூடலுக்கு எதிராகஆர்த்தெழுந்த தொழிலாளி வர்க்கம்

PJ_2008_1.jpg

டயர் உற்பத்தியில் கடந்த 43 ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இயங்கி வந்த, சென்னையிலுள்ள எம்.ஆர்.எஃப் கம்பெனி கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதலாக சட்டவிரோதமாக கதவடைப்பு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும் மேலும் 5 கிளைகளின் உருவாக்கத்திற்கும் அயராது பாடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களோ இன்று வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர்.

 

தொழிலாளர்களின் உரிமைகளை இழக்க மறுத்து, நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்த குற்றத்திற்காக, இரு தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து 26 பேரை சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம். இதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததும், திமிரெடுத்த நிர்வாகம் அடாவடித்தனமாக ஆலையை மூடிவிட்டது. ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தொழிலாளர் நல ஆணையர் அளித்த அறிவுரையையும் ஏற்க மறுத்து விட்டது. கதவடைப்புக்குத் தடை விதித்துள்ள தமிழக அரசின் உத்தரவைச் செயல்படுத்துமாறு உயர்நீதி மன்றம் விதித்துள்ள ஆணையையும் எதிர்த்து எம்.ஆர்.எஃப் நிர்வாகம் மேல் முறையீடு செய்து கொக்கரிக்கிறது.

 

ஆலையை மூடுவதற்கு எம்.ஆர்.எஃப் டயர்களுக்குச் சந்தையில்லாமல், உற்பத்தி தேங்கி விட்டதோ, நட்டமோ காரணமல்ல. இந்தியாவின் சந்தையில் முதலிடத்தைப் பிடித்து கொழுத்த இலாபமடையும் முன்னணி நிறுவனம்தான் எம்.ஆர்.எஃப். மறுகாலனியாக்கத்திற்கு ஏற்ப தொழிலாளர் உரிமைகளைப் பறித்து கொத்தடிமைகளாக்கிச் சுரண்டும் நோக்கத்தோடுதான் இப்படி ஆலையை மூடி அடாவடித்தனம் செய்கிறது நிர்வாகம். சட்டவிரோத கதவடைப்பு செய்து அரசு உத்தரவையும் மதிக்காத இந்நிறுவன முதலாளியைக் கைது செய்து, ஆலையை அரசே ஏற்று நடத்துவதற்குப் பதில், கைகட்டி நிற்கிறது தமிழக அரசு.

 

ஆலை மூடலால் குமுறிக் கொண்டிருந்த எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களை அணிதிரட்டி, ""மூடிய எம்.ஆர்.எஃப் ஆலையை உடனே திற! ஆலையைத் திறக்காமல் அடாவடி செய்யும் முதலாளியைக் கைது செய்! எம்.ஆர்.எஃப் ஆலையை அரசுடமையாக்கு!'' என்ற முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 26.12.07 அன்று மாலை மெமோரியல் ஹால் அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

 

பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.ஆர்.எஃப் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் பிரபாகரன், பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு மற்றும் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

 

தொழிலாளர்கள் குடும்பத்தோடு திரண்டு வந்து வர்க்க உணர்வோடு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் இதர கிளைகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் இணைத்துப் போராடவும், இதர தொழிற்சங்கங்களையும் உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி அடுத்தகட்டப் போராட்டத்தைத் தொடரவும், பு.ஜ.தொ.மு.வும் எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களும் உறுதியேற்றுள்ளனர். தொழிலாளி வர்க்கம் தோற்றதாக வரலாறில்லை.


பு.ஜ. செய்தியாளர், சென்னை.