Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நல்லிணக்கபுரம் என்ற தமிழ்க் கிராமமானது, 150 வீடுகளைக் கொண்டிருப்பதுடன் 190 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றனர். இந்த 190 குடும்பத்தில் அண்ணளவாக 110 குடும்பங்கள் இந்துக் குடும்பங்கள்;. மிகுதி கிறிஸ்துவ குடும்பங்கள். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் மீள்குடியேற்ற வாழ்க்கையானது, வெள்ளாளிய அதிகாரத்தினால் தொடர் துயரங்களைக் கொண்டதாக மாறியுள்ளது.  

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட இந்த மக்கள் மயிலிட்டியைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள். 1980 களில் மீன்பிடிக் கூலிகளாக வாழ்ந்தவர்கள். இன்று நல்லிணக்கபுரத்தில் மீள் குடியேறியதன் பின்பாக, குறைந்தது 25 வள்ளங்களைக் கொண்டு சொந்தமாக மீன்பிடித் தொழிலை செய்கின்றனர். 1960 இல் வெள்ளாளிய பாடசாலைகளைத் தேசியமயமாக்கிய பின்பாக கல்வி வாய்ப்பை பெறத் தொடங்கிய இந்த மக்களின் முதல் தலைமுறை, சமூக பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றனர். முதல் தலைமுறையை சேர்ந்த பட்டதாரிகள் இந்தக் கிராமத்தில் உருவாகி வருகின்றனர். 

இக் கிராமமானது அரச காணியில், இராணுவத்தினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளைக் கொண்டுள்ளது. இக் கிராமமானது ஒடுக்குகின்;ற சாதிகளின் வாழ்விடங்களை அண்டியிருப்பதால், தமிழ் வெள்ளாளிய கலாச்சாரத்துக்கு எதிரான "சிங்களவனின்" சதியாக - தமிழ் தேசியத்துக்கு எதிரான "துரோகமாக" மாறியுள்ளது.

இந்தக் கிராமம் உருவானதையடுத்து 15 அடி (5 மீற்றர்) உயரம் கொண்ட தீண்டாமைச் சுவர் ஒன்றைக் கட்டியவர்கள், தொடர்ந்து பல்வேறு வகையில் ஒடுக்கியும் வருகின்றனர். அப்பிரதேசத்தை "புனித பூமியாகக்" கூறி, தங்கள் வெள்ளாளிய அதிகாரத்தைக் கொண்டு அவர்களின் கோயிலை இடிக்கவும் கோருகின்றனர்;.        

தமிழனின் பெயரில் காலகாலமாக ஒடுக்கிய வெள்ளாளியமானது, ஒடுக்கப்பட்ட மக்கள் கடந்தகால சாதிய வெள்ளாளிய கலாச்சார வரம்புகளை மீறி வாழ முற்படுவதற்கு எதிராக, சாதிய ஒடுக்குமுறையாளர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு ஒடுக்குகின்ற போக்கானது, யாழ ;மாவட்டம் எங்கும் நடந்தேறி வருகின்றது. 

இந்த வகையில் நல்லிணக்கபுரத்தில் நடந்த புதிய சாதிய ஒடுக்;குமுறையானது, தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவர்களை நேரடியாக சந்திக்கவும் - பேசவும் முடிந்தது. தமிழ்தேசியம் எப்படிப்பட்டது என்பதையும் - அதன் அதிகாரம் எத்தகைய கொடுமையானதாக இருக்கின்றது என்பதையும் இந்த ஊரைச் சுற்றிய கடந்தகால  - நிகழ்கால நிகழ்வுகள் காட்டுகின்றது.

1.இந்த ஊரிற்கு செல்லும் பாதையுடன் அமைந்துள்ள கோயிலின் ஒரு பக்க மதிலானது, 15 அடிகளுக்கு மேலான, தீண்டாமைச் சுவர் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலானது இரண்டு பக்கங்கள் மட்டும் மதில்களை கொண்டதாக இருப்பதுடன், இதில் ஒருபக்க மதில் மட்டும் தான் 15 அடிகள் உயரமானதாக காணப்படுகின்றது.  

இந்த 15 அடிகள் உயர மதிலானது கோயில் ஆகம விதிகளுக்கு முரணாக, கோயிலின் வாசலையே காணமுடியாதவாறு மூடிக் கட்டப்பட்டுள்ளது.  

2.இந்தக் கோயிலை தாண்டியுள்ள சுடலையில், ஒடுக்கப்பட்ட சாதிகளின் உடல்கள் தகனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. பிரதேச சபையின் கட்டுப்பாட்டிற்குள் இந்தச் சுடலை, ஒடுக்கும் சாதிகளுக்கு மட்டுமானதாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.  

3இந்த ஊர் மக்கள் மத வேற்றுமையின்றி வாழ்வதுடன், மதவேறுபாடு இன்றி அனைவரும் இணைந்து கட்டிவரும் கிறிஸ்துவ ஆலயத்தை இடிக்குமாறு பிரதேசபை கோரியுள்ளதுடன் - நீதிமன்றத்துக்கு அதனைப் பிரச்சனையாகக் கொண்டு சென்றுள்ளது. இந்தப் பிரதேசசபை சட்டத்துக்குப் புறம்பான தீண்டாமைச் சுவரை இடிக்கவில்லை. சட்டத்துக்கு புறம்பாக வெள்ளாளிய சாதிய சுடலையை வைத்திருப்பதை தனது அதிகாரமாக்கியுள்ளது.    

4.இந்தக் கிராமத்தின் நுழைவாயிலுடன் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை ஒடுக்கும் சாதிக்குரியதாக கைப்பற்ற, அரசு தரப்பு மூலம் தமிழரசுக் கட்சி எடுத்த தொடர் முயற்சியை அந்த மக்கள் தோற்கடித்துள்ளனர். 

5.இந்த மக்கள் தமக்கான மீன்பிடித் துறையை கீரிமலையில் அமைத்த போது, "புனித பிரதேசம்" என்று கூறி, அதை வெள்ளாளியம் தடுத்தது. இதையடுத்த மற்றொரு கரையை அவர்கள் பயன்படுத்திய போது, அருகில் தமது சுடலை என்று கூறி கடற்கரையைப் பயன்படுத்துவதைத் தடுத்தனர்;. இதையடுத்து அவர்களின் தொடர் போராட்டம் மூலம் 250 மீற்றர் கடற்கரையை தமதாக்கியுள்ளனர். உழைத்து வாழ விரும்பும் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குகின்ற வெள்ளாளியமானது, தமக்கு அடிமையாக இருக்குமாறு கோருகின்றது.  

6.இங்கு வாழும் இந்து மக்களுக்கு அருகில் உள்ள எந்த இந்துக் கோயிலிலும் இடம் தரவில்லை. அதாவது தங்கள் கோயில் என்ற உரிமையுடன் திருவிழா செய்யவும் - பூசை செய்யவுமான உரிமை மறுக்கப்படுகின்றது. 

15 அடிகள் உயர சுவர் எழுப்பிய கோயிலில்; நடக்கும் அன்னதானங்கள் சாதி அடிப்படையில் பிரித்து, ஒடுக்கும் சாதிக்கு முன்னுரிமையுடன் தனிப்பந்தி அமைத்து வழங்குவதுடன், எஞ்சியதை ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு வழங்கும் சாதிய வக்கிரம் தொடர்ந்தும் அரங்கேறுகின்றது.    

இந்த மக்கள் தமிழ் மக்களில்லையா!? தமிழ் மக்களைப் பிரிப்பது யார்? தமிழ் தேசியம் ஏன் இதைப் பாதுகாக்கின்றது. தமிழனைத் தமிழன் ஒடுக்கும் இந்த வெள்ளாளிய அதிகாரம், தமிழ் மக்களுக்கு தேவைதானா? 

இந்த மக்களை ஒடுக்குகின்றவர்கள் வேறுயாருமல்ல, தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவரான மாவை சேனாதியின் ஊரவர்களும், உறவினர்களுமே. இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இப் பிரதேசசபை இயங்குகின்றது. தமிழ் தேசியத்தின் யோக்கியதை இதுதான்.   

இந்த மக்கள் 1980 களில் தங்கள் வாழ்விடங்களை இழந்து, தமக்கான சொந்த இருப்பிடங்களின்றி 50 வருடங்கள் வாழ்ந்தவர்கள். யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த மக்கள், தமிழ் தேசியத்திற்காக தங்கள் உயிர்களைக் கொடுத்தவர்கள். தங்கள் வாழ்வையும் - உயிரையும் அர்ப்பணித்த மக்களை, தமிழ் தேசியம் எப்படி நடத்துகின்றது என்பதை இந்த கிராமம் சந்திக்கின்ற பொது அவலம் காட்டுகின்றது. புலம்பெயர் உதவிகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

உண்மையில் யாழ் குடா எங்கும் ஒடுக்குகி;ன்ற சாதிகளிடம் புலம்பெயர் நிதிகள் செல்வதுடன், குறிப்பிட்ட சாதியைக் கடந்து உதவிகள் ஒடுக்கப்பட்ட சாதிக்கு செல்வதில்லை என்பதே பொதுவான நி;லை. காலகாலமாக வெள்ளாளியத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள், வாய் பேசமுடியாத ஊமைக் குரலாக இருப்பதே யாழ்குடா எங்குமான நிலைமை. 

இந்திய பின்னணியில் உருவான சிவசேனை என்ற வெள்ளாளிய இந்துத்துவ அமைப்பானது, இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்து, கோயிலை இடியென்கின்றது. பிரதேசசபை தாளம் போடுகின்றது.  கிறிஸ்துவ - இந்து மக்கள் இணைந்து கட்டப்படும் ஆலயத்தை, புனித பூமியில் அனுமதிக்கக் கூடாது என்று வெள்ளாளிய இந்துத்துவ அதிகாரத்தின் குரலுடன், அந்த கிராமத்துக்குள் புகுந்த சிவசேனை, அந்த மக்களை ஒடுக்குகின்ற வக்கிரங்களுடன் களமிறங்கியது. இதன்பின் வெள்ளாளிய அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளுடன், ஒடுக்கும் இந்துத்துவ வெள்ளாளியத்தின் கோர முகம் பொது வெளிக்கு வந்துள்ளது. 
 
17.02.2004