Language Selection

காரண காரியம் தெரியாத அர்த்தமற்ற செயல்களை எதற்காக செய்கின்றோம்? தொட்டுணரவோ, முகர்ந்து பார்க்கவோ, பார்த்து அறியவோ, கேட்டுணரவோ, சுவைத்தறியவோ முடியாத அனைத்தும் மனிதனுக்கு எந்த நன்மையையும் தருவதில்லை. மற்றவரைப் பாதிக்கின்ற, இதைப் பிழைப்பாக்குகின்ற, இவற்றைச் செய்ய நிர்ப்பந்திக்கின்ற செயல்கள் பகுத்தறிவற்ற மூடநம்பிக்கையாகும்.


சடங்குகளும் சம்பிரதாயங்களும் தற்பெருமைக்குரியவனின் செயலாக, அதை ஒரு வியாபாரமாக்கியுள்ள நிலையில், வெறும் சடங்குகள் இன்று அவசியமா? முன்பு உற்றார், உறவுகள், சுற்றங்கள் கூடி உண்டு முன்னெடுத்த நிகழ்வுகளல்ல, இன்றைய நிகழ்வுகள்.

எம்மைச் சுற்றிய இந்தச் சடங்குகளும் சம்பிரதாயங்களும், கடந்த எமது வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது. அவை பாரம்பரிய நம்பிக்கைகள் சார்ந்தும், மதம் சார்ந்தும், உழைப்பு சார்ந்தும் காணப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் ஏன் செய்கின்றோம் எதற்;குச் செய்கின்றோம் என்ற காரணகாரியங்கள் இன்றி, அறிவுபூர்வமாக சிந்தித்து செய்வது கிடையாது. பகுத்தறிவற்ற மூட நம்பிக்கைகள் சடங்குகளாகி, அதைக் கடைப்பிடித்துச் செல்லுகின்றோம்.

உதாரணத்தை எடுப்போம். கணவன் இறந்தால் அவரின் துணைக்கு வெள்ளைச்சேலை கொடுத்து பூவும் பொட்டும் பறித்து, பொது நிகழ்வில் இருந்து வாழ்க்கை பூராக ஒதுக்கி வைக்கும் செயல்கள் அனைத்தும், பெண்ணின் மகிழ்ச்சியைப் பறித்தெடுக்கின்ற எமது சடங்குகள் சம்பிரதாயங்கள். பெண்ணைக் கேவலமாக்கி, அவளின் மகிழ்ச்சியையே பறித்தெடுக்கின்ற கேடுகெட்ட இந்தச் செயல்கள் போல் எத்தனை செயல்கள் எமது சடங்குகள் சம்பிரதாயங்களாக நீடிக்கின்றது?

கடந்தகால வாழ்க்கை முறையே இன்று மாறிவிட்ட நிலையில், சடங்குகளும் சம்பிரதாயங்களும் அர்த்தமற்றதாகிவிட்டது. இன்று உழைப்பு முறையும், கிராமிய வடிவங்களும், மனிதப் பண்பாடுகளும் கூட மாறிவிட்டது.

முன்பு நிலத்துடனும் கிராமத்துடனும் இணைந்து உழைத்து வாழ்ந்த மனிதன், தன் சுய உழைப்பை சார்ந்து தன்மானம் உள்ளவனாக வாழ்ந்தான். வாழ்க்கைத் தேவையை முதன்மைப்;படுத்தி அதை முன்னிறுத்தி வாழ்ந்தான்;. தன்னை முதன்மைப்படுத்தாது உற்றார், உறவுகளையும், சுற்றங்களையும் முதன்மையாகக் கொண்டு, அவர்களை கௌரவித்து நற்சடங்குகளும் சம்பிரதாயங்களும் கொண்டாடப்பட்டது. பெரியவர்களை மதித்த சமூகப் பெறுமதி கொண்டு வாழ்க்கை முறை காணப்பட்டது.

இன்று யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றது? சொந்த உழைப்பில் வாழ்வதை இளைய சமூகம் கைவிட்டு வருகின்றது. பிறர் உழைப்பில் வாழ்வதும், புலம்பெயர் உறவுகளின் உழைப்பில் வாழ்வதும் வாழ்க்கை முறையாகி வருகின்றது. தன்மானம் அற்றவனாக பிறரை ஏமாற்றி வாழ்வது அதிகரித்து வருகின்றது. வாழ்வின் தேவையை முன்னிறுத்திய வாழ்க்கைக்குப் பதில் ஆடம்பரமும் தற்பெருமையும் பண்பாடாகி வருகின்றது. இந்தப் பின்னணியில் தன்னை முதன்மைப்படுத்திய சடங்குகளும், சம்பிரதாயங்களும் நடந்தேறுகின்றது. உற்றார், உறவுகளையும், சுற்றங்களையும் கூட்டி, தற்பெருமையை விளம்பரம் செய்யவும், கூடி இணைந்து செய்த நிகழ்வுகள் எல்லாம் வியாபாரமாக்கப்படுகின்றது. சடங்குகள், சம்பிரதாயங்கள் வியாபாரமாக செய்கின்றவர்கள், அதை வீடுவரை கொண்டு வந்த விளம்பரம் செய்து வியாபாரமாக்கியுள்ளதுடன், அவை தொடர்ந்து நடந்தேகுமாறு பார்த்துக் கொள்கின்றனர்.
அன்று முதல் இன்று வரை சாதிரீதியாக தன்னை முன்னிறுத்தி முன்னெடுக்கும் தொழிலை அடிப்படையாகக் கொண்ட ஜயர், சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நடத்துமாறு பொருட்களைப் பட்டியலிட்டுத் தருகின்றார். இதைச் செய்ய மறுத்தால் இறந்தவர்கள் கடவுள் திருவடி சேர மாட்டார்கள் என்கின்றார். கடவுளுக்கு தெரிந்த ஒரே மொழி சமஸ்கிருதமோ? அதனால் தானோ என்னவோ மந்திரத்தினை ஓதுவது சமஸ்கிருதத்திலாக்கும். ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கு எப்படி ஒரு மொழி மட்டுமே புரியும்? எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டாமா?

எல்லா ஜீவராசிகளையும் படைத்த கடவுள் ஏன் தனக்குப் புரியாத பல்வேறு மொழிகளில் அந்தந்த ஜீவராசிகளைப் பேசும்படி படைத்தார்? சமஸ்கிருதத்தையே தன்னுடன் தொடர்பாடலுக்கான மொழியாக கடவுள் ஏன் தெரிவு செய்தார்? மனிதனையே படைத்தளித்த கடவுள் அவன் பேசும் மற்றைய மொழிகள் எதனையும் தன் சக்தியால் புரிந்து கொள்ள முடியாதவரா? கடவுளோடு தொடர்பாடலுக்கான மொழியாக இருக்கும் சமஸ்கிருதத்தை எத்தனையோ கோடித்தமிழர்கள் கற்றுக்கொள்வதை விட ஏன் கடவுள் ஒருவர்தானே அவர் பேசாமல் தமிழுக்கு ரியூசன் எடுக்கலாம் தானே? அதுவும் முடியாதென்கிறார்கள் அந்தணர்கள். ஏனெனில் தமிழ் வேசி மொழியாம். தமிழில் கீர்த்தனை கூட இசைக்கக் கூடாதாம்.

தியாகராசர் விழாவில் தமிழில் கீர்த்தனை இசைக்கத் தடை. கடவுள் கொள்கையின்படி அந்த வேசிமொழியையும் 6000 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைக்க கடவுள்தானே அருள்பாலித்திருக்கிறார்? சுவைகுன்றா அழகிய முத்தமிழ் இலக்கியத்தையும் தேவார திருவாசகத்துக்கு ஊடாக பிழிந்து தருவதற்கு கடாட்சம் தந்தவர் கடவுளா அல்லது வேறுயாருமா? பிறகு ஏன் தமிழ் வேசி மொழியாக இருக்க முடியும்?

ஏன் மனிதனை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் கடவுள் படைத்தார்? ஏன் எல்லா மனிதர்களையும் நல்லவர்களாகவே அவரால் படைக்க முடியவில்லை. ஏன் ஏழை மக்களைப் படைத்து அவர்கள் துன்பத்தில் உழலும்படி செய்தார்? அவ்வாறெனில் மனிதர்கள் துன்பத்தில் உழன்று வேதனைப்படுவதற்கு எல்லாம் வல்ல கடவுள் தானே பொறுப்பு. மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பவரா கடவுள்? கடவுள் தான் மனிதனைப் படைத்தார் எனின், ஏன், தான் படைத்த மனிதனையே கடவுள் சோதிக்க வேண்டும்? அவ்வாறு சோதித்து மனிதன் அனுபவிக்கும் துன்பங்களை ரசிக்கும் சித்திரவதையாளனி;ன் மனப்பாங்கிலுள்ளவரா கடவுள்? அவரால் துன்பங்கள் இன்றிய உலகை ஏன் படைக்க முடியவில்லை? தான் படைத்தவர்கள் மேலேயே கருணை இல்லாதவரா கடவுள்? எல்லாம் வல்லவராகவுள்ள கடவுள் தான் மனிதனைப் படைத்ததும் இயக்குவதும், கடவுள் எல்லாம் அறிந்தவர் எல்லாமுணர்ந்தவர் எனில் மனிதன் கடவுளின் அறிவுக்கு எட்டாதவகையில் எவற்றையும் செய்ய முடியாதவன் ஆகிறனான் அல்லவா? அப்படியாயின் ஏன் அவன் கடவுளின் கட்டுப்பாட்டிலிருந்து தவறி பாவங்களைச் செய்கின்றான்?

கடவுள் தானே எல்லாவற்றையும் படைத்துவிட்டு ஏன் தன்னை வணங்குபவர்களுக்கு மட்டும் அருள் பாலிக்கின்றார்? “நண்ணார்க்கு நலமிலன் நண்ணினர்க்கு நல்லன்; சலமிலன் பேர் சங்கரன்” என திருவருட்பயன் கூறுகிறதே. அதாவது தன்னை வணங்குபவர்கள் மீது விருப்போ வணங்காதவர்கள் மேல் வெறுப்போ இல்லாதவரே சங்கரன் என்கின்றது திருவருட்பயன். இது நியாயமானது தானே. கடவுள் இலஞ்சம் கொடுப்பதனாலோ பிரயத்தனப்பட்டு வலிந்து வணங்குபவர்களுக்கு மட்டும் அருள்பாலி;ப்பவராக இருப்பாராயின் அந்நிலைமையை அவர் ஏன் உருவாக்குகிறார்? அவர் வணங்குவோர்க்கு மட்டும் தான் அருள்பாலிக்கும் கடவுள் எனில் தன்னைத் துதியாதவர்களையும் அவர் தானே படைத்தார்?

எப்படி இறந்தவர்கள் நற்பேறடைவதற்கு தான் இடையில் இருந்து மந்திரம் ஓதினால் முடியும் என்கின்றார் ஜயர்? அப்படியாயின் எல்லோருமல்லவா மோட்சத்துக்கு போய் விடுவார்கள். நரகம் என்ற ஒன்றின் தேவை இருக்காதல்லவா? சிலவேளை நரகத்தில் இருக்கவேண்டிய தண்டனைக்காலம் குறைக்கப்படுமோ? இப்பிறப்பில் செய்த பாவங்களுக்கு நரகத்தில் கிடைக்கவேண்டிய தண்டனைக் காலத்தை ஜயரின் மந்திரம் குறைத்துவிடும் எனில் ஒருவகையில் பாவங்கள் செய்யும் வரையிலும் செய்யலாம், இறுதியில் ஓதப்படும் மந்திரத்தின் மூலம் பாவம் செய்பவர்களுக்கு பரிகாரமும் பிராயச்சித்தமும் உண்டு என்றல்லவா அர்த்தப்படுகிறது. கொலைக்குற்றத்திலிருந்து தப்பினால் தூக்குக்காவடி எடுப்பதென நேர்த்திக்கடன் வைப்பதைப்போல, பாவங்கள் புரிந்தாலும் இறுதியில் கடவுளிடம் விண்ணப்பித்தால் அவை அழிபட்டுப் போய்விடும் என பாவங்கள் செய்பவர்களுக்கு தூண்டுதல் தருகின்றதல்லவா இந்த மந்திரம் ஓதி நற்பேறடைய வைப்பது? இறப்பு வீட்டில் துடக்கு என்கின்றனர். நோய்க்கிருமிகள் பரவா வண்ணம் தூய்மையாக, துப்பரவாக இருப்பதற்கு குளிப்பது கழுவித்துடைப்பது அல்லது கிருமிகளைக் கொல்லும் தெளிதிரவங்களைப் பாவிப்பது என்ற சுகாதாரவிதிகள் ஒருபுறம் இருக்க, ஜயர் வந்து ஓதும் மந்திரத்தால் மட்டுமே கழியும் துடக்கெனில் அதற்கெதற்கு ஜயர். அந்த துடக்கை ஜயர் எப்படிக் கழிக்கிறார் என்று ஓரு குறிப்பு எழுதி அனுப்பினால் நாங்களே செய்து கொள்ள மாட்டோமா? இடையில் எதற்கு ஜயர். துடக்கு பொதுவாக 31 நாட்கள் வரை நீடிக்குமாம். ஜயர் வந்து மந்திரம் ஓதினால் அது எப்பவும் கழிந்து போய் விடுமாம். துடக்கு என்ற ஒன்று சுத்தத்துடனும் சுகாதாரத்துடனும் சம்பந்தப்பட்டிருக்காமல் மந்திரத்துடனும் சம்பந்தப்பட்டிருப்பின் பிறப்பும் இறப்பும் நடக்கும் வைத்தியசாலைக்கும் அல்லவா துடக்குக் கழிக்க வேண்டும்?

இங்கே தான் இருக்கிறது ஜயரின் பிழைப்பு. அதனாலேயே தான் அவர் பேசுகிறார் சமஸ்கிருதம். கல்யாண மேடையில் வைத்து ஜயர் சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் என்னவென்று தெரிந்தால் மணப்பெண் பலருடன் சோரம் போனவள் என்கின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடிகிறதா?இங்கே நடப்பது எதுவெனில் கடவுளைக் காட்டி மிரட்டுவது, பயங்கொள்ள வைப்பதன் மூலம், சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பாவித்து தமது வாழ்க்கையை உடலுழைப்பில் ஈடுபடாது தொடர்வதற்கும் அது தொடர்ந்து தங்களுக்கு பிழைப்பு தருமாறு பார்த்துக் கொள்வதற்குமாக நடாத்துகின்றனர்.

இந்தச் சடங்குகளை நடாத்துவதற்கு ஏன் தனியான ஒரு சாதி நியமனம். ஏன் எவருமே அதைச் செய்யாமல் ஜயர் என்ற சாதி மட்டும் தான் அதனைச் செய்ய வேண்டும் என்ற விதி? கடவுளிடம் தனிச்சலுகை பெற்ற சாதியான ஜயர் சாதியை கடவுள் ஏன் படைத்தார்? அவர்கள் என்ன மாமிச உணவுகளை தொடாதவர்களா? இந்து மத வேதங்களிலேயே குதிரை இறைச்சியை புசித்தவர்களாகவும் சோமபானத்தையும் பருகியவர்களாகவும் அல்லவா அந்தணர்கள் இருக்கிறார்கள். பிற்பாடு புத்தர் போதித்த கொல்லாமை, புலாலுண்ணாமை என்ற கொள்கையினால் மக்கள் மத்தியில் இந்துமதத்துக்கு ஏற்பட்ட சரிவைச் சரிக்கட்ட இடையிட்டு வந்ததே இந்த புலாலுண்ணாமை என்பது. கொல்லாதே என்கின்றது புத்தமதம். கொல்வது நீயில்லை நானே தான் எனவே எனக்காக கொல்லும் பணியே சைத்திரியனின் கடமை என்கின்றது கண்ணனி;ன் கீதை. இருந்தபோதும் எந்த மதமும் கொல்லாமலில்லையே. உயிர்கள் கடவுளால் உண்டானது எனின் உயிர்நீத்த பின் கடவுளிடம் ஒப்படைக்கும் சடங்குகள் ஏன்? கடவுளே தான் படைத்த உயிர்களை மீள சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அழைக்கின்றார் எனின் இடையில் ஜயர் அதனை மந்திரத்தால் மாற்றியமைக்கலாம் எனில் ஜயரே கடவுளைவிடச் சக்தி படைத்தவராகிறார் அல்லவா? அப்படியாயின் ஜயராலே இறப்பைக்கூட தடுக்கமுடியுமல்லவா? மதங்களின் சடங்குகள் மக்களினது அறியாமையில் மேல் கட்டமைக்கப்பட்டவை. கிறிஸ்துவ பைபிள் கடவுள் முதலில் ஆணைப்படைத்தார். பின்னர் ஆணின் விலா எலும்பிலிருந்து பெண்ணை உருவாக்கினார் என்கின்றது. அடேயப்பா ஆணைப் படைக்கத்தெரிந்த கடவுளுக்கு பெண்ணைச் சுயமாக படைக்கத் தெரியாமல் போய்விட்டதா? ஆணின் விலா எலும்பு தேவைப்படுகிறதா?

ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் சாதிய சடங்குகளாகவும், இது இன்னமும் நடந்தேறுகின்றது. கடவுளுக்கான மந்திரம் என்ற பெயரில், சமஸ்கிருதம் என்ற மொழியால், எம்மை ஏமாற்றுகின்ற மோசடியும் இங்கு தான் அரங்கேறுகின்றது. இதை அங்கீகரிக்கத்தான் முடியுமா? மனிதன் பகுத்தறிவுள்ளவன். தன் செயலுக்கு அறிவுபூர்வமாக விளக்கம் கூறக் கூடியவன். அப்படியாகவா இன்று நாங்கள் வாழ்கின்றோம்? எதற்கும் விளக்கம் கொடுக்க முடியாத அறிவிலியாக, சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு தலையாட்டும் மந்தைகளாக வாழ்வதா மனிதத் தன்மை?