பாசிசமும் முதலாளித்துவமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்ற அதேநேரம், பாசிசமானது மேலெழும் போது முதலாளித்துவத்தின் ஒரு கூறு அதை எதிர்க்கின்றது. அதாவது எந்த வடிவத்தில் சுரண்டுவது என்பதில், முதலாளித்துவ வர்க்கத்தில் இருக்கக்கூடிய முரண்பாடுகளே இந்த பாசிச எதிர்ப்பு அரசியலுக்கான அடிப்படையாகும்.
இந்தச் சூழலில் பாசிசத்தை எதிர்த்து இரண்டு வர்க்க அணிகள் உருவாகின்றது.
1.முதலாளித்துவத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் பாசிச எதிர்ப்பு அரசியல்
2.முதலாளித்துவத்துக்குள்ளான முரண்பட்ட சுரண்டும் வர்க்கத்தின் பாசிச எதிர்ப்பு அரசியல்
முதலாளித்துவ பாசிச எதிர்ப்பு அணியானது பாட்டாளி வர்க்க பாசிச எதிர்ப்பு வர்க்க அரசியலை இல்லாதாக்கி, முதலாளித்துவத்தை தக்கவைக்க முனைகின்றது. இதனால் முதலாளித்துவ பாசிச எதிர்ப்பு அணி இரண்டுக்குமிடையிலான அரசியல் வேறுபாட்டை, மறுதளிக்கத் தொடங்குகின்றது. இதை புலி எதிர்ப்பு அரசியல் பின்னணியில் காணமுடியும்.
இந்த முதலாளித்துவ பாசிச அரசியல் அடிப்படையிலிருந்து தான், சுவாஸ்திகாவுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை பற்றிப் பேசுகின்றனர். இதன் மூலம் தம்மை முற்போக்குவாதிகளாக, இடதுசாரிகளாக வேசம் போட்டுக்கொள்வதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை கருவறுக்கின்றனர்.
இன்று இந்த அரசியலை தெளிவாக இனங்கண்டு கொள்வதாயின், அவர்களின் நடைமுறையிலும், சிந்தனைமுறையிலும் இருந்து இனம் காணமுடியும். அதாவது ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைத்து, செயற்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.
பாசிசம் குறித்து இரு வேறு அணுகுமுறையை, வர்க்க அடிப்படையில் இருந்து இனம் காணமுடியும். பாசிசத்தின் பின் இருக்கக்கூடிய வர்க்க நலனை, முதலாளித்துவ பாசிச எதிர்ப்பு பேசமறுக்கின்றது. சுவாஸ்திகாவுக்கு மறுக்கின்ற கருத்துச் சுதந்திரத்தின் பின்னணியில், இருக்கக்கூடிய வர்க்க மற்றும் வெள்ளாளிய சிந்தனையிலான சமூக அமைப்பே காரணம் என்பதை முதலாளித்துவ பாசிச எதிர்ப்பு மக்களுக்கு கூறுவதில்லை. அதை மூடிமறைத்து பாசிசத்துக்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை மடைமாற்றி தடுக்கின்றனர். இதனால் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடன் தம்மை அரசியல்ரீதியாக இணைத்துக் கொண்டு செயல்படுவதில்லை. புலியல்லாத அரசியல் பின்னணியில் இதை இனம் காணமுடியும்.
பாசிசத்தின் அரசியல் அடிப்படையே வர்க்கப் போராட்டம் தான். எப்போதெல்லாம் வர்க்கப்போராட்டம் கூர்மையடைகின்றதோ, அப்போது அங்கு போலி முதலாளித்துவத்தின் ஜனநாயக பாசாங்குத்தனத்தை கைவிட்டு பாசிசமாக மாறுகின்றது. அதாவது முதலாளித்துவத்துக்கு எதிரான வர்க்கப்போராட்டமும், ஜனநாயகக் கோரிக்கைகளும் எழுகின்ற போது, அதை ஒடுக்க பாசிசம் அரங்கில் நுழைகின்றது.
இதுதான் ஈழப்போராட்டத்தின் அரசியல் அரிச்சுவடி. இந்த வர்க்கக் கண்ணோட்டத்தை கைவிட்டு, பாசிசம் குறித்து முன்வைக்கும் அரசியல் ஒடுக்கும் முதலாளித்துவமே. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான முதலாளித்துவ பாசிச எதிர்ப்பு நாடகங்கள்.
இதன் போது முதலாளித்துவ ஜனநாயகம் முற்போக்கானதாக வேசம் போடுவதுடன், கருத்து சுதந்திரம் குறித்து வாய்பிளக்க வம்பளக்கும். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து, பாசிசத்தை எதிர்ப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைதல் என்பது, வர்க்க அரசியலை பேசவேண்டும்.
ஈழத்தின் புலிப் பாசிசம் குறித்து பேசுகின்ற, கண்டிக்கின்ற .. அரசியல் பின்னணியானது, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பதில்லை. மாறாக முதலாளித்துவத்தை முன்னிறுத்தும் ஒடுக்கும் வர்க்கத்தை சார்ந்திருப்பதைக் காணமுடியும்.
வர்க்க அடிப்படையிலான முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடாத ஜனநாயகக் குரல் போலியானது. இந்த வகையில் சுவாஸ்திகாவுக்காவின் கருத்துச் சுதந்திரத்தை மறுதளித்த தமிழ் பாசிச அரசியல் பின்புலத்தில், அதற்கு எதிரான குரல்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்ததாவெனின் இல்லை. மாறாக ஒடுக்கும் முதலாளித்துவ சிந்தனைமுறை சார்ந்தது.
சுவாஸ்திகாவுக்கு மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான குரல்களானது முதலாளித்துவ சிந்தனையாக இருப்பதுடன், அந்த அரசியல் அணி புலியெதிர்ப்புவாதிகளையும், அரசு ஆதரவுவாதிகளையும், ஏகாதிபத்திவாதிகளையும், பிரமுகத்தனங்களையும்.. அடிப்படையாகக் கொண்டது. இந்த அணி ஒடுக்கப்பட்ட மக்களுடன் தம்மை அரசியல்ரீதியாக இனம் காட்டாத, ஒடுக்கும் முதலாளித்துவத்தை முன்னிறுத்தும் அணியாக இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம். இதற்குள் தங்கள் போலித்தனத்தையும் - வேறுபாட்டையும் மூடிமறைத்தபடி, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றி பிழைக்க - தம்மை முற்போக்காக காட்டுவதுடன் -. இடதுசாரியாக அடையாளப்படுத்த முனைகின்றனர். புலியல்லாத கருத்தியல் தளத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த வக்கிரமே புரையோடிக் கிடக்கின்றது.
எல்லா ஒடுக்குமுறைகளையும் எதிர்க்காது, தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்று கூறி போட்ட தமிழ் தேசிய முற்போக்கு வேசங்கள் எப்படிப்பட்டதோ, அதேபோன்றுதான் சாதியவொடுக்குமுறை, பிரதேசவொடுக்குமுறை, ஆணதிக்கவொடுக்குமுறை தொடங்கி தனிமனித கருத்துரிமை வரை போடுகின்ற முற்போக்கு வேசங்கள், வர்க்க ஒடுக்குமுறையை எதிர்க்காது தம்மை முன்னிறுத்துகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் - அவர்களின் அவலங்களையும், அரசியல் ரீதியாக - நடைமுறை ரீதியாக அணுகாத அரசியல் வங்குரோத்து தளத்தில் இருந்துகொண்டு, அனைத்து ஈழத்து பிழைப்பு வாதம் அரங்கேறுகின்றது.
வர்க்க சமூகத்தில் நடுநிலை என்பது ஒடுக்கும் வர்க்கம் சார்பானது. வர்க்க அமைப்பில் வாழ்ந்தபடி, ஒடுக்கப்பட்ட வர்க்;கத்தை சாராது கருத்துச்சொல்லும் அறிவுஜீவிகளின் அலங்கார வார்த்தைகள், புலியெதிர்ப்பு அரசியலுடன் பின்னிப்பிணைந்து - தமிழ் சமூகத்தில் ஒட்டுண்ணியாக மாறியிருகின்றனர்.
வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராத இந்த அரசியல் - இலக்கிய மோசடியானது, அறிவுஜீவிகளாக தங்களைத் தாங்கள் முன்னிறுத்திக் கொள்ளும் பிழைப்பாக மாறியிருக்கின்றது. முதுகு சொறிந்து விடுவது தொடங்கி, அதுவே கூட்டாக கூடி தண்ணி அடிப்பதில் அரசியல் முடிகின்றது. இந்த முற்போக்குத்தனம் என்பது, புலிகளை மிஞ்சிய அரசியல் அழித்தொழிப்பாகும்.
புலியெதிர்ப்பு, புலி நடவடிக்கையை விமர்சிப்பது, அத்துமீறல்களை கண்டிப்பதன் … மூலம் போடுகின்ற முற்போக்கு வேசம், ஒடுக்கப்பட்ட சமூகத்தை மோசடி செய்வதே. புலிகளை கருத்தியல் ரீதியாக அழித்தொழிக்க வக்கற்று உடல் ரீதியாக அழித்ததை, புலியல்லாத முதலாளித்துவ முற்போக்குகள் கருத்தியல் மூலம், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகக் கூறுகள் வளர்வதை கருவிலேயே அழித்தொழிக்கின்றனர். இதுதான் இன்று புலியல்லாத அரசியலாகவும் - இலக்கியமாகவும், பிரமுகர்தன பிழைப்புவாதமாகியுமுள்ளது.
08.11.2023
சுவாஸ்திகாவின் கருத்துரிமை மீது : பாசிசத்துக்கு எதிரான முதலாளித்துவ பிழைப்புவாதிகள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode