யாழ் பல்கலைக்கழக நிகழ்வில் கருத்துரைக்க வந்த சுவாஸ்திகாவுக்கு, கருத்துரைக்கும் ஜனநாயக உரிமையை மறுத்திருக்கின்றனர் தமிழ் தேசிய லும்பன்கள்.
புலிப் பாசிசமும் - பாசிச நடைமுறையும் சிந்தனையும் புலியுடன் அழிந்துவிடவில்லை, மாறாக இச் சமூகத்தில் நஞ்சாக மாறி புரையோடிக்கிடக்கின்றது. சமூகத்தில் இருந்து நாற்றமெடுக்கின்ற அதேநேரம், ஜனநாயகத்தின் துளிர்களையே கொத்திக் குதறுகின்றது.
கடந்த வரலாற்றில் தமிழ் மக்களின் இருப்பையும் - வாழ்வையும் அழித்துவிட்ட புலிப் பாசிசமானது, தொடர்ந்தும் எஞ்சிய மானிடக் கூறுகளை வேட்டு வைக்கின்றது.
சுவாஸ்திகா புலிகள் குறித்து முன்வைத்த கருத்து தவறானது என்று கருதும் ஒருவர், அதை மறுத்து விவாதிக்க முடியும். அதுதான் ஜனநாயகம். இது மட்டும் தான் பகுத்தறிவுடன் கூடிய, நேர்மையான செயலாக இருக்கமுடியும்.
கருத்தை எதிர்த்து விவாதிக்க முடியாத தற்குறிகள், சமூகத்தின் ஜனநாயகத்தை மறுப்பதுடன், கருத்துக் கூறும் மானிட உரிமையை கேலிசெய்து விடுகின்றனர். அடிப்படையில் ஜனநாயகத்துக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதன் மூலம், தங்கள் பாசிச நடத்தைகளை முன்னிறுத்துகின்றனர்.
இத்தகைய ஜனநாயகவிரோத நடத்தைகள் மூலம், சுவாஸ்திகா முன்வைத்த "புலிகள் பாசிஸ்சிட்டுக்கள்" என்ற கூற்றை தாமே மெய்ப்பித்துவிடுகின்றனர்.
தமிழ்மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் பாசிச செயற்பாடுகளே, தமிழ்மக்களின் உரி;மையை பெற்றுத்தரும் என்று கருதுகின்ற - நம்புகின்ற அளவில், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சமூகம் குறித்த பார்வை இருக்கின்றது என்றால், அவர்களின் அறிவும் - அறியாமையும் எப்படிப்பட்ட கிணற்றுத் தவளைகளாகவே இருக்கின்றனர் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பெயரில் செயற்படும் தமிழ் தேசிய பாசிச லும்பன்கள், சமூகத்தின் உயிர் மூச்சுக்களை நெரித்துக் கொல்வதன் மூலம், ஜனநாயக சமூகத்துக்கு எதிரான சமூகவிரோதிகளாக தம்மை அடையாளப்படுத்துகின்றனர்.
எப்படி புலிகள் துப்பாக்கி மூலம் தமிழ் சமூகத்தை சுடுகாடாக்கினரோ, அதையே யாழ் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற தமிழ்தேசிய லும்பன்களும் தொடர்ந்து செய்கின்றனர்.
01.11.2023