Language Selection

திரவியராசா பரந்தாமன், உறவுமுறையில் எனது உடன்பிறவாத சகோதரன். இளமையில் தன் தந்தையை இழந்திருந்ததனால் எனது தந்தையை பெரியப்பா எனவும் எனது சகோதரர்களை தனது சகோதரர்களாக வரித்துக் கொண்டவன். நன்மை தீமைகள் எல்லாவற்றிலும் உடனிருந்தவன்.
 
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் கணித விஞ்ஞான உயர்தர வகுப்பில் எனது அடுத்த ஆண்டு வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த காலம் முதலாய் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டதன் வழி எங்கும் என்னோடு சயிக்கிளில் அலையும் தோழனுமானான். கல்லூரிக்கு வெளியில் அது காந்தீய அமைப்பின் தொண்டனாக அவனையும் என்னையும் இணைத்தது. இருவருமாக காந்தீய நிறுவனத்தில் நிரந்தரமாக இணைந்து வேலை செய்யப் புறப்பட்டு இரணை இலுப்பைக் குளத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருந்த நியாயவிலைக் கடை ஒன்றில் பொறுப்பாளர்களாக அனுப்பப்பட்டோம். ஆனால் அத் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விட்ட மாதிரி எங்களை இறக்கி விட்டு விட்டு போனவர்கள் (அமிர்தலிங்கம் என்பதாக ஞாபகம்) நியாயவிலைக் கடைக்கு சரக்கு விநியோகத்தை அனுப்பவில்லை. பொருட்கள் தீர்ந்து கொண்டிருந்தது. உணவுக்கு எங்கே போவது என்று தெரியாத நிலையில் எஞ்சியிருந்த பச்சைப் பயற்றை தனியே அவித்து பசியாறினோம். தேநீர் தயாரிப்பதற்கு சீனி கூட இருக்கவில்லை. கடும் பனிக் குளிரில் ஓலைக் கொட்டகைக்குள் குளிரில் ஒடுங்கி இரவில் தூக்கம் இன்றி பல இரவுகளைக் கடந்தோம். என்ன செய்வது என்றறியாத நாங்கள் இருவரும் பசியினாலேயே இறந்து போவதா என்றெண்ணி இறுதியில் தாக்குப்பிடிக்க முடியாமல் வவுனியா நகரத்தில் இருந்த காந்தீய காரியாலயத்துக்கு ஒருவாறு நடந்தும், வரும் வழியில் டிரக்டர்களையும் மறித்து அதன் மூலமும் வந்து சேர்ந்தோம்.
 காந்தீயக் காரியாலயம் வந்து சேர்ந்தது எம்மை காந்தீயத்தின் தொண்டராக இணைத்து அழைத்து வந்த சந்ததியாரை சந்தித்து எமது நிலையை விளக்கவென. ஆனால் எங்களை ஒரு நந்தி வழிமறித்தது. இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் காந்தீய குடியிருப்புகளில் தொண்டர் படையாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் படையை எனது பொறுப்பில் நான் அழைத்து வந்து பாலமோட்டை செல்வாநகர் மற்றும் செட்டிகுளம் கந்தசாமி நகர் போன்ற இடங்களில் பணிகளை செய்திருந்தேன். அதனால் அறிமுகமான காந்தீய முகங்களில் எதுவாகவும் இந்த முகம் இருக்கவில்லை. புது முகம் ஒன்று தன்னை அறிமுகப்படுத்தியது. அது வேறு யாருமல்ல. அந்நாள் காந்திய நிர்வாகத்திலும் பின்னாளில் புலிகளில் பிரமுகருமாகவும் இருந்த பேபி சுப்பிரமணியம்.

«யார் நீங்கள்»
«நாங்கள் காந்தீயப் பண்ணையிலிருந்து வருகிறோம்.»
«உங்களுக்கு என்ன வேணும்»
«நாங்கள் சந்ததியார் மூலமாகவே காந்தீயப் பண்ணைக்கு வந்தோம். அதனால் அவருடன் கதைக்க வந்திருக்கிறோம்.»

பேபி சுப்பிரமணியத்தின் முகம் சட்டென மேலும் இறுகியது.

«அந்தச் சந்ததியார் தான் இங்கு எங்களுக்கு பிரச்சனையே. அவனை நம்பியா வந்தீர்கள்?»

என பல்லை நறுவி நறுவி பேபி சுப்பிரமணியம் கதைத்தபோது கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.

உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருக்குமாற் போல் இருந்தது. உள்ளே கூட்டத்தில் ஏதோ தகராறு என ஊகிக்க எமக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர் போல அங்குமிங்குமாக ஆத்திரத்தோடு நடந்து கொண்டிருந்தார் பேபி சுப்பிரமணியம்.

கைகலப்பாக கூட இருந்திருக்கலாம். அன்றிருந்த பருவத்தில் நாமிருவரும் அதிர்ந்து போனோம். சூழலை புரிந்து கொண்ட எமக்கு ஒரேயொரு தெரிவு தான் இருந்தது. கடையின் கணக்கு வழக்கையும் பணத்தையும் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்புவது. பிற்பாடு சந்ததியாரை சந்தித்து மேற்கொண்டு ஆவன செய்வது.

இந்த முடிவோடு வவுனியாவிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி பஸ்சில் பயணமானோம்.

இதற்கு அப்புறமாக காந்தீயப் பண்ணைகளில் கைதுகளும், குடியிருப்புகளில் போலீஸ் கெடுபிடிகளும் கைதுகளும் அதிகமாகி இறுதியில் காந்திய நிறுவனர் டேவிட், மற்றும் டொக்டர் இராஜசுந்தரம் போன்றோர் கைது செய்து சிறைப்படுத்தப்படுகிறார்கள். சந்ததியார் தொடர்பு அற்றுப் போகிறது.

பல்கலைக்கழக விரிவுரையொன்றுக்கு விரிவுரை மண்டபத்திற்கு உள் நுழைய மண்டபத்துக்கு வெளியில் நின்று கொண்டிருந்த மாணவர்களின் நீண்ட வரிசையொன்றில் நானும் நின்றிருந்தேன். அவ்வரிசையில் எனக்கு முன்னதாக கொக்குவில் எஸ்.எம் நின்று கொண்டிருந்தார். என்னோடு விடுதலைப் போராட்டம் பற்றிய அளவளாவிக் கொண்டிருந்தவர் எனக்கு காந்தீயத்தோடும் சந்ததியாரோடும், சோதீஸ்வரனோடும் (கண்ணன்)) இருந்த தொடர்பு பற்றி பேசத் தொடங்கினார். அவருக்கு தகவல் யாரோ தந்திருக்கிறார்கள்.

தனி ஈழம் பற்றி அவர் தனது பேச்சை தொடர்ந்த போது, நான் அவருக்கு எனக்கு நிறைய சகோதரிகள் இருப்பதாலும், பல்கலைக்கழகம் வரை கல்வி பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்த ஒரு நல் வாய்ப்பு, அதன் மூலம் வரக்கூடிய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் கொண்டே எனது சகோதரிகளுக்கான சீதனத்தை எனது குடும்பம் எதிர்பார்த்திருக்கிறது, எனவே இதிலெல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை என்றேன். தனி ஈழம் வந்தால் சீதனப் பிரச்சனை இல்லாமலா போய்விடும் என்றேன்.

"அப்படியா? உங்கள் வீட்டில் மட்டுமா இந்தப் பிரச்சனை. இது ஒரு சமூகப்பிரச்சனை. உழைத்துக் கொடுத்து ஒரு வீட்டு சீதனப் பிரச்சனையை மட்டும் சிலவேளை தீர்க்கலாம். அதுவும் கூட நிச்சயமில்லை. அதற்கும் உடனடியாக தொழில் வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே. போதிய சம்பளம் கிடைக்க வேண்டுமே. அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டாலும் சீதனம் என்பது சமூகத்திலிருந்து ஒழியப் போவதில்லையே. சீதனத்தை சமூகத்திலிருந்து ஒழித்துக்கட்டுவதா அல்லது உழைத்துக் கொடுத்து அதனை தொடர்ந்தும் சமூகத்தில் நிலைத்து வைத்திருப்பதா?
இது மட்டுமல்ல இவை போன்ற சமூகப் பிரச்சனைகளை உடைத்தெறிந்து அதற்குப் பதில் புதிய சமூகத்தை நிறுவும் வழியில் தான் ஈழப் போராட்டம் அமையும். இது பற்றி மேலும் அறிவதாயின் பாசறை வகுப்புகள் நடாத்தப்படுகின்றன. பங்கு கொள்வதற்க ஏற்பாடு செய்கிறேன்"

என்றார்.

கொக்குவில் பிரதேசத்தில் (கேணியடியில்) ஜே.வி.பியில் இருந்து பிரிந்து வந்த தோழர் தங்கராசாவின் பாசறை வகுப்புகள் எங்களுக்கு ஆரம்பிக்கப்படுகின்றன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சத்;தியமூர்த்தி(எஸ்.எம்) நேசன், விபுல், பாலா, வினோத் (இன்னும் பல பேர், பெயர்கள் ஞாபகம் இல்லை) யாழ்ப்பாண மாவட்டக் குழு இயங்க ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் யாழ் மாவட்ட தலைமைக் குழுவில் அங்கம் பெறுகிறார்கள்.

வட்டுக்கோட்டைத் தொகுதி எனது பொறுப்பில் வருகிறது. ஆனால் சுழிபுரம் சுந்தரம் படைப்பிரிவு தனியாக கையாளப்படுகிறது.

இந்தக் கால கட்டத்தில் பரந்தாமன் எனது பிரச்சார நடவடிக்கையோடு இணைகிறார்.
 
மட்டக்களப்பு சிறையுடைப்பு துண்டுப்பிரசுரத்தை அச்சேற்றிய அச்சு இயந்திரம், ஊரடங்குச் சட்டமும் மின்வெட்டும் அமுலாக்கப்பட்டிருந்த வேளை பரந்தாமனின் கால்களால் இயக்கப்படுகிறது. சயிக்கிள் பல மைல்கள் கால்களால் மிதிக்கப்படுகிறது. பரந்தாமனின் வீடு பல பேர் சந்திக்கும் கூடமாக மாறுகின்றது.

உள்ளுரில் வரவேற்பு மாறுகிறது. ஊரைக் கெடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போக்கில் பார்க்கப்படுகிறோம். அன்றிருந்த ஐம்பெரும் இயக்கங்களில் புளட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் சமூக விடுதலைத் தத்துவங்களை தலையில் காவினாலும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகினோம். பின்னாளில் ஆயுதங்களைக் கையில் காவிய, தனித் தமிழ் ஈழம் அமைத்துத் தருவோம் வாருங்கள் என்ற புலிகள் ஏனோ போற்றப்பட்டவர்களானார்கள். இன்றும் நாங்கள் துரோகிகள் தான்.

காலம் உருண்டோடுகிறது. கழகமும் மூச்சில் வளராமல் வெறும் வீச்சில் வளர்கிறது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வரலாறு என பல பக்கங்களாலும் எழுதப்படுகின்ற வரலாறு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதன் உள்ளீடான முரண்பாடுகளும் தெரிந்திருக்கும்.

இந்த முரண்பாடுகளோடு என்னோடு சேர்ந்து பரந்தாமனும் தன்னை விலத்திக் கொண்டு காலம் கழிகிறது.

மறுபடியும் மாணவர் அமைப்பில் எனது பயணம். தொட்ட குறை விட்ட குறையாக பரந்தாமனும் மீண்டும் சயிக்கிள் மிதிக்கிறார்.

இன்னொரு பக்கம் பாலாவும் சயிக்கிள் மிதிக்கிறார். அந்த சயிக்கிள் பாரில் வெள்ளை வெளேரென ஒருவரை அவர் ஏற்றி வருகிறார் வட்டுக்கோட்டையை நோக்கி.

பரந்தாமனும் நானும் பறக்கிறோம் பல வீடுகள் தேடி.

ஏனெனில் வந்திருப்பவர் உயிர் நமது கையில்.

எந்த வீடாவது தஞ்சம் தருமா என தேடுகிறோம்.

நல்ல வேளையாக பரந்தாமன் உறவினர் ஒருவரின் வீடு கட்டி முடிக்கப்பட்டு ஆனால் யாரும் இன்னும் குடிவராத நிலையில் அதன் திறப்பு கழக ஆதரவாளர் ஒருவர் கையில் இருப்பதால் ( அவரும் அன்று பல்கலைக்கழக மாணவர்- தர்மலிங்கத்தின் (தீப்பொறி) சக மாணவர்) அவர் அவ் வீட்டினை திறந்து விடுகிறார்.

இப்போது புளட்டில் இருந்து தீப்பொறி வெளியேறி இருந்த காலம். மாணவர் அமைப்பு இன்னும் மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. புளட்டுக்கும் மாணவர் அமைப்பின் பல தோழர்களுக்கும் எட்டாப் பொருத்தம் ஏற்பட்டிருந்தது.

அன்று எனக்குப் பாதுகாப்புத் தேட வேண்டிய நிலையும் எங்கும் உளவுக் கண்கள் எங்களை நோட்டமிட்டபடியும் இருந்ததால், அந்த வீடு பாதுகாப்பற்றதாக நாம் உணர்ந்தோம்.

மீண்டும் இன்னுமொரு பாதுகாப்பான இடம் தேடினோம். அந்த தற்காலிக வீட்டிலிருந்து இரவிரவாக இன்னுமொரு வீட்டுக்கு, மனித சந்தடி சஞ்ஞாரமற்ற, பிரதான பாதைகளிலிருந்து குச்சொழுங்கைகள் பல தாண்டி சென்றால் தனித்து நிற்கும் ஒரு வீட்டுக்கு இடம் மாற்றும்படி பாலாவுக்கு செய்தி பரிமாறப்பட்டது.

பாலா மீண்டும் சயிக்கிளில் தோன்றினார்.

இடம் மாற்றப்பட்டது. எனக்கும் பரந்தாமனுக்கும் நிம்மதிப் பெரு மூச்சு வந்தது. ஏனெனில் பாதுகாக்கப்பட வேண்டியவர் ஒன்றல்ல பல பகையாளிகளைக் கொண்டவர்.

புளட்டால் தேடப்பட்டவர். புலிகளின் துப்பாக்கிக்கும் வேண்டப்பட்டவர்.

ஆனால் அவர் பாதுகாப்பு பெற்றுக்கொண்ட வீடோ அவரை யார் எவர் என்ற கேள்வி இல்லாமல் ஏற்று காத்துக் கொண்டது. ஆனால் அவ்வீட்டின் ஒரு மகன் புளட்டின் முரண்பாட்டின் மறுபுறத்தில் உமாமகேஸ்வரனின் விசுவாசியாகவே அரச ஆதரவுடன் புலிகளால் வன்னிக்காட்டுக்குள் கொல்லப்படும் வரை இருந்தவர்.

மற்றைய மகன் தான் தேசம்செற் ஜெயபாலன்.
 
பரந்தாமன் என்னுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட இந்த அதீதப் பிரயத்தனத்தின் காரணமாகவும், ஜெயபாலன் குடும்பத்தினரின் இனிய ஆதரவினாலும் அச்சப்படாத தன்மையினாலும் குறிப்பிட்ட காலம் வரை பொல்லாங்கு ஏதும் இன்றி அன்று புகலிடம் பெற்றுக் கொண்டவர் தான் ஜான் மாஸ்ரர்(தீப்பொறி).

என்னோடு அடிக்கடி மாணவர் அமைப்பின் தோழர் ஒருவர் வீட்டுக்கு வந்து பழகியதால், அத் தோழரின் தோழர் பரந்தாமனை தனது இணையராக்கிக் கொண்டார்.

திருகோணமலைக்கு இடம்பெயர்ந்து திருகோணமலை உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் வேலையில் இருந்தார்.

ஒவ்வொரு தடவையும் இலங்கைப் பயணத்தின் போதும், நான் சென்று சந்தித்து வந்த பரந்தாமன் நோய்கள் இன்றி இருக்கவில்லை. நோயோடு போராடி மரணித்திருக்கிறார் உறக்கத்தில்.

அஞ்சலிகள்.