கடந்த காலத்தில் போட்டுத் தள்ளியவர்கள் முன்வைத்த அரசியல் அவதூறுகளான பிரச்சார அரசியல். அன்று அவதூறுகள் மூலம் யாரை, ஏன், எதற்காக போட்டுத் தள்ளினர் என்பதை ஆராய்ந்தால், இன்றைய அவதூறு அரசியலை இனம் கண்டு கொள்ளமுடியும்.
முன்வைக்கும் அவதூறுகளுக்கு ஆதாரம் கோட்டால், ஒருநாளும் பதில் இருக்காது. கிட்லரின் பிரச்சார மந்திரி கோயபல்ஸ் கூறியது போல், ஒரு பொய்யை மீள மீளக் கூறுவதன் மூலம் பொய்யை உண்மையாக்குவது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு இப்படித்தான் மக்களை தயார்ப்படுத்தினார்கள். ஜெர்மனிய பாராளுமன்றத்தை எரித்த நாசிகள், அதை பிறர் மீது குற்றம் சாட்டி ஒடுக்கினர்;. இது வரலாறு.
ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியபடி அன்னிய சக்திகளின் கைப்பொம்மையாக இயங்கிய இயக்கங்கள், தாம் அல்லாத மற்றைய இயக்கங்கள் பற்றியும், தம் இயக்கத்திற்குள் கேள்வியை எழுப்புபவர்களுக்கு எதிராக, பிரச்சார அரசியலாக செய்தது அவதூறுகளே. அதில் ஊறித் திளைத்தவர்கள், இன்றும் அதையே அரசியலாக கட்டமைக்கின்றனர்.
தமிழ் தேர்தல் அரசியலில் "துரோகி" என்று, தாம் அல்லாத மாற்று அரசியலை அவதூறு மூலம் முத்திரை குத்திய அரசியலே, இன்று வரை காணப்படுகின்றது. இது எமது சமூகத்தில் ஜனநாயக மறுப்பிற்கான அரசியல் சிந்தனைமுறையாக காணப்படுகின்றது. அன்று தமிழ் தேசிய தேர்தல் அரசியலில் தமது போட்டியாளரை ஒழித்துக்கட்ட கையாண்ட அரசியல் "துரோகி" என்ற, அவதூறு அடையாளம். இதுதான் பின்னால் இயக்க அரசியலிலும் கையாளப்பட்டது. இன்றுவரை தமிழ் அரசியலை வழிநடத்துவதும், இந்த அரசியல் தான். தமிழ் ஊடகவியல் கூட இப்படித்தான் புளுத்துக் கிடக்கின்றது.
அரசியல்ரீதியாக விவாதிக்க முடியாத, வெற்றிகொள்ள முடியாத போது, அவதூறு தான் உதவுகின்றது. "துரோகி" என்ற சொல் மூலம் நடத்திய இந்த அவதூறு அரசியலே, முள்ளிவாய்க்கால்களுக்கு இட்டுச் சென்று தன்னைத்தான் பலி கொடுத்தது.
தான் அல்லாத, தன் தலைமை அல்லாத, தனக்குள் அடங்காத.. அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலைக்கு எற்ப, சமூகத்தை கட்டமைக்கக் கையாண்ட வழிமுறைகளில் அவதூறுகளுக்கு முக்கிய பங்குண்டு. அவதூறுகளை கட்டமைத்து கொன்றவர்கள், பிரச்சார அரசியலில் முன்னின்று செயற்பட்டவர்களே. கொலைகளை முன்னின்று செய்த அலுக்கோசுகள், தங்கள் கொலை நியாயமென்று அரசியல்ரீதியாக பிரச்சாரம் செய்யவில்லை. இனவொடுக்குமுறையைக் கடந்து மக்கள் முன்வைத்த இயக்க அரசியல் அவதூறுகளே. என்ன வர்க்க விடுதலையும், பெண்விடுதலையுமா .. பேசினார்கள்!?
இப்படி பிரச்சாரம் மூலம் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியவா த அரசியலில் "துரோகி" என்ற அவதூறு மூலம், ஒரு மனிதனை கொன்றுவிடும் அளவுக்கு, அவை சமூக அங்கீகாரம் பெற்று இயங்கியது. அதே தொனிப்பொருளில் "துரோகி" என்ற சொல், தொடர்ந்து இயங்குகின்றது.
"துரோகி" என்று குற்றஞ்சாட்ட முடியாத இடத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள், பணமோசடிக் குற்றச்சாட்டுகள், சதிக் குற்றச்சாட்டுகள், அன்னிய கைக்கூலி குற்றச்சாட்டுகள், சமூக விரோதிகள் முதல் அரச உளவாளி, காட்டிக் கொடுப்பு, உளவு பார்த்தது .. என்று, தங்கள் அரசியல் எதிரிகளை குறிவைத்து குற்றஞ்சாட்டுவதும், தண்டிப்பதும், கொன்றுவிடுவதும் நடந்தேறியது. இதை நியாயப்படுத்த, குற்றம் சாட்ட, இதைப் பிரச்சாரம் செய்வதே இயக்கங்களின் அரசியலாக பரிணமித்தது. உள்ளியக்கப் படுகொலைகள் எல்லாம் இப்படி தான் நியாயப்படுத்தி அரங்கேறியது. வேறு வடிவங்களில் அல்ல. எங்கெல்லாம் இயக்க உட்படுகொலைகளும், பிற இயக்க படுகொலைகள் நடந்ததோ, அங்கெல்லாம் இந்தப் பிரச்சார பீரங்கிகளே முனைப்பாகச் செயற்பட்டனர். பரிசாகக் கிடைத்த பதவிகள், பட்டங்களுடன் .., தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் சமூக அங்கீகாரம் தேடினர்.
கடந்தகாலத்தில் "சமூகவிரோதி" என்று கூறி இயக்கங்கள் சுட்டுக் கொன்ற சில நூறு பேர் மேல் கட்டமைக்கப்பட்ட அனைத்தும், இது போன்று இட்டுக்கட்டப்பட்ட அவதூறுகளே. "அரச உளவாளி" "பிற இயக்க உளவாளி" என்று சித்திரவதை செய்யப்பட்ட சில நூறு சம்பவங்களின் பின்னணியில் இயங்கியது, இந்த அவதூறுகளே. ஒருவர், இருவர் சேர்ந்து விசாரணையையும் தண்டனையையும் வழங்கினர்;. இதுபோன்று அரசியலிலும் அரங்கேறியது. இப்படி அரங்கேற்றிய குற்றச்சாட்டுக்கு அடிப்படையும், ஆதாரங்களும் அவசியமற்றவை. அதை கேள்வி கூட கேட்க முடியாது. கேள்வி கேட்பது குற்றம். தவறான அரசியல் வழிமுறை என்று கூறுவது கூட குற்றம்;. இப்படி சிந்திப்பது, செயற்படுவது மரணதண்டனைக்குரியது, இதனால் பலர் மரணத்தை தழுவி இருக்கின்றனர். இதுதான் எங்கள் வரலாறு. இதற்காக மனிதனைச் சுற்றி சம்பவங்கள், நிகழ்ச்சியைக் கொண்டு புனைவது அல்லது கற்பனையில் புனைவதன் மூலம், அரசியல் அவதூறுகள் கட்டமைக்கப்பட்டன.அவதூறு என்பது எமது சமூகத்தில் சமூக வடிவமாக இயங்குகின்றது.
அரசியல் அவதூறுகள் தென்னாசிய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான அவதூறுக்கு நிகரானது. குறிப்பாக தமிழ் சமூகத்தில் ஒரு பெண் ஆணுடன் உரையாடுதல், ஆணுடன் சேர்ந்து சிரித்தல், ஆணுடன் சேர்ந்து பயணித்தல்.. இப்படி எதுவாக இருந்தாலும், அந்தப் பெண் பற்றி பொதுப் புத்தி அவளின் பாலியல் நடத்தை பற்றிய, ஒரு இழிவான அவதூறையே முன்வைக்கப் போதுமானது. இப்படித்தான் தமிழ் அரசியலிலும் அவதூறுகள் இயங்குகின்றது.
குறிப்பாக கடந்தகால இயக்கங்களின் அரசியல் இப்படித் தான் இயங்கியது. இயக்கங்களால் ஜனநாயகம் மறுதளிக்கப்பட்ட சூழலில், முரண்பாடுகள் என்பன புனையப்பட்ட அவதூறுகள் மூலமே தீர்த்துக் கட்டப்பட்டது. வேறு வடிவங்களில் அல்ல. குறிப்பாக ஜனநாயக ரீதியான விவாதங்கள் மூலம் அல்ல. இங்கு தீர்த்துக்கட்டும் அரசியல் என்பது அவதூறுகளை புனைவதும், அதை பூசிமெழுக அரசியலை முன்வைப்பதுமே.
இயக்கங்களில் தலைமை என்பது ஜனநாயகமற்ற சர்வாதிகாரத்தையும், அன்னிய நாடுகளின் நலனைப் பூர்த்தி செய்யும் தரகராகவே (ஏஜண்டாகவே) இருந்தது. இதை நியாயப்படுத்தவும் - பிரச்சாரம் செய்யும், பிரச்சார அரசியலே இயக்க அரசியலாகும். இதை கேள்விக்கு உள்ளாக்குபவர்களை கொன்று போட அலுக்கோசுகளைக் கொண்டதே, இயக்க அதிகார வடிவங்கள். இதன் கீழ் விடுதலை என நம்பிப் போராட்டச் சென்ற மனிதர்கள், மந்தைகளாக அணிதிரட்டப்பட்டு இருந்தனர்.
விடுதலை போராட்டத்தை நம்பி போராடச் சென்றவர்களைக் கடந்து, தலைமைகளும், தவறுகளை நியாயப்படுத்தி பிரச்சார அரசியலை செய்தவர்;களும், அலுகோசுகளும் .. இந்த சமூகத்தின் அவலங்களுக்கு காரணமானவர்களாக இருந்தவர்கள்.
தங்கள் மனித விரோதங்களை மூடிமறைக்க பிரச்சார அரசியலைச் செய்தவர்களே, ஒட்டுமொத்த சமூகத்தை தவறாக வழிநடத்துபவர்களாக இருந்து வந்துள்ளனர். இதை வரலாற்றின் பல இடங்களில் காணமுடியும்.
1979 புலிகளில் அரசியல் ரீதியான பிளவுடன் உருவான "புதியபாதைக்கு" எதிராக புலிகள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "எமது இயக்கத்தில் ஒரு சதிச் செயல் நடைபெற்று முறியடிக்கப்பட்டாலும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டே விட்டது. இதை நீக்கும் முகமாக எம்மியக்கத் தோழர்கள் அயராதுழைக்கின்றார்கள். பதவி ஆசை, தெளிவற்ற அரசியல்ஞானம், கட்டுப்பாட்டுக்கு அமையாத தன்மை, முதுகில் குத்தும் முயற்சிகள், இயக்கத் தோழர்களை குழப்பல், தனிமனிதனைச் சர்வாதிகாரியாகக் காட்டல், இயக்க நடவடிக்கைகளைப் பழித்தல், பயங்கரவாதிகள் என வர்ணித்தல் என்பன சதிச் செயல்களில் அமைந்திருந்தன" என்று, அரசிலற்ற லும்பன்தனமான தனிமனித சர்வாதிகார புலிகள் இயக்கமானது, துண்டுப்பிரசுரத்தை அரசியல் முலாம் பூசி வெளியிட்டது. இங்கு "புதியபாதை" அரசியல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்பதல்ல. மாறாக முரண்பாடுகள் எப்படி அவதூறுகள் மூலம் அரசியல் முலாம் பூசப்பட்டு, புலி அரசியல் மீள உருவாக்கப்பட்டது என்பது வரலாற்றின் முன் உதாரணமாகி இருக்கின்றது.
இதைத்தான் அடுத்தடுத்த இயக்க வரலாறுகள் எங்கும் காண முடியும்;. இப்படி இயக்கங்களை நியாயப்படுத்தும் பிரசார அரசியலில் இருந்தவர்களே, இன்றைய அவதூறுகளின் தந்தையர்களாக இருப்பதுடன், அதையே தொடருகின்றனர். அவதூறுகளை பூசிமெழுக மார்க்சியம். இதை புலிகளும் 1979 இல் "புதிய பாதைக்கு" எதிராக முன்வைக்கின்றனர். "..சில கலைப்புவாதிகள் இயக்கத்தை அடக்கும் சந்தர்ப்பவாதத்தை மேற்கொண்டனர். அதாவது வெகுசன அமைப்புடன் கூடிய இராணுவத்தை கட்டியெழுப்புவதை, புதிய அமைப்பாவதை இந்தியாவில் நின்ற கரிகாலனும் சதிகாரர்களால் வர்ணிக்கப்பட்ட கரிகாலனின் விசுவாசிகளும் தடைசெய்வார்கள் என்ற பிரச்சாரம், இயக்க ஆரம்ப காலங்களில் இயக்கத்தில் நடைபெற்ற களையெடுப்புக்களுக்கு கரிகாலனே காரணம் என்ற பிரச்சாரமும், இயக்கத் தோழர்கள் மத்தியில் விசமத்தனமாக பரப்பப்பட்டது." என்று கூறி, மார்க்சிய சொற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட புலிகள் இயக்கம், வரலாற்றில் எதைச் செய்தது என்பதை வரலாறு காட்டுகின்றது. இப்படி கரிகாலனை (பிரபாகரனை) ஜனநாயகவாதியாக, கூட்டுத்தலைமை முடிவுக்கும் - பொறுப்புக்கும் கட்டுப்பட்டவராக எழுதிய மைகள் காய முன்பே, பிரபாகரன் கோரிய சர்வாதிகாரத்தை புலிகள் அமைப்பு மறுத்த போது, பிரபாகரன் தனியாக வெளியேறி ரெலொவில் இணைந்தவர். இங்கு அவதூறு மூலம் முன்வைத்த பிரச்சார அரசியல் அம்மணமாகிய வரலாற்றைக் கொண்டதே எமது வரலாறு.
இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பிரச்சார அரசியலில்; இலக்கு வைக்கப்பட்டவர்கள், மக்கள் குறித்து சரியாகவோ பிழையாகவோ பேசியவர்கள். கேள்வியை எழுப்பியவர்கள். இவர்கள் மக்கள் குறித்து சரியாக பேசினார்களா என்பதல்ல, மக்கள் குறித்து பேசியவர்களை இலக்கு வைத்து அவதூறு பேசப்பட்டு, போட்டுத்; தள்ளப்பட்டனர்;. புலிகள் போட்டது போல், புளட்டால் போடப்பட்டனர்.
இப்படிப் போட்டு தள்ளும் இந்த அவதூறுப் பிரச்சார அரசியலில்; ஈடுபட்டவர்கள், அதே அடிப்படையில் அதை இன்றும் நியாயப்படுத்தும் அளவுக்கு, அதையே மீள முன்வைப்பதுடன் - புதிதுபுதிதாக அதையும் புனைகின்றனர்;
இப்படி கை, கால், காது, மூக்கு வைத்து புனையும் அரசியல் அவதூறுகளை ஆராய்ந்தால் பகுத்தறிவுக்கு முரணானது. அவதூறுகளுக்கு பொறுப்பெடுத்து சமூகத்திற்கு பதிலளிப்பதில்லை. அரசியல் ரீதியாக பார்த்தால் வலதுசாரிய சிந்தனை மற்றும் ஜனநாயக மறுப்பு நடைமுறைக் கண்ணோட்டமே.
அரசியலற்றுப் போன சமூகத்தில், நடைமுறையற்ற லும்பன் கொசிப்புகளாக அரசியல் மாறிவிட்ட இன்றைய சூழலில், அரசியல் கொசிப்பாக குறுகி இருக்கின்றது. சமூக வலைத்தளங்களின் ஒரு இரு வரிகளில் முடங்கிவிட்ட அரசியல் கண்ணோட்டத்தின் பின்னணியில், அவதூறு என்பது ஜனநாயகமாக வேசம் போட்டு குரைக்கின்றது. பெரும்பாலும் இத்தகைய அவதூறுகள் முதுக்கு பின்னால் கொசிப்பாக அரங்கேறி, அதுவே மெருகூட்டப்பட்டு நேரடியாக அரங்குக்கு கைகால் முளைத்து வருகின்றது. இதுவே மெருகூட்டப்பட்ட, அரசியலாக வருகின்றது.
இந்த அரசியல் என்பது இயக்க காலத்தில் மக்கள்நலன் சார்ந்த அரசியல் முரண்பாடும் - போராட்டமும் - இழப்புகளையும் மறுதளிக்கின்றதில் இருந்து தொடங்குகின்றது. இன்று இந்தியாவில் புலிகளை "இடதுசாரிய இயக்கமாக, மார்க்சிய இயக்கமாக, புரட்சிகர தேசியவாதிகளாக" கட்டமைக்கும் அரசியல் போல், ஈழத்தில் புலிகள் போல் தான் அனைத்தும் வலதுசாரிய இயக்கமாக கட்டமைக்கும் "இடதுசாரிய" அரசியல் போக்கும் காணப்படுகின்றது.
இத்தகைய அரசியல் பின்னணியில், அவதூறுக்கு எல்லாம் பதில் சொல்லுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்;. இதன் பொருள் பாதிக்கப்பட்ட ஒரு பெண், தான் "ஒழுக்கமானவள்" என்பதை நிறுவ வேண்டும் என்று கோரப்படுவதற்கு நிகரானது. அவதூறை பரப்பியவன் அதை நிறுவ வேண்டிய அவசியமற்றது என்றளவுக்கு, தமிழ் சமூகத்தின் அறமும், அரசியலும் செத்துக் கிடக்கின்றது.
சமூக அறமும், தனிமனித அறங்களும்,.. கூட, அவதூறுகளை கண்டு அஞ்சுகின்றது. இந்த அச்சம் அவதூறுக்குள்ளான மனிதனின் உறவில் இருந்து தன்னை துண்டித்து விடவும், அதில் இருந்து தப்பி ஓடவும் வைக்கின்றது. இதற்கு அரசியல் பயன்படுத்தப்படுகின்றது. அவதூறால் பாதிக்கப்பட்டவன்(ள்) பக்கம் நிற்க, மனிதர்கள் தயாராக இருப்பதில்லை. இது இன்றைய எமது சமூகத்தில் உளவியல்;.
ஒரு மனிதனின் சமூக நடைமுறை வாழ்வியலில் இருந்து அணுகும் சமூகக் கண்ணோட்டத்தை, தமிழ் சமூகம் இழந்து நிற்கின்ற அவலம் எங்கும் பிரதிபலிக்கின்றது.
தமிழ் சமூகத்தை பொறுத்தவரையில் அரசியல் என்பது வெறும் நுனிப்புல் தான். கடந்த இயக்க வரலாறு குறித்தும், அங்கிருந்த முரண்பாடுகள் - போராட்டங்கள் குறித்துமான ஒருங்கிணைந்த வர்க்க அரசியல் கண்ணோட்டம் கிடையாது.
வெறும் சொற்கள் மூலம், மேலெழுந்த வாரியாக பேசுவதும். சமூக வலைத்தளங்களில் வித்தை காட்டுவதன் மூலம், தங்கள் பொது விம்பத்தை கட்டமைப்பது நடந்தேறுகின்றது. சமூகத்தில் எந்த விடையத்தையும் எடுத்துப் பேச முடியாத அலுக்கோசுகளாக மாறி, அங்குமிங்குமாக சொறிவது நடந்தேறுகின்றது.
எமது சமூகத்தில் அவதூறை இலகுவாக விளங்கிக் கொள்ள, எமது சமூகத்தில் இத்தகைய அவதூறுகளை சந்திக்கும் மக்கள் கூட்டங்களே உதாரணமாக இருக்கின்றது.குறிப்பாக
1. பெண்கள் சார்;ந்து கட்டமைக்கும் அவதூறுகள் ஆணாதிக்க கண்ணோட்டம் சார்ந்து வெளிப்படுகின்றது. பெண்ணின் "நடத்தையைக் கொண்டு, பாலியலைக் கொண்டு, "உடையைக் கொண்டு"… பொத்தாம் பொதுவாக, பெண் அடையாளத்தை கொண்டு இலகுவாக அவதூறுகள் கட்டமைக்கப்படுகின்றது. பொதுவாக பெண்ணுடனான ஆண் முரண்பாடு, பெண் - பெண் முரண்பாடுகள் இத்தகைய ஆணாதிக்க அவதூறுகள் மூலமே, பெண்ணை இலக்கு வைத்து சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி தாக்குகின்றனர். இதுவே சாதாரண குடும்ப முரண்பாடுகளில் கூட, இத்தகைய அவதூறையே பெண் எதிர்கொள்;கின்றாள்;. பெண்ணை அடக்க, பெண் அடையாளம் மூலம் அவதூறு என்பது, ஒடுக்;கும் வழிமுறையாக இயங்குகின்றது. பெண் இந்த அவதூறுக்கு எதிரான சுய தற்காப்பு உணர்வுடன் தான், எப்போதும் இயங்க வேண்டியிருக்கின்றது. அவதூறானது தனிமனித சுதந்திரம், தெரிவு என்று எதையும் அங்கீகரிக்காது. அவதூறுக்கு அடிப்படைகள், ஆதாரங்கள் எதுவும் அவசியமற்றது. அவதூறு என்பது வெறும் வார்த்தையே. இந்த வார்த்தை மூலம் பெண்ணின் வாயை மூடிவிட முடியும், பெண் செயற்பாட்டை நிறுத்திவிட முடியும். இதுதான் எமது சமூகத்தில் ஆணாதிக்க வாழ்வியல் முறையாக இருக்கின்றது.
2. இது போன்று ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்;. ஒடுக்கப்பட்ட சாதிகள் குறித்து, சாதி வடிவில் இலக்கு வைத்த அவதூறுகள் சமூகத்தில் இயல்பாக இயங்குகின்றது. ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த மனிதனை, சாதிய அவதூறுகள் மூலம் இலகுவாக மடக்கி ஒடுக்கி அசிங்கப்படுத்தி விட முடியும். திறமையை மட்டம் தட்டி தாழ்த்தி விட முடியும். குற்றவாளியாக்கிவிட முடியும், சமூகத்தின் முன் கூனிக்குறுகி நிற்குமாறு கைகாட்டி விட முடியும்;. சாதி அடையாளமே, சமூகத்தின் முன் அவதூறாக இயங்குகின்றது. சுhதியச் சிந்தனை முறையே, அவதூறுகள் மூலமே - தன்னை மேலே முன்னிறுத்துகின்றது.
இப்படி அவதூறு என்பது தமிழ் சமூகத்தில், அமைப்பு வடிவம் பெற்று இயங்குகின்றது. அறிவியல்பூர்வமாகவும், பகுத்தறிவு ரீதியாக அணுகினால், அவதூறு பின்தங்கிய சமூகங்களில் அனைத்துமாக இருக்கின்றது. அரசியலில் இதுவே முன்னிறுத்தப்படுகின்றது.
கடந்த தமிழ் ஈழ தேசியவாத அரசியலில், முரண்பாடுகளுக்கு எதிராக அவதூறு என்பது, அடையாள அரசியலாகவே இயங்கியது. ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தை ஈ.பி. என்றும், அதை "ஈழத்துப் பள்ளர்" இயக்கம் என்று கூறுமளவுக்கு, சமூக அவதூறுகளும், ஒடுக்குமுறைகளும் 1980 களிலேயே கட்டமைக்கப்பட்டது. இதன் பின்னேயே பல்வேறு அவதூறுகள் கட்டமைக்கப்பட்டன.
ஈழ விடுதலை இயக்கங்கள் ஜனநாயகத்தை மறுத்த போது எழுந்த குரல்களை ஒடுக்க அவதூறுகளே முன்வைக்கப்பட்டு, கொன்று குவித்தனர். இப்படி இயக்கங்கள் இட்டுக்கட்டப்பட்ட அவதூறுகள் மூலம் ஒடுக்க, அதையே பிரச்சார அரசியலாக முன்னின்று வழி நடத்தியவர்கள், தொடர்ந்தும் அதே அவதூறுகள் மூலம் அரசியலில் இன்றும் இயங்குகின்றனர்.
புரட்சிகர அரசியலில் இயங்குபவர்களை ஒடுக்க, புரட்சிகர வேசம் போடுவது போல், தங்கள் அரசியல் வழிமுறைகளை மூடிமறைக்க, அதை பிறர் மீது குற்றஞ்சாட்டுவதே எதிர் புரட்சிகர அரசியலின் சாராம்சம்.
இந்த வகையில் கடந்த காலத்தில் ஒத்தோடும் பிரச்சார அரசியல் மூலம் குறுக்கு வழிகளில் அதிகாரங்களைப் பெற்றவர்கள், மற்றவர்களை "ஒத்தோடிகள்" என்று கூறுவது இன்று நடந்தேறுகின்றது. சொந்த இயக்கத்தில் கேள்வியெழுப்பியவர்களை ஒடுக்க அவதூறுகளையே பிரச்சார அரசியலாக முன்வைத்து செயற்பட்டவர்கள், மற்றவர்களை "அவதூறுவாதிகள்" "கைக்கூலிகள்" என்ற கூறுவதன் மூலம், அவதூறு அரசியலையே தொடர்ந்து முன்வைக்கின்றனர்.
அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இயங்கிய அனைத்து இயக்கங்களும் சாதி ஒழிப்பு, வர்க்க விடுதலை, பெண் விடுதலை … என்று அனைத்து சமூக விடுதலையையும் பெற்றுத்தருவோம் என்றனர். இதை தங்கள் அமைப்புக் கொள்கைகளில் வெறுமனே குறித்து வைத்திருந்தனர்;. இதை அவதூறுப் பிரச்சாரவாதிகள், தங்கள் அவதூறுப் பிரச்சாரத்தை அலங்கரிக்கப் பயன்படுத்திக் கொண்டனர். இன்று இந்தியாவில் புலிகளை இடதுசாரிகள் இயக்கம் என்று கூறிப் பிழைக்க, இயக்கங்கள் முன்வைத்த சாதி ஒழிப்பு, வர்க்க விடுதலை, பெண் விடுதலை.. என முன்வைத்த சொற்கள் உதவுகின்றது.
இன்று அவதூறுவாதிகள் தங்கள் அவதூறுகளுக்கு அரசியல் முலாம் அடிக்க, அரசியல் வடிவம் கொடுக்க சாதி ஒழிப்பு, வர்க்க விடுதலை, பெண் விடுதலை என்ற சொற்களே உதவுகின்றது. இன்றைய இலக்கியவாதிகள் தங்கள் கலைப்படைப்பு சாதி ஒழிப்பு, வர்க்க விடுதலை, பெண் விடுதலையை.. முன்வைப்பதாக காட்டிக்கொள்ள, இலக்கியத்தில் எப்படி அதை புகுத்துகின்றனரோ, அதைத் தான் அவதூறுவாதிகளின் அரசியலிலும் காணமுடியும். அவதூறுவாதிகள் கட்டமைக்கும் அவதூற்று சொற்கள் போல், சாதி ஒழிப்பு, வர்க்க விடுதலை, பெண் விடுதலை.. என்பது வெறும் அரசியல் சொற்களே. இதைத் தான் இயக்கங்கள் கடந்த காலத்திலும் செய்தன.
அவதூறுவாதிகளின் அரசியலும் - அவதூறும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode