Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற்கை விதிக்குள் நிகழவில்லை. மாறாக மனிதனின் எதிர்வினைக்கு உட்பட்டு, நாட்டுக்கு நாடு வேறுபட்ட அளவில் நடந்தேறுகின்றது. கொரோனா விளைவுகளையும் - மரணங்களையும், நம்மை ஆளும் ஆட்சியாளர்களின் அரசியலே தீர்மானிக்கின்றது.

கொரோனாவுக்கு எதிரான பொது மருத்துவக் கொள்கைக்கு அமைவாக உலகமும் - மனிதனும் இயங்க முடியாத வண்ணம், அரசுகளின் தன்னிச்சையான முடிவுகளையே, உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த அரசியல் பின்னணியில் தொடர்ச்சியாக நிகழும் மரண எண்ணிக்கைகளை, இரண்டு அடிப்படைக் காரணங்களே பொதுவாகத் தீர்மானிக்கின்றது.

1.ஆட்சியாளர்களின் அரசியல் எந்தளவுக்கு வலதுசாரித் தன்மை கொண்டதாக இருக்கின்றதோ -  அந்தளவுக்கு அந்தந்த நாடுகளில் மரண எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதேநேரம்  சாதி, வர்க்கம், இனம், நிறம், மதம் .. அடிப்படையிலும், கொரோனா கையாளப்படுகின்றது. அதாவது வேறுபட்ட அணுகுமுறை, ஒடுக்கப்பட்டவர்களிடையே அதிக மரணங்கள் நிகழக் காரணமாகின்றது.

2.முதலாளித்துவமே அனைத்துக்குமான சமூக இயங்குவிதியாக கருதுகின்ற ஆட்சியாளர்களின் முதலாளித்துவத் தூய்மைவாதமும் – வரட்டுவாதமும் - மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரமும் (பிரோகிராஸ்சி) எந்த நாடுகளில் மைய்யப்படுத்தப்பட்டுள்ளதோ – அந்த நாடுகளில் மரணங்கள் அதிகமாகி வருகின்றது.

ஆட்சியாளர்களும் - அரசுகளும் எந்தளவுக்கு மக்கள் விரோதத் தன்மை கொண்ட முதலாளித்துவ நலனைக் கொண்டதாக இருக்கின்றதோ, அந்தளவுக்கு மரண விகிதங்கள் அதிகரிக்கின்றது. கொரோனா விளைவுகள் மக்களைச் சூறையாடத் தொடங்கி இருக்கின்றது.

இந்த பொது விதிக்கு விதிவிலக்காக இந்தியாவில் மரண விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பது ஏன்? உலகில் அதிக சனத்தொகை கொண்ட இரண்டாவது மிகப் பெரிய நாடு மட்டுமின்றி, உலகிலேயே அதிக வறுமையைக் கொண்ட முதலாவது நாடுமாகும்.

ஆளும் ஆட்சியாளர்களும், அரச இயந்திரமும் காவிமயமாகி காப்பரேட்டின் வர்க்க நலனையே முன்னிறுத்துகின்ற பாசிசமாக, தன்னை முதன்மைப்படுத்தி நிற்கின்றது. இந்த பாசிசச்  சூழலில், கொரோனா பாதிப்பு பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கின்றது. இதற்கான பின்னணியை விளங்கிக் கொண்டாலே, இந்தியாவில் கொரோனா வைரஸ் எப்படி பரவும் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

இதற்கு காரணம் இந்தியச் சமூக அமைப்பே. இந்தியா என்பது சாதிய சமூக அமைப்பாலானது. அதாவது பார்ப்பனியச் சிந்தனையிலான சாதி அமைப்பு. மேல் இருந்து கீழாக, படிநிலைத் தன்மை கொண்ட இந்த பார்ப்பனிய சாதியச் சிந்தனைமுறையே – பண்பாட்டு வாழ்க்கை முறையாக இருக்கின்றது.

இதனால் இந்த பார்ப்பனிய சாதிய சமூக அமைப்பு பல படிநிலை கொண்டு தனக்குள் தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மக்கள் கூட்டமாக இல்லை, மாறாக பிரிந்து, சிதைந்த, உதிர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட, கொரோனா இடைவெளியை விட அதிக  இடைவெளிகள் கொண்ட சமூகம். இந்த சாதி சமூக அமைப்பில் தீண்டாமை வரை புரையோடிக் கிடக்கின்றது. இப்படி தனிமைப்படுத்தல்களைக் கொண்ட சாதிய அமைப்பாக இந்தியா இருப்பதால், கொரோனா தொற்று பல படிநிலைகளை கடந்தாக வேண்டும். நகரங்களில் இயல்பில் பரவக் கூடிய வைரஸ், சாதியக் கிராமங்களில் அப்படி நடக்க முடியாது. சாதி என்னும் மனித விரோத வைரஸ், ஏற்கனவே மனிதனை பிரித்து - விலக்கி வைத்திருக்கின்றது.
உலகில் வேறு எந்த நாடுகளிலிலும் இல்லாதளவுக்கு இந்திய சாதிய சமூக அமைப்பு, மக்களை பிரிக்கின்ற பல சுயதணிக்கைகளை கொண்டு பிளவுபட்டு கிடக்கின்றது. இப்படி சாதிகளுக்குள்ளான இடைவெளியானது, கொரோனா தனிமைப்படுத்தல் இடைவெளியை விட அதிகமானது.

அதுமட்டுமின்றி பார்ப்பனிய சாதிய வழிவந்த வர்க்க அமைப்பு என்பதால் வர்க்க ஏற்றத்தாழ்விலும் இந்த விதியே இயங்குகின்றது. வர்க்க அமைப்பிலும் சாதி போன்ற தீண்டாமையுடனேயே, மனிதர்களை பிளந்து பிரிக்கின்றது. ஒரே சாதிக்குள் வர்க்க ஏற்றத்தாழ்வு -  கொரோனா இடைவெளியை விட அதிக தூரத்தில் மனிதனை தனிமைப்படுத்தி நிறுத்தி இருக்கின்றது.

இதே போன்று காவி மயமாகியுள்ள மத வெறுப்பு அரசியல் - மதரீதியான பிளவுகளையும் இடைவெளியையும் உருவாக்கி இருக்கின்றது. இதுவும் கொரோனா தொற்று இடைவெளியை விட அதிகமாகும்.

இந்திய பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிச சமூக அமைப்பில் மூன்று சமூக விரோதக் கூறுகளான சாதி, மதம், வர்க்கம் ஏற்படுத்தி இருக்கும் பிளவுகளும், இடைவெளியும் - சமூகமாக மனிதன் இணைந்து வாழ முடியாது. இந்த மனிதவிரோத பார்ப்பனியச் சாதிப் பண்பாட்டிலான வாழ்க்கை முறை - கொரோனா வைரஸ் தொற்றை இந்தியாவில் கணிசமாக முடக்கி - குறைத்து இருக்கின்றது.

இதனால் பிற நாடுகள் போல் மரண விகிதத்தை கொண்டு இருக்காத அதேநேரம், கொரோனா மரணம் சாதிக்குள், வர்க்கத்துக்குள், மதத்துக்குள் முடங்கி, இதற்குள்ளான அக முரண்பாட்டாலும் கொரோனா தொற்று மெதுவாக நகர்ந்திருக்கின்றது.

பிற நாடுகள் போல் அல்லாது இந்திய பார்ப்பனிய சமூக அமைப்பில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார அடிப்படையிலான முடக்கமே, கொரோனா பரவுவதற்கான எதிர்மறை காரணியாக மாறி இருக்கின்றது.

பொருளாதார முடக்கத்தை அடுத்து பல பத்துக் கோடி மக்கள் வறுமையில் சிக்கி - பிறரில் தங்கி வாழும் பொது அவலமே பொது இடைவெளியை குறைத்திருக்கின்றது. அதேநேரம் வேலையிழந்து - வீட்டை இழந்து போன நகர்புற உதிரி வர்க்கமானது, உழைத்து வாழ்ந்த இடத்தில் தங்கி வாழ்வதற்கான அடிப்படையை இழந்ததால், பொது முடக்கத்தை கடந்த மனித அவலங்களின் தரிப்பிடமானார்கள். அவர்கள் தங்கள் கிராமங்கள் - மாநிலங்களுக்கு திரும்பிச் செல்லும் பொது மனித அவலமாக மாறி, அலையலையாக வீதிகளில் கூடி, கூட்டம் கூட்டமாக பசி பட்டினியுடன் வீதிவீதியாக நடந்தனர். பல நூறு கிலோமீற்றர் முதல் ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் வரை நடந்து சென்றதன் மூலம் - கொரோனாவையும் நகரங்களில் இருந்து காவிச் சென்றனர். இது கொரோனாவை நகரத்தில் இருந்து கிராமத்துக்கு நகர்த்தியிருக்கின்றது. இதுவே இந்தியாவில் காலம் தாழ்த்தி, கொரோனா அலையாக உருவாகி வருகின்றது.

வறுமை, நிவாரணங்கள் குறித்து போலி அறிவித்தல்கள், அறிவியலுக்கு புறம்பான காவிகளின் கூட்டு கும்மாளங்கள், போலி மருத்துவம்;, பகுத்தறிவற்ற நம்பிக்கைகள், வைரஸ்சை மதத்துடன் தொடர்படுத்திய அரசின் செயற்பாடுகள்.. வைரஸ் தொற்று பரவுவதற்கான புறநிலை காரணமாகியுள்ளது.

பார்ப்பனிய சிந்தனையிலான சாதி, மதம், வர்க்க அடிப்படையிலான கொரோனா மருத்;துவ முறை, அடுத்த பாரிய மனித பேரழிவுக்கான இந்தியக் கதவுகளை தட்டத் தொடங்கி இருக்கின்றது.