தோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து " நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்றார்.
கிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் தைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.
பெண்களால் மட்டுமே ஆண், பெண் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் சமூகநீதியை எடுத்து செல்ல முடியும். ஒரு பெண்ணின் கண்ணீர் இந்த மானுடத்தை மீட்க்கும் ஆற்றல் பெற்றது. பெண் பேரன்பின் ஆதியூற்று.
அறம் திரைப்படம் மூன்று விஷயங்களை நமக்கு தெளிவாக எடுத்து சொல்லுகின்றது. ஒரு சிறு பிள்ளைக்கு புரியவைப்பது போல.
1 . விளிம்பு நிலை மனிதர்களின், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் சமூக நிலை.
அந்த இருண்ட, குறுகிய ஆழ்துளை கிணறுதான் சாதிய கட்டமைப்பின் கடைசி பகுதி என்று வைத்துக் கொள்வோம். அந்த கிணற்றின் ஆழத்தில் சிக்கி தவிப்பவர்கள்தான் ஒடுக்கப்பட்டவர்கள். சமூக படிநிலையில் அவர்கள்அ மிகவும் கீழ் நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் குரல் மேலிருப்பவர்களுக்கு கேட்பதில்லை. அங்கே அவர்கள் மூச்சுத்திணறலுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஆயிரம் கயிற்றை உள்ளிறக்கினாலும் அவர்களுக்கு அது பயனில்லை மாறாக அவர்களை அதிலிருந்து வெளியே எடுப்பதுதான் அவர்களின் விடியலுக்கு தீர்வு. அந்த தீர்வும் அவர்களுக்கு கட்சிகள் மூலமோ, அரசின் மூலமோ, அதிகாரிகள் மூலமோ கிடைக்காது. அவர்களே அவர்களை விடுவித்து கொள்ளவேண்டும்.அது மட்டும் தான் அவர்களை காப்பாற்றும்.
2 . பெண் தலைமை
சமூகநீதி பயணத்தில் பெண்களின் பங்கு என்ன என்பதை மேலே சொல்லிவிட்டேன். இந்த படத்தில் எந்த ஆணும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியாது. ஏனென்றால் இந்த கதை அதிகார மட்டத்தில் பெண்களின் பங்கை எடுத்துசொல்லுவதற்காகவே எடுக்கப்பட்ட படம். ஒடுக்கப்பட்டவர்களை பற்றிய படங்களில் ஆண்களையே ரட்சகர்களாக காட்டி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், பெண்களுக்கு அத்தகைய பாத்திரங்கள் கொடுக்கப்படவில்லையே என்று நான் புலம்பி கொண்டிருந்தவேளையில் இந்த படம் காட்டுரில் மழை பெய்தாற்போல் இருக்கிறது.
இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் ஒரு ஆணை replace செய்வதோடு மட்டும் முடிந்து விடவில்லை மாறாக அந்த இடத்தில ஒரு பெண்ணின் முக்கியத்துவத்தை பலமாக எடுத்துரைக்கிறது.
இந்த படத்தில் இயக்குனர் கோபி ஒரு பெண்ணை நடிக்க வைக்கமட்டும் செய்யவில்லை அவரும் ஒரு பெண்போலவே சிந்தித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் ஒரு பெண்ணின் மனநிலையிலேயே சொல்லிருக்கிறார். பிரமாதம்.
சமூகநீதி போராட்டத்தில் பெண்களில் முக்கியத்துவம் என்ன?.
பொதுவாகவே பெண்களின் பாலியல் ஹார்மோன் "ஈஸ்ட்ரோஜென்" அவர்களுக்கு இயற்கையாகவே அதீத இரக்க குணத்தையும், தாய்மை பண்பையும் கொடுத்திருக்கிறது. அதனால் அவர்களால் தங்களுக்கு மட்டுமேயன்றி மற்றவர்களுக்காகவும் சிந்தித்து செயல்பட முடிகிறது. சில சமயம் அதுவே அவர்களுக்கு பலவீனமாகி பெண்ணடிமைத்தனத்திற்கு விதையாகிறது. அதுவே பல சமயம் அவர்களை தன் சக்திக்கு மீறிய இரக்க செயல்களில் ஈடுபட வைக்கிறது. அதேபோல் பெண்களுக்கு அதீத வலியையும், அதை எதிர்கொள்ளும் அதீத தைரியமும் இருக்கிறது. பிள்ளைப்பேறு அப்படிப்பட்ட விஷயம்தான்.
அண்ணல் அம்பேத்கர் சொல்லுவார் ஆண்களுக்கு மட்டும் பிள்ளை பெறும்படி இருந்தால் இந்த உலகத்தில் ஜனத்தொகையே இருக்காது என்று. அப்படி பட்ட பெண்கள் கையில் அதிகாரம் கிடைக்கும்பொழுது அவர்கள் எத்தகைய எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று தங்கள் பணியை முடிப்பார்கள் என்பதை இயக்குனர் நமக்கு வெற்றிகரமாக புரியவைக்கிறார். இதனால்தான் நான் அடிக்கடி சமூகநீதியை என் தலைமையின் முக்கியத்துவத்தை பற்றி பேசி வருகிறேன். அந்த கடைசி காட்சி, அந்த துளை வழியாக தன்ஷிகா வெளியே வந்தது எனக்கு பார்ப்பதற்கு கருப்பை வழியாக அவள் பிறந்ததுபோல்தான் இன்னும் தோன்றுகிறது. அந்த செயல் மதிவதனி ஒரு பிரசவம் பார்த்ததற்கு ஈடாகும்.
3 . அரசியல் அதிகாரம்
கடைசி காட்சியில் மதிவதனி ஒரு கட்டிடத்தில் இருந்து வெளியே வருவார். அந்த கட்டிடத்தின் பெயர் "administrative block " என்று இருக்கும். அது தான் உண்மை சமூகநீதிக்கான பயணத்தில் ஆயிரம்தான் அதிகாரிகள் நன்மை செய்ய நினைத்தாலும் அவர்களால் ஒரு எல்லைக்கு மேல் முன்னேற முடியாது. அவர்களுக்கு அரசியல் வாதிகளால், சட்டதிட்டங்களால் ஆன ஒரு block (தடை) இருந்துகொண்டே இருக்கும். அரசியல் அதிகாரம், பிரதிநிதித்துவம் மட்டுமே சமூகநீதி நீதி வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை உறுதியாக இயக்குனர் சொல்லுகிறார் படம் முழுவதும். நான் IAS படிக்கிறேன் மக்களுக்கு நல்லது பண்ணனும் என்று சொல்லுவது இனி செல்லாது.
IAS படித்து ஒரு நல்ல நிர்வாகி ஆகலாம். மக்களுக்கு நல்லது பண்ண வேண்டுமா?, அரசியலுக்கு வா. இந்த சாக்கடைக்குள் இறங்கி அதை சுத்தப்படுத்து. அதை விட்டுவிட்டு மூக்கை பிடித்துக்கொண்டு தெறித்து ஓடாதே. எல்லாம் முன்னேற்பாடுகளுடன் ராக்கெட்டில் போகின்றவனை விட, எந்த உதவியும் இல்லாமல், ஆழ்துளை பள்ளத்தில் இருந்து முன்னேறி வருபவன்தான் கிங். நாங்க எல்லாம் கிங்... அந்த ஒரு வசனமே போதும். ஒடுக்கப்பட்டவர்களின் survival instinctsஐ பறைசாற்ற.
மேற்சொன்ன கருத்தியல் விலைமதிப்பற்ற நகைகள் என்றால், அந்த நகைகளை வைத்திருக்கும் பெட்டகமாக அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது படம்.
நயன்தாராவின் நடிப்பு நன்று. ஆனால் அந்த நடிப்பிற்கு பலம் சேர்ப்பது அந்த குரல்தான். இந்த படத்தை எடுப்பதற்கு இயக்குனர் கோபி நயினாருக்கு ஆதரவாக இருந்தார் என்று கேள்விப்பட்டேன். சிறப்பு.
ஆனால் நடிப்பில் தூக்கி சாப்பிட்டது புலேந்திரன் மற்றும் அவர் மனைவி கதாபாத்திரங்கள் தான். அந்த பெண் முந்திய நடிகை அருணா போல இருக்கிறார். நடிப்பு அட்டகாசம், அந்த கண்கள் காட்சியின் தீவிரத்தை அப்படி காட்டுகிறது. சத்தத்தை நிறுத்திவிட்டு வெறும் படத்தை பார்த்தல் கூட கதை தெளிவாக புரியும். இயக்கமும், நடிப்பும் அப்படி இருக்கிறது. வேறு மொழிகளில் படத்தை டப்பிங் கூட செய்ய வேண்டாம். அப்படியே புரியும். வலிக்கும் வேதனைக்கும் உலகெங்கும் ஒரே மொழிதானே ...
ஒரு நாடு நல்லரசானால்தான், அது வல்லராசுகும். அந்த நல்லரசில் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே வல்லரசாவதற்கு ஒன்று சேர்ந்து போராட முடியும். ஒடுக்கப்பட்வை ஒதுக்கி வைத்துவிட்டால் அவனின் அறிவின் பலனை இந்த ஒட்டுமொத்த சமுதாயமும் இழக்கவேண்டி வரும். அதுவே நிதர்சனம்.
இறுதியாக....
அறம் முக்கியம். அதைவிட முக்கியம் அறச்சீற்றம் என்பதனை கோபி நயினார் நிரூபித்திருக்கிறார். படத்தின் மூலமும், தன் சிந்தனையின் மூலமும்.
அறம் செய்ய விரும்பு. சினத்தை ஆறவிடாதே.
ஷாலின்
https://www.facebook.com/Shalinmarialawrence?hc_ref=ARQjqAYPSqDgL23T1J0h0JMJp6fClN3UFXJSCsKfOTC9PMjiCzcISaDBOiwY9BsYZN4&fref=nf&pnref=story