08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

இப்படி மக்களை இனரீதியாக பிரிந்து அணுகுகின்ற வடகிழக்கு இனவாத அரசியலுக்கு வெளியில், வடகிழக்கு எங்கும் வாழும் மக்களின் தனித்துவமான போராட்டங்களாக இவை மாறியிருக்கின்றது.

பெரும்பாலும் தன்னெழுச்சியாகவும், வடகிழக்குக்கு வெளியில் சிங்கள மக்களின் சமகால போராட்டங்களால் உந்தப்பட்டும், போராட்டங்கள் பண்புமாற்றம் பெற்று மேலெழுகின்றது. இதற்கு வடகிழக்கு வெளியில் போராடும் சக்திகளின் ஆதரவும், அனுதாபங்களும், கூட்டுப் போராட்டங்களும் இதை வலுப்படுத்தி, புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கி இருக்கின்றது.

இனரீதியாக பிரிந்து நின்று அணுகுகின்ற "தமிழ்" அரசியலானது, இந்தப் போராட்டங்களை கண்டு கொள்ளாது இருப்பதுடன், இதன் மீது ஆதரவைக் கூட வெளிப்படுத்துவதில்லை. தமிழ் அரசியல் கட்சிகள் போல், நடக்கும் போராட்டத்தை தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன.

போராடும் "தமிழ்" மக்களை அனாதையாக்கும் வண்ணம் தேர்தல் மூலம் தமிழ்மக்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமைப்பு முதல் "தமிழ்" இடதுசாரியம், "தமிழ்" சர்வதேசியம் பேசுகின்ற இணைய "புரட்சியாளர்கள்" வரை இதற்குள் அடங்கும். போராட்டங்களில் பங்குகொள்ள மறுப்பது, ஆதரவு கொடுக்க மறுப்பது, நிதிரீதியாக பங்களிக்க மறுப்பது, நடக்கும் போராட்டங்களை இருட்டடிப்பு செய்வது.. தொடருகின்றது. இது ஏன் என்பது, ஆராய்ந்தாக வேண்டும்.

இவர்களை மீறி, இப்படிப் போராடுபவர்கள் யார்? தமிழ் "தேசியக்" கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட வேண்டிய "தமிழர்கள்" இவர்கள், என்பதே உண்மை. இவர்கள் தமிழ் சமூகத்திலேயே ஏழை எளிய மக்கள். அதிகளவில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். பிரதேசரீதியாக யாழ் மையவாத சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்;யாத பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல்ரீதியாக தனித்துவிடப்பட்ட உதிரிகள். இவர்களுக்கு உதவுவதன் மூலம் புத்திஜீவிகளின் தனிப்பட்ட புகழுக்கும், இலாபத்துக்கும் உதவமுடியாத அபலைகள்.

இப்படி தமிழ் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் தான் இன்று போராடுகின்றனர். ஒருநேர உணவுக்கே வழியற்ற மக்கள் போராடுகின்றனர். இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் வண்ணம், நிதி திரட்ட எடுத்த முயற்சிகளில் கூட எம்மால் வெற்றிபெற முடிவதில்லை. ஒரு சிலரின் தனிப்பட்ட உதவிகள் தான், போராட்டத்தை முழு இலங்கை மக்கள் முன்னும் கொண்டு செல்ல உதவுகின்றது என்பதே எதார்த்தம்.

உதாரணமாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தை எடுங்கள். போராட்டம் தொடங்கியவுடன், அதை முன்னிறுத்தி யாழ் நகரில் நடந்த போராட்டம், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க யாழில் இருந்து கேப்பாப்புலவுக்கு பயணம் .. இவை எல்லாம் பேஸ்புக் செய்திகளுக்கும், சர்வதேச தன்னார்வ நிகழ்ச்சிக்கும், முகம் காட்டும் அரசியல் விளம்பரத்துக்கு பின், போராட்ட ஆதரவு நாடகம் படிப்படியாக அரசியல் நிகழ்வில் காணாமல் போனது. அந்த மக்கள் தொடர்ந்து உறுதியுடன் போராடுவார்கள் என்பதை, பேஸ்புக் புத்திஜீவிகள் முதல் அரசியல்வாதிகள் வரை எதிர்பார்க்கவில்லை.

அரசியல் அனாதையாக்கப்பட்ட கேப்பாப்புலவு மக்களின போராட்டத்தை வடிவ ரீதியாக மாற்றி,  இராணுவமுகமுக்குள் நகர்த்தியதும், அதைத் தொடர்ந்து கொழும்புக்கு போராட்டத்தை முன்நகர்த்திய போராட்டத்தின் பின்னலான வலியை உணருவதற்;கு கூட, தயாரற்ற மனநிலைவை தான் காணப்படுகின்றது. கொழும்பு வந்து போராடிய கேப்பபுலவு மக்கள், ஒரு நேர உணவுக்கு கூட வழியற்ற ஒரு நிலையிலே தங்கள் உரிமைக்காக போராடினார்கள். இதற்கு உதவுவது என்பது, சர்வதேசிய மனித உணர்வுக்கு வெளியில் "தமிழர்" என்ற உணர்வு உதவவில்லை. இறுகக் கண்ணை முடிக்கொண்டு வீம்புக்கு வீரம் பேசுவதிலே  "தமிழ் தேசியம்" படிபடியாக மடிந்து வருகின்றது.

இணையத்தில் "சர்வதேசியம்" பேசும் புரட்சியாளர்கள், "சுயநிர்ணயம்" கோரும் தர்க்க வாதிகள், "தமிழனாட" நான் என்று தமிழை முன்னிறுத்தி உணர்ச்சி கொட்டி நிற்போர், தம்மை முதன்மையாக்க "துரோக" முத்திரை குத்தும் "தமிழ் தேசியவாதிகள்".. அனைவரும் போராடும் "தமிழ் மக்களின்" போராட்டங்களில் பங்காளியாக தம்மை இணைப்பதில்லை. தங்கள் குறுகிய அரசியலுக்கு ஏற்ப தமக்கு பங்கு இல்லை என்பதாலேயே, இந்த மக்களை அரசியல் அனாதையாக்கி போராட்டங்களை ஒடுக்க உதவுகின்றனர்.

மக்களை ஒடுக்கும் அரசு இயந்திரத்தை எதிர்கொள்ளும் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும் பதில், தங்கள் நடத்தைகள் மூலம் ஒடுக்கவே உதவுகின்றனர். 100 நாட்கள் கடந்து வீதியில் போராடுகின்ற மக்கள் ஒருபுறம், அப்படி போராட்டங்கள் நடப்பதைக் கண்டுகொள்ளாது, போராடுவது பற்றி, மனித அறங்கள் குறித்தும், உதவுவது குறித்து (சமூக வலைத்தளங்களில்) கருத்துக்களை முன்வைப்பது எதற்கு?

போராடும் மக்களைச் சார்ந்து, அவர்களுக்காகப் போராடுவதைக் கடந்த, எதையும் சமூகம் சார்ந்ததாக பீற்றிக்கொள்வதெல்லாம், போராடும் மக்களுக்கு கொள்ளிவைக்கத்தான். இது தான் இன்றைய எதார்த்தமும், உண்மையுமாகும். சமூகத்தில் உண்மையான அக்கறையுள்ளவர்கள், தங்கள் குறுகிய வட்டங்களைக் கடந்து போராடும் மனிதர்களுடன் தங்கள் கைகளை இறுக இணைத்துக் கொள்வதன் மூலம், உண்மையான பங்காளியாக மாறுவது காலத்தின் தேவையாகும்.


பி.இரயாகரன் - சமர்