10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

பொய் புனைந்து வாழ்த்துவதற்கு மனமே வரவில்லை

ஆசிரியர் தினம் என்று எல்லோரும் வாழ்த்துக்கள்கூறிக்கொண்டே இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லோரும் நல்லாசிரியர்களைப் பெற்றிருக்க வேண்டும் ...என்னால் அப்படிப் பொய் புனைந்து வாழ்த்துவதற்கு மனமே வரவில்லை .சில ஆசிரியர்களால் சின்ன வயதில் நான் பட்ட காயங்கள் இன்னும் ஆறவேயில்லை.

அதுவும் துறவு பூண்ட கன்னியாஸ்திரிகள் என்று சொல்லிக் கொண்ட ஆசியைகளிடம் பெரும் துன்பங்களை நானும் என் சகோதர சகோதரிகளும் அனுபவித்திருக்கின்றோம், பாலைவனத்தில் தோன்றிய பசுந்தளிர்கள் போல ஒன்றிரண்டு நல்லாசியர்களைக் கண்டிருக்கின்றேன் . அவர்கள் மட்டுமே என் மதிப்பில் இன்றும் அமர்ந்திருக்கிறார்கள் ,

நான் பிறந்த மயிலிட்டியில் எமது குடும்பத்தைத் தவிர மற்ற எல்லோரும் ஒரே சாதிக்காரர்களாகவே இருந்ததால் நாம் மிகவும் போராடியே ...ராங்கியுடன் வாழவேண்டி இருந்தது. நாம் படித்த பாடசாலையிலும் போராட வேண்டி வந்ததுதான் பெருங்கொடுமை.

இங்கு ஐந்தாம் வகுப்புமட்டும் ஆண்கள் படிக்கலாம், என் தம்பி புஸ்பராஜா சிஸ், தியோப்பின் என்பவரிடம் பட்ட துன்பம் சொல்லி மாளாது. எடுத்ததற்கு எல்லாம் அவன் வகுப்புக்கு வெளியில் நின்றதெல்லாம் என் நினைவில் பதிந்திருக்கின்றது.

ஊரில் உள்ள பெரிய சம்மாட்டிமாரின் பிள்ளைகளோடு இந்த வணக்கத்துக்குரிய சகோதரிகளான ஆசிரியைகளும் ,தலைமை ஆசிரியையும் பல் இளித்துப் பழகியதையும் ,அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் ஏதாவது அலுவலாகவோ ..,பள்ளியில் நடக்கும் விழாக்களுக்கோ வந்தால் ஓடிச்சென்று குழைந்து ,பணிவாக.....பல்லுக் காட்டி நடிப்பதையும் இன்று நினைத்தாலும் குமட்டுகின்றது.

இவர்கள் எல்லாம் துறவிகளா என்று அசிங்கமாகக் காறித் துப்பவேண்டும் போல பலமுறை மனம் புழுங்கிக் குமைந்திருக்கின்றேன்,
நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை ஞாபகத்தில் இருந்து கிளறிப் பார்க்கையில் வெறுப்பின் உச்சிக்கே போய்விடுகின்றேன்
வெளி மாவட்டத்தில் நடைபெறப்போகும் சுகாதார விழாவில் பேசுவதற்கு நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன், மிகவும் மகிழ்ச்சியுடன் பேச்சுக்கான விடயத்தை மனப்பாடமாக்கி வகுப்பாசிரியை எப்படிப் பேசவேண்டும் என்று சொல்லித் தந்ததை எல்லாம் மறக்காமல் மனதில் வைத்து,,,நன்றாக என்னைத் தயார்படுத்தி ,அம்மாவின் அலங்கரிப்பில் அழகாகச் சீருடை போட்டு விழாவுக்குப் போக வந்த என்னை விட்டு விட்டு ஏனையோரை வாகனத்தில் ஏற்றி விட்டார் தலைமை ஆசியை.

வாகனம் புறப்பட்டுப் போனதைப் பார்த்து நான் கலங்கி அழுததை என்றுமே என்னால் மறக்கமுடியாது .இதனால் என் பிஞ்சுமனம் கொண்ட வேதனை காலத்துக்கும் மறக்காது.

எதற் காக என்னை வரவேண்டாமென்று தலைமை ஆசிரியை சொன்னார் என்பது இன்றுவரை விளங்கவில்லை என் வகுப்பாசிரியை கவலைப் பட்டார் ,சிஸ் எமிலியை [தலைமை ஆசிரியை] எதிர்த்துக் கேட்கப் பயத்தில் அவர்மௌனியாகிவிட்டது கொடுமை!

இன்னொரு நாள் என் தங்கையை அவளுடன் படிக்கும் சிறுமி !ஒருத்தி சாதி இழுத்துப் பேசிவிட்டாள் , என் தங்கை அழுதுகொண்டே போய் வலண்டைன் என்ற தலைமை ஆசிரியையிடம் முறைப்பாடு கூற ,அவர் என்ன சொன்னார் தெரியுமா, "உன்னுடைய சாதியைத் தானே அவள் சொன்னாள் ,அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு உன் அக்கா மாதிரி வாய் காட்ட வந்து விட்டாய் போய் வேலையைப் பார் " என்று அதட்டி அனுப்பி விட்டார்.

கொலம்பா என்ற அன்பான வண . சகோதரி ஆசிரியையாயிருந்தது நினைவுக்கு வருகின்றது. ஏனைய சகோதரிகளில் இருந்து இவர் மிகவும் மென்மையானவராக வேறுபட்டிருந்தார்.

இனிச் சாதாரண ஆசிரியர்கள் சிலரைப் பற்றியும் இங்கு சொல்லியே ஆகவேண்டும், நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு ஆசிரியை சரித்திரப் பாடம் எடுத்தார், .இவர் வகுப்பிலே ஏதாவது யோசித்துக் கொண்டே இருப்பார் ,,,மணி அடிப்பதற்குக் கொஞ்சம் முந்தித் திடீரென்று விழித்துத் திகைப்பார், புத்தகத்தை வாசித்து எங்களை அதட்டிவிட்டுப் போய் விடுவார். இவரால் எங்களுக்குத் தெரிந்திருந்த சரித்திர அறிவும் மழுங்கியதுதான் மிச்சம்.

இன்னொரு ஆங்கில ஆசிரியை வந்து எங்களுக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச ஆங்கிலப் புலமையையும் [?]வீணாக்கினார் . இது நான் பகிடிக்கு எழுதவில்லை உண்மை ,,,. இவர் படிப்பித்த விதத்தை விளக்குகின்றேன் ..

..வகுப்புக்கு வந்தவுடன் தானே மளமளவென்று வாசிப்பார். ஆங்கிலக் கட்டுரைகள் சிலவற்றைத் தந்து பாடமாக்கும்படி சொல்லுவார் . நாமும் முக்கி முக்கிப் பாடமாக்கி விடுவோம். பரீட்சை வரும்போது அதில் ஒன்றையே எழுதும் படி கேள்வி வைத்திருப்பார். பிறகென்ன அப்படியே கக்கி எழுதிவிடுவோம் .

ஐந்தாம் வகுப்பில் ரெஜினா என்ற ஆசிரியை எங்களுக்கு மிக அற்புதமாக ஆங்கிலம் படிப்பித்து எங்கள் ஆங்கில அறிவைச் சிறப்புற வைத்திருந்தார் . பிறகு ஏழாம் வகுப்பில் இருந்து எஸ் ,எஸ் சி படிக்கும் வரை மேலே சொன்ன ஆசிரியை ஆங்கில வகுப்பு எடுத்து எமது ஆங்கிலத் தெளிவை , நாசமாக்கிவிட்டார்

. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதுதான் உலக மகா அதிசயம் போல சிஸ், தியடோசியா எங்கள் வகுப்பாசிரியையாக வந்தார், சாதி வெறி ,மதவெறி ,,,பணமயக்கம் ,,பசப்புக் கொண்ட வணக்கத்துக்கு உரிய சகோதரிகளையே அது வரை கண்டு அருவெருப்புக் கொண்டிருந்த என் முன்னே மாசு மறுவற்ற ஒரு தேவதை தோன்றியதை எப்படி வர்ணிப்பேன்,

படிப்பிலே நான் சிறந்து விளங்கியதும், நேருக்கு நேர் பேசும்என் இயல்பும் சிஸ், தியடோசியாவின் மனதுக்கு என்னை நெருக்கமாக்கியது, இந்த நேருக்குநேர் பேசுகின்றேன் பேர்வழி என்ற என் குணாதிசயந்தான் ஏனைய வண . சகோதரிகளின் வெறுப்புக்கு என்னை உட்படுத்தி இருந்தது.

பின்னாளில் இவர் என் குடும்பத்தினர் மீதே தன் முழு அன்பையும் செலுத்தியது நான் பெற்ற பெரும் வரம்.

எஸ். எஸ் சியில் எனக்கு இலக்கியம் படிப்பித்த எட்விஸ் என்ற ஆசிரியையும் என்னால் மறக்கமுடியாது, இவரும் திறமைகொண்ட பரந்த மனசுக்காரி. என்னை எழுதத் தூண்டியதே இவர்தான். கணக்குப் படிப்பித்த அந்தோணிமுத்து என்ற ஆசிரியரையும் ,,கடமையுணர்வோடு பாடத்தோடு ஒன்றி அவர் செயல்பட்டதையும் நன்றியோடு நினைவு கூறுகின்றேன்,

மற்றும்படி எவருமே என் மனதில் பதியவில்லை. இதில் விரும்பத் தகாத ஒரு ஆசிரியரையும் நான் குறிப்பிட்டே ஆகவேண்டும் ஆசிரியன் என்பவன் எப்படி நடக்கவேண்டும் என்ற பெரும் கண்ணியத்தை தன்னகம் வைத்திருக்காது கபடமாக எல்லோர் முன்னாலும் நடமாடிய இந்தக் கயவனைத் தோலுரிக்க அப்போது எனக்கு வயதும் போதாது .தைரியமும் இருக்கவில்லை

.எங்கள் பாடசாலை பலராலும் விரும்பப் பட்டதால் பெண்பிள்ளைகள் தூர இடங்களில் இருந்தெல்லாம் படிக்க வருவார்கள், இது நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது நடந்தது . தூர இடத்தில் வசிக்கும் , என்னோடு படிக்கும் சகமாணவி ஒருத்தி மிகச் சீக்கிரமே காலையில் வகுப்புக்கு வந்திருக்கிறாள் . இந்தமாணவியைக் கெட்ட நோக்குடன் இந்தாசிரியன் வகுப்பைச் சுற்றி விரட்டியிருக்கின்றான் . நல்லவேளை அந்தமாணவி வாசல் பக்கம் தன் பையையும் தூக்கிக்கொண்டு ஓடி வீட்டுக்குப் போயிருக்கின்றாள்

.தனக்கு வயிறு வலித்ததால் திரும்பியதாக வீட்டில் பொய் சொல்லியிருக்கின்றாள். மறுநாள் பயந்து பயந்தே பள்ளிக்கு வந்தாள் . என் சிநேகிதி என்பதால் எனக்குமட்டும் இரகசியமாகச் சொன்னாள் ,எங்களுக்குள் பேசிவிட்டு இருவரும் இதுபற்றி வெளியில் பேசினால் சிஸ்டர்[தலைமை ஆசிரியை] அடிப்பா என்று பயத்தில் யாருக்கும் சொல்லவில்லை,

இதே ஆசிரியன் இன்னும் பல பெண்களிடம் விட்ட சேட்டைகளும் எங்களுக்குத் தெரிய வந்தது.மாணவிகளான நாங்களே எங்களுக்குள் குசுகுசுத்துவிட்டு ஒன்றும் தெரியாதமாதிரி இருந்து விடுவோம். இது பெரிய மகாபாவம் போல எண்ணி எவரிடமும் மூச்சே விட மாட்டோம். ஆனால் தலைமைக்கு எதுவும் தெரியாதபடி அவன் அப்பாவி போல நடந்து ஏமாற்றியதை எங்கே போய் ...யார் முறையிடுவது 
சின்னப் பிள்ளைகள் பயத்தில் இத்தகைய விடயங்களை வெளியிடப் பயப்படுவதால்தான் இவனைப்போன்றவர்கள் தம் குற்றங்களைத் தொடர்ந்து துணிவுடன் செய்கின்றார்கள் என்பதும் இப்போதுதானே எனக்கும் உறைககின்றது.

 

https://www.facebook.com/pushparani.sithampari/posts/1922527754688005

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்