08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மறுபடியும் ஓர் கறுப்பு ஜூலையா? மாபெரும் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இன்று முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் திட்டமிட்ட இனக்கலவரம், கொலைகள், சொத்துகளைச் சூறையாடுதல்- அழித்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டித்து சமவுரிமை இயக்கம், நாளை (18.06.204) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சமவுரிமை இயக்கம் வெளியிட்டுள்ள அழைப்பில்:


யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிங்களவர்களின் எதிரிகளாக தமிழர்களையும், தமிழர்களின் எதிரிகளாக சிங்களவர்களையும் காண்பித்தார்கள். தற்போது எழுச்சி பெற்றிருக்கும் சிங்களவர்ளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கையீனம், சந்தேகம், எதிரித்தன்மை போன்றவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை . இந்த கொடுந்தீக்கு பெற்றோல் ஊற்றியவர்கள் வெவ்வேறு வேறு இனவாத, மதவாத குழுக்களாகும்.

இக்குழுக்கள் இயங்குவது அரச அதிகாரவர்க்கத்தின் அங்கீகாரத்துடன் என்பது ஒன்றும் ஒளிவுமறைவானதல்ல!


சிங்களவர்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தி பிரித்து வைத்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை நினைவிருத்திக் கொள்ள வேண்டும். எம்மை முரண்பாடுகளுக்குள் சிக்கவைத்து இனவாத, மதவாத பொறிக்குள் வீழ்த்தி எமது உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கும் அதேவேளை மனிதத்தன்மையை இல்லாமல் செய்து எம்மை மிருகத்தனத்துக்குள் சிக்கவைக்கும் பொறிக்குள் மீண்டும் சிக்கிவிடக்கூடாது.


இந்த வகையில் அனைத்து இனவாத - மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குறிப்பாக இன்று முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் இனவாத தாக்குதல்களைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளையும் - நீதியையும் கோரியும் நாளை நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு சமவுரிமை இயக்கம் தோழமையுடன் வேண்டுகோள் விடுகிறது !


இடம் : கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக


காலம் : 18.06.2014


நேரம் : பிற்பகல் 4 மணி .

சமவுரிமை இயக்கம் - இலங்கை


17.06.2014கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்