Language Selection

புதிய கலாச்சாரம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
05_2007.jpg

வந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது.
கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும், அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.

 

ஆட்டிவிடும்போது
தொலைக்காட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டது.
முன்வாசலில்,
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

 

ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது.
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

 

படாத இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் "ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.

 

விளம்பர இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுக்கென்று முகத்தை திருப்பி
"கோலங்கள்'.
குடும்பத்தின் "கவனிப்பு' தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.
தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
"இச்சு' கொட்டியது பல்லி.

 

மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்து
பீதியுற்று அலறியது தெருநாய்.
கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.
""ச்சீ... நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!'' என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்
இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று ஊரை விட்டே ஓடியது.

 

· துரை. சண்முகம்