நம்நாட்டின் ஏகப்பெரும்பான்மையான மக்கள் வெறுத்தொதுக்கும் இனவாதத்தை, இனவாத வெறியை விரல்விட்டு எண்ணக்கூடிய இனவாத சக்திகள் தம் கைகளில் எடுத்துள்ளார்கள். இருந்தும் இவர்களின் இனவாதச் சேட்டைகள் இனங்களுக்கிடையில் எடுபடவில்லை என்பதே எதார்த்தமாகும். மேலும் இவர்கள் மகிந்த அரசின் செல்லப்பிள்ளைகளாக இருப்பதையும் சிங்கள் மக்கள் அறியாதவர்கள் அல்ல.

 

மகிந்த அரசின் திட்டமிட்ட இனவாத (இன-ஐக்கியத்தை சீர்குலைத்தல்) சூட்சுமங்களுக்கும், பொதுபல சேன போன்ற மத வெறியர்களின் கலாட்டக்களுக்கும், சிங்கள மக்கள் துணை போகவில்லை என்பதை சமகால நாட்டு நடப்புகள் எடுத்துக்காட்டுகின்றது. இதனால்தான் சிங்கள மக்களுக்கிடையில் வாழும் முஸ்லிம் மக்கள் மாத்திரம் அல்ல ஏனைய சிறுபான்மை இன மக்களும் சமதானமாக வாழ்கின்றார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

 

ஆகவே எம்முன்னால் உள்ள இச்சமகால யதார்த்த நிலைமையை தொடர்வதா? இல்லாதாக்குவதா? என்பதே எம்முன்னால் உள்ள சவால் மிக்க கேள்விகளாகும். இதை இல்லாதாக்குவதற்காக மிகச் மிகச் சிறுபான்மையான தமிழ்-சிங்கள இனவாத சக்திகள் தொடர்ந்தும் இனப்பிளவை செய்த வண்ணமே இருப்பார்கள்.

 

"முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மைத்துனராக இருப்பதால் வடமாகாண சபைக்குஊடாக பிரிவினைவாதத்திற்கான கதவுகளை திறந்துவிட முடியாது. இன்று நேற்றல்ல. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார என்றுமே இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு துணை போனவர்" என தெரிவிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!

 

"இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையையும், பிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக வட மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது".

 

இப்பேர்ப்பட்ட ஸ்பெஸல் இனவெறித் தயாரிப்புக்கள் இவ்விரு இனவாதப் பகுதியினரினருக்கும் தேவைதானா? என மக்களே கேட்கும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பேரினவாத வெறி கொண்ட ஓர் அமைப்பிற்குதான் இந்நிலையெனில், ஓர் சாதாரண விக்கினேஸ்வரனின் வடமகாண சபைக்கும் இப்பரிதாப நிலையோ?

 

இம்மாகாண சபைக்கு உட்பட்ட மக்களுக்கு, அதுவும் மீள்குடியேற்றப்பட்ட வன்னியின் பஞ்சப்பட்ட, ஒருநேரக் கஞ்சிக்கே வழியற்ற மக்களுக்கு மாகாணசபை கொண்டு செய்யக்கூடியவற்றைச் செய்யாமல், தமிழ்ஈழ அரசுபோல் அதிகாரம் கொள்வதால் மக்களுக்கு ஆவது எதுவுமில்லை. மேற்சொன்ன கோரிக்கைகளுக்கும், கூட்டமைப்பிற்கும் சம்பந்தம் உண்டு. அதை அதனிடம் விட்டுவிட்டு, மகாணசபை மக்களுக்கானவற்றை செய்ய முற்பட்டால், வசந்த பண்டார போன்ற இனவாதிகளின் இனவாத இலக்கிற்கு ஆளாக நேரிடாதே?...

 

எனவே இன்றைய இலங்கையின் இருபகுதி இனவாதிகளின் இனவெறிக்குள் நாட்டு மக்கள் அகப்படவில்லை என்பதை நாம் உணர வேண்டும். இந்நிலையில் மகிந்த அரசினதும், ஏனைய இனவாத சக்திகளினதும் (மக்களைப் பிளவுபடுத்தும்) திட்டமிட்ட நாசகார வேலைகளை மக்கள் மத்தியில் மென்மேலும் அம்பலப்படுத்த வேண்டும்.

 

இந்நோக்கில் மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருக்கும் மக்கள்-வெகுஜன அமைப்புக்களின் சமவுரிமைக் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். இதற்கூடாக எல்லாவித இனவாதங்களையும் தகர்த்தெறிவோம். இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை மேலும் பலப்படுத்துவோம்.

 

“நாம் எம் எதிரிகளால் தூக்கில் இடப்படுகின்றோம். மரணத்தின் பின்னான எம் கல்லறைகளின் மௌனம் பல கதைகள் சொல்லும்” இது மேதினத் தியாகிகளின் இறுதி வார்த்தைகள்!

 

ஆம் உங்களின் கல்லறைகளின் மௌனங்கள் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்படும் மானிடத்திற்கு பற்பல கதைகளை சொல்லிக் கொண்டுதான் உள்ளன.. அதையொற்றி எம்நாட்டு மக்களும் அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான பற்றபல கதைகளை சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

30/04/2014