Language Selection

போராட்டம் பத்திரிகை 05
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொன்டாராஎன்ற பன்னாட்டு நிறுவணத்தின் உற்பத்தியான அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாவில் டி.சி.டி. (டைசை யான்டியாமைட்) என்ற இரசாயனப் பொருள் கலந்துள்ளதாக கூறி தடை செய்த அரசு, மக்கள் நலனில் இருந்து இதைச் செய்யவில்லை. மக்கள் நலன் சார்ந்த அக்கறையிலான முடிவுவல்ல, வேறு சொந்த நலன்கள் சார்ந்த முடிவாகும். இலங்கை அரசு மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்ட ஒரு அரசு அல்ல. வெலிவேரியாவில் சுத்தமான நீரை கேட்ட மக்களையே, சுட்டுக் கொன்ற அரசு அல்லவா இது.

 

இரசாயனம் அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாவில் மட்டுமல்ல, எல்லா உணவு சங்கிலித் தொடரிலும் காணப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் அதிகரித்த சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு காரணம் விவசாய உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயான உரவகைகளும், கிருமிநாசினிகளும் காரணமாக இருக்கின்றது. இந்த வகையில் ஆசனிக், கட்மியம், ஈயம் என்பன நிலத்திலும், நிலத்தடி நீரிலும், உற்பத்தி பொருட்களிலும் காணப்படுவதுடன் பலவித நோய்கள் உருவாகின்றது. இதை உணவாகக் கொள்ளும் கால்நடை உணவுகள் ஊடாகவும், மனித உடலில் புகுகின்றது.

.

 

இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்திய வெடிமருந்துகள் உரமாக, இரசயான பதார்த்தங்கள் கிருமிநாசினியாக மாற்றப்பட்டு இன்று விவசாயத்தில் திணிக்கப்பட்டது. இது தான் இலங்கை அரசின் விவசாயக் கொள்கை கூட. பன்னாட்டு நிறுவணங்களில் இலாப நோக்கில் விவசாயத்தில் புகுத்தப்பட்ட இரசாயனப் பொருட்கள் உடலில் கலப்பது என்பது, உணவு உற்பத்தியுடன் பிணைக்கப்பட்ட ஒன்றாக இன்று மாறி இருக்கின்றது. இலங்கை அரசின் விவசாயக் கொள்கை என்பது உணவை நஞ்சாக்கல் தானே ஒழிய இதற்கு எதிரானதல்ல.

 

 

பன்னாட்டு பால் பவுடர் உற்பத்தி என்பது அதிக லாபம் கொண்ட, குறைந்த விலையில் பாலை கறக்கின்ற முறையுடன் பின்னிப் பிணைந்தது. மிருகங்களை விரைவான கொழுக்க வைக்கவும், அதிக பால் கறக்கவும் பயன்படுத்தும் இரசாயனங்கள், மிருக உணவு ஊடாக மனித உடலுக்கு செல்லும் அதே நேரம், அதே செயற்பாட்டை மனித உடலுக்குள்ளும் செய்கின்றது.

 

இதில் எந்த அளவுக்கு உடலில் இரசயானத்தின் அளவு கலக்க முடியும் என்பது தொடர்பாக கூட, அவர்கள் தான் தங்கள் விற்பனை பாதிக்காத வண்ணம் ஒரு உலக அளவீட்டை கொடுத்து விடுகின்றனர். இதற்கு மாறாக இன்று உலகளவில் சுற்றுச்சுழல் மற்றும் தங்கள் உண்ணும் உணவு

 

பற்றி விழிப்புணர்வு, இயற்கை உணவை நோக்கியதாக மாறிவருகின்றது. மக்கள் இரண்டாக பிரிந்து நுகர்வதும், சந்தை இரண்டும் தனிதனி அடையாளங்களுடன் மேற்கில் இயற்கை சார்ந்த உற்பத்தியும் நுகர்வும் அதிகரித்து வருகின்றது.

 

இயற்கை உற்பத்தி செயற்கை உற்பத்தியை மிஞ்சும் அதே நேரம், செயற்கை உணவுகள் மேற்கில் தேங்குவதால் அதை ஏழைநாடுகளில் சந்தையில் திணிக்கப்படுவதும், மேற்கு பயன்பாட்டில் குறையும் இரசாயன உரங்களை ஏழைநாடுகளில் பயன்படுவது அதிகரிக்கின்றது. இந்த வகையில் ஏழை நாடுகளில் சிறு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, பண்ணை உற்பத்தி முறை புகுத்தப்பட்டு இரசாயன உரங்களால் நஞ்சுட்டப்பட்ட செயற்கை உணவு உற்பத்தி பெருக்கப்படுகின்றது.

 

உலகளாவில் இயற்கை விவசாயத்தை மறுத்து, இராசாயனப் பொருட்கள் கொண்ட விவசாயமாக மாறியது முதல், உணவுப் பொருட்களில் இராசாயனப் பொருட்கள் கலந்து தான் காணப்படுகின்றது. இந்த வகையில் உணவு சங்கிலித் தொடரில் டி.சி.டி. (டைசையான்டியாமைட்) என்ற இரசாயனப் பொருள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பயிர் செழிப்புக்காக பயன்படுத்தப்படும் அமோனியா என்ற இரசாயன கலவை, நிலத்தில் காணப்படும் பற்றீரியாவை நைத்திரேட்டாகவும் நைத்திரோக்சைட்டாக மாற்றுகின்றது. இவ்விரு வாயுக்களும் பச்சைக்கு குடில் விளைவை ஏற்படுத்துவதாலும், நிலத்தில் காணப்படும் பக்றீரியா மாற்றத்தை தடுப்பதற்காக, டி.சி.டி.எனும் இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த டி.சி.டி. மனித உடலில் சேரும் போது சிறுநீரகம் தொடர்பான நோயும், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது. இதே போன்ற டி.சி.டி. (டைசையான்டியாமைட்) இலத்திரனியல், பொருட்கள், மருந்துவகை உற்பத்தியிலும், உணவுப் பொதி செய்யும் முறையிலும்பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

அதிக லாபத்தை மைய்யமாக கொண்ட பன்னாட்டு உலக உணவு உற்பத்தியிலான உணவுச் சங்கிலி தொடரில், இராசாயனப் பொருட்கள் கொண்ட ஒன்றாக மாறிவிட்டது. இயற்கை அல்லாத உணவு அணைத்தும், இரசாயனப் பொருட்களின் கலவை ஆகிவிட்டது. அங்கர், மெலிபன், டயமன்ட் பால் மா உற்பத்திக்கான பால் உற்பத்திக்கான உணவுச் சங்கிலித் தொடரில், மிக நீண்ட காலமாகவே டி.சி.டி. (டைசையான்டியாமைட்) கலந்துதான் காணப்படுகின்றது.

 

அரசு இன்று திடீரென கூறுவது போல், இன்று நேற்று அல்ல. இந்த உண்மையை மறைத்துதான் அரசு இயங்குகின்றது. இந்த பின்புலத்தில் இலங்கை மக்களின் உள்ளுர் திரவ பால் நுகர்வை தடுத்து நிறுத்திய அரசு, பன்னாட்டு சந்தையைத் திறந்து பால்மா நுகர்வை ஊக்குவித்த காலம் முதலே இந்த இராசாயனப் பொருட்கள் மக்களின் உணவில் திணித்து வருகின்றது. குழந்தைகளுக்கு தாய்மார் பால் கொடுக்கும் இயற்கை முறையை இல்லாதாக்கி, செயற்கையான இரசாயன பால்மா உணவைத் திணித்தது. மக்கள் தங்கள் நுகர்வில் எதை நுகர்கின்றனர் என்ற பொது அறிவை இல்லாதாக்கி, இரசாயன நஞ்சு கலந்த பன்னாட்டு புண்ணாக்குகளை மக்களின் நுகர்வில் திணித்து விட்டவர்கள் வேறு யாருமல்ல இந்த அரசு தான்.

 

இயற்கை சார்ந்த தேசிய உணவு, தேசிய உற்பத்திகளை பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து அழிக்கும் அரசு, செயற்கையான பன்னாட்டு உணவுகளையே மக்களின் அன்றாட உணவாக்கின்றனர். இயற்கை மற்றும் தேசிய உணவு கூறுகளை அழித்துவிடுவது தான், அரசின் பொருளாதார மற்றும் விவசாயக் கொள்கையாக இருக்கின்றது. அங்கர், மெலிபன், டயமன்ட் உற்பத்தி செய்யும் பொன்டாரா என்ற பன்னாட்டு நிறுவணம், இன்று உலக பால் உற்பத்தியில் ஐந்தில் ஒன்றை கட்டுப்படுத்துகின்றது. இதற்கு துணை போன உலக அரசுகளில், இலங்கை அரசும் அடங்கும்.

 

இலங்கை அரசு மக்களின் உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கொள்கைளைக் கொண்டு செயற்பட்டதல்ல, செயற்படப்போவதுமில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்களினதும், தரகு முதலாளிகளின் நலன் சார்ந்த கொள்கை யைக் கொண்டு, நாட்டை சுடுகாடாக்கின்றது. திரவப் பாலுக்கு பதில் பால்மா உணவை அத்தியாவசிமான நுகர்வாக இணைந்த பின்புலத்தில், கூட்டு சுரண்டலே காரணமாகும். உலகில் உள்ள மற்ற எந்த நாடுகளை விடவும், பால்மா அதிகம் நுகரப்படும் பண்பாட்டைக் கொண்ட நாடுகளில் இலங்கை முன்னணி வகிக்கின்றது. இது இலங்கை மக்களின் உணவுப் பண்பாடாக இருக்காத போதும், தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இணைத்து உருவாக்கிய உணவு பண்பாடுதான் இலங்கையில் உள்ள பால்மா உணவாகும்.

 

இவர்கள் உருவாக்கியதை ஏன் இன்று சர்ச்சைக்குள்ளாகின்றது. பால்மா பதில் திரவ பாலை மீளக் கொண்டு வருவதற்காகவா!? இல்லை. இரசாயன கலவை அற்ற இயற்கையான பால்மாவை மக்களுக்கு கொடுக்கவா!?

 

இல்லை. அங்கர், மெலிபன், டயமன்ட் அல்லாத பால்மா இராசாயன கலவையற்ற இயற்கை சார்ந்த உணவு சங்கிலியில் இருந்து பெறப்படுகின்றதா!? இல்லை. இலங்கை மக்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு இயற்கை சார்ந்த பால் உணவை மக்களுக்கு கொடுக்கவா இந்த தடை!? இல்லை. ஆக உண்மை தெளிவாகப் புதைக்கப்படுகின்றது.

 

மாறாக அங்கர், மெலிபன், டயமன்ட் விநியோகத்தில் உள்ள உள்ளுர் லாபத்தை தமதாக்கும் தரகு முதலாளிகளுக்குள்ளான முரண்பாடுகளும், விநியோகத்தை ஏகபோகமாக்கும் முரண்பாடுகளும், இழுபறிகளும் தான் இந்த இரசாயனம் பற்றி கூச்சலாலும் பிரச்சாரமுமாகும். அத்துடன் தங்கள் உற்பத்தியான பால்மாவை விற்கவும், அதிக லாபத்தை தரக் கூடிய வேறு பால்மாவை சந்தைப்படுத்தவும், அறிமுகப்படுத்தவும் முனையும் தரகு முதலாளிகளும், வேறு பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்யும் முயற்சி தான் இரசாயனம் பற்றிய திடீர் கண்டுபிடிப்புகள்.

 

இந்தப் பின்னணியில் உள்ள சூக்குமத்தை தெரிந்து கொள்வோம். இன்று 'பொன்டேரா" பால்மா விநியோகத்துக்கான அங்கீகாரத்தைப் பெற சுமார் 100 மில்லியன் ரூபா (10 கோடி) மூலதன உத்தவாதம் கொண்டதான, சிறு தரகு முதலாளி முறை பொதுவாக காணப்படுகின்றது. 400 கிராம் பக்கற்றுக்கு 15 ரூபா லாபம் கிடைக்கும் வண்ணம், சந்தைக்கு எடுத்துச் செல்லும் பால்மா தரகர்கள், அதில் ஒரு பகுதியை சிறு வியாபரிகளுடன் பகிர்கின்றனர். இன்றைய இந்த முறையை தடுத்து, முழுமையாக ஏக போகமாக்க முனைகின்றது, பெரிய தரகு முதலாளி நிறுவனமான 'கொத்மலை மில்க் பிரடக்ட்ஸ்" மற்றும் "காகில்ஸ்" பல்பொருள் அங்காடியும். இவ் இரண்டும் ஓரே முகாமைத்துவத்தைக் கொண்டதும், மகிந்த குடும்பத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டதுமாகும்.

 

பால்மா விநியோகத்தில் ஏகபோகத்தை ஏற்படுத்தி அதிக லாபத்தை பெறவும், பேரம் பேசவும் முனைகின்றனர். சிறு தரகு போட்டியாளர்களை சந்தையில் இருந்து அகற்ற முனைகின்றனர். இதன் முதற்கட்டமாக அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாவை தங்கள் 'காகில்ஸ்" பல்பொருள் அங்காடி மூலம், வாங்கிய விலைக்கே மீண்டும் விற்கத் தொடங்கினர்.

 

சிறு தரகு முதலாளிகள் முரண்பட்ட நிலையில், பொன்டாரா கட்டுப்படுத்தக் கூடிய இந்த ஏகபோகத்துக்கு உடன்பட மறுத்த நிலையில் முரண்பாடுகள் தோன்றியது. வாங்கிய விலைக்கு விற்பதை மறுத்த பொன்டாரா, இடையில் ஒரு விலைக்கு விற்க உத்தரவிட்டது. இதை மறுத்து முழுமையான ஏகபோகம் அல்லது அதை உருவாக்கும் வண்ணம் தனக்கு போட்டியாளரை சந்தையில் இருந்து அகற்ற முனைந்ததன் மூலம், முரண்பாடுகள் முற்றின.

 

வாங்கிய விலைக்கு தொடர்ந்து விற்றதால், பொன்டாரா 'காகில்ஸ்" பல்பொருள் அங்காடிகான பால்மா விநியோகத்தை நிறுத்தியது. இதற்கு பதிலடியாக பொன்டாரா பிற பால் உற்பத்தி (யோக்கற்) விற்பதை நிறுத்தப் போவதாக மிரட்டியது. பொன்டாராவின் 60 சதவீதமான யோக்கற் விற்பனை இதனுடாகவே நடந்து வந்தது.

 

இந்த நிலையில் 'அங்கர் உற்பத்திகளை" சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என அரசாங்க தாதியர் சங்கத்தினால் ஒரு தடையுத்தரவை நீதிமன்றம் மூலம் ஏற்படுத்தினர். இதை அடுத்து தமக்குச் சொந்தமான 'கொத்மலை மில்க் புரடக்ஸ்" நிறுவனத்தின் பால்மா உற்பத்திகளை பெருமளவுக்க சந்தைக்கு கொண்டுவந்தனர். இதே நேரம் ஸ்ட்ரை அட்வடைசிங் விளம்பர நிறுவனம் தன் மரபுகளை மீறி, உலர் பால்மா உற்பத்திகளில் உள்ள பாதிப்புகள் குறித்து, வர்த்தகர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கொன்றை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்தியது. இவை தான் பால்மாவில் டி.சி.டி. (டைசையான்டியாமைட்) என்ற இரசாயனப் பொருள் பற்றிய பிரச்சாரம். யுத்தத்தின் பின்பாக உருவான திடீர் தரகு முதலாளிகளும், சர்வதேச முரண்பாட்டுக்குள் சிக்கியுள்ள அரசின் கொள்கையைப் பயன்படுத்தி பிழைத்துக் கொள்ள முனையும் தரகு முதலாளிகளும், சந்தையை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்ற முனைகின்றனர். முஸ்லிம் வியாபார நிலையங்களை கைப்பற்ற மசூதிகள் எதிரான தாக்குதல் போல், தங்கள் உற்பத்தி மற்றும் ஏகபோகத்தை நிறுவ அங்கர் உற்பத்தில் இரசாயனம் என்ற பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றளர். நாட்டை ஆளும் குடும்ப சாவாதிகார ஆட்சியை பயன்படுத்தி, இதை நிறைவு செய்ய முனைகின்றனர். பால் மா பற்றிய இந்த பிரச்சாரம், உண்மைகள் மீது உண்மையின் பாலானதல்ல, பொய்மையானது. மக்களின் பெயரில் மூடிமறைக்கப்பட்டு அரசு ஆதரவு பெற்ற குற்றங்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது.

 

மார்க்ஸ் கூறியது போல் 'ஒரு சமுதாயம் ஏழ்மையைக் குறைக்காமல் தன் செல்வத்தைப் பெருக்குகிறது என்றால், அச் சமுதாயத்தில் மக்கள் தொகையைவிட குற்றங்கள் வேகமாக அதிகரிக்கின்றன என்றால் அச் சமுதாய அமைப்பின் மையத்தில் அழுகிப்போன ஏதோ ஒன்று இருக்க வேண்டும்" அதுதான் இது.