அது ஒரு வைத்தியக் கலாநிதியின் வீடு. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறேன். ஊதுபத்திகள் வாசத்தைப் பரப்பியபடி புகை விடுகின்றன. சந்தனமும், பன்னீரும் சேர்ந்து நறுமணம் வீசுகின்றன. காவியுடை அணிந்த ஒருவரின் படத்திற்கு முன்னால் விழுந்து கும்பிடுகிறார்கள். அவரின் படத்திலிருந்து குங்குமம் கொட்டுகிறதாம். அவர் கடவுளின் அவதாரம் என்று அம்மா சொன்னா. அவரின் தலை பொப் பாடகர் ஏ.இ.மனோகரனின் தலை போல சுருள், சுருளாக ஸ்பிரிங் தலையாக இருந்தது. குங்குமம் கொட்டுவதற்கு பதிலாக இனிப்பு கொட்டினால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அதுவும் அய்ந்து சதத்திற்கு ஒன்று என்று விற்ற தோடம்பழ இனிப்பு எனப்படும் சிவப்பு நிற இனிப்பாக இருந்தால் இன்னும் நல்லது என்று நினைத்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் படத்தில் இருந்து இனிப்பு ஒருநாளும் கொட்டவில்லை. கடவுளின் அவதாரமும் கான்சர் வந்து செத்துப் போய் விட்டார்.

 

சாமிகள் பலவிதம். சங்கராச்சாரி போன்ற பிராமண சாமிகளிற்கு அது பிறப்புரிமை. ஒரு நூலை தோளிலே போட்டால் போதும். அது சாமிகளிற்கெல்லாம் சாமியாகி விடும். ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி, ஓசோ போன்றவர்கள் உயர்மட்டத்தினருக்கான சுவாமிகள். ஆங்கிலத்தில் தத்துவங்களை அள்ளி விடுவார்கள். அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் என்று அவர்களின் பக்தகோடிகள் பெருமிதம் கொள்ளுவார்கள். மனிதர்களை சாதிகளாக பிரித்து இழிவுபடுத்தும் இந்துமதத்தில் என்ன அறிவு இருக்கிறது கேட்டால் மறுமொழி இருக்காது. ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் யோகாசனம், தியானம் என்று படம் காட்டுவார்கள். ஆன்மீகம், தியானம், மன அமைதி தான் வாழ்க்கைக்கு அவசியம் என்று பக்தர்களிற்கு போதிக்கும் இந்த சாமிகளின் வாழ்க்கைக்கு ஆன்மீகம் தேவை இல்லை. பணம் மட்டும் தான் தேவை. கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

 

 

பிராமணர் இல்லாத, சரளமாக பேசத்தெரியாத, யோகாசனம் செய்யத்தெரியாத சாமிகள் என்ன செய்யலாம். இதென்ன தமிழ்ப்படமா யாராவது பஞ்ச் டயலாக் எழுதித்தர அதை பொறி பறக்க பேசுவதற்கு அல்லது கதாநாயகனிற்காக டூப் வந்து வீரசாகசம் பண்ணுவது போல டூப் வந்து யோகாசனம் பண்ணிக் காட்ட. ஆகவே ஆசாமிகள் றூம் போட்டு யோசித்து ஆளுக்கொரு அவதாரம் எடுக்கிறார்கள். அமிர்தானந்தா மாயி கட்டிப்பிடித்து அருளாசி வழங்குகிறார். பங்காரு சிவப்பு சேலை கட்டி அம்மன் வேசம் போடுகிறது. குடைச்சாமியார், விசிறிச்சாமியார், கஞ்சா சாமியார் என்று பட்டியல் நீள்கிறது.

 

குரங்காக இருந்த உயிரினம் உழைப்பின் மூலம் மனிதனாக மாறியது என்று பரிணாம தத்துவம் கூறுகிறது. லண்டன் மாநகரிலே மனிதனாக இருந்த உயிரினம் ஒன்று குரங்காக மாறிவிட்டது. அது தன்னை அனுமான் சுவாமிகள் என்று அழைத்துக் கொள்கிறது. அனுமான் சுவாமி அருள்வாக்கு சொல்ல முதல் ஆ, ஊ என்று குரங்குமொழி பேசும், உடம்பை வளைத்து, நெளித்து குரங்குச்சேட்டை விடும். அது குரங்குச் சேட்டையாக இருக்கலாம் அல்லது தமிழ்ப்பட கதாநாயகர்கள் ஆடும் குத்துடான்ஸ் பார்த்ததினால் வந்த பாதிப்பாகவும் இருக்கலாம்.

 

குரங்கு மாதிரி சத்தம் போட்டு, சேட்டை விடும் அனுமான்சாமி குரங்குகளின் வழக்கப்படி மரத்தில் தான் தொங்க வேண்டும். ஆனால் லண்டன் நகரசபை வேலையற்றவர்களிற்கு, ஆதரவற்றவர்களிற்கு, மாற்றுத்திறனாளிகளிற்கு இலவசமாக வசிக்கக் கொடுக்கும் வீடொன்றில் வசிக்கிறது. தசாவதாரத்தில் (கமலகாசன் படமல்ல) ஒரு அவதாரமான ராமரின் உற்ற தோழன், வைஸ்ணவர்களால் சிறிய திருவடி என்று அழைக்கப்படும் அனுமாரின் லண்டன் அவதாரம் அரசாங்கம் பணப்பற்றாக்குறை உள்ளவர்களிற்கு கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறதாம்.

 

இதுவாவது பரவாயில்லை சாமிகள் என்றாலே சோம்பேறிகள் தானே. உடம்பை வளைத்து வேலை செய்ய விரும்பாதவர்கள் தானே. அதனாலே வேலை இல்லாதவர்களிற்கு கொடுக்கும் அரசாங்க உதவிப்பணத்தை சாமி வாங்குவதிலே லைட்டாக ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் புராணங்களின் படி அனுமார் ஒரிஜினல் பிரம்மச்சாரி. உலகத்து காடுகளில் பெண் குரங்குகளையே திரும்பி பாராத ஒரே குரங்கு அனுமார் தான். லண்டன் அனுமாருக்கோ மனைவி பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள்.

 

லண்டன் பக்தகோடிகளிற்கு குறை தீர்த்தால் மட்டும் போதாது என்று அனுமான்சாமி இப்போது கனடாவிலும் ஒரு கிளை திறந்து வைத்திருக்கிறது. அனுமார் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஜம்ப் பண்ணி போனார் என்று கதை சொல்கிறது. லண்டன் அனுமார் ஜம்ப் பண்ணுவதில்லை. விமானத்தில் தான் போகிறார். தமிழ்நாட்டில் ஏ.பி.ரி என்ற பார்சல் கம்பனிக்காரர்கள் சஞ்சீவிமலையை அனுமார் தூக்கிக் கொண்டு போகும் படத்தை போட்டு வேகமாக பார்சல் அனுப்பும் கம்பனி என்று விளம்பரம் போடுவது போல பிரிட்டிஷ் எயார் வேயும் லண்டன் அனுமாரின் படத்தை போட்டு அனுமாரே பயணம் செய்யும் கம்பனி எங்கள் கம்பனி தான் என்று விளம்பரம் செய்யும் யோசனையில் இருக்குதாம்.

 

சாமியார்கள் என்றாலே கிளுகிளுப்பு தான். லண்டன் அனுமாரிடம் பக்தர் ஒருவர் கவலையோடு போனார்.

 

"சாமி எனது மனைவி என்னை விட்டு விட்டு இன்னொருவரோடு வாழ்கிறா".

 

சாமி கொஞ்ச நேரம் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தது.

 

"கவலைப்படாதே,உனக்கு நடந்தது நல்ல விசயம் தான்,ஆனால் அதை விட நல்லதாக ஒரு விசயம் நடக்கப்போகிறது".

 

"அப்ப எனது மனைவி திரும்பி வந்து விடுவாவா" பக்தர் சந்தோசப்பட்டுக் கேட்டார்.

 

"இல்லை உனது மனைவி உன்னை விட்டு போனது போல, இப்போது சேர்ந்திருப்பவரையும் விட்டுவிட்டு இன்னொருவருடன் போய் விடுவா".

 

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்.

 

"விளையும் பயிரை முளையிலே தெரியும்" என்பது தமிழ் முதுமொழி. யாழ்ப்பாணத்து அராலியில் லண்டன் அனுமார் அவதரித்து வாழ்ந்த காலங்களில் அவரோடு வாழும் பெருமை பெற்ற நண்பர் ஒருவர் சொன்னார். "அவர் அனுமாராக வருவார் என்று எனக்கு அப்பவே தெரியும். ஏனென்றால் பெடியங்கள் மதகிலே இருந்து கதைக்கும் போது அவர் குந்திக் கொண்டிருப்பது குரங்கு குந்திக் கொண்டிருப்பது போலேயே இருக்கும்".

 

பசித்த வாய்க்கு சோறில்லாமல் பட்டினி கிடக்கும் நாட்டில், போரிலே வீடுகள் அழிந்து போக, இருக்க ஒரு குடிசை இல்லாமல் மக்கள் வாழும் நாட்டில் புதிது புதிதாக கோயில்களை கட்டுகிறார்கள். கோபுரங்களை எழுப்புகிறார்கள். மருதனார்மடத்திலே எழுபத்திரண்டு அடி உயரத்திலே அனுமார் வாயை பிளந்து கொண்டு நிற்கிறார். குங்குமம் சாயிபாபா, லண்டன் அனுமார் போன்ற சாமிகள் மக்களின் மூடநம்பிக்கைகளை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். பெரியார் போன்ற மக்கள் மொழி பேசிய ஒரு போர்வாளின் அவசியம் மீண்டும், மீண்டும் தமிழர்களிற்கு தேவைப்படுகிறது.