ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உழைக்கும் வர்க்க பெண்கள் நீண்ட காலமாக போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

 

1857ஆம் ஆண்டில் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது. வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

ஆண்களுக்கு இணையான ஊதியம் உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.

அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத்தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உரிமை சம ஊதியம் கோரினர். தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்க்கான  ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

இப்படியான மிக கடினமான நீண்ட காலப் போராட்டங்கள் மூலம் பெண்கள் தங்களது உரிமைக்கான போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து தங்களது உரிமைகளை ஓரளவிற்கு நிலை நாட்டியுள்ளனர். முற்று முழுதான விடுதலையினை இன்னமும் அடைந்து விடவில்லை. இன்றும் ஆணுக்கு சமமான ஊதியம் பெண்களிற்கு கொடுக்கப்படுவதில்லை. விளம்பர பொருளாகவும், வீட்டு வேலைகளை செய்யும் இயந்திரங்களாகவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் முதலாளித்துவ, நிரப்பிரவுத்துவ மற்றும் நவதாராளமய பொருளாதாரத்துவ அமைப்பில் தொடாந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இலங்கையில் நீண்ட கால யுத்தஙகள் காரணமாக பெண்கள் தங்களது உறவுகளை இழந்து உள்ளதுடன் பலர் அங்கவீனர்களாக உள்ளதனால், அவர்களை பராமரிக்க வேண்டியம் உள்ளனர். யுத்த காலத்தில் பெண்கள்  மீது வகை தொகையற்ற பாலியல் வல்லுறவுகள் ராணுவத்தினரால் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன. அவை இன்றும் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் கணவனை இழந்து போயுள்ளதனால் குடும்ப பொறுப்புக்களை சுமக்க கடின உழைப்பில் ஈடுபடவேண்டியுள்ளது.

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளின் அளவு நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகரித்த வண்ணமுள்ளது. சுதந்திர வர்த்தக வலயங்களில் வேலையில் உள்ள பெண்கள் கொத்தடிமைகள் போன்று நடாத்தப்படுகின்றனர். இன்றைய ஆணாதிக்க சமூக அமைப்பில் அவர்கள் மேலும் பல இன்னல்களிற்கும் உள்ளாகின்றனர்.

மேலும் புலிகள் அமைப்பில் இணைந்து போராடிய பெண்களை நிலப்பிரவுத்துவ சிந்தனையினை கொண்ட எமது சமூகம் பல பிற்போக்கான காரணங்களை கூறி ஒதுக்கி வைத்துள்ளது. இதனால் பெண் போராளிகள் தற்கொலையினை தழுவுவதும் மன உளைச்சல்களிற்கும் உள்ளாகியுள்ளனர். இப்படியாக பல பல கொடுமைகளையும் அடக்கு ஒடுக்குமுறைகளையும் எமது நிலப்பிரவுத்துவ சிந்தனை கொண்ட சமூகம் பெண்கள் மீது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பெண்கள் குறித்த பல சட்டங்களை  முதலாளித்துவ அரசுகள் இயற்றியுள்ள போதும் அவை நடைமுறையில் முழுமையானதாக பெண்களுக்கான பாதுகாப்பினை கொண்டதாக இல்லை.

பெண்களின் உரிமைகளை வெறுமனே சட்டம், ஒழுங்கு, நீதி என்பவற்றால் பெற்று விட முடியாது. பெண்களை போகப்பொருளாக, நுகர்வுப்பண்டமாக மட்டும் சித்தரிக்கும் வணிகக் கலாச்சாரம், முதலாளித்துவ பொருளாதாரம் இருக்கும் வரை அவள் விடுதலையாக முடியாது. அவளை அசுத்தமானவளாக, சமமற்றவளாக நடத்தும் மதங்களை உடைக்காமல் அவள் விடுதலை பெறமுடியாது. உயர்வு, தாழ்வு இல்லாத சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் இணையானவர்கள் என்னும் பண்பாடு நிலவும் வாழ்க்கை முறையில் ஏனைய விலங்குகள் உடைபடும் போது பெண்ணின் விலங்குகளும் உடைபடும்.

இன்றைய மகளிர் தின நாளில் பெண்கள் தம்மீதான சகல விதமான அடக்கு முறைகளிலும் ஒடுக்குமுறைகளிலும் இருந்து முற்றாக விடுதலை பெற சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு போராட முன்வர வேண்டும் என அழைக்கின்றோம்

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

08/03/2014