இன்றைய சூழ்நிலையில் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து நவமணி பத்திரிகையின் ஆசிரியரும், பேராதனை பல்கலைக்கழக முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜனாப் என்.எம். அமீன் அவர்களோடு போராட்டம் பத்திரிகை நடத்திய நேர்காணலிலிருந்து…..

போராட்டம்: இன்றைய நிலையில் நாட்டில் 65வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் பற்றிய உங்களது கருத்து என்ன?


என்.எம். அமீன்: இந்தக் கேள்வியைக் கேட்கும்போது சுதந்திரம் என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஊடக சுதந்திரம் இருப்பதாக சொன்னாலும் கூட இன்று மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் கருத்தை அவரின் சுய விருப்பத்தின் பேரில் வெளியிடுவதுதான் சுதந்திரம் என்பது. ஆனால் பத்திரிகையாளர்களால் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாதுள்ளது. அப்படி மீறிவெளியிட்டால் அவர் மாற்றுக் கண்கொண்டு பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சுதந்திரம் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் ஏற்கனவே பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள். கொடூர யுத்தம் ஒன்று முடிந்ததாகக் கூறப்படுகின்றது. இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு இற்றை வரைக்கும் கிடைத்த பாடில்லை. தற்பொழுது நாட்டில் புதிய ஒரு பிரச்சினை துவங்கியிருக்கின்றது. அதுதான் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம். இலங்கையின் சுதந்திரத்திற்காக இந்த நாட்டு சிங்களவர்கள் மாத்திரமல்ல தாய்நாட்டின் மீது நேசம் வைத்திருந்த முஸ்லிம்களும், தமிழர்களும் சுதந்திரத்திற்காக பெருமுயற்சி எடுத்ததை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்.


சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதில் ஒரு நிமிடத்தையும் தாமதிக்கக்கூடாது என்று அறிஞர் டி.பி.ஜாயா கூறியதை மறந்து விட்டார்கள்போலும். ஆனால் இப்பொழுது நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது உண்மையில் சுதந்திரம் இருக்கின்றதா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகின்றது.


போராட்டம்: முஸ்லிம்களின் ஜனத்தொகை பெருகுவதாகக் கூறப்படுகின்றது இது பெரும்பான்னை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக சில கடும்போக்கு வாதிகள் கூறுகிறார்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?


என்.எம்.அமீன்: ஜனத்தொகை வளர்ச்சி பொதுவாக நாட்டில் கூடியுள்ளது என்பது உண்மைதான். அந்த அடிப்படையில் பார்க்கப்போனால் முஸ்லிம்களின் சனத்தொகையும் விகிதாசாரத்திற்கு ஏற்ப அதிகரித்துள்ளது. நாம் கடந்த கால புள்ளி விபரங்களை பார்ப்போமாயின் 7.6 வீதமாக இருந்த முஸ்லிம்களின் சனத்தொகை 9.8 வீதமாக ஆக உயர்ந்துள்ளது. தமிழர்களின் சனத்தொகை 8 வீதமாக இருந்தது 9 வீதமாக ஆக அதிகரித்துள்ளது.


சிங்களவர்களின் சனத்தொகை 68 வீதமாக ஆக இருந்தது 71 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது தற்போது பரப்பப்பட்டுவரும் கருத்தானது பொய் என்பதை புரிந்துகொள்ள முடியும்.


இன்னும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் முஸ்லிம் மக்களும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளத்தானே வேண்டும். இஸ்லாத்தில் கருக்கலைப்பிற்கு அனுமதியில்லை, கருத்தடை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கட்டுப்பாடோடு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது SMS, E-Mail போன்றவற்றின் ஊடாக போலிப்பிரச்சாரம் இடம்பெறுகின்றது.


2052 இல் முஸ்லிம்களின் சனத்தொகை 52 வீதமாக ஆகிவிடுமென்று கூறப்படுகின்றது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரமற்ற குற்றச்சாட்டு. 68மூமான முஸ்லிம்கள் வடக்கு- கிழக்கில் வாழ்கின்றார்கள். ஆனால் நாட்டில் பல மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.


போராட்டம்: இப்பொழுது ஹலால் சான்றிதழ் பற்றி பேசப்படுகின்றது. இதற்காக அறவிடப்படும் பணம் இஸ்லாமிய அமைப்புகளை போய்ச்சேருவதாக கூறப்படுகின்றது. இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?


என்.எம். அமீன்: இஸ்லாமிய முறைப்படி முஸ்லிம்கள் ஹலால் உணவையே உட்கொள்ள வேண்டும். ஹலால் சான்றிதழை ஜமியத்துல் உலமா சபை வழங்குகின்றது. நாட்டில் 3400 பொருட்களுக்கு ஹலால் இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் 4 கம்பனிகள் மாத்திரமே வருடமொன்றுக்கு 175,000 ரூபாவை ஹலால் சான்றிதழுக்காக செலுத்துகின்றன. ஜமியத்துல் உலமா சபையின் மாதாந்த வருமானம் 16 அல்லது 17 இலட்சங்களாகும். அங்கு 47 ஊழியர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு 40.5 மில்லியன் ரூபா சம்பளத்திற்காக செலவாகின்றது. ஜம்மியத்துல் உலமாவால் ஹலால் சான்றிதழ் வழங்குவது கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது. இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் அரசிடம் திறமை வாய்ந்த புலனாய்வுத்துறை உள்ளது. அவர்களை வைத்து தேடலாம். அப்போது தான் உண்மை வெளிப்படும்.


போராட்டம்: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைக்கப்படும் போது அரச படைகள் வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றன. இனவாதத்திற்கு எதிராக மக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டுப்பிரசுரம் பகிர்ந்த சம உரிமை இயக்கத்தினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?


என்.எம். அமீன்: நீங்கள் சொல்வது உண்மைதான். தம்புள்ளயில் பள்ளிவாசல் இடிக்கப்படும் பொழுது அரச படைகள் அருகில் நின்றன. பிக்குகள் சிலரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோதிலும் இராணுவத்தினர் முஸ்லிம்களின் தொழுகையை நிறைவேற்றுவதற்கு அனுமதியளித்தார்கள்.


இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தம்புள்ள சம்பவம் மட்டுமல்ல அனுராதபுரத்தில் சியாரம் இடிக்கப்பட்டது. தெஹிவலையில் பள்ளியில் தொழக்கூடாதென்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. குருநாகல் பகுதியில் பள்ளிவாசலை அகற்றுமாறு கூறப்பட்டது. மட்டுமல்ல, சம உரிமை இயக்கத்தினரை தாக்கியது வரை நாட்டில் ஜனநாயகம் தொடர்ச்சியாக மீறப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பதையே மேற்படி சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்று வித்திருக்கின்றது.


போராட்டம்: இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பொதுபலசேனா பற்றி உங்களது கருத்து என்ன?


என்.எம்.அமீன்: இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றார்கள். 1977ம் ஆண்டுக்குப்பிறகு சர்வதேச நாடுகளின் தொடர்பு அதிகரித்திருக்கின்றது. இதன் காரணமாக இலங்கை முஸ்லிம்களும் சர்வதேச அளவில் பேசப்படுகிறார்கள். இதனால் இஸ்லாத்தில் உள்ள பல விடயங்களை அறியக்கூடிய வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் கிடைத்திருக்கின்றது. இதனால் முஸ்லிம்களின் சர்வதேச தொடர்பு அதிகரித்தது. அதை வைத்துக்கொன்டு முஸ்லிம்களுக்கு அரபு நாடுகள் உதவுகின்றன இதனால் முஸ்லிம்கள் வேறுமாதிரியாக செயற்படுகிறார்கள் என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகும். தமிழர்கள் 50க்கு 50 கேட்கும் போது முஸ்லிம்கள் அவ்வாறு கேட்க வில்லை. அவ்வாறு கேட்டிருந்தால் நாடு என்றோ துண்டாடப்பட்டிருக்கும்.


முஸ்லிம்கள் நாட்டைப்பிரிக்காது ஒன்றாகவே வாழ விரும்பினார்கள் இதுதான் உண்மை. ஆனால் இன்று இப்படிப்பட்ட சம்பவங்கள் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பேசப்படாதது துரதிஸ்ட்ட வசமாகும்.பொது பலசேனா தற்போது பரப்பிவரும் கட்டுக்கதைகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை.


போராட்டம்: இறுதியாக தற்போது நாட்டில் உருவாகியுள்ள இனமுறுகல் மற்றும் பொருளாதார பிரச்சினை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?


என்.எம்.அமீன்: முன்பு சகோதரத்துவ வாஞ்சையோடு சந்தோஷமாக இருந்த முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்ட சில தீய சக்திகள் இனவாதத்ததை பரப்பி வருகின்றன. இதே போன்ற நிகழ்வுதான் தமிழ் மக்கள் மத்தியிலும் பரப்பப்பட்டது அது ஆயிரக்கணக்கான மனிதப்படுகொலையுடன் முடிவுக்கு வந்தது. தற்போது நாட்டில் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்ப எத்தனிக்கும் நடவடிக்கையானது கடந்த கால நிகழ்வுகளை ஞாபகப்படுத்துவதோடு, இப்போது நடக்கும் சம்பவங்கள் மிகுந்த வேதனையைத் தருகின்றது. நாட்டில் நல்லதொரு பொருளாதார கொள்கை இல்லாததினால் நிறைய கம்பனிகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவோம் என்று சொல்கின்றார்கள். ஆனால் நடந்தது ஒன்றுமில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவேலைகளைச் செய்கின்றன.
பாதை கட்டுமானப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை விசேடமாகக் கூறலாம். ஆனாலும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் பொழுது அவர்கள் நினைப்பது போல் செய்யாமல் நாட்டின் நிலைமையை கருத்திக் கொண்டு செயற்படவேண்டும்.