09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

செந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்

வெற்றுக்கூச்சல்கள், வெறித்தனமான பேச்சுக்கள், நஞ்சைக் கக்கும் இனவெறி இவைகளிற்கு எவ்வளவு முகமூடிகள் போட்டாலும் அவை கழன்று விழ கனநாட்கள் எடுப்பதில்லை. செந்தமிழன், பெரியாரின் பேரன் என்று சிவப்பும், கறுப்பும் கலந்த கலவை நான் என்று எவ்வளவு அரிதாரம் பூசினாலும் சாயம் வெளுக்க வெகுநாட்கள் தேவைப்படவில்லை. பச்சையான இனவாதம் பேசி தமிழனை, தமிழன் ஆண்டால் எல்லாப்பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று பசப்பு வார்த்தைகள் பேசி திரிந்த செந்தமிழன் தமிழ்மண்ணை, தமிழ்மனிதர்களை கொள்ளையடிக்கும் கொள்ளைத்தமிழர்களின் காலில் விழுந்து எழுந்து அந்த தமிழ்தலைமை இது தான் என்று அடையாளம் காட்டுகிறார்.

ஆண்ட தமிழ்ப்பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைக்கிறது, தமிழனை தமிழன் ஆண்டால் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்து விடும் போன்ற லூசுத்தனமான கதைகள் மூலம் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ள தமிழர்களை மொட்டை அடித்தவர்களின் தொடர்ச்சி தான் இந்த சீமான். அவர் ஒரு தமிழ்ப்பட இயக்குனர் என்பதால் சைக்கிள் சக்கரத்தை சுற்றும் சின்னப்பெடியன் அடுத்த நிமிடம் வளர்ந்து இளைஞன் ஆவது போல் அவர் சொல்லும் தமிழ்தலைமை எப்படி இருக்கும் என்பதை வெகு விரைவாக குளோஸ்-அப் இல் காட்டுகிறார். தமிழ்நாட்டுக்கு வந்த அப்பாவி சிங்கள மக்களை எதிரிகளாகக் காட்டி, தனது கட்சிக்காரர்களிற்கு இனவெறி ஊட்டி அடிக்க வைத்தவர் தமிழ்நாட்டையும், தமிழ்மண்ணையும் கொள்ளை அடிப்பவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.


நடராசன் என்னும் நாயின் காலில் அவர் மனைவி சகிதம் காலில் விழுகிறார். (நடராசன் - நாய் என்று ந வரிசையில் வந்ததால் பழக்க தோசத்தில் எழுதி விட்டேன். விலங்குகளை மிகவும் நேசிக்கும் நான் இப்படி நடராசனோடு ஒப்பிட்டு எழுதியதிற்கு நாய்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.) நடராசன் தமிழ்நாட்டு அரசிலே வேலை பார்த்தவன். அது மட்டும் தான் அவனது வருமானம். ஆனால் அவன் இன்றைக்கு ஒரு பெரிய கோடீஸ்வரன். எப்படி இந்த பணம் வந்தது? அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம் என்னும் குண்டர்களின் கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு அரசியல்மாமா வேலை செய்ததன் மூலம் வந்தது. தமிழ்நாட்டு மக்களை மொட்டையடித்து, மக்கள் பணத்தை கொள்ளையடித்து வந்தது. நடராசனும் அவனது மன்னார்குடி குண்டர்களின் கூட்டமும் சேர்ந்து தமிழ்நாடு முழுக்க அடித்த, அடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைகளின் அளவு கணக்கிட முடியாதது. கோடிக்கணக்கான ஏழைத்தமிழர்களின் பணத்தை கொள்ளையடித்த ஒருவனின் காலில் விழுந்து எழுவதற்கு செந்தமிழன் கொஞ்சமும் வெட்கப்படவில்லை.


தமிழ்நாட்டின் தென்பகுதி முழுக்க கடலோரமண்ணை தோண்டி கொள்ளை அடிக்கிறான் வைகுண்டராசன் என்னும் கொள்ளைக்காரன். ஜெயலலிதாவின் ஆசியோடு அரசநிலங்களை மிகமலிவாக குத்தகைக்கு எடுத்து கனிமங்களை அளவிற்கு அதிகமாக தோண்டி எடுத்து நிலங்களை பாலைநிலமாக்குகிறான். இவனிற்கு எதிராக போராடும் மக்களை அடியாள்படை கொண்டு அடக்குகிறான். இவனது மகனின் திருமணத்தில் வாய் கொள்ளா சிரிப்புடன் போஸ் கொடுக்கிறார் "நாம் தமிழன்". இயற்கையை நாசப்படுத்தி தமிழ்மண்ணையே இல்லாமல் செய்து வருபவன் "தமிழர்களின் பகைவனாக" அவருக்கு தெரியவில்லை.


தமிழர்களை, தமிழ்மண்ணை கொள்ளையடிப்பவர்கள் அண்ணன் சீமான் பதவியில் இல்லாத போதே, எதுவித அதிகாரமும் இல்லாதபோதே இப்படி கூடிக்குலாவுகிறார்கள். தமிழ்நடிககோமாளிகளிற்கு பிறகு 2020 அல்லது 2030 இலே நான் தான் அடுத்த முதல்வர் என்னும் தமிழ்நடிககோமாளிகளிற்கு பிறகு அண்ணனிற்கும் ஒரு சான்ஸ் கிடைத்து அண்ணன் முதல்வர் ஆகினால் என்ன நடக்கும். ஆனால் அண்னன் தமிழ்ப்பட இயக்குனர் என்பதால் "வைகுண்டராசன் வீட்டு திருமணத்திற்கு உளவு பார்க்க போனேன், நடராசனிற்கு பக்கத்திலே நின்றபோது யாரோ தமிழ் இனத்துரோகி போட்ட வாழைப்பழத்தோலிலே சறுக்கி விழுந்ததைத் தான் காலிலே விழுந்தேன் என்று கயவர்கள் கதை கட்டி விட்டார்கள்" என்று கூட திடுக்கிடும் திருப்பங்களுடன் திரைக்கதை எழுதலாம். ஜெயலலிதாவை ஈழத்தாய் என்றதையே தாங்கிக் கொண்டவர்கள் இதை எல்லாம் தாங்க மாட்டோமா!


இனவாதிகளின் அரசியல் என்றைக்குமே இப்படி அரைகுறையாக, ஆபத்து மிக்கதாகத் தான் இருக்கும். ஜெர்மனித்தாய்நாட்டிற்கு யூதர்களினால் ஆபத்து என்று யூதர்களை கொன்ற கிட்லர் கொன்று குவித்த ஜெர்மனியமக்களின் தொகை கொஞ்சமல்ல. தமிழ்மக்களை கொன்று குவித்த மகிந்து கம்பகாவில் தண்ணிருக்காக போராடிய சிங்களமக்களை கொல்வதற்கு கொஞ்சமும் தயங்கவில்லை. இனம், மதம், மொழி என்பன மக்களைப் பிரிப்பதற்கு, பிரச்சனைகளை திசை திருப்புவதற்கு அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்