Language Selection

"சும்மா இருந்து ஏன் சிரித்துக் கொண்டிருகிறாய்.., மூளை கோளாறாகிவிட்டதா..? ஒரு முகம் கொண்டு நீ சிரிப்பதையே சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஆறு முகத்தாலை நீ சிரிக்கிறதை பார்க்க பயமாகவுள்ளது..!" – கணேசன்.


"என்னைப் பார்த்து யாரும் பயப்படுவதில்லை. உன்ரை முகத்தைப் பார்த்துத்தான் எல்லோரும் மிரளுகின்றார்கள்!" – கந்தன்.


"உன்னைப் போல பல வேசங்கள் போட்டு சனத்தை நான் ஏமாத்தவில்லை, யாரும் என்னைப் பார்த்து பயப்பட்டதுமில்லை.., எல்லாருக்கும் என்னை புடிச்சுமிருக்கு. விநாயகனே எங்களுக்கு அறிவைத்தா என்று என்னைத் தான் கேட்கிறார்கள்.., உன்னை யாரும் கேட்பதில்லை." – கணேசன்.

"அது தான் நீ இன்னும் கல்யா....,"


"என்ன இரண்டு பேரும் விடியவே தொடங்கீட்டியளா.., ஒரு நாளைக்காவது சண்டை போடாமல் இருக்கமாட்டியளே...?"


"அம்மா, தம்பி தான் என் முகத்தைப் பற்றி ஏளனம் செய்கிறான்..!"


"இல்லை அம்மா அண்ணா தான் தொடங்கினவன், என்னிலை தப்பில்லை..!"


"தெரியும்.., தெரியும்... நான் எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். ஆமா, நானும் ஒன்னு உன்னை கேக்கணும் கந்தா, ஒரு மணி நேரமாய் ஆறு தலை அவதாரத்தோடை இதிலை இருந்து சிரித்துக் கொண்டிருகிறாய். அப்படி என்ன தான் விசயம்."


"உங்களுக்கு எதுவுமே தெரியாதா அன்னையே..? இன்று நல்லூரில் என்னுடைய தேர்த் திருவிழா. அதுதான் அங்கு நடக்கும் வேடிக்கைகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றேன்."


"அப்படி என்ன வேடிக்கையப்பா...!"


"நீங்களே பாருங்கள் தாயே, அதோ உண்டியலில் ஒருவர் நோட்டுக்களை திணித்து கொண்டிருக்கின்றாரே.., அவர் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்துள்ளார். 30 வருடங்களாக அவர் ஐரோப்பாவில் வசித்து வருகின்றார். ஆனால் ஒரு நாள் கூட அவர் வேலை செய்தது கிடையாது. பணம் மட்டும் இலட்சத்தினை தாண்டி கோடிகளில் உள்ளதால் பல சட்ட விரோதமான வழிகளில் பணத்தினை பாதுகாத்து வைத்துள்ளார். இங்கு பல பெரிய நோட்டுகளை கோவில் உண்டியலுக்குள் திணித்துக் கொண்டிருக்கின்றார்."

"வேலை ஏதும் செய்யவில்லை என்கிறாய்.., அப்படியிருக்க எப்படி இவ்வளவு பணத்தினை சம்பாதித்தார்..?"


"தாயே, வேலை செய்பவனால் அது எப்படி முடியும்? அவனுடைய மாத வருமானம் அவனது குடும்ப செலவிற்கே போதாது. ஆனால் இவர்கள் பல வழிகளில் பணத்தினை பெருக்குகின்றார்கள். பத்தை நூறாக்குகின்றார்கள்.., நூறை ஆயிரமாக்குகின்றார்கள்."


"அது எப்படிக் குமரா..? "


"அது உங்களுக்கு சொன்னால் புரியாதம்மா. கஸ்ரப்பட்டவனை பல வழிகளில் சுரண்டலாம்….
அதை விட்டு விட்டு அங்கே பாருங்கள், அந்தப் பெண்ணை..! ஒரு சிறுவனை தூக்கி வைத்துக் கொண்டு கையேந்தி பிச்சை கேட்கிறாள், அவள் வன்னியில் கணவனை இழந்தவள்..! மற்றொரு சிறுமியைப் பாருங்கள். ஒரு காலை இழந்து ஊன்று கோலோடு நிற்கின்றாள். அவள் காலை மட்டுமில்லை, வன்னிப் போரில் பெற்றோரை இழந்து விட்டாள். மூன்று வருடங்கள் முகாமில் இருந்துவிட்டு அவளது சித்தி வீட்டிற்கு வந்தாள். சில நாட்களில் அவர்களும் அவளை விரட்டி விட, இப்போது தெருவில் நின்று பிச்சை எடுக்கின்றாள். இவர்களின் தட்டிலே ஒரு ரூபாய் பணத்தினை கூட போடாத இந்த பணம் படைத்தவர்கள், உண்டியலில் பல நோட்டுகளை போட்டு தங்கள் பாவத்தை போக்குகின்றார்களாம். "


"அங்கே அந்த தம்பதிகளைப் பாருங்கள் தாயே... கைக் குழந்தையை வைத்துக் கொண்டு.., அவர்களின் அன்றாட வீட்டுச் செலவிற்கே அவர்களின் வருமானம் போதாது.., அப்படியிருக்க, முருகனுக்கு ஏதாவது போடோனும் என்று நூறு ரூபாயினை உண்டியலில் கொண்டு வந்து போடுகின்றார்கள்..!

"ஏன் இந்த மனிதர்கள் இப்படி பயப்பிடுகின்றார்கள்..., நான் அவர்களை கேட்டேனா.., அல்லது எனது தந்தை கேட்டாரா..? என் தந்தையிடம் இல்லாததையா இந்த மனிதர்கள் எனக்குத் தந்துவிடப் போகிறார்கள். ஏன் இவர்கள் இப்படி சிந்திக்கின்றார்கள்..? "


"முருகா, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டாய். சற்று அமைதி கொள்..! விண்ணுலகைப் போல் மண்ணுலகில்லையப்பா. பல அழுத்தங்களுக்கு மத்தியில்தான் மனிதர்கள் தங்கள் வாழ்கையினை ஓட்டுகின்றார்கள். மாற்றங்கள் அவர்களை மாற்றுகிறது. தடுமாற்றங்களும் தவறுகளும் அங்கு தான் ஆரம்பிக்கின்றது. அதிகாரமும் ஆதிக்கமும் மனிதனை அடக்கி ஆள்கின்றது. மனித சிந்தனையில் சுயநலப் போக்கே மேலோங்கி நிற்கின்றது.


மனித அறிவும் சிந்தனையும் மனிதனோடு மனிதனையே வேறுபடுத்தி அழிவுகளையும், அவலங்களையும் ஏற்படுத்துகின்றது...! ….


அங்கே பார், அவர் யார்? ஒரு வயது போனவர் சனங்களுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருக்கின்றார். என்ன என்று உனக்கு புரிகிறதா முருகா...? "


என்ன தாயே நான் தமிழ் கடவுள் அல்லவா…எனக்கு தமிழ் புரியாதா?


'அவர் தான் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தாயே. அவருக்கு முன்னால் நிற்பவர் சித்தார்த்தன். சித்தார்த்தனுக்கு பக்கத்தில் நிற்பவர் தான் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் விக்னேஸ்வரன். எனது பக்தர்களிடம் வாக்கு வேண்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்."


'இவர்களுடைய அரசியல் என்ன குமரா? "


'அதே அரசியல் தான் தாயே. மக்களை வன்னிக்கு இழுத்துச் சென்று அழித்தொழித்து சீரழிவுககளையும் அவலங்களையும் ஏற்படுத்திய அரசியலைத் தான் இவர்கள் இன்றும் பேசி வருகின்றார்கள். இவர்களால் எந்த மாற்று அரசியலையும் முன்வைக்க முடியாது.., அந்தளவு நேர்மை இவர்களிடம் இல்லை…!


அங்கே பாருங்கள் தாயே, ஹெலிகப்ரரில் இருந்து என் தேர் மீது பூ கொட்டுகிறார்கள் ஜனாதிபதி மகிந்தா அவர்களின் இராணுவ அதிகாரிகள். வன்னியிலே குண்டு மழை பொழிந்தார்கள். இங்கு பூ மழை பொழிகின்றார்கள்."


'இவர்களுடைய…"


'சற்று பொறுங்கள் தாயே, நானே சொல்லிவிடுகிறேன். இவர்களுடைய அரசியலும் அதே தான். தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிடம் இனவாதத்தை வளர்க்கின்றார்கள்.., சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களிடம் இனவாதத்தினை வளர்க்;கின்றார்கள்…"


'வேலா.., எது எப்படியிருந்தாலும் மக்கள் தான் பாவம். இவர்களுடைய அரசியல் அவர்களை மீண்டும் அழிவுக்கு கொண்டு சென்றுவிடும். இவர்கள் மக்களை இணையவிடமாட்டார்கள். மக்கள் இணைந்துவிட்டால் இவர்களது பிழைப்புக் கெட்டுவிடும். இனவாதம் இல்லாமல் இவர்களால் அரசியல் நடாத்த முடியாது. இவர்கள் மாறமாட்டார்கள்..!


மக்கள்தான் மாறவேண்டும். மாற்றுச் சிந்தனையினை மக்களிடம் தான் வளர்த்தெடுக்க வேண்டும். முதலில் சகல மக்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும். இந்த ஏமாற்று அரசியல்வாதிகளை தூக்கியெறிந்து தங்கள் உரிமைகளை வென்றெடுக்க சகல மக்களும் இணைந்து போராட வேண்டும்…!"


'தாயே.., சம்பந்தன் தான் இறுதி வரை கூட்டமைப்பின் தலைவராய் இருக்க வேண்டுமாம்.., விக்னேஸ்வரன் தான் முதலமைச்சராக வேண்டுமாம்.., கூட்டமைப்பில் சிலர் இவர்களையெல்லாம் கவிழ்த்து தாங்கள் அந்த இடத்திற்கு வர வேண்டுமாம்.., மகிந்தா எப்போதும் தனது கையில் அதிகாரம் இருக்க வேண்டுமாம்.., இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்த, மக்கள் என்னை வணங்கி நிற்கின்றார்கள். நான் எப்படி இவர்களுக்கு துணை போக முடியும் தாயே..? "


'இவர்களை விட்டுவிடு குமரா. ஆனால் மக்கள் அப்பாவிகள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். நீ எதற்கும் ஒரு முறை புத்தர்பிரானை பார்த்து பேசிவிட்டு வா. அவர் மிகவும் அன்பானவர். மக்களுடைய பிரச்சனையினை அவரால் தான் புரிந்து கொள்ள முடியும்.."


'ஆகட்டும் தாயே அப்படியே செய்கிறேன்! "


'கணேசா, நீயும் தம்பியோடு சென்று வா.."


'வேண்டாம் அன்னையே, நான் மட்டும் சென்று வருகிறேன். அண்ணணைப் பார்த்தால் எதிர்க்கட்சிக்காரன் வந்துள்ளதாக புத்தர் நினைத்துவிடுவார். அதனால் நானே செல்கிறேன்."


'பாருங்கள் தாயே, இவன் என்னை எப்படி கிண்டல் செய்கிறான் என்று…! இவனைப் பழநியிலே போய் இருக்கச் சொல்லுங்கள்.., அல்லது நான் பழநிக்கு சென்றுவிடுவேன்..! "

10/09/2013