வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தெற்காக நூறு மீர்ற்றர் நடந்தால் கணேசுப் பரியாரியார் வீடு. கணேசுப் பரியாரியார் மட்டக்களப்பு பிரதேசத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆயுள்வேத வைத்தியத்தில் கைதேர்ந்தவர்களில் ஒருவர். அந்தப் பிரதேசத்தில் இருக்கும் சின்னப்பிள்ளைக்கும் அவரை தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

கணேசுப் பரியாரியார் வீட்டுக்கு நேர் கிழக்காகத்தான் உமாமில் வீதி. உமாமில் வீதியில் நடக்கத் தொடங்க செம்மண் புளுதி வாசமும் நம்முடன் சேர்ந்து நடக்கும். அந்த வீதிக்கு புது மனிதர்கள் வந்தாலே ஒவ்வொரு வேலிக்கும் கண்கள் முளைத்துவிடும். அந்தளவுக்கு அந்த வீதியால் நாளாந்தம் நடக்கும் அத்தனை கால்களும் அந்தக் கண்களுக்கு பழகிப்போனவை. புதிதாக ஒரு கால் அந்த வீதிக்கு வந்தால் அவர்களுக்குப் புதினமாக இருக்கும்.

அநேகமான வேலிகள் தாளைமரங்கள்தான். ஒருசில வேலிகளில் மாத்திரம் ஒரு வரி கிடுகு ஒப்புக்கு கட்டப்பட்டிருக்கும். தெருவோரத்தில் தங்களை மறந்து விளையாடும் சின்னஞ் சிறுசுகள். தெருவால் பைசிக்கிளில் வருவபர்களுக்கு வழிவிடாததல் விளையாடும் சிறுவர்கள் பெரிசுகளிடம் கேட்கும் வசையும் எங்களுக்கு புதுசாக இருக்கும், அவர்களுக்கு பழகிப் போனவைதான் எல்லாம். இவைகளைப் பார்த்துக் கொண்டுபோக தூரம் போனதே தெரியாமல் முக்கால் கிலோமீற்ரர் தூரமளவில் புகையிரதக் கடவை வரும்.

அந்தக் கடவைதான் சின்னவன் பிறந்து வாழர்ந்த ஒருமுழச்சோலை கிராமத்தின் மேற்கு எல்லை. கொம்மாதுறைக் கிராமத்துக்கும் ஒருமுழச்சோலை கிராமத்துக்குமான எழுதப்படாத பொதுவேலி.

ஒருமுழச்சோலை கிராமம் பெயருக்கு ஏற்றால் போற் ஒரு சிறிய கிராமம். கிழக்கே கடல்சார்ந்து களுவன்கேணி கிராமத்துடனும் மேற்கே கொம்மாதுறை கிராமத்துடனும் வடக்கே பலாச்சோலை கிராமத்துடனும் தெற்கே ஆண்டான்குளம் கிராமத்துடனும் தனது எல்லையை வரையறுத்துக் கொண்டுள்ளது.

நூற்றி எழுபத்தைந்து குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமத்தில் தலைமை தாங்கும் குடும்பங்கள் முப்பது. வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில், 1990ம் ஆண்டு செப்டம்பர் 5ம் திகதி இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்ட 174 பேரில், ஒரு முழச்சோலையைச் சேர்ந்த முப்பது குடும்பம் பாதிக்கப்பட்டது. பிரம்பை அடிப்படையாக கொண்ட தொழிலைச் செய்யும் பதினைந்து குடும்பங்களைத் தவிர ஏனையவர்களுக்கு செங்கல் சூழைகளிலும், நாளாந்த கூலித்தொழிலுமே பிரதான வருமானமாகும்.

ஒருமுழச்சோலை கிராமத்தில் இருந்து பிரம்பு வெட்டுவதற்கு ஆறு, ஏழு கிலோமீற்றர் கடந்து படுவான் கரைப் பிரதேசமான கொடுவாமடு, வேப்பவட்டுவான் போன்ற இடங்களுக்கு செல்லவேண்டும். இந்த இடங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகவே இருந்தது. இப்பிரதேசங்களுக்கு செல்வதற்கு செங்கலடி கறுத்தபால இராணுவ முகாமையே ஊடறுத்தே செல்ல வேண்டும். இந்த பாலத்திற்கூடாக செல்லாமல் கொம்மாதுறை வயல்வெளிப் பிரதேசத்தாலும் இப்பிரதேசங்களுக்கு இவர்கள் செல்லலாம். அப்படிச் சென்ற காலங்களும் இருந்தது. இப்போ அப்படிச் செல்பவர்களை அனுமதியற்ற பயணமகவும், புலியெனவும் இராணுவம் சுட்டுத்தள்ளுகிற சம்பவங்களே நிறையவே உண்டு.

செங்கல்டி கறுத்த பாலத்தில் இராணுவத்தோடு தமிழ் இராணுவக்குழுவான புளட்டும் குடிகொண்டிருந்தனர். பாலத்தில் இராணுவத்தினர் படுவான் கரைக்கு போகமுடியாது என மறித்தார்களேயானால், மதியம் வரை முகாமின் ஓரத்தில் குந்தியிருந்துவிட்டு வீட்டுக்கு வெறும் கையோடு திரும்புவதும் வழக்கமாகியிருக்கும். இந்த காலங்களில் வீட்டில் வறுமை தலைவிரித்தாடும். செங்கல் சூழைகளில் வேலை செய்வர்களின் வீடுகளிலும் கூட.

இங்குள்ளவர்களின் எழுத்தறிவு வீதம் மிகக் குறைவாக இருப்பதாலும், கூலித்தொழிலுக்காக வெளியிடங்களுக்கு செல்வதாலும் இவர்களால் பிள்ளைகளின் படிப்புக்கள் சரியான முறையில் கவனிக்கப்படுவதில்லை. மட்டுமல்லாமல் வறுமை, சூழல் போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இங்குள்ள பிள்ளைகளின் பாடசாலை இடைவிலகல் வீதமும் அதிகமாகவே இருக்கிறது.

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கடல், தரை வழி வழங்கல் சார்நத கிராமங்களில் ஒன்றாக களுவன்கேணி இருந்ததால், பூவோடு கூடிய நாரும் மணக்குமாப் போல் களுவன்கேணி கிராமத்துடன் ஒட்டிய ஒருமுழச் சோலை கிராமமும் மணக்கத் தொடங்கியது. புலி பிடிக்க வரும் இராணுவத்தினர், துணை இராணுவ குழுக்களும் பதுங்கியிருப்பதுவும் அடிக்கடி மோதல் நடக்கும் இடமாகவும் ஒருமுழச்சோலை கிராமம் மாறியது. இராணுவம் பதுங்கியிருக்கும் நேரத்தில்,  கிராமத்தைவிட்டு வெளியில் போபவர்கள் புலிகளுக்கு தகவல் வழங்கி விடுவார்கள் என்ற காரணத்தால் யாரையும் கிராமத்தை விட்டு வெளியே போக இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை. வெளிச் சென்று படிக்கும் மாணவர்களையும்கூட. இதனால் மாணவர்களின் படிப்புக்கள் பாதியில் தொலைந்ததுடன், அன்றாடம் காச்சிகள் பட்டினி கிடந்த காலங்கள் நிறையவே உண்டு.

நெருக்கடியான இந்த சூழலில் இருந்து தப்பிக்க நினத்து நண்பர்களுடன் சேர்ந்து விடுதலிப் புலிகளில் போய்ச் சேர்ந்தான் சின்னவன். சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாகியது சின்னவனின் வாழ்க்கை. 2004ம் ஆண்டு சின்னவன் இயக்கத்துக்கு சேரும் போது வயது பதினாறு. அடிக்கடி தன்னுடைய கிராமத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையில் நடக்கும் சண்டை, இதானால் சரியான தொழிலில்லை, பட்டினி எல்லாமாக சேர்ந்து அவனது தேர்வு விடுதலை புலியாக இருந்தது.

ஐந்தாம் வகுப்புவரைதான் சின்னவனால் படிக்க முடிந்தது. அதுக்குமேல் அவனால் படிப்பைத் தொடர முடியவில்லை. இந்த வகுப்பையும் பெரிய கஷ்டப்பட்டுத்தான் முடித்து வைத்தான். நல்ல வழிகாட்டிகளும், சூழலும் அமைந்திருந்தால் அவனும் மேலுக்கு படித்திருப்பான். பள்ளிக்கூடம் விட்டுவந்தால் அப்பாவின் தொழிலுக்கு உதவி, லீவு நாளென்றால் அப்பாவுடன் பிரம்புவெட்ட போகணும். எல்லாத்துக்குமேலாக ஊருக்குள்ள ஆமிக்காரன் வந்தால் பள்ளியில படிப்பில்லை, ஆமிக்கரனுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை நடந்தால் ஊரெல்லாம் மரண ஓலம், எல்லாத்துக்கும் மேலாக பட்டினி என்று ஒன்றோடு ஒன்று ஒட்டினாற் போலவந்து ஒரு முழச்ச்சோலை கிராமத்தின் படிப்பையும் நாசமக்கிவிட்டிருந்தது. சின்னவனும் அதுக்கு விதிவிலக்கல்ல.

சின்னவன் விடுதலைப் புலிகளில் சேர்த காலம், உள் முரண்பாடுகளில் புலிகள் சிக்கித் தவித்த காலம். இதையெல்லாம் சின்னவனுக்கு விளங்கிக் கொள்ளும் பக்குவமும் இருக்கவில்லை, பக்குவமாக விளங்கப்படுத்தவும் யாரும்மில்லை. சின்னவனுக்கு மட்டக்களப்பு தரவையில் வைத்து குறுகியகால பயிற்சி வழங்கப்பட்டடு வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். வன்னிக்குப் போய்ச் சேர்ந்த காலத்தில்லிருந்து சின்னவனுக்கு எந்த வேலைகளும் வழங்கப்படவில்லை. சாப்பிடுவதும் படுப்பதையும் தவிர அவனுக்கு பெரிய வேலைகள் அவனுக்கு அங்கிருக்கவில்லை. பெரும் எதிர்பார்ப்போடு வன்னிக்கு வந்த சின்னவனுக்கு எரிச்சலை கொடுத்தது. இந்த நேரத்தில்தான் சின்னவனை மலையகப் பகுத்திக்கு அனுப்ப தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தல் வந்தது. இது அவனுக்கு தனக்குகென்று இயக்கத்தில் ஒரு வேலை கிடைத்திருக்கென்று ஒரு பக்கத்தில் சந்தோசமாக இருந்தாலும், மறுபக்கத்தில் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து வேலை செய்வதில் பயத்தையும் நெருடலையும் கொடுத்தது.

வன்னியில் இருந்து சின்னவன் 2006ம் ஆண்டு பங்குனி மாதம் நுவரெலியா பகுதிக்கு புலிகளால் அனுப்பி வைக்கப்பட்டான். பொதுவாக கிழக்கு மாகண பொடியனுகளை மலையகப் பகுதிக்கு புலிகள் வேலைக்கு அனுப்புவது பற்றி சின்னவன் அறிந்து வைத்திருந்தான். "மலையகத்தோடு நெருக்கமான தொடர்புடைய பகுதி கிழக்கு பகுதியென்பதால் அங்கு நிற்பவர்களும் நம்மட பகுதி பொடியகளாகத்தான் இருப்பானுகள்" என்ற எண்ணத்தோடு சின்னவன் நுவரெலியாவில் வந்திறங்கினான்.

சின்னவன் தான் சந்திக்க வேண்டியிருந்த பொறுப்பாளரை சந்தித்த பின் ராகலையிலுள்ள ஒரு தோட்டத்துக்கு அனுப்பப்பட்டான். சின்னவனை வரவேற்க கிழக்கை சேர்ந்த சேரா, ராகலையைச் சேர்ந்த ராஜா என்ற இரு போரளிகள் தயாராக இருந்தார்கள். அவர்கள் இருவரும் அந்த தோட்டத்துக்கு பழையவர்கள். அவர்கள்தான் சின்னவன் என்ன சாப்பிடணும் என்பதிலிருந்து எங்கு போவது என்ன செய்வது என்பது பற்றியெல்லம் தீர்மானிப்பார்கள். தின்பதும் படுப்பதுமாக எட்டுமாதங்கள் ஓடின. ஆள் நடமாட்டமில்லாத பகுதியாதலால் கொஞ்சமாவது வெளியே நிற்கக்கூடியதாக இருந்து. இல்லாவிட்டால் எட்டு மாதமும் வீட்டுக்குள்ளே இருந்து அவனுக்கு தலை வெடித்திருக்கும்.

சேராவும், ராஜவும் சின்னவனை விட்டு விட்டு இரவு நேரங்களில் வெளியே போய்வருவார்கள். அவர்கள் போகும் போது ஒரு துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டுதான் போவார்கள். நாட்கள் செல்ல செல்லத்தான் சின்னவனுக்கு விளங்கியது, 'ஊர் கட்டப்பஞ்சாயத்துக்குதான் இரவில் இவர்கள் வெளியே போய்வருகிறார்கள் என்று. வழமைபோல் அன்றிரவும் ராகலை நகருக்குள் கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறுக்கு கட்டப்பஞ்சாயத்துக்கு சேராவும், ராஜாவும் புறப்பட்டபோது சின்னவனையும் கூட்டிச்சென்றார்கள். இரவில் தேயிலை தோட்டத்துக்குளால் சென்றதால் பாதையை தவறவிட்டு விட்டார்கள். பதை தெரியாமல் தடுமாறியவர்கள் இடம் கண்டுபிடிக்க ஊரவர்களை நாடவேண்டி வந்தது. துப்பாக்கியை கண்டவர்கள் தங்களுடைய 'பயத்'தால் இடத்தின் குறிப்பை இவர்களுக்கு சொல்லிவிட்டு, 'பக்தி'யால் பொலீசுக்கு விடயத்தையும் சொல்லிவிட்டார்கள்.

மூவரும் துப்பாக்கியுடன் 'பயம்' காட்டிய பதையால் வந்ததேறுவதற்கும், பொலீசார் மூவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கும் சரியாக இருந்தது. சின்னவனுக்கு முன்னால் பாதையில் கால் வைத்த ராஜாவும், சேராவும் பொலீசாரின்  எதிர்பாரத துப்பாக்கி பிரயோகத்தில் நிலைகுலைந்து, தங்களை தயார்படுத்துவதற்கிடையில் பொலீசாரின் துப்பாக்கி தோட்டாக்கள் முந்திவிட்டது. அந்த இடத்திலே இருவருரது உடலும் இரத்தத்தில் தோய்ந்தது உயிர் பிரிந்தது. திரும்பி ஓட எத்தனித்த சின்னவனின் இடது முழங்காலை பொலீசாரின் தோட்டா பதம் பார்த்தது. திரும்பி பார்க்காமல் தேயிலை தோட்டத்துக்குள் இறங்கிவிட்டான் சின்னவன். குறிப்பிட தூரத்துக்குமேல் சின்னவனால் ஓடமுடியாமல் போய்விட்டது. இடம் தெரியாதாதாலும் இரத்தப்போக்காலும் களைப்படைந்து மயக்கமடைந்து தேயிலைத் தோட்டத்துக்குள் விழுந்துவிட்டான்.

மறுநாள் காலை அந்த பகுதி தேயிலை தோட்டத்தை சல்லடை போட்ட பொலீஸார் தேயிலைத் தோட்டத்துக்குள் மயங்கிகிடந்த சின்னவனை கண்டு பிடித்தனர். நவம்பர் மாதம் 2006ம் ஆண்டு ராகலைப் பொலீசாரின் கைகளுக்குள் சின்னவன் சிக்குண்டான். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து கட்டாமல் வெறும் துணியால் சுற்றப்பட்டு கூண்டுக்குள் தள்ளப்பட்டான்.

ராகலை பொலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது இடது கையிலுள்ள சின்ன விரலோடு சேர்ந்த இரண்டு விரல்களையும் எஸ்லோன் குழய்போட்டு மடித்து துடிக்க துடிக்க உடைத்தார்கள். தண்ணீரில் தலையை அமிழ்த்தி பிடித்து மூச்சு திணறடித்தார்கள், தைலை கீழாக கட்டித்தூக்கினார்கள். இன்னும் என்னென்னமோ செய்தார்கள். இரண்டு விரல்களும் சதையில் தொங்கிக் கொண்டிருந்தது. சின்னவனிடம் ஆயுதம் கேட்டார்கள், ஆட்களைக் கேட்டார்கள். ராகலைக்கு புதிசான சின்னவனிடம் இருந்து மரண ஓலத்தை தவிர பொலீசாரினால் எதையும் எடுக்க முடியவில்லை. சொல்லவதற்கு சின்னவனிடமும் ஒன்றுமிருக்கவில்லை. பசியால் துடித்தான். மரண வலியால் துவண்டான்.

சின்னவன் கைது செய்யப்பட்டு மூன்றாவது நாள் அதிகாலை கலை 4.30 மணியளவில் பொலீஸ் ஜீப்பில் ஏற்றப்பட்டு பொலீஸ் நிலையத்தைவிட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டான்.

பனித்தூறல்கள், குளிர். ஆளையாள் தெரியாத இருட்டில் ஓடிக் கொண்டிருந்த பொலீஸ் ஜீப் ஒரு தேயிலை தோட்டத்து மறையில் நின்றது. சின்னவன் ஜீப்பிலிருந்து இறக்கப்பட்டான். முன்னுக்கு நிப்பவனின் முகம் தெரியாத இருட்டில் வீதியோரமாக முழங்காலில் வைக்கப்பட்டான். காயம் பட்ட கால்கள் வலி எடுக்க ஆரம்பித்தது. முனகினான். அந்த உயரமான வாட்டசாட்டமான பொலீஸின் துப்பாக்கி சின்னவனின் நெத்தியை நோக்கி நீட்டப்பட்டது. அவ்வளவுதான் தெரியும் சின்னவனுக்கு.

குற்றுயிராக கிடந்த சின்னவனின் முனகல் சத்தம் கேட்டு தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றவர்கள் சின்னவனை தூக்கிக் கொண்டு ராகலை வைத்திய சாலையில் சேர்த்தார்கள். சின்னவனின் வலதுபக்க தொண்டையை பொலீஸாரின் தோட்டா கிழித்திருந்தது. ராகலை வைத்திய சாலையில் முதலுதவி வழங்கப்பட்டு உடனடியாக சின்னவன் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான். பொலீஸார்தான் சின்னவனின் இந்த நிலைமைக்கு காரணம் என்றறியாத வைத்தியசாலை நிருவாகம் சின்னவனின் நிலமை பற்றிய தகவலை பொலீஸாருக்கும் சொல்லியிருந்தனர். சின்னவன் தப்பிவிட்டான் என்ற விடயத்தை அறிந்த ராகலை பொலீஸார் அவனைப் பின்தொடர்ந்து கண்டி வைத்தியசாலைவரைக்கும் வந்து சேர்ந்தார்கள்.

கண்முழித்தபோது தான் உயிருடன் இருப்பதையும், கண்டி வைத்தியசாலியில் இருப்பதையும்  உறுதிப்படுத்திக் கொண்டான். குறை உயிருடன் கிடந்த தன்னை பாதையால் சென்றவர்களே ராகல வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அங்கிருந்து கண்டிக்கு மாற்றியதையும் அறிந்து கொண்டன். ஏழு மாதமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றான்.

அங்கிருந்து சின்னவன் பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எண்ற பெயரில் ராகலை  சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டான். தன்னுடைய நிலைமைய எடுத்துச் சொல்ல யாருமற்ற நிலையில், தன்னுடைய நிலையை தன்னாலும் சொல்ல முடியாத குரலற்ற நிலமையில் நீதிமன்றத்தின் தண்டனையை ஏற்றான். 2007ம் ஆண்டு கடைசிப் பகுதியில் சின்னவன் பதுளை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு 2008ம் ஆண்டு எட்டாம் மாதம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் திரும்பவும் சின்னவனை பாரமெடுக்கும் வரை பதுளை சிறையில் காலத்தைக் கழித்தான்.

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு கொண்டுவரப்பட்ட சின்னவன், ஆயுதங்கள் கேட்டும், ஆட்கள் கேட்டும் மனிதாபிமானமற்ற முறையில் மீண்டும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டான். தான் இருந்த இடத்தைக் கூட அடையாளம் கண்டு போகமுடியாத நிலையில் ராகலையில் இருந்த சின்னவனை ஆயுதங்களை காட்டும்படி நுவரெலியாவுக்கு கொண்டு போனார்கள். சின்னவனின் கதையை பய்ங்கரவாத பிரிவினர் நம்பமறுத்தார்கள். பொய் சொல்கிறான், தங்களை ஏமாற்றுகிறான் என ஆத்திரமடைந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சின்னவனை இருட்டில் ஓடும்படி சொல்லி சுட முனைந்தார்கள். சின்னவன் அவர்களுடைய காலை பிடித்து அழத் தொடங்கினான். தேயிலைத் தோட்டத்தின் நிசப்ததை கலைத்துக் கொண்டு சின்னவனின் மரண ஒலம் வெளிவந்தது.

அன்றிரவே பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சின்னவன் திரும்ப கொண்டு வரப்பட்டான். நுவரெலியாவில் தனக்கு தளபதி என்று சொல்லி வன்னியில் இருந்து வந்து யாரை சந்தித்தானோ, அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவில் மடிப்பு குலையாத சேட்டோடு கதிரையில் சின்னவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

சின்னவனுக்கு எல்லாமும் விளங்கிவிட்டது.

கரகரத்த குரலுடன் கனத்த நாட்களை அசைபோடும் சின்னவனுகள்......