Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்தும் அதன் அழிவுகளும் மனித நேயத்தினை உலுப்பி விட்டுள்ளது. குறுகிய கால இடைவெளிக்குள் பல ஆயிரக்கணக்கானவாகள் தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளார்கள். ஒன்பது மாடிக்கட்டிட இடிபாட்டில் ஒருசிலர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்கள், ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளார்கள்.

வயிற்றுப் பிழைப்புக்காக நாளாந்த போராடும் ஏழை உழைப்பாளியின் உயிர் தீ விபத்துக்குள்ளும், கட்டிட இடிபாடுகளிலும் அர்த்தமற்று அழிந்து போகிறது. எல்லாரையும் போல நானும் வாழ வேண்டும், குடும்பம் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற நினைப்போடு தொழிலுக்கு செல்லும் மனிதன் பிணமாக மீட்கப்படுகிறான்.

இது இயற்கையின் சீற்றமா, கடவுளின் தண்டனையா..?

இது தான் மனித முதலைகளின் கொலை வெறிக் கொள்கை. தாங்கள் கோடி கோடியாக பணத்தினை திரட்டிக் கொள்ள அப்பாவி தொழிலாளர்களின் உயிர்களை விலங்குகளைப் போல் பலி கொள்கிறார்கள். அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு தரகு வேலை பார்ப்பவர்களும், இவர்களுக்கு துணை போகும் அரசும் தனது சொந்த நாட்டு மக்களையே அழித்தொழிக்கின்றார்கள். அன்னிய நாட்டு முதலாளிக்கு கோடிக்கணக்கில் இலாபம் சம்பாதித்து கொடுக்கும் இந்த தரகு முதலாளிகள், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையோ, பாதுகாப்பினையோ சிறிதளவு கூட கவனத்தில் கொள்வதில்லை. மாறாக அவர்களை மிரட்டி தங்கள் நலன்களை பாதுகாத்து கொள்கிறார்கள். கஸ்ரத்திற்கு மாரடிக்கும் இந்த அப்பாவித் தொழிலாளர்களும் எந்தவித மறுப்பும் தெரிவிக்க முடியாத நிர்ப்பந்தத்தில் குறைந்த வருவாய்க்காக பணிந்து போக வேண்டியுள்ளது.

இன்று பங்களாதேஷில் ஏற்பட்ட விபத்துக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலமை, அதாவது. ஆயிரக் கணக்கான தொழிலாளிகள் தொழில் புரியும் ஒன்பது மாடிகள் கொண்ட கட்டிடத்தில் பல கணரக இயந்திரங்கள் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டதே கட்டிட உடைசலுக்கு முக்கிய காரணமாகும். குறைந்த செலவிலே கொள்ளை இலாபத்தினை ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்களும் அதன் வால்பிடிகளும் தங்களுக்காக உழைக்கும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொள்வதில்லை. கட்டிடம் பாதுகாப்பற்ற நிலமையில் உள்ளது, எந்த நேரமும் இடிந்து விழலாம் என்பது முன்கூட்டி தெரிந்திருந்தும் தொழிலாளர்களை சம்பளத்தினை சொல்லி மிரட்டி அவர்களை தொழிலுக்கு செல்ல வைத்து அப்பாவி உயிர்களை சாவடித்துள்ளார்கள்.

அந்த தொழிலாளர்களின் குழந்தைகள், சகோதரர்கள், வயோதிப பெற்றோர்கள் இவர்களின் நிலை என்ன..? தனது மனைவியை அணைத்த படி இறந்த கிடக்கும் அந்த தம்பதிகளின் பிள்ளைகள் குடும்பத்தின் நிலை என்ன..?

இன்று பங்களாதேஷ் மக்களுக்கு ஏற்பட்ட நிலமை நாளை எங்கள் மக்களுக்கு..! அன்னிய முதலீடு, எமது மண்ணில் வேகமாக வளர்ந்து வருகின்றது. அதற்காக மகிந்த சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து ஒரு இன அழிப்பையே நடாத்தி முடித்துள்ளார்கள் இந்த உலக நாடுகள். இன்று அன்னிய தேசத்திற்கு இலங்கை விலை பேசப்பட்டு வருகின்றது. பொருளாதார நெருக்கடி, விலையேற்றம், வருமானமின்மை என்று அவதியுறும் மக்களை அடிமைகளாக குறைந்த கூலிகளாக மாற்றவதும் அவர்களின் உழைப்பினை சுரண்டுவதுமே இந்த அதிகார வர்க்கங்களின் நோக்கமாகும். இந்த சுரண்டல்வாதிகளை எதிர்த்து போராடி சகல தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தேவை இன்று எம்மோடு உள்ளது.