இனம்,மதம், நிறம், பால், சாதியம் கடந்த உலகத் தொழிலாளி வர்க்கம் என்ற உணர்வுடன் அணிதிரண்டு போராடும் ஒரு நாள் மே 1. அமெரிக்கா சிக்காக்கோ நகரில் 1886 இல், வேலை செய்யும் நேரத்தை 8 மணியாகக் குறைக்கக்கோரிப் போராடியபோது அதற்காகப் போராடியவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்ட தினம் மேதினம். அன்று போராடி மடிந்தவர்கள் நினைவாகவும், உலகெங்கும் எட்டு மணி வேலை நேரத்தை முன்வைத்து நடத்திய போராட்டத்தினமாகவும், மே 1 பிரகடனமாகியது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோசத்தை உழைக்கும் வர்க்கம் தனதாக்கியது.

இன்று இலங்கையில் இதற்காக தொழிலாளி வர்க்க உணர்வுடன் போராட முடியாத வண்ணம் இனம், மத, சாதி, பால்ரீதியாக தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடத்த முடியாத வண்ணம் இனவாதம், இனவொடுக்குமுறை திணிக்கப்பட்டு இருக்கின்றது. மதவாதமும், மதவொடுக்குமுறையும் திணிக்கப்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் பின்பும் இனங்களை பிரித்து வைத்திருக்கும் வண்ணம், வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி மூலமான இனவொடுக்குமுறை தொடருகின்றது. முஸ்லீம் மக்கள் மேல் இன மத வன்முறை தூண்டப்பட்டு, அவைகள் வன்முறை வடிவம் பெற்று வருகின்றது. முஸ்லீம் மத அடையாளங்கள் தாக்கப்படுகின்றது. முஸ்லீம் வியாபார நிலையங்கள் குறிவைக்கப்படுகின்றது. முஸ்லீம் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகள் இழிவுபடுத்தப்பட்டு வன்முறை தூண்டப்படுகின்றது. அபிவிருத்தி அரசியல் கூட இதனடிப்படையிலானதே தான்.

நாட்டின் சட்டம், நீதி முதல் சாதாரண ஜனநாயக உரிமைகள் வரை சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் காணாமல் போன தங்கள் உறவினர்கள் எங்கே என்று கேட்டுப் போராடுகின்றனர். கைதானவர்கள் பற்றிய விபரம் இன்றி அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றனர். அரசியல் கைதிகள் விடுதலையின்றி வாழ்கின்றனர். புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் காணாமல் போவதும், கைதாவதும் தொடருகின்றது. புனர்வாழ்வு பெற்றவர்கள் வாழ வழியற்று அச்ச உணர்வுடன் வாழ்கின்றனர். சமூக ரீதியான புறக்கணிப்புக்குள் தனிமைப்பட்டு வாழுமாறு சூழல் நிர்ப்பந்திக்கின்றது.

பெண்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்குள் உள்ளாகின்றனர். உடலை விற்குமாறு பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். வீடுவீடாக குடும்பப் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றது. இராணுவ புலனாய்வுப்பிரிவு அழையா விருந்தாளியாகவே இயல்பு வாழ்வில் நுழைகின்றது. எங்கும் இராணுவம் மூக்கை நுழைக்கின்றது.

மக்கள் தங்கள் சொந்தக் காணிகளை பறிகொடுக்கின்றனர். தங்கள் வழிபாட்டு இடங்களை பறி கொடுக்கின்றனர். தங்கள் பாரம்பரிய பிரதேசத்தில் திட்டமிட்டு திணிக்கப்படும் மத, இன ஆக்கிரமிப்பை எதிர்கொள்கின்றனர். யுத்த அழிவுகளில் இருந்து மீளும் அடிப்படையான நிவரணங்கள் கூட இன்றி மக்கள் பரந்தவெளிகளில் அனாதையாக வாழ்கின்றனர். உளவியல் சித்திரவதைகளுக்குள் சிதைகின்றனர். மக்கள் தமக்குள் கூடி வாழ அனுமதிக்கப்டுவதில்லை. மரணித்தவர்கள் நினைவுகளைக் கூட கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. சுதந்திரமாக மீன்பிடிக்க உரிமையில்லை. சுதந்திரமாக நடமாடும் உரிமையில்லை. விரும்பிய அரசியல் செய்ய உரிமையில்லை.

படிப்படியாக நாடு முழுக்க இராணுவக் கட்டமைப்பை சிவில் சமூகத்துக்குள் திணிக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி. ஆசிரியர்களுக்கும் இராணுவப் பயிற்சி. கூலியற்ற இராணுவம் விவசாய உற்பத்தி மூலம் விவசாயிகளை நிலத்தில் இருந்து அகற்றுகின்றது. மானியமாக ஒரேவிதமான விதைகளைக் கொடுத்து உற்பத்தியைத் தேங்க வைத்து விவசாயியை மண்ணிலிருந்து துரத்துகின்றது. கடன் கொடுத்தே மக்களின் சிறுசேமிப்பைப் புடுங்குகின்றது. போராடும் அனைத்து இன மத மக்கள் மேல் வகை தொகையின்றி வன்முறையை ஏவுகின்றது.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி செயலற்று போகின்றது. ஜனநாயகக் கட்டமைப்பு சிதைந்து போகின்றது. போர்க்குற்றத்தை மறைக்க இனவாதத்தை தேசியமாக்குகின்றனர். இனவாதத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பாக்குகின்றனர்.

ஆனாலும் மக்கள் போராட்டத்தளத்தில் பல நம்பிக்கை தரக்கூடிய நிகழ்வுகள் தேசத்தில் நடந்த வண்ணமுள்ளன . யாழ் பல்கலைக்க் கழகத்தில் நடந்த மாணவர் போராட்டம், அதற்கு சார்பாக தெற்கில் சிங்கள மாணவர்கள் நடாத்திய போராட்டம், பல்லின மக்களும் இணைந்து நடாத்திய கொலன்னாவ குப்பைமேட்டுக்கு எதிரான போராட்டம், இன்று நடந்துவரும் காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டம், சமவுரிமைக்கான நாடுதழுவிய போராட்டம் என்பவை நம்பிக்கை தருவனவாக உள்ளன .

இந்நிலையில் இப்போராட்டங்களை வளர்த்தெடுக்க, போராடும் மக்களுக்கு ஆதரவு வளங்கி சரிநிகர் சமானமாக அனைவரும் வாழும் தேசத்தை உருவாக்க நாம் உழைக்க வேண் டு மென்பதே தொழிலாளர் தினத்தின் அறைகூவலாகட்டும்.

மதவாதத்தை எதிர்ப்போம்!

மதவொடுக்குமுறையை முறியடிப்போம்!

இனவாதத்தை எதிர்ப்போம்!

இனவொடுக்குமுறையை முறியடிப்போம்!

சகல இன ஒடுக்கப்பட்ட மக்களினதும் உரிமைக்காக போராடுவோம்!

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி