குறுக்குகட்டோட விறுக்கென்று

மணலில் எட்டி நடக்கின்ற மீன்காரப் பெண்டு

குனிந்து மீன்கூடை இறக்கி வைக்கையில்

மொய்க்கிற ஈயோடு அவளுடல் மேயும் உன் கண்கள்

 

 

கிழிசல்கள் பொத்தி முழுமேனி மறைக்காத

சீலை முகிலுக்குள் அவள் நிலவெனக் காண்பாய்

உன் புத்தி மயங்கியே வீணாய் அவள் பொழுதைப்பறிக்க

போகாதா அறாவிலை கேட்டு மெல்ல உரசியே பார்ப்பாய்

செருப்பில்லாக் கால்கள் சீவாத கருங்கூந்தல்

சாயம் பூசாத சொண்டுகள் ஆனால் வண்டுக் கண்கள்

உடுக்கை அடித்தாலும் அகலாத பேயாக

உன் மனசுக்குள் குடிகொண்ட நடையாள்

 

சப்பாத்துக் காலோடு சிகரெட்டும் கையுமாய்

வெளிநாட்டால் வந்து

சம்மாட்டி வாங்குவான் மீன்கள்

அவன் உன்ன வைப்பாட்டியாக்க

வலம் வந்தான் என்கையில்

கத்தியிருந்ததில்லை அப்ப

 

தேப்பனைத் திண்ட பிள்ளையளோட

தாலியறுத்தவள் தாரத்தை திண்டவள்

தன்னந்தனியாக மீன்வித்தோ சீவியம் செய்வாள்?

அவளின்ர வீட்டுப்படலைல வீச்சுவலையோட

காட்டினர் பலவான்கள் தம் காதல் வித்தை!

 

மொண்டானும் கையில இல்ல பொறுக்கியள் தலையில போட.

வெறும் கருவாட்டு விலையில்ல உன்ர காதல்!

கோதாரி விழுவார் கொள்ளையில போவார்

உண்ணாணப் பிள்ளையள் வயிறாரத் தின்னாத கொடுமைய

நண்டுப் பொறிக்குள்ளே இரையாக வைத்தார்.

பசிக்கண்ணீரைப் பெட்டைமேனிக்கு பன்னீராய்க் காடாத்தச் சொன்னார்.

 

சூள் மீன்பிடிக்க வாள் விசுக்கின கையள்

கட்டுமரங்கட்டி அலையத் துளைச்சு

நுரையை ஆகாசம் வீசி அளந்த கண்கள்

அடங்கியிருக்கலாமோ உன்ர விண் தோள்கள்..