ஏமாறுவது யார்? ஏமாற்றுவது யார்? ஏமாறுவது மக்கள். இதற்கு இனம், மொழி, மதம், சாதி.. எதுவும் பிரிப்பதில்லை. மக்களை ஏமாற்றுவதில் கூட இனம், மொழி, மதம், சாதி பிரித்து இருப்பதில்லை. சுரண்டும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. அந்த வர்க்கம் சார்ந்த ஆளும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. "தமிழன் இன்னுமொரு முறை ஏமாறக் கூடாது" என்பது கூட, தமிழனை தமிழன் ஏமாற்றுகின்றான் என்பதை மறைப்பதற்கு "தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது" என்ற தர்க்கம் இனவாதமாகும் மறுப்பதற்குமான தர்க்கமாகும். இதுதான் 60 வருட தமிழனின் வரலாறு.

இந்தவகையில் இன்று யாரெல்லாம் மக்களுடன் இணைந்து போராடுவதை நடைமுறையில் ஒரு வாழ்வாக, உணர்வாக கொள்ளவில்லையோ, அவர்கள் மறுதளத்தில் நின்று கேள்வி கேட்கின்றார்கள். போராடாமல் இருப்பதற்காக, தாங்கள் இருப்பதை நியாயப்படுத்த கேள்வி கேட்கின்றனர். போராட்டத்தைச் சிதைப்பதற்காக கேட்கின்றனர். தங்கள் அறிவைக் காட்டிக் கொள்ள, பிரமுகராக இருக்க கேள்வி கேட்கின்றனர். போராடியபடி கேட்கவும், கேட்கப்படவும் வேண்டிய கேள்வியில் இருந்து இவை வேறுபட்டவை. எந்தக் கேள்வியையும் மக்களுக்காக போராடியபடி கேட்பதே உண்மையான ஒரு அரசியல் வேலைமுறை.

போராடுவதற்கு எதிரான கேள்விகள் அநேகமானவை குதர்க்கமானவை. தாங்கள் ஏன் இதுவரை மக்களுக்காக போராடவில்லை என்று தங்களைத் தாங்கள் கேட்காமல், போராட முனைபவர்களை நோக்கி கேட்கின்றனர். கடந்த 30 வருடமாக தாங்கள் நடைமுறையில் என்ன செய்தோம் என்று தம்மை நோக்கிக் கேட்காமல், மக்களுடன் இணைந்து போராடுபவர்களை பார்த்து கேட்கின்றனர். தமிழ்மக்களை யுத்தத்தில் பலிகொடுத்தும் பலியெடுத்தும் கொண்டு இருந்த போது, தாங்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற பதிலளிக்காமல் மற்றவர்கள் என்ன செய்தனர் என்று கேட்கின்றனர். பலியெடுத்ததைப் பேசுகின்றவர்கள் பலிகொடுத்ததை பேசாமல், பதுங்கி நின்று கேள்வி கேட்கின்றனர். 2009 இல் நடந்த அவலங்களுக்கு அரசை மட்டும் காரணமாகக் காட்டி கேள்விகளைத் தொடுக்கின்றவர்கள், மக்களைத் தோற்கடித்து, யுத்தத்தை முடித்து வைத்த அரசியலை மறுத்துக் கேள்வி கேட்கின்றனர். கடந்த 60 வருடமாக தமிழ் மக்களை ஏமாற்றி வரும் கூட்டம் சார்ந்து, இன்னுமொருமுறை "தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது" என்று கூறி கேள்வி கேட்கின்றனர்.

மக்களைச் சார்ந்து நின்று போராட வேண்டும், அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவுடன், கேள்விகளுடன் வருகின்றனர். இங்கு மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய அதன் பொது அரசியலின் நடைமுறையுடன் முரண்பட்டவர்கள் கேள்வி கேட்கின்றனர். தொடர்ந்தும் மக்களை பார்வையாளர்களாக வைத்து இந்த வர்க்கத்திற்கு சேவகம் செய்யும் அரசியலை முன்நிறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர்

இனவாதம், இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது, யாராலும் சுயாதீனமாக முன்னெடுக்கக் கூடிய ஒன்றுதான். கேள்வி கேட்பவர்கள் இதை சுயாதீனமாக முன்னெடுத்துக்கொண்டு கேள்வி கேட்காத வரை, அவை அரசியல் ரீதியாக அபத்தமானவை. இச்செயற்பாடனது இனவாதம் சார்ந்தது. இனவாதம், இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது மனிதனாக இருக்கின்ற அனைவரதும் தார்மீகக் கடமை. இதைக் கூடச் செய்யாது, கேள்வி கேட்க முடியாது. இதற்காக போராடும் தரப்புடன் முரண்பாடா, போராட்டத்தை சுயாதீனமாக தனித்துவமாக முன்னெடுக்கும் தார்மீக பலத்தில் நின்றபடி கேள்வி கேட்க வேண்டும். இல்லாத வரை இதற்கு எதிரான போராட்டத்தை முடக்குவதற்கான தர்க்கம் கேள்வியாகின்றது.

கேள்விகள் பல கடந்தகாலம் பற்றியவை. தங்கள் கடந்தகாலம் பற்றி பேசாது, மற்றவரின் கடந்தகாலம் பற்றிய கேள்விக்குள், இன்றைய நடைமுறையை நிராகரிக்கின்றனர். இந்த போக்கு கடந்தகாலம் சார்ந்து நின்று, நிகழ்காலம் மீது சேறு அடிப்பதுதான். கடந்தகால தங்கள் மக்கள் விரோதப் போக்கை மறுத்து மக்களுடன் சேர்ந்து போராடும் நிகழ்காலத்தை தேர்ந்தெடுக்கும் போது, அதுதான் சுயவிமர்சனமாகும். மக்களுடன் இணைந்து முன்னெடுக்கும் நடைமுறைதான், முழுமையான அப்பளுக்கற்ற சுயவிமர்சனமாகும்;;. வெறும் வார்த்தைகள் அல்ல, மாறாக மக்களுடன் இணைந்து வாழ்தல் தான் சுயவிமர்சனம். கேள்வி கேட்பவன்; மக்களைச் சார்ந்து நின்று போராடியபடி, மக்களைச் சாராத போக்குக்கு எதிராக கேள்வி எழுப்பவேண்டும்;. இது தான் மக்கள் நலன் சார்தது.

இனவாதம், இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் "தமிழன் ஏமாறக் கூடாது" என்ற அக்கறை போலியானது, புரட்டுத்தனமானது. "சிங்களவனிடம்" தமிழனிடம் ஏமாறக் கூடாது என்பதே, இதன் சாரப் பொருள். இதுவொரு இனவாதச் சிந்தனை. குறுந்தேசியச் சிந்தனை. மக்களைப் பிரிக்கின்ற, பிளக்கின்ற அதே பேரினவாத சிந்தனை முறை. மக்கள் ஏமாறக் கூடாது என்ற இனம் கடந்த பொது அரசியல் தளத்தில், அதற்கான நடைமுறை அரசியலைக் கொண்டு போராடாத வரை, "இன்னொருமொரு முறை" ஏமாறக் கூடாது என்பது, மக்களை ஏமாற்றும் அரசியல் மோசடியாகும்;.

இது தமிழ்மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் இனவாத அரசியலின் தற்காப்பாகும்;. மக்களை தங்கள் சொந்த விடுதலைக்காக அணிதிரட்டுவதும், இனம் மதம் என அனைத்தையும் கடந்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரட்டுவதன் மூலம் தான், உண்மையான நேர்மையான செயல்பாட்டை முன்நோக்கி எடுத்துச் செல்ல முடியும்;. இதில் ஏமற்றுவதற்கும், ஏமாறுவதற்கும் என்னதான் இருக்கின்றது?

இன்று இனவாதம், இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராட முனைவது, எந்தவிதத்தி;ல் ஏமாற்றம் தரக் கூடியது? மக்கள் இனவொடுக்குமுறைக்கு எதிராக ஜக்கியப்படுவது ஏமாற்றம் தரக் கூடியதா? இப்படிச் சொல்வதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர். மக்கள் ஒன்றுபட்டு போராடுவது ஏமாற்ற கூடியது என்று கருதுவதும், தமிழன் "ஏமாறக் கூடாது" என்று கூறுவதும், அரசியல் மோசடி.

60 வருடங்களுக்கு மேலாக பேரினவாதத்தை எதிர்த்து குறுகிய தமிழ் இனவாதப் போராட்டங்கள், உண்மையில் மக்களை பிளந்தது மட்டுமின்றி தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. பாராளுமன்றம் - ஆயுதப் போராட்டம் - பாராளுமன்றம் என, மக்களின் பெயரில் நடத்தும் மோசடியான அரசியல் போராட்டங்களும், பேரினவாத சக்திகளுடன் நடத்தும் பேரங்களும் கூத்துகளும், தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் தமிழ் ஒடுக்கபட்ட மக்கள் சேர்ந்து போராடுவதை மறுத்து நடத்துகின்ற அரசியலைக் கேள்வி கேட்காதவர்கள் தான், இன்று இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்க சந்தேகங்களுடன்; கேள்விகளுடன் புறப்படுகின்றனர்.

சந்தேகங்கள், கேள்விகளை எழுப்ப முன்

1.கடந்தகால உங்கள் செயற்பாடுகள் இதன் மீது என்னவாக இருந்தது. இன்றைய செயற்பாடு என்னவாக இருக்கின்றது என்பதை நடைமுறை மூலம் மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் வெளிப்படையாக முன்னெடுத்த வண்ணம் கேள்விகளை கேட்க வேண்டும்.

2.சமகாலத்தில் மக்களை ஏமாற்றி வாக்குபெட்டிக்கு முன் மந்தையாக்குகின்ற அரசியல் முதல் அமெரிக்க ஏகாதிபத்தியம் வரை வழிகாட்டும் அரசியல் பித்தலாட்டத்தை, நடைமுறை மூலம் அம்பலமாக்கி மக்களை அணிதிரட்டியபடி கேள்வி கேட்க வேண்டும்;.

இதை செய்யாதவன், கேள்வி கேட்பது இவற்றைச் செய்யாமல் இருப்பதற்காகத்தான். இன்று இதை செய்யாமல் இருப்பதற்காக தன்னைத்தான் கேள்வி கேட்க முடியாதவனுக்கு, மற்றவனை நோக்கி கேள்வி கேட்கும் உரிமை கிடையாது. இந்த உரிமை என்பது, மக்களை ஏமாற்றும் அரசியல் மோசடி. நடைமுறையை நிராகரித்த கேள்விகள், நடைமுறை ஊடான செயற்பாட்டை மறுக்கும், குழிபறிக்கும் கேள்வியாக மாறுகின்றது. நடைமுறை சாராத, செயல் நோக்கமற்ற கேள்விகள், மக்களுக்கு எதிரானது. மக்களை தொடர்ந்து மந்தையாக வைத்திருப்பவர்களுக்கு சார்பானது. திண்ணைப் பேச்சு மட்டுமல்ல, இது எதார்த்தத்தில் இருக்கும் இனவாதம் சார்ந்தது.

இனவொடுக்குமுறை இனவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு எதிராக கேள்வி கேட்பதை விடுத்து, முதலில் அதற்காக போராடு. போராடியபடி கேள்வியை எழுப்பு. அது தான் தேவை.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
06.02.2013