Language Selection

புதிய கலாச்சாரம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

            திருமாவை வை.கோவுக்கு மொழிபெயர்த்தால், கொள்கை என்பது கோட்பாடு, அரசியல் என்பது நிலைப்பாடு என்று பொருள் வருகிறது.

            இன்று போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வந்தவுடன், ""நிலைப்பாடு என்பது வேறு, தேர்தல் உடன்பாடு என்பது வேறு'' என்று புது விளக்கம் அளித்திருக்கிறார். திருமா. அதாவது அரசியல் வேறு கூட்டணி வேறு என்று இவர் விளக்கமளிக்கிறார்.

            திருமா போயசு தோட்டத்திற்குப் போனது பற்றி ராமதாசு "வருத்தம்' மட்டுமே வெளியிட்டார். மற்றபடி தங்களிருவரையும் கொள்கை ரீதியாகப் பிணைத்திருக்கும் தமிழ்க் கூட்டணிக்கும் இந்தப் பதவிக் கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்.

            ""தனது கட்சிக்கு நல்லது என்று அவர் கருதியிருக்கலாம்'' என்று வை.கோ.வின் கூட்டணித் தாவலை வருணித்தார் வ.கம்யூ தலைவர் தா.பாண்டியன். தானும் போயசு தோட்டத்தின் பக்கம் நாளை தாவ நேரிடும் என்ற எதிர்காலம் குறித்த கவலை அவரது சொற்களில் பளிச்சிட்டது.

            ""முதலை வாயில் சிக்கிவிட்டார்'' என வருத்தப்பட்டார் மார்க்சிஸ்டு தலைவர். நாளை மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க நேர்ந்து அதில் 4 சீட்டு குறைந்தால் வை.கோ.வை ஜோக்கர் கார்டாகப் பயன்படுத்திக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிட மார்க்சிஸ்டுகள் விரும்பவில்லை.

            ""போன தேர்தல்ல பாரதிய ஜனதாவை எதிர்த்துப் பேசினேன். இந்தத் தேர்தல்ல ஆதரிச்சுப் பேசறேன். எனக்கே அலுத்துப் போச்சுய்யா. ஆனா தலைவா, அடுத்த வாட்டி இவளோட (ஜெயலலிதாவோடு) கூட்டணி வெச்சுடாதீங்க. நான் தீக்குளிச்சிடுவேன்.'' என்று 1999 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார் தீப்பொறி ஆறுமுகம். இன்றோ அவரே புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் கிடக்கிறார்.

            இன்றைய தி.மு.க.வின் கூட்டாளிகள்தான் 2001இல் அன்புச் சகோதரியின் அராஜக ஆட்சியை அரும்பாடு பட்டுக் கொண்டு வந்தனர். அதேபோல, 5 ஆண்டுப் பதவிக்காலம் முடிந்து "வணக்கம்' போட்டு லைட்டும் போட்ட பிறகுதான் பாரதிய ஜனதாவின் மதவெறி முகம் தி.மு.க.வுக்குத் தெரியவந்தது.

            "நெருநல் உளனொருவன் இன்றில்லையென்னும் பெருமையுடைத்திவ் வுலகு' என்பதை "பெருமையுடைத்து இத்தேர்தல்' என்று திருத்தி வாசிக்கலாம். நேற்றெங்கிருந்தாய், நாளை எங்கிருப்பாய் என்ற கேள்விகளுக்குப் பொருளேயில்லாத அத்வைதப் பெருவெளியில் கலந்து கொண்டிருக்கிறது தேர்தல் அரசியல்.

            அதனால்தான் இத்தகைய அஞ்ஞானங்களுக்கெல்லாம் ஜெயலலிதா எப்போதுமே ஆட்படுவதில்லை. ""நடந்ததை மறப்போம்  கதவு திறந்திருக்கிறது'' என்ற பிரகடனத்தின் மூலம் ஒரு பரந்த கூட்டணிக்கு அடிப்படையாக அமையும் கொள்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். கூட்டுத் தொகையில் பெரும்பான்மையைத் தருகின்ற எந்தக் கொள்கையும் அவரைப் பொறுத்தவரை நல்ல கொள்கையே.

            மேலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியைத் தீர்மானிக்கும் கொள்கையும், பிந்தைய கூட்டணியைத் தீர்மானிக்கும் கொள்கையும் வேறு வேறானவை என்பதும், அந்தக் கொள்கைகளை வைப்பதற்குத் தனித்தனி சூட்கேசுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற உண்மையும் அவருக்குத் தெரியும். ஆகவேதான் கொள்கை விவகாரங்கள் குறித்த சில்லறைச் சச்சரவுகளில் அவர் எப்போதுமே பங்கேற்பதில்லை.

            ""கொள்கை கொள்கை என்று பேசிக் கொண்டிருந்தால் கட்சியை வளர்க்க முடியாது. முதலில் கட்சியை உறுதிப் படுத்த வேண்டும்'' என்பதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்ததாக வை.கோ. விளக்கம் சொல்லியிருக்கிறார். கட்சியை உறுதிப்படுத்துவது என்றால் என்ன?'' மாவட்டச் செயலாளர்களுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ. சீட்டாவது கிடைக்க ஏற்பாடு செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் அவர்களும் அவர்களுடைய கைத்தடிகளும் வீடு, கார், நிலம், பஸ், சினிமா தியேட்டர் என்று செட்டில் ஆவதை உறுதிப்படுத்துவது; இந்த உறுதியான அடித்தளத்தின் மீது கட்சியை நிறுத்தி அதன் மீது கொள்கையை வளர்த்துக் கொள்வது'' என்பதுதான் வை.கோ. கூறும் விளக்கத்தின் உண்மையான பொருள்.

            இந்த விளக்கம் எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பது மட்டுமல்ல, எப்படி அரசியல் பண்ணுவது' என்பது குறித்து சர்வ கட்சித் தொண்டர்களும் கொண்டிருக்கும் கருத்தும் இதுதான். ""இத்தனை நாள் அரசியலில் இருந்து என்ன பயன்? நாங்களும் நாலு காசு பார்க்க வேண்டாமா?'' என்ற கேள்வியை தத்தம் கட்சிப் பொதுக்குழுக்களில் அவர்கள் வெளிப்படையாகவே எழுப்பத்தான் செய்கிறார்கள். அடிக்கும் கொள்ளை முறையாகப் பகிர்ந்தளிக்கப்படாத போது "உட்கட்சி ஜனநாயகத்துக்காக'க் குரல் கொடுக்கிறார்கள். கட்சியில் தன்னை "வளர' விடுவதில்லை என்று பதவியிலிருப்போரைக் குற்றம் சாட்டுகிறார்கள்.

            என்றாலும், தேர்தலின் நோக்கம் குறித்த இந்த உண்மைகளை அவர்கள் மக்களிடம் வெளிப்படையாகக் கூறுவதில்லை. மக்களுக்கு அரைகுறையாகவோ, முழுமையாகவோ இந்த உண்மைகள் தெரியும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆளை ரெண்டு துண்டாக அறுத்துப் பிறகு ஒட்ட வைக்கிறான் வித்தைக்காரன். அது தந்திரம் என்று பார்வையாளர்கள் அறிந்து தானிருக்கிறார்கள். அதற்காக அந்த ரகசியத்தை வித்தைக்காரன் வெளியிட்டு விடுவதில்லையே! அந்த மயிர்க் கூச்செறியும் காட்சியில் ரசிகன் கண்களை மூடிக்கொண்டு நாற்காலியை இறுகப் பற்றிக் கொள்ளும்வரைதானே வித்தைக்குக் கூட்டம் சேரும்!

            தேர்தல் என்ற இந்த வித்தைக்குக் கூட்டம் சேருவதெப்படி? இந்தக் கேள்விக்குத்தான் நமக்கு விடை வேண்டும்.

*****

            இந்தத் தேர்தல் அரசியல் குறித்து தேநீர்க் கடைகளில் நடைபெறும் விவாதங்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ""வைகோ வேறென்ன சார் பண்ண முடியும், அவரும் கட்சி வளர்க்க வேண்டாமா?'' ""கலைஞர் இல்லன்னா நீ பொடாவிலேர்ந்து வெளியே வந்திருப்பியா, கொஞ்சமாவது நன்றி வாணாம்?'' ""கலைஞர் பெரிய ராஜதந்திரிங்கிறாங்க, அந்தம்மா பாரு சைலண்டா காய் நவுத்தி வேலய முடிச்சிடுச்சி'' ""சும்மா சொல்லக்கூடாது, விஜயகாந்த் போல்டான ஆளுய்யா, ரஜினிதான் இதோ வாரேன், அதோ வாரேன்னு கெடுத்துகிட்டாரு'' ""அவன் பேசாம அம்மாவோட கூட்டணி வச்சா 20,30 சீட்டு ஜெயிச்சிட்டு அப்புறமா அடுத்த தேர்தலுக்குள்ள கட்சிய வளர்த்துக்கலாம். தனியா நின்னா டெபாசிட் போய் ஒரேயடியா மங்களம் பாடிட வேண்டியதுதான்.''

 

            அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் பத்திரிகை படிப்பவர்கள் என்று சொல்லப்படும் பிரிவினர் அரசியலை விவாதிக்கும் முறை இதுதான். இவர்கள் தேர்தல் முடிவு பற்றி ஆரூடம் சொல்கிறார்கள். "பொதுமக்களின்' மனநிலை பற்றி உளவியல் பகுப்பாய்வு செய்கிறார்கள். எப்படிக் கட்சி நடத்தவேண்டும் என்று ஐடியா கொடுக்கிறார்கள். கூட்டணி பேரங்களில் யார் கதாநாயகன், யார் வில்லன் என்பது பற்றி காரசாரமாக வாதாடுகிறார்கள்.

            எப்படி எடுத்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும் என்று சினிமாக் கொட்டகை வாசலில் நின்றபடியே இயக்குநராக மாறும் ரசிகனைப் போலவே, எப்படி அரசியல் பண்ண வேண்டும் என்று இவர்கள் அரசியல்வாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

            ஒரு சின்ன மெகா சீரியலைப் போல ஓடுகிறது தேர்தல். தொலைக்காட்சி சீரியலில் யார் கதாநாயகன், யார் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் யார் யார் என்பதை கதாசிரியர் தீர்மானித்து விடுவதால் ரசிகனின் "கருத்துரிமை' அங்கே கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் நாளைக்கு என்ன செய்யப் போகிறது என்பதை ஊகிக்கும் வரம்பிற்குள் ரசிகனின் "படைப்புத்திறன்' முடக்கப்பட்டு விடுகிறது.

            தேர்தல் எனும் சீரியலோ நாற்புறமும் சுற்றி வளைத்து மக்களைத் தனக்குள் கவர்ந்திழுக்கிறது. காலை  மாலைப் பத்திரிகைகள், வார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள், தொலைக்காட்சிகள், பொதுக்கூட்டங்கள் போன்றவையனைத்தும் ஒரே கதையை தத்தம் நோக்கில் விதம் விதமாகச் சொல்கின்றன. ஒரு இதழில் வைகோ கதாநாயகன், இன்னொரு இத ழில் வில்லன், வேறொரு இதழிலோ கோமாளி. திடீர் திருப்பங்கள், திரைமறைவுப் பேரங்கள், பேட்டிகள்  பேட்டிகளுக்கான பொழிப்புரைகள் என்று விரிந்து சூழும் இந்த சீரியலில் ரசிகன் அவனுக்கே தெரியாமல் கதாபாத்திரமாக மாற்றப்பட்டு விடுகிறான்.

            கட்சி கட்டிக் கொண்டு வாதாடுகிறான், தனது ஆதர்ச பாத்திரங்களின் சார்பில் சிந்திக்கிறான், கோபம் கொள்கிறான், மகிழ்ச்சியடைகிறான், தன்னுடைய ஊகங்கள் பலிக்க வேண்டுமேயென்று தவிப்பும் கொள்கிறான். கலைஞர், ஜெ., வை.கோ., திருமா., ராமதாசு ஆகியோரது பிரச்சினைகளைத் தனது சொந்தப் பிரச்சினையாகவும், அவர்களது நியாயங்களைத் தனது சொந்த நியாயமாகவும் உணர்ந்து வாதாடுகிறார்கள் அரசியல் ரசிகர்கள்.

            ஆனால், எதார்த்த வாழ்க்கையின் கொடுங்கரங்கள் அவர்களை அவ்வப்போது உசுப்பி விடுகின்றன. ""ரேசன் கடைக்குப் போக வேண்டும், வேலைக்கு நேரமாகி விட்டது. பைனான்சுக்காரனுக்குப் பதில் சொல்ல வேண்டும், கரண்டு பில் கட்ட கடன் வாங்க வேண்டும்'' என்ற உண்மைகள் அவர்களைத் தீண்டியவுடனே விழித்துக் கொள்கிறார்கள். ""எவன் கதையப் பேசி நமக்கு என்னா ஆவப்போகுதுங்க, நாம உழைச்சாதான் நமக்குச் சோறு, என்னா சொல்றீங்க'' என்ற வசனத்துடன் அன்றைய சீரியலை முடித்துக் கொள்கிறார்கள். விட்ட இடத்திலிருந்து  மீண்டும் மறுநாள் தொடர்கிறது சீரியல்.

            இவ்வாறு விவாதம் நடத்துபவர்கள் கட்சிக்காரர்களோ அல்லது கட்சி ஆதரவாளர்களோ மட்டுமல்ல; எந்தக் கட்சியயையும் சாராதவர்களென்றும் சரி தவறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து நல்ல கட்சிக்கும் நல்ல வேட்பாளருக்கும் வாக்களிப்பவர்களென்றும் கூறப்படும் பொதுமக்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுவணிகர்கள், கைவினைஞர்கள், அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் இதில் உண்டு.

            எந்தத் தேநீர்க் கடையிலாவது எப்போதாவது இவர்கள் தங்களது வாழ்க்கையைச் சூறையாடும் அரசின் கொள்கைகளைப் பற்றியோ, அவற்றில் பல்வேறு கட்சிகளின் நிலைபாடு பற்றியோ இத்தனை ஈடுபாட்டுடனும் உணர்ச்சி பூர்வமாகவும் விவாதிப்பதைக் கண்டிருக்கிறீர்களா?

 

            தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் ராமதாசு. இதைக் காட்டிலும் சுயநிதிக் கல்லூரிகளையே ரத்து செய்து அரசுக் கல்லூரிகளாக்குவது அம்மாணவர்களுக்கு நல்லதில்லையா, இந்த எளிய உண்மை அய்யாவுக்கு விளங்காமல் போனதெப்படி?

 

            கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்கும் சட்டம் வந்தவுடனே கவர்னரைப் பார்க்கச் சென்ற கலைஞர் விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தபோது யாரைச் சென்று சந்தித்தார்?

 

            13 தொகுதிகளைப் பெறுவதற்காக கருணாநிதியிடம் மாபெரும் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டுகள், ""2 தொகுதிகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் தாமிரவருணியை கோகோ கோலாவுக்கு கொடுத்து விடாதீர்கள்'' என்று மன்றாடவாவது செய்தார்களா?

 

            பத்தைப் பதின்மூன்றாக்கும் கவுரவப் பிரச்சினைக்காக அறிவாலயத்திற்குப் பாதயாத்திரை போனார் தா.பாண்டியன். பணிநிரந்தரமும், தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் பன்னாட்டு கம்பெனிகளில் கொத்தடிமைகளாகப் பணிபுரியும் பாட்டாளி வர்க்கம் தன்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்தக் கோயிலுக்குத் தீர்த்த யாத்திரை போவது?

 

            9 தொகுதிகளை திருமாவுக்கு ஒதுக்கியது இருக்கட்டும். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி சாதிவெறியர்களை உள்ளே தள்ளுவதாகவும், தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப்படாத அரசுப் பணியிடங்களை நிரப்புவதாகவும் சில கொசுறு வாக்குறுதிகளையாவது தலித் மக்களுக்கு அம்மா போட்டுக் கொடுத்திருக்கிறாரா?

 

            இவையெல்லாம் மக்களின் அறிவுக்கெட்டாத பிரச்சினைகளோ, அவர்களால் எழுப்பமுடியாத கேள்விகளோ அல்ல. எனினும் இந்தக் கேள்விகளுக்கும் தேர்தலுக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் சிந்திப்பதில்லை. அத்தகைய அபாயகரமான "தீவிரவாத' சிந்தனைக்குச் செவிமடுத்து விடாமல் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை முதலாளித்துவ ஊடகங்களும், கட்சிகளும் ஏற்றிருக்கின்றன.

****

            ஜனநாயக சோசலிசம், லோகியா சோசலிசம், திராவிட நாடு என்ற கொள்கை வேடங்களுடன் தொடங்கி, அவையனைத்தும் கலைந்து "அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்பதற்கான கூச்சநாச்சமற்ற போட்டிதான் தேர்தல்' என்ற நிலையை எய்தியிருக்கும் தருணத்தில், இந்தியத் தேர்தல் ஜனநாயகம் மறுகாலனியாக்கத்தைச் சந்தித்திருக்கிறது.

            தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றழைக்கப்படும் மறுகாலனியாக்கத்தை அமல்படுத்துவதில் போட்டியிடும் இரண்டு கூட்டணிகளிடையே எவ்விதக் கொள்கை வேறுபாடும் இல்லை. விவசாயத்தையும் உள்நாட்டுத் தொழில்களையும், தொழிலாளர் உரிமைகளையும் "மென்னியை நெறித்துக் கொன்று விடலாம்' என்கிறார் புரட்சித்தலைவி. "மருந்து வைத்துக் கொல்லலாம்' என்கிறார் கலைஞர். "பட்டினி போட்டுக் கொல்வதுதான் மனிதாபிமான முறை' என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள். இந்தக் "கொள்கை வேறுபாட்டை' மக்களுக்குப் புரிய வைக்க அவர்கள் முயற்சித்தால் அவர்களுக்கு நேரக்கூடிய கதி என்ன?

 

            ""சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது, வாட் வரி விதிப்பு கூடாது, தண்ணீர் வியாபாரம் கூடாது, கோக்பெப்சியைத் தடை செய்ய வேண்டும்'' என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்குத்தான் வணிகர்கள் வாக்களிப்பார்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்தது. எந்தக் கட்சியும் இக்கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காததால் ""எல்லா கட்சிகளிலிருந்தும் வணிகர்கள் வெளியேறவேண்டும்'' என இப்போது அறைகூவல் விடுத்துள்ளது.

            விளைபொருளுக்கு விலை நிர்ணயம் கோரி விவசாயிகளும், சுயநிதிக் கல்லூரிகளை அரசே ஏற்கச் சொல்லி மாணவர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமை கோரி தொழிலாளர்களும், தனியார்மயத்தை நிறுத்தவேண்டுமென்று கோரி பொதுத்துறை ஊழியர்களும், ஆளெடுப்புத் தடைச் சட்டத்தை அகற்றவேண்டுமென வேலையில்லா இளைஞர்களும் கோரிக்கை வைத்து, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்றும் அறிவித்திருந்தால், வணிகர் சங்கத்திற்கு நேர்ந்த கதிதான் எல்லோருக்கும் நேர்ந்திருக்கும்.

            பெரும்பான்மை மக்களுக்கு உணவு, வேலை, கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகிய அனைத்து உரிமைகளையும் மறுத்து, அவர்களை வறுமைக்கும் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளுகின்ற இந்தத் தனியார்மயத் தாராளமயக் கொள்கைகளைப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெற்று (ஜனநாயக பூர்வமான முறையில்) அமல்படுத்துவது சாத்தியமற்றது என்பது ஆளும் வர்க்கத்துக்குத் தெரியும். எனவேதான் கள்ளத்தனமான வழிமுறைகளின் மூலம் மட்டுமே இவை திணிக்கப்படுகின்றன.

            1994இல் நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் கூடத் தெரியாமல் நரசிம்மராவ் அரசு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதல், இந்திய  அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் யாருக்கும் தெரியாமல் மன்மோகன் சிங் கையெழுத்திட்டது வரை இந்தக் கள்ளத்தனம் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.

*****

            எனினும் கருத்துரிமையும், அதனடிப்படையில் நடத்தப்படும் சுதந்திரமான விவாதமும் இருந்தால்தானே மக்கள் இதனை ஜனநாயகம் என்று நம்புவார்கள்! ஆகவே, தான் அனுமதிக்கும் சட்டகத்திற்குள் விவாதம் நடத்த வாக்காளர்களுக்குப் "பூரண' சுதந்திரத்தையும் வழங்கியிருக்கின்றன ஆளும் வர்க்கங்கள்.

            நுகர்வோனின் "தெரிவு செய்யும் உரிமை'யை சாத்தியப்படுத்துவதற்காகப் பலவிதமான சோப்புகளும் பவுடர்களும் சந்தையில் அடுக்கப்பட்டிருப்பதைப் போலவே, வாக்காளனின் தெரிவு செய்யும் உரிமையை அங்கீகரிக்குமுகமாக தேர்தல் சந்தையில் பல வண்ணக் கட்சிகளைப் பார்வைக்கும் வைத்திருக்கின்றன.

            ""கொள்கை ரீதியில் தங்களிடையே எவ்வித வேறுபாடும் இல்லாதபோது, தம்மை வித்தியாசமானவர்களாக மக்களிடம் சித்தரித்துக் கொள்வது எப்படி? மக்கள் தம் சொந்தக் கோரிக்கைகள் பற்றி சிந்திப்பதை மறந்து, தம் தலைவர்களின் கோரிக்கைகளையே தமது சொந்தக் கோரிக்கைகளாகக் கருதி விவாதிக்குமாறு செய்வது எப்படி?''  இவை ஓட்டுக் கட்சிகளின் முன் உள்ள கேள்விகள்.

            கொள்கை வேறுபாடுகள் பற்றி மக்கள் கஷ்டப்பட்டுச் சிந்திக்கத் தேவையில்லாத சூழ்நிலையை அவர்கள் ஏற்கெனவே உருவாக்கி விட்டார்கள். நெடுஞ்சாலைச் சுவர்களிலும் சுவரொட்டிகளிலும், பானர்களிலும் தரிசனம் தரும் ""அய்யா, அம்மா, திருமா, கலைஞர், வை.கோ. தளபதி'' போன்ற "கொள்கை'களில் ஒன்றை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

            சுவரொட்டியில் உள்ள செய்தி கலியாணமா, கருமாதியா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அது அம்மா கட்சியின் வட்டச் செயலர் பெண்ணுக்கு நடக்கும் பூப்பு நீராட்டு விழாவாகக் கூட இருக்கலாம். அய்யா மரம் நடுவதாக இருக்கலாம். வைகோ ரத்ததானம் கொடுப்பதாகவும் இருக்கலாம். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி யாருக்கென்ன கவலை? "அம்மா', "அய்யா' என்பதே முக்கியம்.

            குளோசப் காட்சியில் கொள்கைப் பின்புலத்தைக் காண முடியுமா? பெஞ்சு டிக்கெட்டில் உட்கார்ந்து அண்ணாந்து படம் பார்ப்பவனுக்கு எல்லா காட்சிகளும் குளோசப் காட்சிகளே. ரோட்டில் நடந்தால் இந்தத் தலைவர்களின் பெயர்களைக் கடந்து செல்வதற்குள் நமக்குக் கால் வலிக்கிறது. அவர்களது விசுவரூபத்தை அண்ணாந்து பார்க்க முயன்றாலோ கழுத்து வலிக்கிறது.

            அர்ச்சுனனின் கேள்விக்குத் தனது விசுவரூபத்தால் விடை சொன்ன கண்ண பரமாத்மாவைப் போல, "நானே கொள்கை, நானே மக்கள்' என்கிறார்கள் தலைவர்கள். ஆகவே தலைவர்களின் சோகமே மக்களின் சோகம்.

            ""தள்ளாத வயதிலும் வேலூர் சிறை வாசலில் கால் வலிக்கக் காத்திருந்து உன்னைக் காண வந்த தலைவனின் முதுகில் குத்தி விட்டாயே துரோகி!'' என்று சென்டிமென்டு குண்டை வைகோவின் மீது வீசுகிறது தி.மு.க.

            சீட்டுக் கணக்கைச் சொல்லி இந்த சென்டிமென்டு குண்டைத் தகர்க்க முடியாது என்பதால் ""வேண்டாத விருந்தாளியாக அறிவாலயத்தின் முன் காத்துக் கிடந்தேன்'' என்று கண்ணீர் விடுகிறார் வை.கோ.

            குண்டர் சட்டம், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் என்ற அனைத்துத் தடைகளையும் தாண்டி அம்மாவைச் சரண் புகுந்த திருமாவுக்கும் சென்டிமென்ட் கை கொடுக்கிறது. ""தனியாகத் தொகுதி கேட்டால் கலைஞர் பா.ம.க.வின் எச்சில் இலையில் சோறு தின்னச் சொல்கிறார்'' என்ற திருமாவின் சோக உருவகம், தலித் மக்களின் தீண்டாமைச் சோகத்தை பதிலி செய்கிறது. திண்ணியம் சோகத்தைக் கூட ஒன்றுமில்லாததாக்கி விடுகிறது.

            இவற்றில் எது கிளிசரின் கண்ணீர் எது உண்மைக் கண்ணீர் என்று பகுத்து அறியும் பொறுப்பும், இவர்களுடைய கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையும் இதோ, வாக்காளர்கள் மீது சுமத்தப்பட்டு விட்டது. காண்டிராக்டையும் கட்டைப் பஞ்சாயத்தையும் கைப்பற்றுவதற்காக நடக்கும் ஒரு மோதலில் கண்ணீரையும் சென்டிமென்டையும் புகுத்தி இப்படி ஒரு திரைக்கதை தயாரிக்க முடியுமென்பதை "சென்டிமென்ட்' சக்ரவர்த்தியான இயக்குநர் ஃபாசில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

            அகிலமனைத்தையும் தன்னுள் அடக்கும் "சிவாய நம' என்பதும் கூட ஐந்தெழுத்து மந்திரம். ஆனால் பாமர மக்கள் கொள்கை விளக்கம் பெற 5 எழுத்துக்கள் அதிகம் என்பதால் அதையும்கூடச் சுருக்கி விட்டார்கள் தலைவர்கள்.

            வன்னியர் சமூகத்தின் மேன்மை, தமிழ்ப் பெண்களின் கற்புடைமை, காடுகள் மரம் செடி கொடிகளின் பசுமை அனைத்தும் "அய்யா' என்ற மூன்றெழுத்தில் அடக்கம்; தலித் சமூகத்தின் விடுதலை, கவுரவம், அதிகாரம் அனைத்தும் "திருமா' என்ற மூன்றெழுத்துள் அடக்கம்; புலிகளின் துப்பாக்கிச் சத்தத்தை விஞ்சுகின்ற "வைகோ' எனும் இரண்டெழுத்துப் பேரிரைச்சலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலமே அடக்கம்; தமிழ் என்ற மூன்றெழுத்து "கலைஞர்' என்ற நான்கெழுத்தில் அடக்கம்; "தளபதி'க்குள் தி.மு.க. அடக்கம்; தமிழகமே "அம்மா'வில் அடக்கம்!

            நேர்மைக்கு ஹமாம், அழகுன்னா லக்ஸ், கூலுன்னா கொக்கோ கோலா அவ்வளவுதான். நேர்மை என்றால் என்ன, அது ஹமாமில் எத்தனை சதவீதம் கலந்திருக்கிறது, அது அழுக்கை அகற்றுமா என்றெல்லாம் ஆராயாமல் குறிப்பிட்ட பிராண்டுக்கு விசுவாசம் காட்டும் நுகர்வோரைப் போலவே வாக்காளர்களும் "சிந்திக்க' வேண்டும். கொள்கை என்றால் என்ன, அது தலைவரின் சொல்லிலும் செயலிலும் எத்தனைச் சதவீதம் கலந்திருக்கிறது என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடக் கூடாது. ஏனென்றால், தலைவர்தான் கொள்கை, தலைவரே மக்கள்!

            மாறனுக்கும் அன்புமணிக்கும் மந்திரிப் பதவி கிடைத்தால் "தமிழகத்துக்கு 7 மந்திரிகள்' என்றே நாம் புரிந்து கொள்ளவேண்டும். திருமாவுக்கு 9 இடம் கிடைத்தால் தலித் சமூகத்துக்கே இடம் கிடைத்ததாகக் கொண்டாட வேண்டும். கிடைக்காவிட்டால் தலித் சமூகத்திற்கு நேர்ந்துவிட்ட இந்த அவமானத்தை எண்ணிக் குமுற வேண்டும். இந்த நிலையில் மக்களை இருத்தி வைப்பது குறித்து ஓட்டுக்கட்சித் தலைவர்கள் இடையறாது சிந்திக்கிறார்கள்.

            தி.மு.க. கூட்டணியிலிருந்து டக்கென்று தாவ முடியாமல் வைகோவின் துண்டைப் பிடித்திழுத்த கேள்வி எது? "இது நீதியான முடிவா?' என்ற கொள்கைக் கேள்வியல்ல, "இந்த முடிவை தனது வாக்கு வங்கி ஒத்துக் கொள்ளுமா?' என்ற நடைமுறைக் கேள்வி. "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா' என்று விடுதித் தலைவர் காளிமுத்து தோட்டத்துக் கதவைத் திறந்து உள்ளே தள்ளிவிட்ட மறுகணமே அவருக்கு தெளிவு பிறந்துவிட்டது. முதன்முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும்போதும் "கொள்கையைக் கைவிடுகிறோமே என்று தி.மு.க.வினர் யாரும் சஞ்சலப்படவில்லை, "இதை மக்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே' என்றுதான் கவலைப்பட்டனர்.

****

            ""இந்த சீனை மக்கள் ஒத்துக்குவானா?'' என்று சினிமாக்காரர்கள் நடத்தும் ஸ்டோரி டிஸ்கசனுக்கும், ""இந்தக் கூட்டணி கிளிக் ஆகுமா?'' என்று ஓட்டுக்கட்சிகள் படுகின்ற கவலைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. வாக்காளர்களை இரசிகர்களின் நிலைக்குத் தாழ்த்திவிட்ட இந்த இரசவாதம், ஓட்டுச் சீட்டு அரசியலில் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கைகள் போன்ற எவையும் நம்பத் தக்கவையல்ல என்று மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து விட்டநிலையில், எதை வைத்து அவர்களை வாக்குச்சாவடிக்கு இழுப்பது என்ற கேள்விக்கு ஆளும் வர்க்கங்கள் கண்டிருக்கும் விடை இது.

            அன்றாட வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், இந்தத் தேர்தலுக்கும் நேரடியாகத் தொடர்பிருப்பதையும், தாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகள்தான் தம் குடியைக் கெடுத்த துரோகிகள் என்பதையும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தேர்தல் என்பதை ஒரு சினிமாவாகவும் சீரியலாகவும் திருவிழாவாகவும் மாற்றிவிட்டன ஆளும் வர்க்கங்களும் அவர்களின் பிடியில் உள்ள ஊடகங்களும்.

            அரசியல், பொருளாதாரம் என்பன பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதற்கு இதுநாள்வரை அக்கறை காட்டாத மக்கட் பிரிவினரையெல்லாம் அரசில் களத்தில் இறங்குமாறு கட்டாயப்படுத்துகின்றது மறுகாலனியத் தாக்குதல். ஒரு குவளைத் தண்ணீர், ஒரு கவளம் ரேசன் அரிசிச் சோறு, அடுப்பெரிக்க மண்ணெண்ணெய், குடிசையில் எரியும் ஒரு குண்டு பல்பு  என எதைத் தொட்டாலும் "நான் நான்' என்று முன்னால் வந்து நிற்கிறது உலக வங்கி.

            இந்தத் தாக்குதல் எவ்வளவு பருண்மையாகவும் பட்டவர்த்தனமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதிலிருந்து சூட்சுமமாக விலகிச் செல்கிறது தேர்தல் அரசியல். "நல்லாட்சி' "அராஜக ஆட்சி' "முன்னேற்றம்' "தீயசக்தி' என்ற பொருள் விளங்காச் சொற்களும், "நன்றி' "தியாகம்' "துரோகம்' "கருணை' போன்ற உணர்ச்சிப் பசப்பல்களும், இவற்றுக்குப் பொருத்தமான முகபாவங்களுடன் எல்லா முச்சந்திகளிலும் இளித்துக் கொண்டிருக்கும் தலைவர்களின் மூஞ்சிகளுமே வாக்காளர்களின் மூளைகளில் நிரப்பப்பட்டிருக்கின்றன.

            இத்தகைய உணர்ச்சிப் பசப்பல்களுக்கும் அரசியல் அரட்டைகளுக்கும் வாய்ப்பில்லாமல் வாழ்க்கையால் தண்டிக்கப்பட்டு, நிதர்சன உலகில் மட்டுமே வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் பெரும்பான்மையான ஏழை மக்கள். பூடகமான சொற்களால் ஏமாற்றப்படுமளவுக்கு அவர்கள் கல்வியறிவு பெறவில்லையாதலால் அவர்களுக்கு சைக்கிள், குடம், தவலை, வெள்ள நிவாரணம் எனப் பருண்மையான பொருட்கள்!

            இந்தத் தேர்தலால் மக்களுக்கு என்ன பயன் என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பாமல் அரட்டையையே அரசியலாய்க் கருதும் படித்த வாக்காளர்களின் "அறிவு', உடனடிப் பயன்களைத் தாண்டி வேறெதையும் பார்க்கத் தெரியாத பாமர மக்களின் அறியாமை  என்ற இரு தண்டவாளங்களின் மீது ஓடிக் கொண்டிருக்கிறது, இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல்.

****

            இம்முழு மோசடியைத்தான் "ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை' என்று வருணிக்கிறது ஆளும் வர்க்கம். ஒரு வாதத்திற்கு அதை ஒப்புக் கொள்வதாக இருந்தாலும், ஜனநாயகத்தின் மீதான அதே நம்பிக்கை ஆளும் வர்க்கத்துக்கும் இருந்தால் மட்டுமே இந்தத் தேர்தல் ஜனநாயகம் நீடிக்க முடியும். மக்களுடைய இந்த நம்பிக்கையைப் பராமரிக்கும் நோக்கத்திற்காகவாவது தனது மறுகாலனியக் கொள்கைகள் சிலவற்றை விட்டுக் கொடுக்கவோ கொஞ்சம் தள்ளி வைக்கவோ கூட ஆளும் வர்க்கம் தயாராக இல்லை.

            தேர்தல் அரசியலின் நிர்ப்பந்தம் காரணமாக ரேசன் கடை மூடல், பொதுத்துறை ஏலம், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல் போன்ற தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளை நினைத்த மாத்திரத்தில் ஆளும் வர்க்கத்தால் நடத்த முடிவதில்லை. ""பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் வேகத்தை எண்ணி வெட்கப்படுகிறேன்'' என்று சமீபத்தில் டாவோஸில் நடந்த உலக முதலாளிகள் கூட்டத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார் ப.சிதம்பரம்.

            தாங்கள் ஆட்பட்டிருந்த தேர்தல் ஜனநாயக மாயை குறித்தும் மக்கள் வெட்கத்துடன் திரும்பிப் பார்க்கத்தான் போகிறார்கள். இருக்கின்ற வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மிகச் சாதாரணமான அன்றாடக் கோரிக்கைகளுக்காகவும் மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கூட, மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களாக மாற்ற வேண்டிய கட்டாயத்தை ஆளும் வர்க்கம் தோற்றுவித்து வருகிறது.

            ஆகவே, எந்தக் கூட்டணியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மக்களுக்கு இனி இருக்காது. நெல்லை  கங்கை கொண்டானில் நூறு சதவீத மக்களும் கோகோ கோலா ஆலையை வெளியேற்றவேண்டும் என்று போராடுகின்றனர். அங்கே சர்வகட்சிக் கவுன்சிலர்களும் கோக்கின் பின்னால் ஒரே கூட்டணியாக இணைந்து நிற்பதை மக்கள் காண்கிறார்கள்.

            அய்யா அம்மா தளபதி வகையறாக்களும் ஒரே அணியில்தான் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு அணியென்று மக்கள் கொண்டிருக்கும் மாயையை வரவிருக்கும் மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்கள் துடைத்தெறிந்து விடும்; போலி ஜனநாயகத் தேர்தல் எனும் இந்த சீரியலை முன் அறிவிப்புகள் ஏதுமின்றி முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.

மு சூரியன்