04_2006.jpg

சி முக்கியமான அரசியல் நிகழ்வுகள் மட்டும்தான் அவற்றின் சாரத்தை சுருங்கக் கூறும் சான்றுகளைத் தடயமாக விட்டுச் செல்கின்றன. புஷ்ஷின் இந்திய வருகை அந்த ரகத்தைச் சார்ந்தது. ""புஷ் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் அதே தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நாய்களை சார்ஜன்ட் மேஜர், லெப்டினன்ட் என்ற அவற்றின் பதவியின் பெயரால்தான் அழைக்க வேண்டுமெயன்றி நாய்கள் என்று தவறியும் அழைத்துவிடக் கூடாது''

 என்று அந்த விடுதிப் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்ததும், அதனையொட்டி அந்த நாய்களுக்கு வழங்கப்பட்ட ராஜ மரியாதையும், வாசகர்கள் அறிந்த விசயம். புஷ் மலர் வளையம் வைக்கவிருந்ததை முன்னிட்டு காந்தி சமாதியையும் அந்த நாய்கள் மோப்பம் பிடிக்கவே, தேசத்தந்தையையே அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் எழுப்பினர். ""அவைகளை ராணுவ அதிகாரிகளாகக் கருதாமல் நாய்களாகப் பார்க்கும் பார்வைக் கோளாறுதான் இந்தக் கூச்சலுக்குக் காரணம்'' என்று விளக்கமளித்தார் அமைச்சர் சுபோத்காந்த் சகாய்.

 

            அமெரிக்க நாய்களுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதை வங்கதேச, சோமாலிய நாட்டு நாய்களுக்கு வழங்கப்படுமா? மரபை மீறி அமெரிக்க அதிபரை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றதைப் போல மற்ற அதிபர்களை வரவேற்பதற்கும் மன்மோகன் சிங் செல்வாரா? விமான நிலையத்தில் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் அறிமுகப்படுத்தப்பட்டவுடனே, ""எனக்கு அந்த ஒப்பந்தம் வேண்டும்'' என்று அவர் காதில் கிசுகிசுத்தாராம் புஷ். வீதியுலா செல்லும் மன்னர்கள் ""எனக்கு அந்த பெண் வேண்டும்'' என்று அமைச்சனின் காதில் கிசுகிசுப்பதைப் போல! இவை வெறும் சம்பவங்கள் அல்ல; வெட்கம் மானமில்லாத அமெரிக்க அடிமைத்தனத்திற்கு இந்திய ஆளும் வர்க்கங்கள் எந்த அளவிற்குத் தயாராக இருக்கின்றன என்பதற்கு இவை சான்றுகள்.

 

            விரும்பியவையனைத்தும் புஷ்ஷûக்குக் கிடைத்துவிட்டன. இதுநாள் வரை தேசவெறியைத் தூண்டுவதற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த "அணுகுண்டு' புஸ்வாணமாகிவிட்டது. அணுசக்தி ஒப்பந்தம் குறித்த மன்மோகன் சிங்கின் பித்தலாட்டங்கள் பாராளுமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும்போதே, அமெரிக்காவில் குட்டு உடைந்து விட்டது. ""2015ஆம் ஆண்டுக்குள் இந்திய அணுசக்தித் துறையின் 90% நமது கண்காணிப்பின் கீழ் வந்து விடும்'' என்று அமெரிக்க காங்கிரசுக்கு உறுதி அளித்திருக்கிறார் வெளியுறவுத் துறைச் செயலர் பர்ன்ஸ். 90,000 கோடி ரூபாய்க்கான அணுமின் நிலைய ஏற்றுமதியைக் குறிவைத்து ஜி.இ., வெஸ்டிங்க்டன் ஹவுஸ் போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் இந்திய அரசுடன் பேசி வருகிறார்கள். தனியார் அணுமின் நிலையம் அமைக்க ரத்தன் டாடா ஆசை வெளியிட்டுள்ளார். 45,000 கோடிக்கு ஆயுத இறக்குமதி, மான்சான்டோ, அம்பானி போன்ற "விவசாயிகள்' துவங்கவிருக்கும் நிரந்தரப் பசுமைப் புரட்சி, வால் மார்ட்டின் சில்லறை வணிகம் என்று எல்லாத் துறைகளையும் சூறையாடிச் சென்றிருக்கிறது இந்த அமெரிக்க சுனாமி. ஷியா முசுலீம்கள் அதிகம் வாழும் ஐதராபாத்தில் தனது கான்சல் அலுவலகத்தை அமைப்பதன் மூலம், சி.ஐ.ஏ. உளவாளிகளை தூதரக அதிகாரிகளாக்கவும், இரானுக்கு எதிரான தனது சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு அதனைத் தளமாகப் பயன்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

            இந்த அடிமைத்தனத்திற்கு இந்திய மக்கள் உடன்படமாட்டார்கள் என்பதை உரக்கக் கூறின புஷ்ஷûக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள். டில்லியில் தொடங்கி இந்தியச் சிறு நகரங்கள் வரை எந்த அமெரிக்க அதிபருக்கெதிராகவும் நாடெங்கும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதில்லை. ஆனால் அடிமை மோகத்தில் ஆழ்ந்திருந்த ஆளும் வர்க்கங்களும் அவர்களது ஊடகங்களும் மக்கள் போராட்டங்களின் மீது வெறுப்பை உமிழ்ந்தன. ""30 கோடி நடுத்தர வர்க்கத்தைக் கொண்ட சந்தை'' என்று இந்தியாவைப் பற்றி நாக்கில் எச்சில் ஒழுகப் பலமுறை கூறினார் புஷ். மீதமுள்ள 90 கோடி மக்களைக் குப்பைகளாகவும், அவர்களது குரலுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் "ஜனநாயக முறையை' ஒழித்துக் கட் டப்பட வேண்டிய தொந்திரவாகவுமே இந்திய ஆளும் வர்க்கங்களும் கருதுகின்றன.

 

            மக்களின் ஜனநாயக உரிமைகளும் நாட்டின் இறையாண்மையும் வேறு வேறான விசயங்கள் அல்ல என்பதை மறுகாலனியாதிக்கம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறது. "அமெரிக்க நாயே வெளியேறு' என்று புஷ்ஷûக்கு எதிராக நாடெங்கும் எழுந்த முழக்கம், "அடிமை நாய்களே வெளியேறுங்கள்' என்று விரிவடைய வேண்டும். நாய்களாக நடத்தப்பட வேண்டிய மனிதர்களை இனம் காட்டவும் வேண்டும்.