Language Selection

புதிய கலாச்சாரம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

            மதுரையில் கோமாளி எனும் கேபிள் டி.வியை ஒரு இளைஞன் சில நண்பர்களுடன் நடத்தி வருகிறான். அந்த இளைஞர்கள் பிரபல தொலைக்காட்சி சானல்களின் அக்கப்போர் நிகழ்ச்சிகளான பெப்சி உங்கள் சாய்ஸ், சினிமா பார்த்து விட்டு வரும் ரசிகர்களின் விமர்சனம், டயல் எ சாங், கேண்டிட் கேமரா, காமடி டைம் இன்னபிறவற்றை அப்படியே பிரதியெடுத்து தங்கள் உள்ளூர் சேனலை நடத்தி வருகிறார்கள். நாட்டு நடப்பு ஏதுமறியாத, சமூக அக்கறை ஏதுமற்ற அவர்களது ஜாலியான வாழ்க்கையில் ஒரு பெண் கோபத்துடன் குறுக்கிடுகிறாள். மக்களைக் கேலிக்கூத்தான பிறவிகளாகக் கருதும் அவர்களது வேடிக்கையான மேட்டிமைத்தனத்தைக் குத்திக் காட்டும் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து அவள் யாரென்று தெரிந்து கொள்கிறான் அந்த கேபிள் டி.வி. இளைஞன்.

            அந்தப் பெண் பிழைப்பதற்காகத் தன் தந்தையுடன் தஞ்சையிலிருந்து மதுரைக்கு வந்தவள். அவள் தந்தை உலகமயமாக்கத்தால் சூறையாடப்பட்ட விவசாயிகளில் ஒருவர். ஊரில் கடன் வாங்கி விவசாயம் செய்ய முடியாமல் நசித்துப் போனவர். வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் பட்டினியுடன் வாடும் அந்தக் குடும்பம் எலிக்கறியைத் தின்று வாழ முயல்கிறது. இறுதியில் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறது. அதில் தந்தை, மகளைத் தவிர மற்றவர்கள் மரித்துப் போகிறார்கள். மரணத்தைத் தழுவ முடியாமல் மீண்டு வந்த அப்பாவும், மகளும் மதுரைக்கு வருகிறார்கள்.

            தன் சொந்த வாழ்க்கையைத் துயரமாக்கிய விசயங்களை அரசியல் ரீதியாக உலகவங்கி, அமெரிக்கா, தனியார்மயம், தாராளமயம் முதலியனவற்றின் கேடுகளைத் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம், தன் தெருவில், தன் கல்லூரியில் அந்தப் பெண் பேசுகிறாள், பாடுகிறாள், பிரச்சாரம் செய்கிறாள், பிரசுரம் கொடுக்கிறாள். மேலும் கந்துவட்டிக் கொடுமை செய்யும் சிலரை, அவர்களுக்குத் தெரியாமல் ஏதோ ஒரு ஊசி போட்டு கோமா நிலையில் விழ வைக்கிறாள். கடைசியில் போலீசு அவளைக் கைது செய்ய, நீதிமன்றத்தில் ஆவேசமான அரசியல் உரை நிகழ்த்துகிறாள். கடைசிக் காட்சியில் பிணையில் வெளியே வருகிறாள். இடையில் அந்தக் கேபிள் டி.வி. இளைஞனையும் மக்களை நல்வழிப்படுத்தும் நிகழ்ச்சிகளை எடுக்குமாறு வற்புறுத்துகிறாள். அந்தப் பெண் மீது காதல் வயப்படும் அவன் இறுதியில் அவள் விரும்பியவாறு மாறுகிறான். உபயோகமான நிகழ்ச்சிகளை எடுக்க ஆரம்பிக்கிறான். இதனால் பதட்டமடையும் அரசாங்கம் அவனது டி.வியை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் மூலமாக உத்தரவு போடுகிறது. இறுதியில் அந்தப் பெண்ணும், அந்த இளைஞனும் தமது கருத்துக்களைப் பரப்ப நாகரீகக் கோமாளி எனும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்துகிறார்கள்.

            இயக்குநர் விரும்பி உருவாக்கியிருக்கும் இந்தக் கதை திரைக்கதையினூடாக அழுத்தமாக, கோர்வையாக, விறுவிறுப்பாக உருவாக்கப்படவில்லை. தனித்தனிக் காட்சிகளில் எப்படி பெரிய தொலைக்காட்சிகளின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகள் செட்டப் செய்து எடுக்கப்படுகின்றன என்பதைக் கண்டு சிரிக்கிறோம். தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக அமெரிக்கா, உலகமயம், உலகவங்கியின் ஆதிக்கம் குறித்த உரையாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறோம். பெரும் முதலீட்டில் எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தில் தன் கதையீனூடாக உலகமயமாக்கத்தின் அரசியல் கேடுகளை மையமாகச் சொல்ல முனைந்திருக்கும் இயக்குநரின் சமூக உணர்வும், நேர்மையும் உண்மையில் மிகவும் பாராட்டிற்குரியது; எளிதில் காணக்கிடைக்காதது. அதேசமயம் இந்த நோக்கம் கதையை அமைத்த விதத்திலும் சரி, சொல்லப்பட்ட விதத்திலும் சரி நிறைவேறவில்லை என்பதை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

            கந்து வட்டிக் கொடுமையில் அல்லலுறும் மக்களிடம், நமது நாடும் இப்படித்தான் உலகவங்கியிடம் கடன் வாங்கிச் சிரமப்படுகிறது என்று ஒரு உவமையாகச் சொல்லலாம். என்றாலும், கந்து வட்டிக் கொடூரத்தைத் தமது சொந்த அனுபவத்திலும் உணர்விலும் புரிந்து கொள்ளும் மக்கள் உலகவங்கியின் அடக்குமுறையையும் அவ்வாறே புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. ஏனெனில் உலகவங்கியின் ஆதிக்கம் பன்முகம் கொண்டது என்பதோடு அது பல தளங்களிலும் விரிந்து செல்கிறது. படத்தில் உலகமய அரசியலின் கேடுகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே பிரச்சாரம் செய்யப்படுகிறது. வாழ்க்கையிலிருந்து அவை உணர்த்தப்படவில்லை. அதனால் பார்வையாளர்கள் படத்தில் பல நல்ல சமூக விசயங்கள் இருப்பதாக மேலோட்டமாக அங்கீகரித்துக் கொண்டாலும் அவை என்னவென்று உணராமலேயே திரையரங்கை விட்டு அகலுகிறார்கள். அப்படியென்றால் தாராளமயமாக்கத்தின் அவலத்தை ஒரு திரைப்படத்தின் மூலம் சொல்லவே முடியாதா?

 

            முடியும். அமெரிக்காவும், உலகவங்கியும், பன்னாட்டு நிதி நிறுவனமும், எப்படி மக்கள் வாழ்க்கையை கண்ணுக்குத் தெரியாமல் வெறிகொண்டு அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டுமானால் அதற்கு தத்துவ நோக்கும், வாழ்க்கை அனுபவமும், அரசியல் கூர்மையும், அதையே கதையாக, கலையாக, திரைப்படமாக எடுத்தியம்பும் ஆற்றலும் வேண்டும். இது மிகக் கடினமான பணி. இன்றையச் சூழலில் ஒரு நபர் தமிழ்வழிக் கல்விப் பள்ளியை இலட்சிய நோக்கோடு ஆரம்பித்து, இறுதியில் வேறு வழியின்றி அந்தப் பள்ளியை இழுத்து மூடுகிறார் என்ற ஒரு வரிச் செய்தியில் கூட உலகமயம் குறித்து அற்புதமான ஒரு கதை இருக்கிறது.

            அறிவு வளர்ச்சிக்கும் தாய்மொழிவழிக் கல்விக்கும் உள்ள உறவு, பெற்றோர்களிடம் நிலவும் பொருளற்ற ஆங்கில மோகம், இன்றைய நடைமுறைத் தமிழ் தமிங்கிலமாக மாறியிருக்கும் அவலம், இந்திய வெப்பநிலைக்குப் பொருத்தமற்ற டை, ý நடை உடை பாவனைகள், உள்ளத்தால் ஆங்கிலேயராக மாற்றும் மெக்காலே கல்வி முறை, ரெயின் ரெயின் கோ அவே என்று மழையை விரட்டும் நமது வாழ்க்கை முறைக்கு அந்நியமான ஆங்கில மழலைப்பாடல்கள், தாமிரபரணி தெரியாது  தேம்ஸ் நதி தெரியும், பகத்சிங் தெரியாது  ஸ்பைடர் மேன் தெரியும், வ.உ.சி. தெரியாதுஜார்ஜ் புஷ் தெரியும், சிவகாசி குழந்தைத் தொழிலாளர்கள் உலகம் தெரியாது  வால்ட் டிஸ்னியின் டிஸ்னி லேண்ட் தெரியும், கோக், பெப்சி தெரியும்  நீராகாரமும் மோரும் கம்பங்கூழும் தெரியாது. தெருவில் மானாவாரியாக முளைத்திருக்கும் செடி கொடிகளின் ஐந்து பெயர்கள் கூடத் தெரியாது. கட்அவுட் முதல் நோட்டுப் புத்தகத்தின் அட்டை வரை துருத்தி நிற்கும் சினிமா நாயகர்களின் உருவம் மனப்பாடமாய் தெரியும், தன்னைச் சுற்றியிருக்கும் உண்மையான சமூக வாழ்வும், தமிழகமும், இந்தியாவும் தெரியாது  தொலைக்காட்சிகள் வடிவமைத்திருக்கும் பொய்யான இந்தியா மட்டும் தெரியும்...

            இப்படி பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் சிறார்களின் உலகத்தைத் தீர்மானிக்கும் இன்றையப் பண்பாட்டுச் சூழல், பள்ளிகளின் அங்கீகாரத்தைத் தீர்மானிக்கும் அரசுக் கல்வித் துறையின் ஊழல், சுயநிதிக் கல்வி என்ற பெயரில் இலாபகரமாக வணிகம் செய்யும் அரசியல்வாதிகள்  முதலாளிகள், ரிகார்டு டான்சாக மாறிவரும் பள்ளி ஆண்டு விழாக்கள்... இப்படி இந்தக் கதையில் மட்டுமே சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. இது போல ஒரு விவசாயியின் வாழ்க்கை குறித்தும், கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி ஓடி உதிரிப்பாட்டாளியாகச் சிதைந்து போகும் அவன் வாழ்க்கை அவலம் குறித்தும் உலகமயமாக்கத்தின் பின்னணியில் நல்ல கதைகளைச் சொல்ல முடியும்.

            ஏன், இயக்குநர் எடுத்திருக்கும் இந்த கேபிள் டிவி இளைஞனின் கதை கூட உலகமயமாக்கத்தின் அநீதியை பண்பாட்டு ரீதியில் ஆழமாக உணர வைப்பதற்குச் சாத்தியமுள்ள நல்ல கதைதான். படத்தின் முதல் பாதியில் அந்த இளைஞனின் வேலையினூடாக தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் மக்களின் வாழ்க்கையை நகைக்கத்தக்க விதத்தில் உணர்த்திவிட்டு மறுபாதியில் அந்த இளைஞன் உண்மையான மக்களுக்குத் தேவையான நிகழ்ச்சிகளை எடுக்க முயல்வதாகவும் யாருக்கும் பயனற்ற கோமாளியாக ஆரம்பிக்கும் அவன் வாழ்க்கை மெல்ல மெல்லப் பரிணமித்து சமூகப் பொறுப்புள்ள வாழ்க்கையாக மாறுவதாகவும் சித்தரிக்க முடியும்.

            கொடியங்குளம் கலவரம், குமரி மாவட்ட இந்துமதவெறியர்களின் கலவரம், தாமிரவருணி கோக் ஆக்கிரமிப்பு, அரசியல்வாதிகள்  சினிமா நட்சத்திரங்களுடன் உண்மையான பேட்டி என்று ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். இதிலிருந்து அரசியல், சமூகம், மீடியா, சாதி, மதம், ஸ்பான்சர் வழிமுறைகள் போன்றவற்றின் பின்புலத்தை அவன் புரிந்து கொள்வான். அவை மக்கள் நலனிலிருந்து முரண்படுவதையும் உணர்வான். இத்தகைய முயற்சிகளிலிருந்து உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் அவனது நோக்கம் நிச்சயம் தோற்றுத்தான் போகும்; ஆனால் படம் பார்ப்பவர்களிடம் உலகமயம் உருவாக்கிவரும் நச்சுப்பண்பாட்டுச் சூழலை அதற்குரிய அரசியல் வார்த்தைகள் இல்லாமல் வாழ்க்கையின் மூலமே உணரவைத்துச் சிந்திக்க வைக்கும் நோக்கத்தில் நாம் வெற்றியடைய இயலும்.

            நாம் மக்களிடம் உருவாக்க விரும்பும் கண்ணோட்டம் அல்லது சொல்ல விரும்பும் செய்தி, திரைக்கதை என்ற வாகனத்தில் ஏற்றப்படும் சுமையாக மாறிவிடக் கூடாது. ஒருவேளை திரைக்கதையுடன் இயைந்த முறையில் நமது கருத்து சொல்லப்படுவதாக இருந்தாலும் கூட, அந்தக் கதையானது குறிப்பிட்ட பிரச்சினையில் மக்கள் கொண்டிருக்கும் புரிதலையும் கண்ணோட்டத்தையும் கவனமாகக் கணக்கில் கொள்ளவேண்டும். இல்லையேல், இந்தப் படத்தின் கதாநாயகன் சொல்வதைப் போல, ""அவ என்னமோ சீரியஸா சொல்றாடா, நமக்குத்தான் ஒண்ணும் புரியல'' என்ற நிலை பார்வையாளர்களுக்கும் ஏற்பட்டுவிடும்.

            இது இத்திரைப்படத்திற்குச் சொல்லப்படும் விமரிசனம் மட்டுமல்ல, சமூக மாற்றம் குறித்த உண்மையான அக்கறை கொண்ட படைப்பாளிகள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். தனது அரசியல் சமூக உணர்வில் நேர்மையைக் கொண்டிருக்கும் இயக்குநர் இந்த விமரிசனங்களைப் பரிசிலிப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.

            அடிப்படையில் தான் ஒரு புரட்சிக்காரன் என்றும் வணிகச் சினிமாவின் நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தான் சில சமரசங்கள் செய்ய நேர்ந்து விடுகிறது என்றும் தங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் போலிகள் நிறைந்த தமிழ்த் திரையுலகில், தான் சொல்ல விரும்பிய அரசியல் கருத்தை வணிக சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல் சொல்ல முனைந்திருக்கும் இயக்குநரின் நேர்மை பாராட்டத்தக்கது.

            இந்தத் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் சென்னைத் திரையரங்கு ஒன்றில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய் சக்தி எனும் அறிமுக நடிகருக்கு அதற்குள் அகில இந்திய ரசிகர் மன்றம் துவக்கப்பட்ட சுவரொட்டிகள் நிறைய ஒட்டப்பட்டிருந்தன. சினிமாவின் அரசியல் இவ்வளவு மலிவாக இருக்கும் போது மக்களுக்கான அரசியலை வணிகச் சினிமாவின் வழியே சொல்ல முடியுமா என்ற கேள்வியையும் இயக்குநர் பரிசீலிக்க வேண்டும்.

மு அஜித்