"சுயநிர்ணய உரிமையை மறுப்பது தான் இனவாதம்." என்ற "முன்நிபந்தனை" யுடன் கூடிய அரசியல் அளவுகோல் வரட்டுத்தனமானது, இது சாராம்சத்தில் பிரிவினைவாதம் கூட. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் இனவாதிகள் என்ற அரசியல் அடிப்படை மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் இனவாதியாக்கி விடுகின்றனர். இனமுரண்பாட்டுக்கு எதிராக வர்க்கப்போராட்டத்தை நடத்தும் யுத்ததந்திரம் தான் சுயநிர்ணயம் என்பதையே மறுத்துவிடுகின்றனர். மாறாக பிரிவினையை மூடிமறைக்கும் யுத்ததந்திரமாக, சுயநிர்ணயத்தை குறுக்கிவிடுகின்றனர். சுயநிர்ணயத்தை "முன்நிபந்தனை"யாகக் கொண்ட அணுகுமுறையால், வர்க்கப் போராட்டத்தை சிதைத்து விடுகின்றனர். லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்தது வர்க்கப்போராட்டத்தை நடத்தவே ஒழிய, அதை "முன்நிபந்தனை"யாகக் கொண்டு வர்க்கப் போராட்டத்தை சிதைக்கவல்ல.

"பிரிந்து செல்லும் உரிமை - இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை" என்று கூறி, இதுவல்லாத அனைத்தையும் நிராகரிப்பது லெனினின் வர்க்கப்போராட்ட உள்ளடக்கத்தையே மறுப்பதாகும்.

இது சாராம்சத்தில் நிலவும் இரண்டு அரசியல் போக்குகளை மறுக்கின்றது.

1.மார்க்சியத்தையும், அதன் யுத்ததந்திர கோட்பாடான சுயநிர்ணயத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள், இனவொடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்று கூறி, இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை இனவாதமாக முத்திரை குத்தி மறுத்துவிடுகின்றனர்.

2.மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சுயநிர்ணயம் என்ற யுத்ததந்திரத்துக்கு பதில் வேறு யுத்ததந்திரத்தை முன்வைத்துப் போராட முடியாது என்று கூறி, அதை இனவாதமாகக் காட்டி மறுத்துவிடுகின்றனர்.

இவ்வாறு மார்க்சியத்தை வரட்டுவாதமாகக் குறுக்கி, பிரிவினையை முன்தள்ளுகின்றனர். இனவொடுக்குமுறைக்கு எதிராக பல்வேறு வடிவங்களில், பல்வேறு வர்க்கங்கள் பல்வேறு தளத்தில் போராட முடியும். இதை மறுப்பது மார்க்சியமல்ல. ஐக்கிய முன்னணி என்ற யுத்ததந்திரம் கூட, இதை அங்கீகரிப்பதில் இருந்துதான் உருவாகின்றது. இதற்கு மாறாக இந்த சமூக அமைப்பிலான வர்க்கப் போராட்டங்களை ஒற்றைப்பரிணாமம் கொண்டு அணுகுவது, காட்டுவது வரட்டுவாதமாகும்.

இதை குறிப்பாக ஆராய்வோம். சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாத சண் தலைமையிலான கட்சியை எடுப்போம். அது ஒரு இனவாதக் கட்சியாகவா இருந்தது? இல்லை. சுயநிர்ணயத்தை மறுத்த ரோசாலுக்சம்பேர்க்கு எதிராக லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்த போது, அவரை இனவாதியாகவா லெனின் அடையாளப்படுத்தினார்!? அவரை பெரும் தேசியவாதியாகவா லெனின் காட்டினார்!? இல்லை. மார்க்சியத்தை வரட்டுவாதமாக்கி திரிப்பதன் மூலம் சுயநிர்ணயத்தை குறுக்குவதன் மூலம் பிரிவினையை முன்வைக்கின்றனர்.

வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான யுத்ததந்திரமாகத்தான் சுயநிர்ணயத்தை லெனின் முன்வைத்தார். இதை ஏற்றுக்கொள்ளாவதவர்களை, இனவாதிகளாக முத்திரை குத்தி ஒதுக்குவதற்கல்ல. இதை ஏற்றுக்கொள்ளாதவர்களை எதிரியாக்கி, வர்க்கப் போராட்டத்தை முடக்குவதற்காக அல்ல.

இதே போல் "தேவையேற்படும் போது பிரிந்து செல்வதற்காக" லெனின் சுயநிர்ணய உரிமையை முன்வைக்கவில்லை. மாறாக பிரிந்து போகாத ஒரு வர்க்கப்போராட்டத்தை நடத்துவதற்காக சுயநிர்ணயத்தை லெனின் முன்வைத்தவர். இதற்கு வெளியில் மார்க்சியத்தை குறுக்கி கொச்சைப்படுத்த முடியாது. பிரிந்து செல்வதைக் கூட, வர்க்க நலனில் நின்று தான் அணுகவேண்டும். இதுதான் லெனினியம். பாட்டாளி வர்க்கம் பிரிந்து செல்வதில்லை. பிரிந்து செல்வது பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கத்தின் தேவையாகவே காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்கத்துக்கு, பிரிந்து போவது தேவைப்படுவதில்லை. வர்க்கப் போராட்டம் என்ற யுத்ததந்திரம் என்ற எல்லைக்கு அப்பால், இதை முன்னிறுத்தும் போது இது பிரிவினையாகிவிடுகின்றது. பிரிவினை மற்றும் பிரிந்து செல்லும் உரிமைக்கு இடையிலான வேறுபாடு, நேர் எதிர்த்தன்மை கொண்டது. ஒன்றுக்கு ஒன்று எதிரானது.

"சுயநிர்ணய உரிமையை மறுத்தல் தான் இனவாதத்தை வளர்த்தது" என்பது கோட்பாட்டு ரீதியான வரட்டுவாதமாகும். இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடாமை தான், இனவாதத்தை வளர்த்தது. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டு இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாமல் இருத்தல் கூடத்தான், இனவாதத்தை வளர்த்தது. இங்கு இனவொடுக்குமுறையை எதிர்த்து போராடுவது முன்நிபந்தனையானது, முதன்மையானது, அடிப்படையானது. இங்கு சுயநிர்ணயம் என்பது இரண்டாம் பட்சமானது. இது கோட்பாடு மற்றும் யுத்ததந்திரம் தொடர்பான ஒரு கட்சியின் சொந்த செயல்தந்திரம் சார்ந்தது. இதற்கு வெளியில் இதற்கு விளக்கம் கிடையாது.

"பிரதான முரண்பாடு தேசிய இன ஒடுக்குமுறையாக அமையும் போது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்நிபந்தனை" என்பதைக் கொண்டு அணுகும் பார்வை குறுகியது, வரட்டுத்தனமானது. "முன்நிபந்தனை" என்பது இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவது தான். அதன் பின்தான் அது சுயநிர்ணய அடிப்படையிலா இல்லையா என்பதை ஆராய முடியும். அதை எதிராக முன்வைத்து ஆராய்வதல்ல. இதற்கு மாறாக "சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட"த்தை முன்னெடுக்காத அனைத்தையும் எதிரியாக்குவது, பல்வேறு வர்க்கங்கள் உள்ள சமூக அமைப்பில் இதை "முன்நிபந்தனை" யாக முன்வைத்தால், பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக பேரினவாதத்துக்கு உதவுவது தான். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாது இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடுபவர்கள் முதல் இனவொடுக்குமுறையை ஆதரிக்காதவர்கள் வரை, நாம் ஒருங்கிணைந்து போராடுவது அவசியம். இதை நிராகரிப்பது, சுயநிர்ணயத்தின் பெயரில் மூடிமறைத்த பிரிவினை வாதம் தான்.

பி.இரயாகரன்

04.11.2012