Language Selection

புதிய கலாச்சாரம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

"1972இல் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை செல்லாததாக்கி விட்டதாகக் கூறுவது பொய். சொல்லொன்று செயலொன்று என நடந்து கொள்ளும் தி.மு.க., தனது செயலின்மையை நியாயப்படுத்துவதற்காகவே இந்தப் பொய்யைப் பரப்பியிருக்கிறது'' என்று தனது நூலில் (ஆலயம், அர்ச்சகர், தீர்ப்புகள்) குறிப்பிடுகிறார் ச.செந்தில்நாதன்.

 

கேரளத்தில் ஒரு கோயிலில் ஈழவர் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு பார்ப்பனர் தொடுத்த வழக்கை 2002இல் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்றும் அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் இந்தப் புதிய சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் தி.மு.க. அரசு கூறுகிறது. ""ஆகம விதிப்படி அமைந்துள்ள கோயில்களின் விவகாரம் வேறு என்று உச்சநீதி மன்றம் பிரித்துள்ளதாகவும்'' எனவே கேரளத்து தீர்ப்பின் அடிப்படையில் இந்த சட்டத்தைக் கொண்டு வரமுடியாது என்றும் பீஸ் வாங்காமலேயே வாதாடுகிறார் ஆழ்வார்பேட்டை ஜேஷ்டகுமாரன் சோ.

 

""பாலினம், சாதி, மொழி போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதையும், ஆதிக்கம் செய்வதையும் மத உரிமையாக அங்கீகரிக்க முடியாது; மதம் என்பது முற்றிலும் ஒரு தனிமனிதனின் நம்பிக்கையோடு மட்டும் தொடர்புள்ள தனிநபர் விவகாரம். அது ஒரு நிறுவனமாக இருந்து கொண்டு எந்தப் பிரிவு மக்கள் மீதும் என்ன வகையான ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது'' என்று அரசியல் சட்டம் உண்மையிலேயே மதச்சார்பற்றதாக ஆக்கப்படும் வரை, இந்தப் பிரச்சினை சட்டரீதியாகவே கூட ஓயாது. ஆகம விதிகளுக்கு விளக்கம் கூறும் பார்ப்பனப் புரோகிதனாக உச்சநீதி மன்றத்தை நியமித்திருக்கும் இன்றைய அரசியல் சட்டத்தை மதச்சார்பற்றது என்று கொண்டாடும் கட்சிகள் எதுவும் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசப் போவதும் கிடையாது.

 

இவை ஒருபுறமிருக்க, சாதி ஒழிப்பு சமத்துவம் என்பதை முன்வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை ஒரு சீர்திருத்தம் என்ற முறையில் வரவேற்கலாம். ஆனால், இந்தச் சீர்திருத்தத்தைச் சட்டத்தின் மூலம் மட்டுமே நிலைநாட்டிவிட முடியுமா? அவ்வளவு ஏன், இந்தச் சட்டத்தை அதன் உண்மையான பொருளில் அமல்படுத்திவிட முடியுமா என்ற கேள்விகளுக்கு நாம் நேர்மையான முறையில் விடை காணவேண்டும்.

 

சமுதாயத்தின் ஆதரவைப் பெறாத எந்த சீர்திருத்த சட்டமும் வெற்றி பெற முடியாது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, பார்ப்பனரல்லாதவர்கள்தான் ஆகப் பெரும்பான்மையினர் என்பதால் இதனைப் பெரும்பான்மையின் ஆதரவு பெற்ற சட்டம் என்று எடுத்துக் கொண்டுவிட முடியுமா?

 

1972இல் இச்சட்டம் இயற்றப்பட்டபோது இருந்ததைக் காட்டிலும் இன்று அரசியல் அரங்கில் சாதி உறுதிப்பட்டிருக்கிறது. சாதிச் சங்கங்களும் சாதிக் கட்சிகளும் பெருத்திருக்கின்றன என்பது மட்டுமல்ல, அவை திமிராகவும் வலம் வருகின்றன. இன்று இந்த சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் தி.மு.க., பார்ப்பன வெறியர்களான பாரதிய ஜனதாவுடன் எவ்விதக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் கூட்டு சேர்ந்ததையும் நாம் மறந்து விட முடியாது.

 

1972க்குப் பிறகு இந்த 2006 வரை பார்த்தால் மொத்தச் சமூகமும் முன்பைவிட பார்ப்பனியத்தை உள்வாங்கி எங்கும் பார்ப்பனமயமாய் இருக்கிறது. புதிய புதிய பார்ப்பன வழிபாடுகள், குத்துவிளக்கு பூசைகள், கண்டதற்கெல்லாம் கணபதி ஹோமம், திரள் திரளாய் அனைத்துச் சாதிப் பெண்களும் கையில் பால், அருகம்புல்லுடன் அலைவது, கோயிலில் பிரதோஷம், நகைக்கடையில் "அட்சய திரிதியை' என்று அலைமோதும் கூட்டம். வாஸ்துவுக்காக கட்டிய வீட்டை இடிக்கும் தமிழன், கிட்னியில் உள்ள கல்லைப் பற்றி தெரியாவிட்டாலும் ராசிக் கல்லை வகைப்படுத்தும் "சூத்திரன்', பிள்ளைப் பேறு, பெயர் வைத்தல், பெண் சடங்கு, திருமணம், கருமாதி என செத்தே போனாலும் பார்ப்பனியத்திற்குப் பணிந்து தமிழகத்து பிராண வாயுவே பிராமண வாயுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தலித்துகளும் பார்ப்பானை வைத்துக் கல்யாணம் நடத்துவது, பொங்கலைவிட பார்ப்பன தீபாவளிக்குப் பகட்டு காட்டுவது அதிகரித்துள்ளது. நுகர்வுக் கலாச்சாரத்தைப் பரப்பும் உலகமயமாக்கலுக்கு நெருக்கமாக மக்களைப் பண்டிகை என்ற பெயரில் பிடித்து தள்ளுகிறது பார்ப்பனியம்.

 

பார்ப்பனியமே கலாச்சாரமாக வாழ்வியலாக வலம் வருவதை எதிர்த்து தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகள் கருத்தியல் ரீதியாகப் போராடுவது இல்லை. ""பிரதோஷத்திற்கு வருகை தரும் தளபதியே வருக!'' என்று போஸ்டர் ஒட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இவர்களின் சமரச "சன்'மார்க்கமான சன் டி.வி. முதல் தினத்தந்தி வரை அனைத்தும் இந்த பார்ப்பன வாழ்வியலை முன்னின்று பரப்புகின்றன. அன்றாட வாழ்க்கையில் சாதி, தீண்டாமை கொடி கட்டிப் பறக்கிறது. குடிநீர்க் குழாய்களைக் கூட சாதி பிரிக்கிறது. இவைகளை எல்லாம் சமூக ரீதியில் கீழிருந்து போராடி ஒழிக்காமல் அதற்கான வேலைகளைச் செய்யாமல் வெறும் சட்டத்தை மட்டும் காட்டி பெருமை பாராட்டிக் கொள்வது பிரச்சினையைத் தீர்க்காது.

 

இச்சட்டத்தைப் பற்றி பக்தர்கள், குறிப்பாகப் பார்ப்பனரல்லாதவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறியும் பொருட்டு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினோம். இதன்படி இச்சட்டத்தை எதிர்க்கும் பார்ப்பனரல்லாதவர்கள் சிறுபான்மையினர்தான். எனினும், எதிர்ப்பவர்களிடம் தென்படும் மூர்க்கமும் கோபமும் ஆதரிப்பவர்களிடம் இல்லை. ஆதரவு என்பது செயலூக்கமற்ற ஆதரவாகவே உள்ளது. ""எல்லோரும் வரவேண்டியதுதான்; நம்மாளுகளாலயும் முடியும்'' என்ற வகையிலோ, தி.மு.க. அனுதாபி என்பதால் கலைஞர் போட்ட சட்டத்தை ஆதரிப்பது என்பதாகவோதான் ஆதரவு இருக்கிறது.

 

""ஆதரிக்கிறேன். காரணம் எல்லாம் தெரியாது. ஆனால், அர்ச்சகரில் இட ஒதுக்கீடு கூடாது ஏனென்றால், கோயில்லேயும் சாதிப் பிரச்சினை வரும்'' (தாமோதரன், வயது: 23, சாதி: யாதவர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்)

 

""நான் எதிர்க்கிறேன், காலம் காலமாக இருப்பதை ஏன் மாற்ற வேண்டும்? அவங்கதான் சுத்தமா இருப்பாங்க் நாம கறி தின்றோம்'' (சதீஷ், வயது:23, வன்னியர் புதுக்கல்லூரி மாணவர், சென்னை.)

 

""இந்தச் சட்டம் சரியானது, இதற்குத் தகுதி தேவையில்லை. தாழ்த்தப்பட்டவரும் அர்ச்சகராகலாம். தி.மு.க.வுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். தினசரி கோயிலுக்கு வருவேன்'' என்கிறார் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை மாரியம்மன் கோயிலுக்கு வந்த ஐ.டி.ஐ. மாணவர் முரளி,

 

டெய்லராக இருக்கும் ஆனந்தோ, ""அர்ச்சனை செய்வதற்கு பார்ப்பனர்கள்தான் தகுதியானவர்கள். அவர்கள்தான் சுத்தமாக உள்ளனர். நம்மால் முடியாது'' என்றவர் தன்சாதி யாதவர் என்றார்.

 

வேலூர், டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் கவுண்டரான இராமச்சந்திரன் (வயது 39) என்பவருடைய கருத்தோ ""எஸ்.சி எல்லாம் வந்தா எப்படி மற்ற சாதிக்காரங்க கோயிலுக்கு வருவாங்க. அந்த இடத்துக்கு அவர்கள்தான் (அய்யர்). மத்த சாதி வந்தா சுத்தபத்தம் இருக்காது.'' வேலூர் விருதம்பட்டு மோட்டூரைச் சேர்ந்த செங்குந்தரான ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி (வயது 52) இன்னும் தீவிரமாக ""அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தப்பானது. உன்னைப் பற்றி உனக்குத்தான் தெரியும், என்னைப் பற்றி எனக்குத்தான் தெரியும். அனைவரும் எப்படிச் சமமாக முடியும் இது சரியில்லை'' என்று தத்துவமே படைக்கிறார்.

 

பெண்கள் அர்ச்சகராகலாமா என்ற கேள்விக்கு கூட பலரின் பதில் பார்ப்பனக் கண்ணோட்டம்தான். ""பெண்கள் ஆவதை ஏற்க முடியாது. அது செட் ஆவாது, மாதவிலக்குப் பிரச்சினை, திருமணம் இவைகளால் வரமுடியாது'' இது வேலூர் தோட்டப்பாளையம், துணிவியாபாரம் செய்யும் ஒரு நாயுடுவின் கருத்து. ""பெண்கள் அர்ச்சகராக முடியாது சில பிரச்சினைகள் உள்ளன'' இது பி.ஏ. படித்த மகேஸ்வரி (தஞ்சை) கருத்து.

 

""மாதவிடாய் துணிபட்டால் துளசி செடியே கருகிவிடும்'' என்கிறார் இன்னொருவர்.

வள்ளி தெய்வானை சமேதராக நிற்கும் முருகப் பெருமானின் மூஞ்சி தீய்ந்து கருகிப் போயிருப்பது இதனால்தானா? காமாட்சியும் மீனாட்சியும் சாமியாகவே சமைஞ்சு நிக்கையில் பொம்பள பூசாரி மட்டும் தப்பா? பொம்பள சாமிக்கு ஆம்பிள பூசாரி துணி மாத்தலாமா?'' என்பன போன்ற கேள்விகளைப் பெண்கள் கூட எழுப்புவதில்லை. மாதவிலக்கு என்பது வியர்வை, சிறுநீர் போல பெண்களுடைய உடலுறுப்பின் ஒரு இயற்கைச் செயல்பாடு என்ற அறிவியலுக்குப் பதில் பார்ப்பனியத்தின் தீட்டு, புனிதம், சுத்தம் என்ற கருத்தும் ஆகவே பெண்கள் கூடாது என்பதுமே பெண்கள் உள்ளிட்ட அனைவரின் பொதுக்கருத்தாக இருக்கிறது.

 

""ஆண் சுத்தம் பெண் அசுத்தம், பார்ப்பான் சுத்தம் சூத்திரன் அசுத்தம், மரக்கறி சுத்தம் புலால் அசுத்தம், சமஸ்கிருதம் சுத்தம் தமிழ் அசுத்தம்'' என்ற இக்கருத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் ஒரு கோட்பாடாகவே முன் வைக்கிறது பார்ப்பனியம். இவற்றை ஒருங்கிணைந்த முறையில் முறியடிப்பதன் மூலம்தான் பார்ப்பனியத்தை கருத்தியல் தளத்தில் வீழ்த்த முடியும். இவற்றில் ஒன்றை ஏற்று இன்னொன்றை மறுப்பவர்கள் வாயிற்கதவை மூடிவிட்டு சன்னல் வழியாகப் பார்ப்பனியத்தை உள்ளே அனுமதிக்கிறார்கள் என்பதே உண்மை.

 

வரவிருக்கும் சட்டத்தின்படி பார்ப்பனரல்லாதவர்களில் தகுதியான அர்ச்சகர் என்பவர் யார்? அவர் வழிபாட்டு முறைகளை கசடறக் கற்றுத் தேறியிருந்தால் போதுமா, அல்லது அவர் கறி தின்னாதவராகவும் இருக்க வேண்டுமா? இந்த விசயத்தில் ஆகமம் என்ன சொல்கிறதோ அதைத்தான் பின்பற்ற வேண்டியிருக்கும். ""அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை ஆதரிப்பதாக'' விசுவ இந்து பரிசத் கூறுவதற்குக் காரணம். பெரும்பான்மை இந்துக்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவோம் என்ற அச்சம் மட்டுமல்ல. சமூகத்தில் வேரோடியுள்ள பார்ப்பனக் கருத்துக்களை அவ்வளவு எளிதாகப் பிடுங்கி விட முடியாது என்ற நம்பிக்கைதான் இச்சட்டத்தை ஆதரிக்கும் "தைரியத்தை' பார்ப்பனக் கும்பலுக்கு வழங்கியிருக்கிறது.

 

""கோயிலில் சைவ உணவையே நைவேத்யமாகப் படைப்பது அசைவ உணவு சாப்பிடுபவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது எனக் கூறி இனி எல்லாக் கோயிலிலும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கலுடன், சிக்கன் மட்டன் கருவாடு போன்ற நைவேத்யங்களையும் செய்யலாம்'' என்று சைவத்தை உசுப்பி விடுகிறார் சோ.

 

அதற்கான அடிப்படையும் சமூகத்தில் உள்ளது. ""கோயிலில் கிடா வெட்டை ஏற்க முடியாது'' என்கிறார் தஞ்சை கண்டியூரைச் சேர்ந்த நடத்துனர் அறிவழகன் (வயது 37) தாழ்த்தப்பட்டவரான இவர் சட்டத்தை வரவேற்றாலும், வழிபாட்டில் பார்ப்பனச் சடங்கை முன்வைக்கிறார். வன்னியரான துரை பி.ஏ. (வயது 26) காட்பாடியைச் சேர்ந்தவர், ""முடிவெட்டும் வேலை செய்யும் ஒருவர் அர்ச்சகராக முடியாது. காரணம் மாமிசம் சாப்பிடுவார்'' என்கிறார். மேலும் ""இந்து மதம் மேன்மையான மதம், பழக்கத்தை மாற்றக்கூடாது'' என்கிறார்.

 

அஞ்சப்பரிலும் அரசப்பரிலும் அன்றாடம் பல ஜீவராசிகள் பார்ப்பன அம்பிகளின் வயிற்றில் கதிமோட்சம் தேடுவதும், தில்லை வாழ் அந்தணர்கள், அன்றாடம் இரவு நேரத்தில் ஆடல்வல்லானின் சந்தியில் சரக்கடித்து கறிதின்று குத்தாட்டம் போடுவதும் அவருக்குத் தெரியாது போலும்!

 

பார்ப்பனரல்லாதார் என்பவர்களே ""கிடா வெட்டுவதும், கறி சாப்பிடுவதும், இன்டீசென்ட் சார்'' எனும் போக்கு உள்ளது. ஜெயலலிதா கிடா வெட்டுத் தடைச்சட்டம் கொண்டு வந்த போது "இது எங்கள் வழிபாட்டுரிமை' என்று எழுந்து போராடவில்லை. ""சைவம் உசத்தி, கவுச்சி கீழா? எவன் சொல்வது?'' என்று கருத்துரீதியாக மக்கள் போராடவில்லை.

 

இத்தகைய போராட்டம் இல்லாததால்தான் இடஒதுக்கீடு பிரச்சினையிலும் கூட "தகுதி திறமை' என்று பார்ப்பன மேல்சாதிக் கும்பல் ஏறி ஓட்டுகிறது. "பெரும்பான்மை'யோ, ""எங்களுக்கும் திறமை இருக்கிறது'' என்று அவர்களுடைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ""மணியடிக்கிறது ஏதோ சாதாரண வேலைன்னு நினைக்காதே, அதற்கு அபார தைரியம் வேணும். நீ போய் அடிச்சுப் பாரு, உன்னால முடியாது'' என்று கருத்துக் கணிப்பு எடுக்கப் போன தஞ்சைத் தோழரிடம் ஆத்திரமாக வெடித்திருக்கிறார் ஒரு பெரிய கோயில் அர்ச்சகர். இந்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் எல்லாக் கோயில்களிலும் சாதிக் கலவரம் நடக்கும் என்று எச்சரித்திருக்கிறது சிவாச்சாரியார்கள் சங்கம்.

 

""உண்மையிலேயே சீர்திருத்தத்தை அமல்படுத்துவதாக இருந்தால், தலித்துகளை மட்டுமே அரச்சகர்களாக்குவோம் என்று சட்டம் போடவேண்டும். அப்படி சட்டம் போட்டால், பிற்படுத்தப்பட்ட சமூத்தினர் அதை ஏற்றுக் கொள்வார்களா?'' என்று தனக்கேயுரிய பார்ப்பன நரித்தனத்துடன் கலவரத்திற்கு அடிக்கொள்ளி வைக்கிறார் சோ.

 

தனிக்கிணறு, தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்று பார்ப்பனிய சித்தாந்தம் நடைமுறையில் கோலோச்சும்போது, மேலிருந்து போடப்படும் சட்டம் என்ன லட்சணத்தில் அமலாகும்? கண்டதேவி தேர் வடம் பிடிக்க தலித்துகளுக்குள்ள உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தவுடனே நாட்டார்களெல்லாம் சட்டத்தின் ஆட்சியைப் பணிந்து ஏற்றுக் கொண்டு விட்டார்களா?

 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கூடத்தான் உள்ளது. அதை முறையாக அமல்படுத்தினால் இந்நேரம் தமிழகத்தில் முக்கால்வாசி ஊர்ப் பெரிய மனிதர்கள் உள்ளே இருப்பார்கள். சிறைச்சாலை பத்தாது. கடுமையாகப் போராடி புகார் கொடுத்தாலும் கைது செய்யப்பட்ட சாதி வெறியர்கள் எத்தனை பேர்? பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்தச் சட்டங்கள் என்ன வகையில் பயன்பட்டன? அதனால்தான் சொல்கிறோம், அனைத்துச் சாதி அர்ச்சகர் சட்டத்தைப் போட்டு ஒரு கருணாநிதி கையிலும், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கையிலும் கொடுத்துவிட்டு "சட்டம் பார்த்துக் கொள்ளும்' என்று நாம் விட்டுவிடும் விசயம் அல்ல இது!

 

சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை மாதக்கணக்கில் பிரச்சாரம் செய்து பார்ப்பன ஆதிக்கக் கருத்துக்களை மக்களிடம் தோலுரித்து தமிழக அரசியல் களத்தில் ஒரு கருத்துப் போராட்டத்தை விதைத்தது மக்கள் கலை இலக்கியக் கழகம். தமிழ் மக்கள் இசை விழா நடத்தி திருவையாறு பார்ப்பனக் கச்சேரியின் தீண்டாமை அதிரப் பறை அடித்து நுழைந்து பார்ப்பனியத்தை விவாதப் பொருளாக்கியது. சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் நெடிய பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்தோம். தனிக்குவளையையும் உடைத்தோம்.

 

இவைகள் ஏதோ தன்னிறைவுப் பட்டியல்கள் இல்லை. இவ்வகையான மக்கள் திரள் வேலைகளின் அடிப்படையில் சமூகத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என்பதற்கான செயல் உதாரணங்கள். ஏனென்றால், இந்தப் பார்ப்பனிய ஆதிக்கம் பக்தி வலையாய், திருக்கோயில்களைச் சுற்றி நிலவுடைமையாய், அர்ச்சனைத் தட்டுக் கடைகளாய், பஞ்சாமிர்தம், பலகாரம், பூ, பழமென வணிகமாய் அணிதிரண்டுள்ளது. இதில் ஆதாயம் அடையும் பிரிவினரின் பார்ப்பனியக் கருத்தைத் தாக்காமல், தகர்க்காமல் பார்ப்பனியத்தை வெல்ல முடியாது.

 

சட்டம் வந்துவிட்டது. எல்லாம் தானாகச் சரியாகி விடும் என்று இடஒதுக்கீட்டின் மூலம் சாதி ஒழிப்பு, தேர்தல் மூலம் தலித் அதிகாரம் என்று மேலிருந்து சட்டத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதையே சாதனை என்பது நீர்த்துப்போன அனுபவம் என்பதே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

சாதி ஆதிக்கச் சமூக அமைப்பில் ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்களை அந்தந்த மாவட்டத்து ஆதிக்க சாதிப்படி நியமிப்பதுபோல, கோயில் டிரஸ்டிகளைப் போடுவது போல, கோயிலிலும் அந்தந்த வட்டார ஆதிக்க சாதிப் பூசாரிகளை நியமித்துக் கொள்வார்கள் ஓட்டுச் சீட்டு அரசியல் சக்திகள். தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராவதைத் தவிர்ப்பதற்காக உயர் சாதியினர் உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று பார்ப்பானை முன்னிறுத்தும் தந்திரமும் நடக்கும். இல்லையேல் தாழ்த்தப்பட்டவரை ""நீ கையெழுத்துப் போட்டு சம்பளத்தை மட்டும் வாங்கு. பூசைக்கு வராமல் ஒதுங்கிக் கொள். மத்ததை நாங்க பாத்துக்குறோம். தட்டில் விழும் தட்சணையை மூணாய் பங்கு போட்டுக் கொள்ளலாம்'' என்ற வழக்கமான வடிகால் முயற்சி நடக்கும்.

 

பார்ப்பான் சூடம் காட்ட, பி.சி. தேங்காய் உடைக்க, எஸ்.சி. வெளியே நந்திக்கு தண்ணி ஊத்த, நடைமுறையில் பிரச்சனை பழைய சாதி ஆதிக்க வழிமுறைகளுக்கு ஏற்ப தானாகத் தீர்க்கப்பட்டுவிடும்.

 

நீரை இலக்கு நோக்கிப் பாய்ச்சாத போது, அது தானாக வழி தேடிக் கொள்வது போல இந்தச் சட்டமும் பார்ப்பனச் பாசனத்திற்கே வடிகாலாகும்.

 

""சாத்திரத்தைச் சுட்டு, சதுர்மறையைப் பொய்யாக்கி''... என்ற பத்திரிகிரியாரின் கோபமும், ""தூங்குறியா, நடிக்கிறியா ரங்கநாதா, தொட்டு உன்னைப் பார்க்கட்டுமா'' என்று அரங்கநாதனுக்கு ம.க.இ.க. எழுதிய பாசுரத்தின் எள்ளலும் கொண்டு சமூகத்தைத் தட்டி எழுப்பாவிடில் இந்த அரசாங்கச் சட்டம் காகிதச் சட்டமாகவே இருக்கும். ஆகமச் சட்டமே அமலில் இருக்கும்.

 

துரை. சண்முகம்

கருத்துக் கணிப்பு: சென்னை, வேலூர், தஞ்சை, திருச்சி, ம.க.இ.க. தோழர்கள்.